மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

30-Mar-2009

நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்!

பரிசல் அண்ணனின் பதிவில் ஈர்க்கப்பட்டு இதை எழுதுகிறேன். யாருடைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டேன் என்று மறந்துவிட்டேன். இது ஒரு புதிய பதிவரின் அறிவுஜீவித்தனத்தைக் காட்டும் கருவியும் அல்ல, நான் ஒன்றும் அதீதமான புத்தகப்புழுவும் அல்ல. ஏதோ என்னாலும் இந்த நல்ல முயற்சியில் பங்கெடுக்க விழைந்து இடும் ஒரு பதிவு. வெறுமனே என்னுடைய இரசனை இது, உனக்கும் எனக்கும் ஒத்துப்போகிறதா பார் என்ற எண்ணவோட்டத்தின் வடிகாலே.

10. துணையெழுத்து (எஸ்.ராமகிருஷ்ணன்)
எனக்கு மிகவும் பிடித்தமான கட்டுரைக் கோவை. அவரது அனுபவங்களினூடே வாழ்க்கையின் சாரத்தைக் கண்டறியும் சாவி. மருதுவின் அசரவைக்கும் ஓவியங்கள், குறிப்பாக கடைசியில் குஸ்டாவ் டோரின் ஓவியத்தை வைத்து விளையாடியிருப்பார். கடந்த சில ஆண்டுகளில் வந்த பத்திரிக்கத் தொடர்களில் சமன் செய்ய முடியாத எழுத்து.

9. அகி (முகுந்த் நாகராஜன்)
பின் நவீனத்துவத்தில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை. பெரும்பாலும் பால்யத்தின் நினைவுகளையும், நகரத்தின் குரூரத்தையும் விவரிக்கிறார். ஏகப்பட்ட பேரால் மேற்கோள் காட்டப்பெறுகிறார். சமகால கவிஞர்களில் சாலச்சிறந்தவர். குறிப்பாக உயிர்மை வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் கவிதைகள் சமூக சாடலும், புதிய தேடலுமாய் விஸ்தாரித்து நிற்கிறது. கவிஞர் இதுபோல மேன்மேலும் எழுத வாழ்த்துவோம்.

8. லா.சா.ரா எழுத்துக்கள் (லா.சா.ராமாமிர்தம்)
பெரும்பாலும் கட்டுரைகள். திலகவதி பதிப்பகம் என்று தான் நினைக்கிறேன். பல்துறை பரிச்சயம் என்பதாலும், அற்புத மொழிநடையாலும் கவர்பவர். இவருடைய பல்வேறு படைப்புகளின் கோவை. குறிப்பாக நான் என்ற தலைப்பில் இவரது முன்னுரை மிகவும் பிரமாதமான படைப்பு. புனைவை விட நிதர்சனமும், இசைக்குறிப்பைப் போன்ற தன்மையுடைய இவரது அணுகுமுறையும், ஆழ்ந்த ஞானத்தின் வெளிப்பாடாகும்.

7. கண்ணீர் பூக்கள் (மு.மேத்தா)

வானம்பாடிக் கவிதைகள் மரபிலிருந்து புதுமைக்கு மாறிய இளைஞர்களின் உற்சாகக் குரல். அவர்களுள் முன்னோடியாக இருந்த ஈரோடு தமிழன்பன், வாலி, வைரமுத்து, மீரா மற்றும் பலரது உழைப்பில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கவிஞர்க்ளாகி அந்த பாரம்பரியம் இன்று வரை தொடர்கிறது. இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான உணர்ச்சிப்பூர்வமான பதிவு இந்த தொகுதி. கூர்மையான சிந்தனையும், நேரான பார்வையும் துரித காலத்தில் அனைவரது நெஞ்சங்களிலும் பாய்ந்த கவித்துவ உரம்.


6. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
தமிழ் இலக்கியத்தின் திருப்பு முனையாக கருதப்படும் நூல். 12 சிறுகதைகளுடைய இன்னூலை பள்ளியின் நூலகத்திலிருந்து இரவல் வாங்கிப் படித்தது இன்னும் நினைவிருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் நினைவுப் பாதையும், கயிற்றிரவும். அன்றாட வாழ்வின் கேவல்களையும், அழுத்தும் சோகத்தையும் மெல்லிய நகைச்சுவயோடு பருகத் தரும் சுருக்க நாவல்கள்.

5. இரும்பு குதிரைகள் (பாலகுமாரன்)
நாவல் உலகின் முடிசூடா மன்னன். பிராமணீயத்திற்கு எதிரானவர்கள் கூட இவரது மெர்க்குரிப் பூக்கள் நாவலை விரும்பிப் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். இரும்பு குதிரைகள் நாவலின் முக்கிய அம்சமே அதன் கதாபாத்திரங்க்கள் தான். கல்கியில் தொடராகவும், பின்னர் நாவலாகவும் விசா பதிப்பகத்தாரால் அச்சிடப்பட்ட இன்னூல் கவிதை - கதை இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்த அபூர்வமான புத்தகங்களுள் ஒன்று.

4. புறனானூறு
சுஜாதாவின் விளக்கத்தோடு சேர்த்து படிப்பது நல்லது. இந்த இலக்கியச்சிகரத்தைப் பற்றி எழுத எனக்கு நிச்சயம் வக்கில்லை.

3. பால்வீதி (அப்துல் இரகுமான்)
ஹைக்கூவை தமிழில் கொண்டு வந்த கவிக்கோ பேராசிரியர். அப்துல் இரகுமானின் ஆகச்சிறந்த புத்தகம். கைக்கு அடக்கமாய் இருப்பினும் துளி நஞ்சின் வீரியம் பொருந்திய வித்து. எடுத்துக்காட்டாய்:
"வேலியைத் தாண்டிய என்
கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?"
அனாசாயமாய் வீழ்த்தும் எழுத்து.

2. ஸ்ரீரங்கத்து தேவதைகள் (சுஜாதா)
எதிர்பாராத திருப்பங்களின் தீவிர விரும்பி நான். சுஜாதாவைப் போல சிறுகதை எழுத இன்னொருவர் பிறந்து வர வேண்டும். தனது நினைவுச்சுழலில் சமபவங்களை தனது பாணியில் தத்ரூபமாக அந்தகாலத்து திருச்சி-திருவரங்கத்தை கண்முன் நிறுத்துகிறார். சுஜாதா சுவடுகள் என்ற பெயரில் குமுதமும், விகடனும் இந்த புத்தகத்திலிருந்தும் சில கதைகளை வெளியிட்டிருக்கின்றனர். ஒருமுறை எதேச்சையாக ரயிலில் படித்தது. அதற்கு பின் ஒவ்வொரு இரயில் பயணத்திலும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

1. பாரதியார் கவிதைகள்
தமிழின் மிகச்சிறந்த நூலாக நான் கருதுவது பாரதியாரின் உக்கிரமான இந்த நூலே. பழனியப்பா பிரதர்ஸின் ('கோனார்' நோட்ஸ் புகழ்) தலைசிறந்த நூல். கர்மவீரர் காமராசர் எழுதிய பாராட்டுரையை அவசியம் வாசிக்கவும். இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களையும் துணைக்கு வைத்துக்கொள்ளலாம்.

விட்டுப்போனவை: கலிங்கத்துப் பரணி (இன்னும் முடிக்கவில்லை), அ.முத்துலிங்கம் கட்டுரைகள் (தனித்துவத்தின் மறுபெயர்), தபூ சங்கர் படைப்புகள் (யாரேனும் அவரது எல்லா கவிதைகளையும் ஒரே அட்டைக்குள் அடைத்து, புகைப்படங்களின்றி அச்சிட்டால் தேவலை).

9 comments:

உலவு.காம் (ulavu.com) 30 March 2009 at 8:55 pm  

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

வெங்கிராஜா 30 March 2009 at 9:00 pm  

திரட்டிகளால் எங்களுக்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்! வேற என்ன சொல்றது?!

Anonymous 30 March 2009 at 10:03 pm  

வெங்கி,

இந்த பட்டியல் நன்றாக உள்ளது, மேலும் எழுதவம், நல்ல புத்தகம் படித்தால் உடனே என்னக்கு சொல்லவும். வாழ்த்துக்கள்.

vinoth gowtham 31 March 2009 at 12:46 am  

வெங்கி

என்னோட Favourite இதுல . துணையெழுத்து (எஸ்.ராமகிருஷ்ணன்) & ஸ்ரீரங்கத்து தேவதைகள் (சுஜாதா)


நான் ஒரு லிங்க் சொல்லுறேன் பாருங்களேன்..
http://kaalapayani.blogspot.com/2009/03/blog-post_30.html

அவரு எழுதும் பாணி ramakrishnan sir stylela இருக்கும்..

அழகா அருமையா இருக்கும்..

உங்களுடய எழுத்தும் அழகு..

மேல அந்த Youtube Matter எனக்கு புதுசு..

vinoth gowtham 31 March 2009 at 12:47 am  

Apuram Remove the word verification in Comments portion.

பாலராஜன்கீதா 31 March 2009 at 1:29 pm  

உங்கள் தேர்வுகள் நன்று

Enathu Payanam 31 March 2009 at 6:08 pm  

எஸ். ராவையும், முத்துலிங்கத்தின் எழுத்துக்களும் எனக்கு சிறிதளவு பரிட்சயம் உண்டு. இரண்டு பேருமே தேர்ந்த படைப்பாளிகள்.

வால்பையன் 31 March 2009 at 7:33 pm  

பரவாயில்லையே!
எல்லாமே தமிழ் புத்தகமா இருக்கே!

வெங்கிராஜா 31 March 2009 at 10:15 pm  

நன்றிகள் மயில், வினோத், பாலராஜன்கீதா, எனது பயணம், வால் !
வால்: பின்ன என்ன பாஷ்டூ புத்தகம் படிப்பேன்-னு நினைச்சீங்களோ?

(பி.கு: அந்த வெரிஃபிகேஷனை தூக்கியாச்சு!)

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP