மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

01-Apr-2009

சங்கமம் போட்டியாளர்கள்- ஒரு பார்வை

சங்கமத்தில் 'கல்லூரி' எனும் தலைப்பில் போட்டி நடக்கிறது. ஏப்ரல் 5 வரை வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லியிருக்கிறார்கள். ஓட்டு போடுவதற்கு முன் எனது 2 பைசாக்களை ( my two cents :P ) சொல்லிவிடலாமென்று அனுமானித்து இங்கே அத்தனை கதைகளையும் பற்றி சின்ன விமர்சனம். (நல்ல வேளை நான் எதுவும் எழுதிவைக்கவில்லை)

டிஸ்கி: நான் ஒரு சாதாரண ஆரம்ப நிலை வாசகன்/ பதிவன். நான் உங்களை புண்படுத்தவோ, எனது மேதமையை காட்டவோ இதை எழுதவில்லை. மீதமுள்ள 15 பதிவுகளைப் பற்றி பின்வரும் பதிவில் கருத்துகளை உரைக்கிறேன். போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நீங்கள் வாக்களிக்கவில்லையெனில் தயவு செய்து பதிவுகளை படித்துவிட்டு வாக்களியுங்கள்.

1. நாமக்கல் சிபியின் கல்லூரி நாட்கள்:
கதையை படிக்கும் போது காட்சிகள் கண்முன்னே நடக்கின்றன. நடை சற்றே வேகமாக பயணிப்பதால் தொய்வின்றி கதை நகர்கிறது. கருப்பொருளில் அந்த பஞ்ச் மிஸ்ஸிங். வால் அண்ணன் சொன்னது போல இன்னும் நன்றாக செதுக்கி வேறொரு கதை அனுப்பியிருக்கலாம்

2. SURE ஷ்-இன் கல்லூரி வாழ்க்கையில் ஏன் காதல் வந்தது?:
திறமை ஆங்காங்கே வெளிப்படுகிறது. முடிவு எனக்கு பிடித்திருந்தது, விவரிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். போட்டிக்கு அனுப்பபெற்ற கதை என்ற கோணத்தில் பார்க்கையில் பாத்திரப்படைப்பு பல்வீனமாக இருந்ததென்று சொல்லவேண்டும்.

3. இயற்கையின் ஏன் இந்த மாற்றம் என்னுள்ளே ;-)
தலைப்புல இருந்த உள்குத்தை புரிஞ்சுகிட்டிருந்திருக்கணும். கடைசி இரண்டு வரியில் கலக்கிவிட்டார். இரண்டாவது முறை படிக்கையில் புது அர்த்தம் கிடைப்பது தான் கவிதையின் வெற்றி. குறிப்பாக கவிதையில் சொல்லப்பெறும் சம்பவ நிரல் ரசிக்கும்படியாக இருக்கிறது. மிக நன்று.

4. தமிழரசியின் நான் அவன் காதல்:
அற்ப சந்தோஷங்கள், வார்த்தை ஜாலங்கள், குறும்பான வரிகள், வலியின் குமுறல் எல்லாம் இருந்தும் ஏற்கனவே படித்ததைப் போன்ற ஒரு சலிப்பைத் தருகிறது. நீளமும் ரொம்ப அதிகம். அனைத்திற்கும் மேலாக கவிதைக்குரிய ஓசை நயம் தப்பிப்போகிறது. இருப்பினும், வாழ்த்துக்கள்.

5. சந்துருவின் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நண்பனே!:
தனது கல்லூரி வாழ்வினை அசைபோட்டிருக்கிறார். குறிப்பாக தனது வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற வைத்த தோழரைப் பற்றி. சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. வாழ்க்கை சம்பவங்களை விமர்சனம் செய்வதா என்று விளங்கவில்லை, நல்ல பதிவு என்றாலும் போட்டியில் தேர்வு பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

6. நசரேயனின் மாணவர்களுக்கு எச்சரிக்கை:
ஹாஸ்யமாக எழுதியிருக்கிறார். சொல்லும் விதமும், வார்த்தை வருணணையும் நன்று. கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் இன்றி வெறுமனே நகைச்சுவைக்கு எழுதியதாய் எனக்கு பட்டது. நிகழ்ச்சியும் அவ்வளவாய் ஈர்க்கவில்லை, அதனால் சிறுகதை படிக்கும் ஃபீல் மிஸ்ஸிங்.

7. பொறியியல் வகுப்பு முதல் நாள்:
முழுவதுமே சொந்த அனுபவமாய் இருப்பதனால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் சில வரிகள் பளிச்சிட்டன: "இருந்தாலும் நாங்க மெக்கானிக்கல் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு சீன் போட்டு ஓட்டினோம்."

8. லதானந்தின் ஈயும் ஏரோப்ளேனும்:
இதுவும் ஒரு நகைச்சுவையான பதிவு. அவரது துணுக்குத்தோரணம் ஒன்றினைப் பற்றி. கல்லூரியில் படிக்கையில் சென்று வந்த ஒரு போட்டி பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். வெகுஜன ரசனைக்கான பதிவு.

9. ம.பழனியப்பனின் பதினெட்டாம் ஆண்டு கொண்டாட்டம்:
பதிவர்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத வலைப்பூ என்று நினைக்கிறேன். அனுபவத்தை அழகாக கொடுத்திருக்கிறார். மீண்டும் ஒன்றுகூடும் பழைய நண்பர்கள் எப்படி தங்கள் பொற்காலத்தை நினைவுகூர்கிறார்கள் என்று எளிய நடையில் எழுதியிருக்கிறார். ஒரு வரி மிகவும் நுட்பமான, அனாசாயமான குறியீடாக எனக்கு தோன்றியது. பட்டது. "நாங்கள் படிக்கையில் கன்றாக இருந்த ஆலமரம் இப்போது விழுதுகள் விட்டிருந்தது"

10. ஷீ நிசியின் கல்லூரி இறுதி நாள்:
நன்றாக எழுதப்பட்ட கவிதை. ஆனால் இன்னும் முடிக்கப்படாதது போல தொக்கி நிற்கிறது, அது அதே பாணி கவிதைகள் முடிவதைப்போலவே முடிவதால் கூட இருக்கலாம். நடுநடுவில் வரும் இயைபுத்தொடை மிகவும் கவர்கிறது. உதாரணத்திற்கு: "வலிக்கும் வலிகளோடும், துளிர்க்கும் துளிகளோடும்." இன்னும் சற்று மெனக்கெட்டிருந்தால் மகத்தான கவிதையாகியிருக்கும்.

11. வினோத் கௌதமின் தொடர்பு கதைகள் (நம்ம ஊரு பேபல்):
சுவாரஸ்யமான கதை. அணுகுமுறையில் வித்தியாசம் காட்டியிருந்தார். கடைசியில் வரும் திருப்பத்தை பெயரை வைத்தே ஊகிக்கும்படி ஆகிவிட்டது கொஞ்சம் நெருடலே. உரையாடல்களை இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன். நல்ல முயற்சி.

12. தணிகாஷின் உன்னில் விழுந்தேன் என்னை இழந்தேன்!:
வழக்கமான சோக கீதம் தான். தலைப்பு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. தன்போக்கில் ஒரு பெண்ணை வசைபாடியிருக்கிறார். சம்பிரதாயமான காதல் தோல்வி கவிதை ரகம் தான். எனினும் சரக்கில்லாமலெல்லாம் இல்லை. இந்த வரி அதற்கு எடுத்துக்காட்டாய்-உன்னை நினைந்தேன் -என் அன்னை ம‌ற‌ந்தேன் அவ‌ள் உதிர‌த்தை உர‌மாக்கினாள்-நீயென் உள்ள‌த்தை விற‌காக்கினாய்."

(மீதி அடுத்த பதிவில்)

16 comments:

லதானந்த் 3 April 2009 at 5:09 pm  

நன்றி!

vinoth gowtham 3 April 2009 at 5:19 pm  

நன்றி வெங்கி.

அந்த திருப்பம் பெயரை வைத்து ஊகிக்கும்ப்படி ஆனது எதிர்ப்பாராமல் அமைந்தது.
கண்டிப்பாக இனி என்னால் முடிந்த வரை நன்றாக செய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

வெங்கிராஜா 3 April 2009 at 5:33 pm  

வந்ததற்கு நன்றி.
போட்டியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

வால்பையன் 3 April 2009 at 5:52 pm  

//வால் அண்ணன் சொன்னது போல இன்னும் நன்றாக செதுக்கி வேறொரு கதை அனுப்பியிருக்கலாம்//

அவரே மறந்திருப்பாரு! நீங்க உசுப்பேத்தி விடுறிங்களே!

வால்பையன் 3 April 2009 at 5:53 pm  

பரவாயில்லை!
நல்லாவே விமர்சிக்கிறிங்க!
நான் பள்ளிகூடம் தாண்டலை இல்லைன்னா நானும் வந்திருப்பேன்.

சந்துரு 3 April 2009 at 5:56 pm  

உங்கள் விமர்சணத்துக்கு, வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி. போட்டியாளர்கள் அனைவரின் சார்பாக நன்றி.

நசரேயன் 3 April 2009 at 8:43 pm  

நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்

KISHORE 3 April 2009 at 10:57 pm  

vazhthukkal venki

SUREஷ் 4 April 2009 at 9:41 am  

நன்றி தல...

ஆனால்.. நான் வேறு இயற்கை வேறு..

வெங்கிராஜா 4 April 2009 at 10:07 pm  

வால், சந்துரு, கிஷோர், நசரேயன், சுரேஷ், தணிகாஷ், அனைவருக்கும் நன்றி.

சின்ன தவறு நடந்து போச்சு சுரேஷ். மன்னிச்சிருங்க.

என்ன சொல்றீங்க வால்பையன்? விளங்கலையே..!

இய‌ற்கை 5 April 2009 at 8:35 am  

உங்க‌ள் விமர்ச‌ன‌த்திற்கு ந‌ன்றிங்க‌..போட்டியாள‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்

வெங்கிராஜா 5 April 2009 at 12:44 pm  

வாங்க இயற்கை. நன்றி சொன்னதற்கு நன்றி :P

லோகு 5 April 2009 at 3:51 pm  

எப்ப ரெண்டாம் பாகம் எழுதுவீங்க..

வெங்கிராஜா 5 April 2009 at 7:38 pm  

நாளைக்கே போட்டுடுறேன் லோகு சார்.. இன்னையோட வாக்களிப்பு ஆனா முடியுது-ன்னு நினைக்கிறேன்.

SUREஷ் 7 April 2009 at 4:49 pm  

//சின்ன தவறு நடந்து போச்சு சுரேஷ். மன்னிச்சிருங்க.//


பராவாயில்ல தல... திருத்தி விடுங்கள். இன்னும் நீங்கள் சரி செய்து விடுங்கள். இயற்கை எழுதிய இடத்தில் என் பெயரையையும் லின்க் ஐயும் மாற்றிக் கொடுத்து உள்ளீர்கள்.

வெங்கிராஜா 7 April 2009 at 7:02 pm  

உங்கள் விருப்ப்ம்.. எனது ஆணை!
மாத்திட்டு வந்திடுறேன்! ;)

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP