மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

02-May-2009

சங்கமம் 'பேருந்து' போட்டிக்கான இடுகை

மந்திர நிமிடம்.

போட்டியில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்!


தனியாக நான் பண்டாரம் போல வீதியில் ஓடிக்கொண்டிருந்தேன். கோயம்பேடு தனது போர்வையத் தளர்த்திக்கொண்டு கொட்டாவியோடு துயில் கலையத் தொடங்கியது. துணைக்கு சைக்கிள் மணியோசையுடன் சிறகுகள் மறுக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளும் செய்தித்தாள்களும் வாசற்படியோரம் சிந்துகையில் கண்சிமிட்டி கண்சிமிட்டி தெருவிளக்குகள் சூரிய நமஸ்காரம் புரிந்தன. ரேடியோக்களில் இன்னும் எழுபதுகளின் கானங்கள் மாறாமல் டேக்ஸி ஸ்டாண்டுகளிலும், டீக்கடைகளிலும் சிகரெட் புகைக்கு பழகியபடி ஒலித்துக்கொண்டிருந்தன. கந்தர் சஷ்டி கவசங்களும், வேங்கடேச சுப்ரபாதங்களும் விடாமல் வீடுகள், அங்காடிகள் முதல் பேருந்து நிலையங்கள் வரை இசைக்கத்தொடங்க, பனித்துளிகள் பில்டர் காபி வாசனையோடு தி ஹிண்டு அல்லது தினத்தந்தி வாசிப்பில் மாயமாகிக்கொண்டிருந்தன. பெரிய மீசையோடு பருத்த உடல்வாகுடைய அந்த காக்கி கார்டை பஞ்ச் அடித்துவிட்டு மெக்கானிக் ஷெட்டுக்கு புறப்பட்டார். கையெழுத்து போட்டுவிட்டு சாவி போட்டால் ஓடும் அந்த பெரிய பொம்மையை உள்ளே அமர்ந்தபடி இயக்கலாயினார்; பேனா தெறித்த மையாய் பேருந்து கக்கும் புகை. காலையிலேயே சூடான இட்லியை வெங்காய சட்னியோடு சாப்பிடும் சுகமே அலாதி. அநேகமாக இந்நேரம் காலையில் பார்த்த மீசைக்கார பேருந்து ஓட்டுனர் பழகிப்போன பெட்ரோல் வாசனையை தனது மூளை நரம்புகளுக்கு இன்னுமொருமுறை புலப்படுத்திக்கொண்டிருப்பார். பேருந்தை டிப்போவிலிருந்து பாயிண்டுக்கு கொண்டு சென்று ட்ரிப்பைத் தொடக்கவேண்டியதுதான் மீதி- பூந்தமல்லியிலிருந்து பிராட்வே வரை செல்லும் அதிவேக வாகனத்தில் அமர்ந்திருக்கும் நான் மற்றுமொரு மென்பொருள் கூலி.மிதித்த ஆற்றலை காற்றில் புகையாக ஊற்றிக்கொண்டிருக்கும் பேருந்து என்னை ஒரு ஊர்தி வெள்ளத்தினூடே செலுத்திக்கொண்டிருந்தது. ஒரே நொடிக்குள் பதினைந்து பதினாறு ஹார்ன் சத்தங்கள் எழும்ப கண்ணாடியினூடே நிறம் மங்கித்தெரிந்த சிக்னல் விளக்குகளால் நெறிபடுத்தப்பட்டுக்கொண்டிருந்தது பேருந்து. மற்ற வாகனங்கள் செலுத்தும் சைகைகளால் தனது போக்கை தொடர்ந்து திருத்திக்கொண்டேயிருந்தது. பாகனின் கோலை ஒத்தபடி ஸ்டியரிங்கும் ஓட்டுனரின் மகுடியென கியரும் தன்னை ஆட்டுவிக்க ஆட்டுவிக்க நடுத்தெருவில் வித்தை காட்டிக்கொண்டே சீறிப்பாய்ந்தது. தனிமையின் இசை வாழ்வில் பெரிய வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது. சூரியனுக்கு வெள்ளையடித்து நிலாவையும் ஒளிரவைத்தாகிவிட்டாயிற்று. நாள்தோறும் இதே பழைய க்ராமஃபோன் ரிக்கார்டைத் தான் தேயத்தேய ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதே டீக்கடை, அதே கிங்க்ஸ், அதே பைக் பார்க்கிங், அதே கார்ட் ஸ்வைப், அதே ப்ராஜக்ட் லீடர், அதே லோ-வெய்ஸ்ட் ஜீன்ஸ் யுவதிகள், அதே மாலை நேர ட்விட்டர், அதே வார இறுதி ஜேக் டேனியல். ஒரு தினுசான மயக்க நிலையில் நம்மை அறியாமலேயே நூற்றுக்கணக்கான மனச்சித்திரங்களை அசைபோட்டபடி கவனமின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு கனவுலகினிலேயே பயணித்து தலம் வந்தடைகிறோம். வரைந்த காம்பஸ் வட்டங்களை பென்சிலால் திரும்பத் திரும்ப அழுத்தி வட்டமடிப்பது போல நேற்று பதித்த சக்கர சுவடுகளின் மேலேயே இன்றும் தனது பாதம் பதித்துக்கொண்டிருக்கிறது பேருந்து. அதே பூந்தமல்லி, அதே போரூர், அதே வளசரவாக்கம், அதே விருகம்பாக்கம், அதே வடபழனி, அதே கோடம்பாக்கம், அதே அசோக் நகர், அதே நுங்கம்பாக்கம், அதே சேத்துபட்டு, அதே சென்ட்ரல், அதே ப்ராட்வே.
கூட்டத்தின் மையமாக நின்றிருந்தாலும் மனதில் இழையோடும் இந்த தனிமையின் ரீங்காரம் காதுகளில் "நீ துணையற்றவன்!" என்று மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. சீட்டு ஒதுக்கப்படும் மூக்குப்பொடி கிழம், தொலைக்காட்சித் தொடர் விவாதிக்கும் நடுத்தர வயதுப் பெண்மணி, டை மாட்டிய ஆபீசர்கள், பாக்கட்டுகள் பத்திலும் ஒன்றுமேயில்லாத இளைஞர் பட்டாளம், ஜன்னலுக்கு வெளியே கை நீட்டும் பள்ளிச்சிறுமிகள், கூடைகளில் கருவாட்டை மணக்க மணக்க கொண்டு செல்லும் மூதாட்டி, பீடியை காதில் செருகிய குடிமகன் என பற்பல சினேகிதர்களுடைய பேருந்திற்கும் என்னைப்போலவே சொல்லிக்கொள்ளும்படி துணை யாரும் இல்லை தான். இரவல் நகையென மாறி மாறி ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பாவிக்கும் அப்பாவி ஜீவன் தான் இதுவும், பார்வையாளர்களுக்கும் பாதசாரிகளுக்கும் நேர்ந்து விடப்பட்ட எடுப்பார் கைப்பிள்ளை. தனிமை தான் மனிதனின் முதல் கண்டுபிடிப்பாக இருந்திருக்க வேண்டும். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பியோடவே மது, மாது போன்ற வஸ்துக்களின் திரையில் எல்லோரும் ஒளிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இந்த வேலியை உடைக்க முடியாதா? இரவின் அடர்ந்த இருட்டில் வெளிச்சத்திற்கு வரும் தத்தம் தனிமையையே இன்னும் எத்தனை நாள் சிகரெட்டுப் புகையில் அலைகழிப்பது? உச்சி வெயிலில் தெருவோரங்களில் படரும் கட்டிட நிழல்களினூடே தாவிதாவி கதிரவனிடமிருந்து இன்னும் எத்தனை நாள் ஒளிந்துகொண்டேயிருப்பது? பேருந்துக்கென்று இருக்கும் தளைகளைத் தகர்த்து போட்டுவைத்த பாதையை விடுத்து அதன் சக்கரங்களை சுயமாக ஏவும் நேரம் வந்தும் விட்டது.தனிமையில் நடந்து கொண்டிருக்கும் நபர் திடீரென்று தன் அலைபேசியை நடுத்தெருவில் போட்டு உடைத்தால் ஒரு நொடியில் தெருவின் ஒட்டுமொத்த கவனமும் அவர் பக்கம் திரும்பும். அந்த ஒரு நொடியில் திரைப்பட நடிகரின் புகழை, வரலாற்றுச் சக்கரவர்த்திகளின் புகழை, ஒரே கணத்தில் வென்று சாஸ்வதப்பதவி எய்திவிடலாம். அண்டசராசரத்தின் சிம்மாசனத்தில் அமரும் அந்த மந்திர நிமிடத்தில் முக்திநிலையை அடைந்து தனிமையை மறக்க ஒரே வழி இதுதான். ஓட்டுனர் நடத்துனர் எல்லோரும் இரவு உணவிற்கு போயிருக்கிறார்கள்; ஓரமாக போர்க்களத்தில் இருக்கும் குதிரையைப் போல கம்பீரமாக வீற்றிருந்தது பேருந்து. இன்னமும் சென்னை மக்கள் எறும்புகளைப்போல உயிர்ப்போடு இயங்கிக்கொண்டிருந்தனர். கடைசி நிறுத்தத்தில் இறங்கி, தெருவோரம் இருந்த ஓல்டு மங்க் பாட்டிலை பொறுக்கிக்கொண்டேன். அரை லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வியர்வை படிந்த கைக்குட்டையை அதனுள் தோய்த்தேன். இடையூறுகளைத் தகர்த்து வெல்லும் வீடியோ கேம் வீரனைப் போல அருகிலிருந்த கட்டிடத்தின் மொட்டைமாடியின் ஓரத்திற்கு வந்து எதிரே இருந்த ட்ரான்ஸ்பார்மரின் மேல் அதை வீசி எறிந்தேன். பாட்டிலின் பெட்ரோல் பற்றிக்கொண்டு மேலே பட்ட அதிர்ச்சியில் ட்ரான்ஸ்ஃபார்மரையும் கொளுத்திவிட்டு வெடித்துச்சிதறியது. வெடித்ததில் சிதறிய இரும்புத்துண்டு ஒன்று வந்து என் நெற்றியைக் கிழித்துச்சென்றது. வழிந்த ரத்தத்தை துடைக்காமல் அப்படியே ஓடவிட்டுக்கொண்டு மேலிருந்து சிந்தும் தூறலில் நனைந்தபடியே சிகரெட்டை வாயில் செருகிக்கொண்டேன். இடியின் பிண்ணனி இசையில் கோரச்சிரிப்பொன்றை உதிர்த்தபடி தனிமையை வென்ற பெருமித்ததுடன் நடைபோட்டேன். மறுபக்கம் சும்மா நின்றுகொண்டிருந்த பேருந்து யாருமேயில்லாமல் தானாகவே இயங்கத் தொடங்கிற்று. ஒரே மூச்சில் முழுவேகம் பிடித்து தரையில் படுத்திருந்த வெறிநாயின் கழுத்தில் ஏறியது. சுற்றி நடந்து கொண்டிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தபடி பார்த்துக்கொண்டேயிருக்க மீண்டும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கேற்றி வ்ரூம் என்று கிளப்பிய ஓசையில் திகிலடைந்த கூட்டம் தெறித்து ஓடியது. இந்த மந்திர நிமிடத்தின் அதிர்வலைகளிலேயே காலமெல்லாம் தனிமையின் கசப்பை மறந்துவிட முடியும் என்று நம்பிக்கை கொண்டேன். மறுநாள் காலை பேருந்து ஷெட்டில் நின்றுகொண்டிருக்கிறது, தனியாக நான் பண்டாரம் போல வீதியில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.


போட்டியில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்!


______________________________________________________________

31 comments:

vinoth gowtham 3 May 2009 at 12:32 am  

கதை ரொம்ப ஆழமான வாக்கியங்களை கொண்டு கை ஆளப்பட்டு இருக்கிறது வெங்கி..
இன்னும் ஒரு தடவை முழுமையாக படித்து விட்டு கமெண்ட் போடுகிறேன்..

vinoth gowtham 3 May 2009 at 12:34 am  

Template Superb..

வெங்கிராஜா 3 May 2009 at 9:59 am  

வருகைக்கு நன்றி வினோத்! டெம்ப்ளேட் கிடைக்கும் தளத்தையும் குறிப்பிட்டிருக்கிறேனே, போய்ப் பாருங்க, நிறைய ஈஸ்தெடிக்கான டெம்ப்ளேட்டுகள் கிடைக்கின்றன!

"அகநாழிகை" 3 May 2009 at 12:08 pm  

வெங்கிராஜா,
உங்கள் எழுத்துநடை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

மிக்க அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

vinoth gowtham 3 May 2009 at 6:44 pm  

பிரமிக்கதக்க எழுத்து நடை வெங்கி..
காட்சிகள் சம்பவங்களும் கண்முன் விரிகின்றன..

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Suresh 3 May 2009 at 7:03 pm  

மிக அருமையாக இருந்தது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

வெங்கிராஜா 4 May 2009 at 1:26 am  

நன்றி சார். உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள் வந்து ஆதரவு தெரிவிக்கையில் நம்பிக்கை கூடுகிறது. வந்த உடனே வலைப்பூவை பிந்தொடரவும் செய்யும் உங்களுக்கு நன்றிகள் பல.

வினோத், தங்களைப் போன்ற ஒரு வாடிக்கையான வாசகர் எனக்கு கிடைத்ததில் மிகுந்த புளங்காகிதம் அடைகிறேன். மேலும், என்னைத் தொடர்ந்து பாராட்டிக்கொண்டிருப்பதில் கொஞ்சம் கூச்சமும் அடைகிறேன்.

சுரேஷ், வழக்கம் போல நன்றிகள். போட்டியில் பங்கேற்பதே வெற்றியில் பாதி. அதுதான் விளையாட்டின் சுகமே. நான் வெற்றி பெறுவேன் என்ற நோக்கில் எழுதவில்லை. எனக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டேன். வெற்றி பெறுவது இப்போது கவனத்தில் வேண்டாம். இருப்பினும், வாழ்த்தியதில் மகிழ்ச்சி!

தீப்பெட்டி 6 May 2009 at 5:19 pm  

கதையில் சொல்லாட்சியும் கதை சொல்லும் உத்தியும் மிகஅருமை.

வாழ்த்துகள் போட்டியில் வெற்றி பெறவும், தொடர்ந்து சிறந்த பதிவுகளை எழுதவும்.

நன்றி

Krishna Prabhu 7 May 2009 at 12:07 pm  

வணக்கம் வெங்கிராஜா. உங்களுக்கு பின்னூட்டமிட்டு நீட்ட நாட்கள் ஆகிறது.

தவறாக நினைக்கவில்லைஎனில் ஒரு சிறிய யோசனை. நீங்கள் தற்போது blog - ஐ justify செய்து இருக்கிறீர்கள். அதை align left -க்கு மாற்றுங்கள். படிப்பதற்கு சுலபமாக இருக்கும். கோர்வையாக படிக்கவும் ஏதுவாக இருக்கும்.

வெங்கிராஜா 7 May 2009 at 6:30 pm  

@ தீப்பெட்டி: வந்தனம்! சொல்லாட்சி என்பதெல்லாம் நம்ம வயசுக்கும், வளர்ச்சிக்கும் பெரிய பாராட்டு. அளவுகடந்த பிரியத்துக்கு நன்றி.
@ கிருஷ்ணப் பிரபு: மீண்டும் வந்து வாசித்தமைக்கே நான் நன்றி சொல்லணும்! நட்போட பின்னூட்டமெல்லாம் வேற போடுறீங்க.. நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் 8 May 2009 at 7:52 pm  

ரெண்டு முறை படிச்சாதான் புரியும் போல இருக்கிறது. ஒருத்தரை ஒரு முறை படிக்கவைப்பதே எவ்வளவு சிரமமான காரியம் என்பதை அறிவீர்கள்.

பின்நவீனக்கவிதைகள் ஒரு பக்கம் என்றால் பின்நவீனக் கதையுமா? பொன்.வாசுதேவன் போன்ற சீனியர்கள் மட்டும்தான் வருவார்கள்.. ஜாக்கிரதை.! ஹிஹி..

சூழலை அப்படியே படம்பிடித்திருக்கிறீர்கள். ஆனால் அதுவே கதை முழுதும் நிரம்பியிருப்பதைப்போன்ற தோற்றம் இருப்பதால் அந்தச்சிறப்பே மைனஸாகிவிடுகிறது.

மெயில் ஐடியை நீங்கள் எங்கேயுமே வைக்கவில்லை. நல்லதை பின்னூட்டமாகவும், விமர்சனத்தை மெயிலாகவும் பலர் தெரிவிக்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள். இப்போ பாருங்கள் விமர்சனத்தை இங்கேயே போட நீங்களே காரணமாகிவிட்டீர்கள்.

வெங்கிராஜா 8 May 2009 at 8:10 pm  

பரிசலாரின் பின்னூட்டம்! எக்கச்சக்கமாய் சந்தோஷமாக இருக்கிறது! இந்த அங்கீகாரமே போதும்!
பின் நவீனத்துவம் மாதிரியெல்லாமா இருக்கு? நான் சாதாரணமாத்தான் எழுதினேன். யோசனைக்கு நன்றி.. முதலில் ஃபேஸ்புக் பேட்ஜ் வைத்திருந்தேன்.. புது டெம்ப்ளேட்டில் வேலை செய்வதில்லை. ப்ரொஃபைல்-லயே இணைச்சாச்சு! பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி! தொடர்ந்து வரவும்!

மண்குதிரை 10 May 2009 at 1:18 pm  

நல்லா இருக்கு வெங்கி. தொடர என் வாழ்த்துக்கள்.

வால்பையன் 15 May 2009 at 3:10 pm  

//இன்னும் ஒரு தடவை முழுமையாக படித்து விட்டு கமெண்ட் போடுகிறேன்..//

நான் இதுக்கு ரிப்பீட்டு போடுகிறேன்!

புதிய பதிவர்கள் கொஞ்சம் சிறுசா பதிவு போடுங்க, தாவூ தீருது!

வெங்கிராஜா 16 May 2009 at 9:39 am  

மண்குதிரை: வாழ்த்துகளுக்கு நன்றி.
வால் அண்ணே: போட்டிக்கான பதிவு-ங்கறதால கொஞ்சம் விவரமா எழுதியிருந்தேன். மற்ற பதிவுகள் ஒண்ணும் அவ்வளவு பெருசா இருக்காதே! எனிவே, பாய்ண்ட் டேகென்!

சத்யராஜ்குமார் 18 May 2009 at 4:25 pm  

விவரணை அழகாக உள்ளது. மேலும் படைக்க வாழ்த்துக்கள்.

நசரேயன் 20 May 2009 at 3:38 am  

நல்லா இருக்கு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்

வெங்கிராஜா 20 May 2009 at 10:46 pm  

நன்றி சத்யராஜ்குமார் மற்றும் நசரேயன். உங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்ப்பறவை 20 May 2009 at 11:04 pm  

வெங்கி...இரு வாரங்களுக்கு முன்பே படித்து விட்டேன். தாமதப் பின்னூட்டம்தான்...
நானென்ன சொல்ல, அதைத்தான் ஆதிமூல கிருஷ்ணன் அழகாகச் சொல்லி விட்டுப் போய் விட்டார்.
நல்ல விளக்கங்களுடன் இருக்கிறது சூழல்.. ஆனால் படிக்கையில் சற்று அலுப்பேற்படுத்துவதென்னவோ உண்மை.
இதுதான் தீவிர இலக்கியமோ தெரியாது. அப்படியெனில் கருத்தினை மன்னிக்கவும்.ஆனால் வந்து படிப்பவர்கள் ஓரிரு பாராவிலேயே மூலைப் பெருக்கலை(close the window) அமுக்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது...
உங்களின் மற்றைய படைப்புகளும் பார்த்திருக்கிறேன்.. புகைப்படங்கள் அருமை...
வாழ்த்துக்கள்...
19 வயதிலேயே இவ்வளவு அழுத்தமான எழுத்துக்கள்... வளமான எதிர்காலம் இருக்கிறது.

வெங்கிராஜா 21 May 2009 at 5:25 am  

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. குறைகளை நிவர்த்தி செய்ய முயல்கிறேன்.
அப்ப போட்டியில இன்னும் வாய்ப்பிருக்குதுன்றீங்க? ம்ம்ம்... பார்ப்போம்.

Nundhaa 31 May 2009 at 2:15 pm  

வெங்கி ... சங்கமத்தில் 5 கொடுத்திருகிறேன் ... வாழ்த்துக்கள்

வெங்கிராஜா 31 May 2009 at 6:00 pm  

நந்தா... மீண்டும் வருக! வாக்களித்தமைக்கு நன்றி... நானும் எல்லா இடுகைகளுக்கும் வாக்களிச்சுட்டேன்! :D

உங்களுக்கும் வாழ்த்துகள்!

Sridhar Narayanan 10 June 2009 at 11:15 pm  

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் தலை! :)

ILA 11 June 2009 at 12:57 am  

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

மனுநீதி 11 June 2009 at 9:46 am  

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

nila 11 June 2009 at 6:37 pm  

வாழ்த்துக்கள் அண்ணா

கார்க்கி 12 June 2009 at 9:15 am  

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் சகா

வெட்டிப்பயல் 12 June 2009 at 11:22 am  

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!!!

தீப்பெட்டி 12 June 2009 at 11:48 am  

வென்றதற்கு வாழ்த்துகள்..

ஆமா ட்ரீட் எப்போ வெங்கி..

வெங்கிராஜா 13 June 2009 at 12:15 am  

வாக்களித்த, பின்னூட்டமிட்ட, படித்த, மின்னஞ்சல் அளித்த அத்தனை பேருக்கும் நன்றி!

மேலும் சங்கமம் தளம், போட்டியாளர்கள், நடுவர்கள் - நன்றி!

உங்கள் ஆதரவே என் வெற்றி..! இதை இதுவரை தடம் பதித்த 3207, இனிவரும் அனைவருக்கும் "சங்கமம் 'பேருந்து' போட்டிக்கான இடுகை"யை சமர்பிக்கிறேன்... !

நன்றி! நன்றி! நன்றி!

நாடோடி இலக்கியன் 13 June 2009 at 12:11 pm  

மிரட்டலான எழுத்து நடை...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே...!

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP