மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

30-Mar-2009

புதிய அத்தியாயம் #2: துவாரபாலகன்.

சிறுவயதிலிருந்தே நமக்கு பயம் கொஞ்சம் அதிகம். பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் சைக்கிளில் அண்ணன்கள் தங்களுக்குள் ரேஸ் விடுவதுண்டு. எப்போதும் நான் விசில் ஊதுபவனாகவே இருப்பேன். கிராம எல்லை முடிவு வரை சென்றுவிட்டு திரும்ப முதலில் யார் வருவதென்று தான் போட்டி இருக்கும். ஐயன்பேட்டைக்கும் முத்தியால்பேட்டைக்கும் இடையில் அகழி ஒன்று இருப்பதாகவும் அதில் முதலைகள் பசியுடன் எப்போதும் நீந்திக்கொண்டிருப்பதாகவுமே பயமுறுத்தி வைக்கப்பட்டிருந்தேன். குரங்கு பெடல் அடித்து, பின் டபுள்ஸ் ஓட்டும் வரை இதே நிலையில் தோப்பிலேயே வாயிற்காவலனாகத்தான் இருந்துவந்தேன்.

விடுமுறைக்காலம் தவிர்த்து பள்ளி வாழ்க்கை மொத்தமும் சென்னையில் தான் கழிந்திருக்கிறது. அதன் பெரும் பகுதியை போரூரில் தான் செலவிட்டிருக்கிறேன். பள்ளியிலிருந்து மிகவும் தொலைவிலிருக்கும் வீடு என்னுடையது தான். சைக்கிளில் போரூர் சிக்னலைத் தாண்டி வருவதே பானிபட் யுத்ததில் அக்பரின் முன்னேற்றத்தைப் போன்றது. இந்த சமயத்தில் போரூரின் பிரசித்தி பெற்ற இரவுண்டானாவைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும். சென்னையின் புறநகர் பகுதியில் முதன்முதலில் ஒரு சிக்னல் வந்தது இங்கு தான். அது போல சென்னையின் மிக முக்கியமான சாலைகள் புணர்வதும் இங்கு தான். ஒரு பக்கம் ஆற்காடு சாலை (கோடம்பாக்கம், வடபழனி, விருக/வளசரவாக்கம்) சிக்னல் அடைந்து குன்றத்தூர் சாலையாக உருமாறும். மற்றொரு திசையில் மவுண்ட் ரோடு கிண்டியில் முடிந்து பட் ரோடு, வர்த்தக மையம் வழியாக வந்து போரூராகி ரவுண்டானா வந்தடைந்து பூந்தமல்லி சாலையாக பூப்படைந்து செல்லும். அநியாயத்துக்கு விபத்துகள் சம்பவித்த வண்ணமிருக்கும். பள்ளி முடிந்து வசீம், ஜகன், ஜோ, செல்வா, திருமலை, அன்வேஷ், நான் எல்லோரும் ஒன்றாக வருவோம். இதில் ஆற்றின் கிளை போல சாகரத்தில் சங்கமித்துவிடும் ஆசாமிகள் போக நானும் அன்வேஷும் மட்டும் போரூர் சிக்னலைத் தாண்டி இரட்டை ஏரி வழியாக ட்ராஃபிக் பரமபதம் ஆடி முடிப்போம். வழியில் பாரதி பேக்கரியில் ஸ்வீட் பன்னும், வெங்கடேஸ்வராவில் சுடச்சுட சமோசாவும் வாங்கித் தின்போம். ஊடே கொஞ்சம் வெங்காய பகோடாவையும், பம்பாய் லக்கடியையும் லவட்டிக்கொள்வோம். சீருடையெல்லாம் நல்ல செம்பழுப்பில் இருந்தமையால் பிரச்சனையில்லை, அப்படியே துடைத்துக்கொள்ளலாம். சொல்ல மறந்துவிட்டேன், வருவதற்கு முன் ஏதேனும் டீச்சருடைய ஸ்கூட்டியின் காற்றை பிடுங்காமல் வந்ததில்லை.

நமது வீட்டைச் சுற்றியிருக்கும் 'எங்க ஏரியா'-வின் வழிகள் எல்லாம் நமக்கு அத்துப்படியாகத் தான் இருக்கும். கிட்டத்தெட்ட அப்படித்தான். எப்படிப் புகுந்தாலும் போரூரின் சக்கரவியூகத்தினூடே நாங்கள் மீண்டு வரக்கூடிய சக்தி பொருந்தியவர்களாகத் திகழ்ந்தோம். வரும் வழியில் எல்லா சிற்றூர்களைப் போலவே குட்டிக் குட்டி ஹவர் சைக்கிள்கள் வரிசையில் நிற்கும் சைக்கிள் கடை, ஆல்-இன்-ஆல் அழகுராஜா மெக்கானிக் ஷெட், பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும் சலூன், மிளகாய் வாசம் படிந்த மாவு மில், அப்பா முன்னாடியும், பிள்ளை பின்னாடியும் தம் அடிக்கும் பங்க் கடை, மஞ்சள் நிற காலாவதி தொலைபேசி பெட்டிகள், ஃபிரேம் இல்லாத கண்ணாடி மாட்டிய பீட்டர்கள் மொய்க்கும் இன்டர்நெட் செண்டர்கள், டென்த், ப்ளஸ்-டூ மாணவர்களுக்கான கோச்சிங் சென்டர்கள் இத்தியாதி.சமாசாரங்கள். சில விசேஷங்களும் நடைபெறுவதுண்டு: கிறிஸ்துமஸ், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என எந்த பண்டிகை வந்தாலும் அமோகமாக கொண்டாட இடங்கள் இருந்தன. பாலமுருகன் சன்னதியும், மசூதியும், மாதா கோயிலும் சில தெருக்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எந்தவிதமான சச்சரவும் வந்ததாக நினைவில்லை. இவை விடுத்து மாதம் ஒருமுறை பார்வையிழந்த சகோதரர்கள் ஒரு வேனில் வந்து இசைச்சேவை புரிவார்கள், பெரிய புள்ளி ஒருவரை பொடா நீதிமன்றத்திற்கு பந்தோபஸ்துடன், வாகன நிறுத்ததிற்கு இடையே அழைத்து (தவறு, இழுத்துச்) செல்வார்கள். ஏகப்பட்ட சினிமா, சீரியல் ஷூட்டிங்கு நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி கௌபாய் படங்களில் வருவது போல காய்ந்த புற்கள் நிறைந்த ஒரு பெரிய மைதானம் ஒன்று இருந்தது. அங்கு விமான நிலையம் வரப்போவதாக சொன்னார்கள். ஒரு பெரிய ரேடாரையும் நிர்மானித்துவிட்டு பிரும்மாண்டமான கதவுகளையும் போட்டு வைத்திருந்தனர். இப்போதும் அங்கு அனாமத்தாக சில வை-ஃபை கனெக்ஷன்கள் தட்டுப்படுகின்றன. பாதி முடித்து கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்று கிலியூட்டியபடி பூதாகரமாக இருந்தது. அன்று சைக்கிள்களை அங்கு நிறுத்தினார்கள். நான் தான் அந்த கதவுகளுக்கு அருகில் துவாரபாலகன் போல நின்றுகொண்டிருந்தேன்.

(தொடரும்)

9 comments:

vinoth gowtham 1 April 2009 at 1:07 am  

நீங்கள் சொல்லும் போரூர் ரவுண்டு வழியாக நிறைய தடவை போய் வந்து இருக்கிறேன்.
ரொம்ப பிஸியாக தான் இருக்கும்.

வெங்கிராஜா 1 April 2009 at 1:33 am  

அதுக்குள்ள பின்னூட்டமா! நன்றி தோழா... தொடர்ந்து வரவும்..

கவிதா | Kavitha 1 April 2009 at 10:36 am  

உங்கள் பதிவு

http://blogintamil.blogspot.com/2009/04/010409-lapiz-lazuli.html

இங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் :)

கவிதா | Kavitha 1 April 2009 at 10:36 am  

உங்கள் பதிவு

http://blogintamil.blogspot.com/2009/04/010409-lapiz-lazuli.html

இங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் :)

வால்பையன் 1 April 2009 at 3:33 pm  

//புதிய அத்தியாயம் #2: துவாரபாலகன்.//

2 ன்னு இருக்கே முதலாவது எங்கே?
இது தான் ஆரம்பமா?

வெங்கிராஜா 1 April 2009 at 6:45 pm  

இங்கே எழுதும் முதல் அத்தியாயம் இதுதான். இதுகாறும் பிறிதொரு இணையதளத்தில் தொடராய் எழுதிக்கொண்டிருந்த திரி இது. இனி இங்கே தொடரலாமென்று உத்தேசம், சொடுக்குக::
http://mayyam.com/hub/viewtopic.php?t=7168&postdays=0&postorder=asc&start=174

வெங்கிராஜா 1 April 2009 at 6:50 pm  

நன்றிகள் பல கவிதா... உங்கள் சேவை எங்களுக்கு தேவை! :P

நட்புடன் ஜமால் 1 April 2009 at 10:21 pm  

ஆரம்பமே அசத்தல் தான்

விசில் முதல் கொண்டு


சீக்கிரம் அடுத்த பதிவுகளை எழுதுங்கள்

வெங்கிராஜா 1 April 2009 at 11:29 pm  

நன்றி ஜமால் அண்ணே! மீண்டும் மீண்டும் வருக...

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP