மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

11-May-2009

ஆதலினால் சாதல்

என் காதல் யாழினிக்கு,
நலமில்லை தான். நலமில்லாதவர்களைப்பற்றி அறிய ஆவலும் இல்லை தான். நான் இதுவரை நெடிய மடல்கள் யாருக்கும் எழுதியதில்லை, இனி எழுதப் போவதும் இல்லை. நான் உன்னை அழைத்தது எல்லாவற்றையும் பேசுவதற்கு... ஒட்டுமொத்தமாக,ஒரேயடியாக. யாருடனும் பேசிக்கொண்டே இருக்க எனக்கு பிடிக்காதென்றாலும் மௌனத்தின் நச்சரிப்பு அதைவிடக் கொடியது.

நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன், சுற்றியிருக்கிறேன்; ஆனால் காதலித்ததெல்லாம் இல்லை. அவர்கள் அழகாயிருப்பார்கள், ரசிப்பேன். மலர்களே பார்ப்பதற்குத்தானே, நான் எந்த மலரையும் கசக்கவில்லை. சத்தியமாக.
"தேவதைகளை சந்தித்ததில்லை
என்று பொய் சொல்ல விரும்பவில்லை
வந்திருக்கிறார்கள்
வந்து வெறுமனே
வணக்கம் சொல்லிப் போய்விடுவார்கள்"
- மு.மேத்தா.


அன்றொரு நாள் என் நண்பனுக்காக காத்திருக்கையில் தான் ஒரு பூகம்பத்தை நேருக்கு நேராக சந்தித்தேன். கையிலிருந்த சிகரெட் விரல்களை பொசுக்கும் வரை உனது ஸ்பரிசத்திற்காக ஏங்கினேன். எனது முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியின் உள்ளே இருக்கும் கண்களிடம் என்னை பணயமாக வைத்து தோல்வி கண்டேன். ஒரு மாதம் பின்தொடர்ந்து, உன் செருப்பு அளவு வரை கற்றறிந்தேன். அப்புறம் நீ அடிக்கடி கவிதைப் புத்தகம் வாங்க வந்தது தெரிந்து, உனக்கொரு காதல் கவிதை புத்தகம் பரிசளித்தேன். நன்றி பழனிபாரதிக்கு, அவரால் தான் நம் காதல்குழந்தை பிறந்தது.
"நான் தண்டவாளத்தில்
பூத்த பூ
நீ ரயிலில் வருகிறாயா?
நடந்து வருகிறாயா?"
- பழனிபாரதி


நீ நடந்து தான் வந்தாய். ஆனால் நடந்து வந்த நீ எனைக் கொன்ற ரயிலேறி ஏன் போனாய் தோழி? ஊரெல்லாம் சுற்றினோம். காதலை பருகினோம், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ட்ராவில். கல்யாணமும் பண்ணிக்கொண்டோம். காதல் வளர்ந்து விரிந்த வெட்டிக்கதை பேசி பயாஸ்கோப் ஓட்ட விரும்பவில்லை, அவை பாவம், இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கவிருக்கிறது என்பதை உணராத அற்ப நொடிகள்.

"If you think
I love you!
You are wrong.
Its something more than that."

இந்த கவிதையை ஞாபகமிருக்கிறதா? ஆமாம், உனக்கும் எனக்கும் சென்னையின் தீப்பெட்டிக்குழும குடியிருப்பொன்றின் பத்தாவது மாடிப்பார்வையில் தட்டுப்படும் மின்மினி விளக்குகளும் துணையாக இருக்கையில் நான் வாசித்தது தான். பாவம், உனக்கும் எத்தனை நேரம் தான் காதலிக்க பிடிக்கும்? ஊடல் கொண்டாட ஆரம்பித்தாய். நதியே நாஞ்சிலே என்று நான் சொன்னது எல்லாம் காதில் விழவில்லை. உன்னை சமாதானப்படுத்த நான் கொலம்பஸ்ஸாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அமெரிக்கா நல்ல நாடுதான். சருகுகள் சிந்தும் சிங்கார முற்றம் கொண்ட வீடொன்றை உனக்காக வடித்தேன். அழகான பேஸ்மெண்ட்டில் காரை பார்க் செய்துவிட்டு பேசிக்கொண்டிருப்போமே... அடடா எத்தனை அழகான நாட்கள் அவை! மேன்ஹட்டன் ஸ்கைலைனை விட அழகாய் இருந்ததே நம் வாழ்க்கை. இருனூறு மைல் வேகத்தில் நாம் பயணித்ததெல்லாம் ஞாபகமிருக்கிறதா செல்லமே? பகலிலும் நான் நிலவுடன் பேசிவந்தேன். ப்ச்.. எல்லாம் கானல் நீர்.

"அமாவாசையில் தான்
தோன்றுகிறது நிலவைப்பற்றி
கவிதை எழுத"

உன் மச்சங்களைப்போல இத்தகு சின்னசின்ன ஹைக்கூ கவிதைகள் கூட மிளிர்ந்தன பெண்ணே! நியுட்டனின் விதிகள் உடைத்து புவியீர்த்து விழவே இல்லை நம் காதல்.சில்லென்றே இருந்தது. ஆனால் எங்கே இடி விழுந்ததென எனக்கு இப்போதுதான் விளங்கியது சிநேகிதி! நான் மும்முரமாக வேலை பார்க்கும் வேளைதான் நம் காதல் படகு விரிசல் விட்ட தருணம். வெடி கையில் இருக்கிறது,வெடித்து விடும் என்று வீசியெறிந்தேன், ஆனால் வெடி விழுந்ததோ என் காலடியில்.

"நீ மேல் உதடு
நான் கீழ் உதடு
நாம் மௌனமாகவே
பேசிக்கொள்வோம்"
-இரமேஷ் விஸ்வநாதன்.

இப்படித்தான் நாம் இருக்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் உண்மை ஃபிக்ஷனை விட விசித்திரமானது என்பதனை கண்டுகொண்டேன். முதலில் யாரோ தோழி வந்திருப்பதாகச் சொன்னய். அதற்கப்புறம் ஒருமுறை தொலைபேசி மாதத்திற்கு இருபதினாயிரம் வந்ததும் தான் எனக்குள்ளிருந்த மிருகம் விழித்தது தலையணையே! மானே,நீ ஏன் கடித முனைகளையெல்லாம் படுக்கயறை ஓரமாக கத்தரித்திருந்தாயோ! நான் அறியேன்.ரகசிய ஈ-மெயில்களை ஏன் அனுப்பினாயோ! நான் அறியேன்.ஒருநாள் என் அலுவலக மேலாளர் வைகுந்தம் சென்ற காரணமாக எனக்கு விட்டிருந்த அரைநாள் விடுமுறையை லாஸ்-வேகாசில் செலவளிக்க நான் வர, வாழ்க்கை என்னை சூதாடிவிட்டது போ!சருகுகளை கிழித்துக்கொண்டு லம்போர்கினி வந்து பேஸ்மெண்ட் அடைய, அங்கே ஒருவன்.நானும் நீயும் கதைத்துக்கொண்டிருந்த தோரணையில்.எனக்கு ஒன்றுமே யோசிக்கத் தோன்றவில்லை.அதீத ஆசை உன் மேல். பூப்பறிக்க வந்தானோ கள்வன் என்றென்னி மூளை பையிலிருந்த துப்பாக்கி தோட்டாவை அந்த மடையனின் வாயில் ஊட்டியது.ரொம்ப சொங்கி போலிருக்கிறது. ஒரே குண்டு தான், சாய்ந்துவிட்டான். அதற்கப்புறம் உன்னை நெருங்கினேன். நீயாவது ஏதாவது சொல்லியிருக்கலாம். அவன் உன் தோழியின் கணவன், நம் வீட்டுக்கு உன்னை ட்ராப் செய்ய வந்திருக்கிறான், பின்னாடியே அவரது மனைவி வந்துகொண்டிருக்கிறாள் என. உனக்கு அறிவே கிடையாது. தோட்டத்தில் இருக்கவேண்டிய spade-ஐ அங்கு வைத்து தொலைத்திருந்தாய், என் கைக்கு வாட்டமாக. உன் தலையை அப்படிப் பார்க்க எனக்கே ரொம்ப பாவமாக இருந்தது.

"இன்றோடு உன்னைப் பார்த்து
78 நாட்கள் ஆகின்றன
இன்றோடு நீ என்னை
78 முறை கொன்றிருக்கிறாய்"

அட, இரண்டு வருடங்களாயிற்று, இப்படி கவிதையெல்லாம் எழுதி. இப்போது என்ன புண்ணியம், உன்னிடம் இந்த வரிகளை சிறையிலிருந்து நானும் சொல்லமுடியாது, சொர்ர்க்கத்திலிருந்து நியூயார்க் வந்து உன்னாலும் prison-pass வாங்கமுடியாது. ஆமாம்,உன்னிடமிருந்து விடுதலை வாங்குவதற்குள்,இங்கேயும் எனக்கு ஆயுள் தண்டனை தெரியுமா?

இப்படிக்கு கல்லறையில் அஞ்சல்பெட்டியைத்தேடும்,
ஒரு கொலைகாரக் காதலன்.


(19.12.2006 அன்று எழுதியது)

______________________________________________________________

12 comments:

Nundhaa 13 May 2009 at 10:29 pm  

ஒரு prose poem உள்ளே காதலையும் சாத்தியப்படுத்தி அசத்தியிருக்கிறீர்கள் ... காதல் கடிதம் நன்றாகவே இருக்கிறது ...

வெங்கிராஜா 14 May 2009 at 9:17 am  

தொடர்ந்து வருகை புரிந்தும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கும் நன்றி நந்தா!

தீப்பெட்டி 14 May 2009 at 10:32 pm  

ரொம்ப நல்லாயிருக்கு வெங்கி....
சூப்பர்ப்...

வெங்கிராஜா 14 May 2009 at 11:20 pm  

அட.. எனக்கும் இப்போ ஒரு வாசகர் வட்டம் உருவாகுதே (காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறேன்)... உங்களது விமர்சனங்களும் தோள்தட்டல்களும் எனது எழுத்துகளையும் யாரேனும் வாசிப்பார்களா என்ற எனது ஏக்கப் பொதியின் சுமையை வெகு இலேசாக்குகிறது. சரி...சரி... சொல்லிடுறேன்பா.. தேங்கஸ்ங்க!

மண்குதிரை 15 May 2009 at 12:50 pm  

காதல் கடிதத்தை படிக்க தருவது முறையா?

நல்லா எழுதியிருக்கீங்க.

vinoth gowtham 16 May 2009 at 11:33 am  

ரொம்ப நல்லா இருந்துச்சு வெங்கி..
ரசித்து படித்தேன்..

ஆதவா 16 May 2009 at 4:10 pm  

உங்கள் தளமே வெகு அருமையாக இருக்கிறது... பொறுங்கள், இந்த கடிதத்தைப் படித்து விடுகிறேன்.

ஆதவா 16 May 2009 at 4:14 pm  

ஒரு அழகான வலிமிகுந்த காதல் கடிதத்தைப் படித்த உணர்வு ஏற்பட்டது. இடைச்செறுகல்களான கவிதைகள் அழகான நேரத்தில் பொருத்தமாக சொறுகப்பட்டிருக்கிறது. பிரமாதம்.

ஒரு இணைப்பின் மூலம் இங்கே வந்தேன். உங்களைப் பின் தொடர்ந்து வருகிறேன்!!! நன்றி என் தளம் வந்து பதிவிட்டமைக்கு!!!

வெங்கிராஜா 17 May 2009 at 10:38 am  

மண் குதிரை, வினோத், ஆதவா: நன்றிகள்.
அன்பு ஆதவா, பாராட்டுக்கும் தொடர்ந்து நீங்கள் வாசிக்கப்போவதற்கும் நன்றிகள்.

பி.கு: அந்த கவிதைகள் தான் இந்த கதை உருவானதன் காரணமே!

தமிழ்ப்பறவை 20 May 2009 at 10:53 pm  

நல்ல விறுவிறுப்பான நடையிலிருக்கிறது கதை. மணிரத்னம் படத்தில் வரும் பாடல்கள் போலக் கச்சிதமாக அமர்ந்திருக்கின்றன கவிதைகள் அதனதன் இடத்தில்...
வாழ்த்துக்கள் வெங்கி....

//நான் தண்டவாளத்தில்
பூத்த பூ
நீ ரயிலில் வருகிறாயா?
நடந்து வருகிறாயா?"//

“தண்டவாளத்தில்
தலை சாய்த்துப் படுத்திருக்கும்(காத்திருக்கும்)
ஒற்றைப் பூ என் காதல்
நீ ரயிலில் வருகிறாயா?
நடந்து வருகிறாயா?"
என்று படித்ததாக ஞாபகம்...சரி பார்த்துச் சொல்லுங்கள்...
“காதலின் பின் கதவு” தொகுப்புதானே...

வெங்கிராஜா 21 May 2009 at 5:13 am  

அதேதானுங்க... மறதியா இருக்கும். தவிர இது பழைய கதை. இங்கே பதிஞ்சது CTRL+C/CTRL+V மட்டுமே

sdk 3 October 2009 at 3:48 pm  

Venkat,

erumba nalla eruku...keep doing all such lovables...

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP