மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

12-Jun-2009

மின் தடைதேதி மார்ச் 21.
மணி ஆறு.
புன்சிரிப்பு.
நாள்காட்டியில் வண்ணமயமாக ஒரு கோலம். குழந்தைகளோடு.
மூக்குக்கண்ணாடிக்யை மாட்டிக்கொண்டு வார்டன் கைகளை உரசி கண்திறந்து பார்த்தார். சரியாக கைகளை கீழிறக்கிய நொடி ஒருவன் தன்னால் இயன்றளவு அள்ளி வண்ணப்பொடியை முகத்தில் அடித்தான்.
"ஹோலி!"
சரசரவென பிள்ளைகள் வரிசையாக மலரும் சூரியகாந்தி போல எழுந்தனர். வண்ணங்களோடு விளையாடத் தொடங்கினர். கொஞ்சம் காற்றுக்கும் சேர்த்து நிறத்தை ஊட்டிவிட்டார்கள்... காக்காய் கடி கடித்து. பால்காரன் கொண்டுவந்த எரும்பால் ரோஸ் மில்க் ஆனது. செய்தித்தாள் எங்கும் பசுமைப்புரட்சி. ஆங்கிலேயர் காலத்து கட்டிடத்திற்கு கொஞ்சம் அரும்புக்கை ஆகாரம். பண்டிகைக்கு செய்த ஜாங்கிரியும் அல்வாவும் நீலநிறம் பூண்டன. வானத்திலிருந்து வானவில் குளத்திலன்றி... அன்று குளத்தினின்று வானவில் வானத்தில் பிரதிபலித்தது. "பச்சை நிறமே..." பாடலை முணுமுத்துக்கொன்டிருந்த வானொலி நிறங்களால் குளிப்பாட்டப்பட்டது. எல்லோர் உதடுகளிலும் வண்ணமயம், சிரிப்பொலிகளில் நிறம் மங்கா வீரியம். பூக்களும் கிண்ணங்களும், புத்தகங்களும், நாய்க்குட்டிகளும், மரம், மாம்பழம், மற்ற எல்லாமுமே நிறம் நிறமாய் நிரல் சேர்ந்தன. உடைகளில் நிறம் உள்ளங்களில் நிறம்.களைத்துப்போன குழந்தைகள் ஒரேயடியாக மாலை உணவருந்தி அந்தி கவியும் முன்னரே கண் சாய்ந்தார்கள். கனவுகளில் எத்தனை வண்ணமோ!

கண்ணாடியை எடுத்து தன் ஜிப்பாவில் துடைத்துக்கொண்ட வார்டன் தாத்தா பணியாட்களோடு நீர் விட்டு எல்லாவற்றையும் துடைக்கலாயினார். பால்குடம், தட்டுமுட்டு சாமான், படிக்கட்டு, நாய்க்குட்டி, சுவர்கள், ரேடியோ, கடியாரம், எல்லாம். கடைசியாக மொட்டைமாடி வந்த தாத்தாவுக்கு ஒரு சிறுவனின் அழுகுரல் கேட்டது.
தேம்பிக்கொண்டே, "என் துணியெல்லாம் அழுக்காயிடுச்சா தாத்தா?"
"அதனாலென்ன கண்ணு வேற எடுத்துகிட்டா போச்சு"
"அப்ப பரவாயில்லையா?"நான் தூங்கலாமா?"
"ம்.போ.போய் தூங்கு துரை."
"ஆமா தாத்தா என் சட்டையில என்ன அழுக்கு இருக்கு?"
"அது... உன் வெள்ளை சட்டையில நிறைய நிறம் இருக்கு: மஞ்சள், நீலம், சிவப்பு, பச்சை... அவ்வளவுதான்."
"வெள்ளை, செவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் இதெல்லாம் என்ன தாத்தா?எப்படியிருக்கும்?"
"நீ இப்ப போய் தூங்குடா கண்ணா. தாத்தா நாளைக்கு சொல்றேன், சரியா?"
"சரி தாத்தா!"
திடீரென்று மின் தடை. வேலையாட்கள் அனைவரும் தடுமாற, விழ, பொருட்கள் அசைய, நிலைகுலைய, ஒரே சத்தம். மாடிப்படிகளில் இருட்டில் இறங்கும் சிறுவன் மட்டும் நிலையாக, வேர் போல, நிமிர்ந்து நடந்து செல்ல... மெல்ல மின்சாரம் திரும்ப வந்தது.
"இதுதான் தாத்தா கடைசி... இந்த போர்டை துடைச்சிட்டா ஆச்சுதுங்க ஐயா."

நிறங்களையெல்லாம் இழந்த பலகை வாசித்தது... "பார்வையற்ற குழந்தைகள் குருகுலம்".

இது என்.டி.டி.வி-யின் சிறந்த விளம்பரப் படத்திற்கான விருதைப் பெற்ற பொது சேவை விளம்பரம். கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்திய குறும்படமும் ஆகும்.

5 comments:

Sridhar Narayanan 13 June 2009 at 5:43 am  

32 கேள்விகள் - தொடரில் பங்குபெற உங்களையும் அழைத்துள்ளேன். உங்கள் சிறப்பான பதில்களோடு உங்கள் நண்பர்களையும் பங்குகொள்ள செய்யவும். நன்றி!

Krishna Prabhu 13 June 2009 at 10:06 am  

சங்கமம் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றதன் முடிவினைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்க்கள்.

Nundhaa 15 June 2009 at 5:22 pm  

பேருந்துப் போட்டியில் முதல் பரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள்

தீப்பெட்டி 15 June 2009 at 6:05 pm  

நல்ல விளம்பரம்..

பகிர்ந்தமைக்கு நன்றி..

வெங்கிராஜா 15 June 2009 at 9:49 pm  

Sridhar Narayanan, Krishna Prabhu, Nundhaa, தீப்பெட்டி வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்!

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP