மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

22-Jun-2009

உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிச் சிறுகதை

செந்தூரம்.

முன்னொரு காலத்தில் அந்த நிறத்தில் நான் மூழ்கியிருந்தேன். இரண்டு கண்மணிகள் மொத்தமும் அந்த வர்ணத்தையே பிரதிபலித்து அதன் நிறத்திற்கே மாறிவிட்டிருந்தன. கர்ப்ப வெளியில் நீந்தும் என்னை ரத்தத்தின் சிற்பமாக வடித்திருந்தாள் என் அன்னை. அதை ஊற்றியும் அதை உண்ணக்கொடுத்தும் என்னை அதால் நிரப்பியிருந்தாள். உடல், உள்ளம், எண்ணம், ஆக்கம், செயல், சூழல், மொழி என அனைத்துமே சிவப்பின் சூத்திரமாகவே ஆகிவிட்டிருந்தன. அந்த உலகத்தினின்று புறப்பட்டு வந்த செந்தூரக்குமரன் நான். அகமும் புறமும், ஆதியும் அந்தமும் சிவப்பின் ராஜ்ஜியமே. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

வெகுசில நாட்களுக்கு முன், என் தாய் குருதியின் நிறத்தில் ஒரு சேலையை அணிவதுண்டு. கண்களை மூடும் போதெல்லாம் கடவுள்களின் கடவுளாய் என் அன்னை நினைவிற்கு வருவார், அதே சிவப்புப் புடவையிலேயே. போட்டி ஒன்றில் வென்றதற்காக பள்ளியில் முதன்முதலாய் அகராதி ஒன்றினை எனக்கு தந்தார்கள். அதைக் கட்டிக்கொடுத்த சிவப்பு ரிப்பனை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். வழக்கமாக ரத்ததானம் செய்பவன் நான். அதே வீரியத்துடன் ரத்தத்தை ஊறவும் செய்ய வல்லவன். திசுக்கள் ஒவ்வொன்றிலும் ரத்தம் அதிவேகமாக ஊறுகிறது. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

நாங்கள் அநேகம் பேர்- காக்கிகள். சோற்றுப் பொட்டலம் ஏந்துபவர்கள். எங்களுக்கு அத்தனை ஞானமில்லை, ரொம்ப கம்மி. எங்களுக்கு தெரிந்ததெல்லாம், உழைப்பதும் அதற்கு கூலி பெறுவதுமே. உயிரோடிருப்பதே எங்கள் வாழ்க்கை இலட்சியமாய் இருந்தது. அவர்கள் சிலரே- வெள்ளை காலர்கள். அவர்கள் மெத்தப் படித்தவர்கள், மேதாவிகள். எங்களுக்கு எதெல்லாம் பரிச்சயம் இல்லையோ அவற்றிலெல்லாம் அவர்கள் பண்டிதர்கள். அவர்களுக்கு கொடிகளிலும் கூட்டங்களிலும் நம்பிக்கை இல்லை. எங்கள் கொடி சிவப்பு நிறத்தால் ஆனது. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

சங்கத்தலைவர் உரையாடுகையில் எங்கள் கரங்கள் ஒலிகளை எழுப்பியபடியும், அவர்களின் கை கட்டியபடியும் இருந்தது.
"சவுக்குகள் பலமாக இருக்கலாம். விலங்குகள் கடினமாக இருக்கலாம். ஒரு பூனை துரத்தப்படும் போது தலைதெறிக்க ஓடுகிறது, ஓடி... வெறிநாய்களின் கோரப்பற்களிடமிருந்து தப்ப ஓடுகிறது. ஓடும் பூனை முட்டுச்சந்தினை அடைகையில் நிற்கும். நின்று... ஒரு கணம் தலையைத் திருப்பிப் பார்க்கிறது. உடலெங்கும் பாயும் ரத்தம் தலைக்கேறி கண்களின் நரம்புகளை சிவப்பாக்குகிறது. பயந்த பூனை சினங்கொண்ட சிறுத்தையாக மாறுகிறது. நாய்களின் நாட்டாமையை நசுக்குகிறது. சவுக்குகளை சாய்க்க... விலங்குகளை முறிக்க... நமது ரத்தம் தலைக்கேற வேண்டும். நம் கண்கள் சிவக்க வேண்டும்." அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

ஒரு சட்டை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடம் கழித்து அளவு மாறும்போது, பெரிய சட்டை தேவையா இல்லையா? அதைத்தான் நாங்களும் கேட்டோம். சற்றே அதிக ஊதியம். கேட்டதற்கு எங்கள் காக்கி சட்டைகள் கிழிக்கப்பட்டன. முதலாளிகள் ஆலையை பூட்டிவிட்டு வேடிக்கை பார்த்தனர். ஆலை உயிரற்றுப்போனது. வெறிநாய்களிடமிருந்து ஓடிக்கொண்டிருந்த பட்டினிப்பூனைகள் நின்றன. இலையுதிர் காலத்திற்கு பிந்தைய வசந்தகாலம் வராததால் கோஷம் எழுப்பின. நிலைமையின் உஷ்ணத்தில் தெர்மாமீட்டர்களின் சிவப்பு உயர்ந்தது. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

திரளின் பூனை ஒன்று "மியாவ்!" என்றது. அடிவயிற்றிலிருந்து எழுந்த அடக்குமுறைக்கு எதிரான அந்தக்குரல் பத்தாய், நூறாய், ஆயிரமாய் எதிரொலித்தது. 'நாம்' என்ற குரல் - பண்மையானது ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. வெறும் 'மியாவ்' என்றொலித்த பூனை ஒன்றுகூடி உறுமலாகி இருந்தது. போர் முரசுகளின் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. மண்ணைக்கீறி, கொம்பு சீவப்பட்டு, தளைகளற்ற காளைகள் போராட்ட களத்தில் முனைப்புடன் நின்றன. அந்திமாலை சூரியனால் பற்றி எரிகிறது வானம். அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

சிவப்பு சைரன்கள் அலற ஆரம்பித்தன. காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்காரர்கள் நிலைமையை கட்டுப்படுத்த சாரை சாரையாக இறங்கினார்கள். மூவரும் முறையே லத்தி சார்ஜ், நீர்பாய்ச்சு, பெரும் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்றனர். இத்தனை குழப்பங்களுக்கிடையில் சில புல்லுருவிகள் எங்கள் தலைவரை கத்தியால் குத்திவிட்டிருந்தனர். கூட்டத்தில் முந்துவதற்குள் சூழ்ந்து கொலை செய்துவிட்டு காட்சியிலிருந்து அவர்கள் அகன்றும் விட்டிருந்தனர். தலைவரின் நெஞ்சைப் பதம் பார்த்த கத்தியிலிருந்து இன்னமும் ரத்தம் ஒழுகிக்கொண்டே இருக்கிறது. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

"புரட்சியை கம்பிகளுக்கு பின்னால் சிறை வைக்க முடியாது. லெனின், மார்க்ஸ், மாவோ - இவர்கள் யாரையும் வைக்கமுடியவில்லை!", சிறையில் கவளச்சோறுடன் நான். "சிவப்பு சித்தாந்தம் ஒரு மதமோ, தாத்பரியமோ, கணக்கோ அல்ல. அது தன்னிச்சையாக எழுகிற உணர்வு- சுவாசத்தைப் போல. காளை வெறிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சிவப்பு நிறத்தால் உந்தப்படுவதில்லை காளை... கொடியை அசைக்கும் செய்கையால் உந்தப்பட்டு கிளம்புகிறது! வார்த்தைகள் பின்னி கவிதையாவதைப்போல, ஒலிக்குறிகள் இசை ஆவதைப்போல நாம் கூடிய விரைவில் நீதிமன்றத்தில் தனியொரு சக்தியாவோம். என் தலைவர்களின் ரத்தம் போலிருந்தது சிறைச்சுவர் கற்கள். அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

இரண்டு நாட்களுக்கு பின் தலைவரின் மரண வழக்கில் தோழர்கள் சிலர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டனர். போதிய சாட்சிகளின்றி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் சிறையில் சிவப்பு செவ்வாய் கிரகத்தின் கீழ் வட்டமாக உட்கார்ந்து மௌனமாகிப் போயிருந்தனர் தோழர்கள். அன்று கட்டிய கைகளின் வெள்ளைக் காலர்கள் இன்று வெவ்வேறு ஸ்தாபனங்களில் பணியமர்த்தப்பட்டுவிடவர்களைப் பற்றி பேச்சு எழுந்தது. புரட்சியின் விதை விருட்சமாகாமலே பட்டுப்போய்விடும் என்ற அவநம்பிக்கை வலுத்தது. சோறின்றி, கடந்த சில தினங்களாக மனைவி, மகன்கள் முகத்தைக் கூட பார்க்காமல் உறக்கம் தொலைத்த விழிகளில் நரம்புகள் சிவப்பாயின. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.


நள்ளிரவில் மர்ம நபர்களால் தொழிலதிபர்கள் கொலை!
செய்த்தித்தாள் சொன்ன மர்ம நபர்கள் தோழர்கள் மத்தியில் நாயகர்களாகிப் போனார்கள். என் தலைவருக்கு அஞ்சலி செலுத்த கண்களை மூடினேன். அன்னை, ரிப்பன், பாயும் ரத்தம், சிவப்புக்கொடி, தெர்மாமீட்டர், சூரியன் எல்லாம் வந்துபோனது.

சென்னை, ஜூலை 15.
திருவல்லிக்கேணி சந்நதி தெருவில் வசிக்கும் தொழிலதிபர்கள் நால்வரின் உடல்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தன. ஆட்டோக்கார் ஒருவர் தான் முதலில் பார்த்ததும் தகவலை...

செய்தியில் குறிப்பிட்ட எழுத்துகள் வெள்ளையில் அடிபட்டிருந்தன. என் வெள்ளைக்காலர் நண்பர்களுக்கும் சிவப்பு நிறத்தில் தானே ஓடுகிறது ரத்தம். அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான். இன்னும் இன்னும் சிவப்பாய்.
_____________________________________________________________________

15 comments:

அனுஜன்யா 22 June 2009 at 4:55 pm  

வெங்கி,

இது தான் முதல் முறை இங்கு வருகிறேன் என்று நினைக்கிறேன். இவ்வளவு நாட்கள் வராதது என் நட்டம் என்று உணர்கிறேன். கதையின் அடிப்படை சித்தாந்தங்களுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், கதை சொல்லும் உத்தி. முத்தாய்ப்பாக வரும் செந்தூரம். அட்டகாசம். கதை முழுதும் வரும் மொழி....

Very very promising. வாழ்த்துகள் வெங்கி

அனுஜன்யா

வெங்கிராஜா 22 June 2009 at 5:13 pm  

இல்லண்ணே... முன்னே ஒரு கவிதைக்கு பாஸ் மார்க் போட்டு பின்னூட்டம் போட்டிருந்தீர்கள். விமர்சனத்துக்கு மிக்க நன்றி.
//கதையின் அடிப்படை சித்தாந்தங்களுக்குள் போக விரும்பவில்லை.//
?

எனிவே, தொடர்ந்து வந்து மோதிரக்கையால் குட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நட்புடன் ஜமால் 22 June 2009 at 7:01 pm  

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளேன்.

சிவப்பில் எழுத்துகள் படிக்கும் வண்ணமாகவே இல்லை எனக்கு
எண்ணம்.

இருப்பினும் படித்தேன்

செந்தூரம் - இந்த பெயர் வந்த விதம் நல்லாயிருக்கு.

\\திரளின் பூனை ஒன்று "மியாவ்!" என்றது. அடிவயிற்றிலிருந்து எழுந்த அடக்குமுறைக்கு எதிரான அந்தக்குரல் பத்தாய், நூறாய், ஆயிரமாய் எதிரொலித்தது. 'நாம்' என்ற குரல் - பண்மையானது ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது.\\

துவக்கம் ...

Sridhar Narayanan 22 June 2009 at 9:33 pm  

வெங்கி!

புதிய மொழியில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் தொழிலதிபர்களை தூக்கில் தொங்கவிடுவது புரட்சியில அடங்குமா? தெரியவில்லை.

சிறுகதை வடிவமாக எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை :) இம்மாதிரியான மொழிகளில் எனக்கு வாசிப்பனுபவம் குறைச்சல்தான். :)

செந்தூரம் - தலைப்பு பிடித்திருக்கிறது. :)

வால்பையன் 23 June 2009 at 12:17 pm  

பின்நவினத்துவபாணியில் கம்யூனிசம் பேசிவிட்டீர்கள்!

உங்களுக்கும் ஒரு இடம் உண்டு!

தீப்பெட்டி 23 June 2009 at 10:44 pm  

வெங்கி,

கதை சொல்லும் உத்தி அபாரம்..
வெற்றிகள் தொடரட்டும்..

பிரவின்ஸ்கா 27 June 2009 at 6:36 pm  

நல்லா இருக்கு .
ரொம்ப பிடித்திருக்கிறது.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

வெங்கிராஜா 27 June 2009 at 8:39 pm  

சின்ன விடுமுறையில் வெளியே போயிருந்தேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி... ஜமால் சார், வால் அண்ணே, தீப்பெட்டி, ஸ்ரீதர் நாராயணன், ப்ரவின்ஸ்கா.

சிறுகதை, கவிதை எல்லாம் இப்போ தான் தொடங்கி பழகிக்கொண்டிருக்கிறேன். தவறுகளை சுட்டினால் மிகவும் பயன்படும். அதற்கு தான் பிற படைப்புகளுடன் சேர்த்து அனுப்பி, அன்பர்களின் கருத்துகளை கேட்க விழைகிறேன்.
நன்றி நண்பர்களே.

Nundhaa 29 June 2009 at 9:57 pm  

படிப்பவனோடு உரையாடும் தன்மையோடு அல்லாமல், ஒரு தீர்க்கமான ஆனால் ஸ்வாரஸ்மான மேடைப் பேச்சாகிப் பரவும் நடை கவர்கிறது ... தொடர்ந்து படிக்க வைக்கிறது (இதை இவ்வளவு நாள் நான் படிக்காமல் விலகியதற்குக் காரணம் ‘சிவப்பு’ தான் :) - இன்று எப்படியும் படித்தி விடுவதென ctrl+A openoffice writer ctrl+v font-size 14px எனப் படித்தேன்)

வெங்கிராஜா 29 June 2009 at 10:42 pm  

நிறைய கஷ்டமாக இருக்குது போலயே.. இப்பொவே எடிட் பண்ணிடுறேன்!

Giri 3 July 2009 at 11:45 pm  

நன்றாக இருக்கிறது. கொஞ்சம் படிக்கச் சுலபமாக , கோர்வையாக இருந்திருக்கிலாம் ;)

போட்டிக்கு வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பறவை 11 July 2009 at 2:47 am  

வாழ்த்துக்கள் வெங்கி....
ஆரம்பத்தில் தடுமாறினாலும், போகப் போக நானும் சிவப்பில் தோய்ந்து விட்டேன்... சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,...நல்ல கதை...

கே.ரவிஷங்கர் 1 August 2009 at 10:41 am  

டெம்பிளேட் நன்றாக இருக்கிறது.

எழுத்துக்களில் வயதுக்கு(19?) மீறிய அனுபவம் தெரிகிறது.இந்த வயதில் உலகத்திற்கு எல்லாம் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வ எழுத்துக்கள்.


கதையின் கருவை சொன்ன விதம் நல்லா இருக்கு.

ஒரு கவிதையும் படித்தேன்.அதுவும் நன்று.

அசட்டுத்தனம் இல்லை.அதுதான் முக்கியம்.

வாழ்த்துக்கள்.

வெங்கிராஜா 1 August 2009 at 11:37 am  

//அசட்டுத்தனம் இல்லை.அதுதான் முக்கியம்.
வாழ்த்துக்கள்.//
நன்றி என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாத விசுவாசமான ரசனைக்கான கைம்மாறு செய்ய காத்திருக்கிறேன். அவ்வப்போது வந்து குறைகளையும் சுட்டினால், கல் தேயும் என்று நம்புகிறேன். வருகைக்கும், பகிர்விற்கும் நன்றி!

An 8 March 2010 at 1:25 pm  

செந்தூரம்
அடக்குமுறைக்கு எதிரான சிவப்பு தான்
வாழ்த்துகள்

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP