மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

26-Aug-2009

சென்னைக்கதைகள் - I

போரூர்.


குறிப்பு: மேலே உள்ள படம் போரூர் ஏரியிலிருந்து ஏரியாவை நோக்கி. அடியேன் எடுத்ததே. பயன்பாடு க்ரியேட்டிவ் காமன்ஸ் காப்புரிமைக்கு உட்பட்டது.

டேப்பை பொருத்திவிட்டு திரையை நோக்கினேன். கருப்பு வெளியில் வெள்ளைப் பொத்தல்கள் விழுந்தமாதிரி இருந்தது. பின்னணியில் இசையா சத்தமா என்று தரம் பிரிக்க முடியாத ஒரு ஒலி. சிவப்புப் புள்ளி ஒன்று தொலைக்காட்சியின் ஓரத்தில் கண்சிமிட்டிக்கொண்டே ஆர்.இ.சி என்று அறிவித்தபடி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தது. ஜெ.ஜெ டிவியின் சென்னை மவுண்ட் ரோட் அலுவலக செய்திப்பிரிவில் வேலை செய்துகொண்டிருக்கும் நானும் என் அலவன்சில் கம்பெனி தந்த பேஜரும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தோம். தமிழகக் கழகங்கள் ஸ்பான்சர் செய்யும் செய்திகளை குளியல் சோப்பு விளம்பரங்களுக்கு இடையில் முடிந்து வைக்கும் பிலிம்சுருள் தையல்காரன் நான். நாளை காலை செய்திகளுக்கு வந்திருந்த பிலிம்களை பரிசீலித்து காஜா போடவேண்டியிருக்கிறது, தம்பியிடம் இருந்து ஓயாமல் பேஜரில் குறுந்தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.
8:28 p.m <>
8:33 p.m <>
எடிட்டரின் க்யூபிக்கிளில் வீடியோ வில்லைகள் எல்லாவற்றையும் சமர்ப்பித்துவிட்டு கிக்கரை உதைத்தேன். சிகப்பு விளக்குகள் ஏதும் இல்லாமலேயே போரூர் ரவுண்டானா பயங்கர நெரிசலாக இருந்தது. என்னை நோக்கி வந்த ஒரு உருவம் பைக்கின் ரியர்-வ்யூ கண்ணாடியை தன் இடுப்பால் உடைத்துவிட்டு மறைந்தது. கெட்டவார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருக்கும் என் உதடுகள் இருபதாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.
[20.2.97]

தெருவோர விநாயகர் கோயில். கோடம்பாக்கம் டிபன்ஸ் காலனி ஏரியாவில் யாரும் இவளை பார்த்ததில்லை. நார் நாராக இருந்த கந்தலால் அவள் மூடப்பட்டிருந்தாள். கேசத்தில் சிமெண்டும் சிடுக்கும் மீதி இருந்தன. வரப்பட்டினி, ஆனால் பற்களில் இருந்த கறைகளில் ஈயாடிக்கொண்டிருந்தது. ஏரியாவிற்கு புதியவர்கள் இவளிடம் விலாசம் கேட்கப்பார்த்தார்கள். நாய்கள் அவளை வெறித்தும் குரைத்தும் விரட்டப்பார்த்தன. அம்மாக்களுக்கு ஒரு புதிய பூச்சாண்டி கிடைத்திருந்தாள். வரவர அந்த ஏரியாவில் ஒருத்தியாகிவிட்டாள், மீதி சோற்றை இவளுக்கு கொட்டினர். எப்போதாவது அந்த வீதியில் வந்துபோகும் பச்சை நிற பல்லவனைப்பார்த்தால் மட்டும் வீறுகொண்டு எழுந்து விளங்காத பாஷையில் திட்டி மண்ணைத்தூற்றினாள். பள்ளிக்கூட பொடிமாஸ் எல்லாம் இவளை சுற்றி சுற்றி விளையாடின. அவர்கள் பஸ் பொம்மையை கிட்டே எடுத்துவந்தால் மட்டும் சுக்குநூறாக உடைத்துவிடுவாள்.
[20.3.97]

"லவ்வு சிகரெட் மாதிரி!"
"போதையை குடுக்குறாப்ல கொடுத்திட்டு கடைசியில கொல்லுறதாலயா?"
"ச்சீய்! இல்ல!"
"பின்ன... என்ன ஃபிலாசஃபி?"
"போதைக்கு அடிமையாக்கிட்டப்புறம் விடவே முடியாது. அப்படியே ஒரு ஒரு வாரம்.. இல்ல மாசம் இல்லாம போனாலும், திரும்ப தம் அடிக்கும் போது போதை ரெண்டு மடங்காயிரும்!"
"ஓஹோ.. அப்போ டெஸ்ட் பண்ணிருவோம். ஒரு மாசம் நாம பேசிக்கவோ பார்த்துக்கவோ வேண்டாம். ஃபோன், பேஜர் ஒண்ணும் கெடையாது."
"நீ தோத்துருவடா!"
"ஜனவரி 20, இன்ன தேதியிலருந்தே பந்தயம் வச்சுப்போம்."
"சீரியசாவா சொல்ற?"
“I do smoke. I do love. I’m addicted.”
"சரி.. உன் இஷ்டம். என்னைய ஐயப்பன்தாங்கல் டிப்போவுக்கு முன்னாடி ட்ராப் பண்ணிரு. பரீட்சைக்கு முந்தின ராத்திரியெல்லாம் படிக்கிற மாதிரி இன்னைக்கெல்லாம் லவ்விருவோம்."
"நீ கெளம்பு. ஒரு மாசம் கழிச்சு லவ்வலாம். நான் பஸ்-ல வந்தேன் தாயீ.. திரும்பவும் 88-கே பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணனும்"
[20.1.97]

முழுக்கை சட்டையின் மடிப்பில் செருகியிருந்த கடைசி பத்து ரூபாய்த்தாளில் கோபாலகிருஷ்ணா தியேட்டர் அருகில் ஸ்டேஷன் ரைட்டருக்கு டீயும் பன்னும் நெய்வேத்யம் படைத்தார் பெரியவர். அதிர்ஷ்டவசமாக, அல்லது துரதிர்ஷ்டவசமாக அவரது மகள் முன்தினம் புறநகர்ப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கிடையில் இல்லை. குவார்ட்டர்ஸ் வாட்ச்மேன், இஸ்திரிக்காரன், சுற்றத்தார் கேவலம், தெருவில் விளையாடும் பொடிசுகள் கூட இவரை சட்டை செய்யவில்லை. சும்மா போலியான புன்னகை கூட இல்லை. அவரது மனைவி அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு இப்போதுதான் வீடு திரும்பியிருக்கிறார். அக்கம்பக்கத்து சண்டியர்கள் அடுப்படியிலிருந்த சோற்றை எடுத்து தெருநாய்களிடம் வீசிக்கொண்டிருந்தனர். குடன் தொகை தந்த சௌகார்பேட்டை குல்லாக்கள் வாசலில் மூக்கால் அழுதுகொண்டிருந்தனர், சவரக்கத்தி துரு ஏறியிருந்தது, காக்கி சட்டையில் சிலந்தி வலை. முக்குக்கடை அண்ணாச்சி பாமாயில் கணக்கில் தரமாட்டேன் என்கிறார். கைக்கடிகாரமும் துடிப்பதை நிறுத்திவிட்டது. என்ன போச்சு... யூனியன் ஸ்ட்ரைக்கின் போது எதற்கு நேரம் பார்க்க வேண்டும்?
[27.2.97]

கால்களை தட்டிவிட்டு அவருக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தது நேரம். நேற்றிரவே ப்ரேக் வால்வை டைட் செய்திருக்க வேண்டும், பாவம் ஓவர்ட்யூட்டிக்கு பின் மெக்கானிக்கை பிடிக்கமுடியவில்லை. இன்று தாமதமாகிவிட்டது. சீக்கிரம் வண்டியை ஐயப்பன்தாங்கல் டிப்போவிலிருந்து கிளப்பவேண்டும். சிட்டியின் ட்ராஃபிக் சாகரத்தில் சங்கமித்துவிட்டு பின்னால் ட்ரிப்பில் சுதாரித்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் சிவசிவ சொல்லிவிட்டு 37-ஜி ஆக்சிலரேட்டரால் உறுமினார். என் தம்பி ஈ-மெயில் பார்த்துக்கொண்டிருந்தான். நான் டை கட்டியபடி ஷூவிற்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தேன். டிவியில் பெப்சி உமா யாருடனோ விளம்பரச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தார்.

<7:20> "ஆன்லைன்ல இருக்கியா? நீ ஜெய்ச்சுட்டே. லவ்வு சிகரெட் மாதிரி தான்! பதில் சொல்லுற வரைக்கும் ஆன்லைன்லயே இருக்கேன்... லவ் யூ!"
<7.45> "லவ் யூ டூ! சாயந்தரம் ரவுண்டானாவுக்கு பக்கத்துல மெக்ரன்னெட் வந்துரு."

"நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீ தான்
நீயின்றி வாழ்ந்தாலே நீர் கூட தீ தான்!"
"என்னடா.. பாட்டு எல்லாம் பயங்கரமா இருக்கு!"
"ஒரு மாசம்.. மீட்டருக்கு மேல ஏதாச்சும் போட்டு குடுங்க மேடம்!"
"இங்கேயா? உங்க காலனி பக்கம் எங்கயாச்சு போலாண்டா.. "
"நாளைக்கு பார்க்கலாம். அண்ணன் சீக்கிரம் வர சொன்னான். பஸ்-ல வந்தேன் தாயீ.. திரும்பவும் 88-கே பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணணும்", கையசைத்தபடியே நீங்கள் கேட்ட பாடல் விஜய் ஆதிராஜ் மாதிரி பின்னோக்கி நடந்தான்.
[20.2.97]

"பஸ்-ல வந்தேன் தாயீ.. திரும்பவும் 88-கே பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணணும்", கையசைத்தபடியே நீங்கள் கேட்ட பாடல் விஜய் ஆதிராஜ் மாதிரி பின்னோக்கி நடந்தான்.
"தோடா! புடிச்சுக்கோ!"
காற்றின் அலைகளில் பயணித்த அந்த முத்தத்தை டென்னிஸ் வீரனைப்போல எதிர்நோக்கித் திரும்பினான். பரவசம் பரவும் அந்த நொடியில் இருவருக்கும் இடையில் முத்தங்கள் சரமாரியாக பொழிந்தன. புன்னகையில் தோய்ந்து கண்களை வினோதமாக சிமிட்டி கைகளை அவன் விரிக்க காதலில் நனைந்து நனைந்து நமுக்கும் நிலையில் இருந்தது மவுண்ட் பூந்தமல்லி சாலை. அந்த நொடி வரை பஸ்சின் அங்குசம் அவர் காலில் தான் இருந்தது. சிக்னல் பச்சையிலிருந்து பழுத்து செம்மையாகும் நேரத்தில் அனாவசியமாக நிறுத்தி ட்ரிப் தள்ளிப்போய்விடுவதைத் தடுக்க சீராகவே செலுத்தினார் ஓட்டுனர். அரைவேக்காட்டு 'எல்' போர்ட் ஒன்று திடீரென்று ப்ரேக் போட லேன் மாற்றும் போது... பாவம்! இப்படி சாலையைக்கடக்க அவன் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டான். அலறல் சத்ததோடு அந்தப் பெண் கீழே சரிந்தாள். அதிர்ச்சியிலிருந்து எழுந்து எதையோ துரத்துவது போல ஓடி ஒரு பைக்கின் கண்ணாடியைத் தகர்த்தாள். பைக்கிலிருந்து இறங்கிய நான் என்னதான் நடக்கிறது என்று பார்க்க போனேன். நடந்த விபத்து மீனாட்சி கல்லூரி மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையில் பிரச்சனையாகிவிட்டது. சகா ஒருவன் இறந்ததை அடுத்து ஓட்டுனரை மாணவர்கள் குமுறியிருக்கிறார்கள். பஸ் பெருசுகளோ கௌரவம் இழந்ததால் ஸ்ட்ரைக்கில் குதித்தனர். சாலையோரம் கேட்பாரற்று கிடந்தது... என் தம்ம்ம்ம்பீ! தூக்கிக்கொண்டு ஆட்டோவில் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஓடினேன். அவனது வெள்ளை சட்டை மிச்சமின்றி சிவப்பாகி என் தோளில் துவண்டது. காவல்துறை காகிதங்களில் ஒப்பமிட்டுக்கொண்டிருக்கையில் நான் ஒட்டிய காலை செய்திகள் திரையில் ஓடிக்கொண்டிருந்தன. விபத்து வீடியோவை சற்றுமுன் என்று கார்டு போட்டு அசிஸ்டெண்ட் எவனோ சேர்த்திருக்கிறான். மேசையில் ஒரு செய்தித்தாள் கிடந்தது. தலைப்புச்செய்தியில் போலீசார் சொன்ன அந்த பேருந்து ஓட்டுனர். அடுத்த பக்கத்தில் நான் தந்திருந்த தமிபியின் இரங்கல் கட்டம். அடுத்த பக்கத்தில் ஏதோ பெண்ணொருத்தி காணவில்லை என்ற விளம்பரம். அவளை சமீபத்தில் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
[21.3.97]


டிஸ்கி: இது ஒரு தொடரின் முதல் அத்தியாயம்: சென்னையைப்பற்றிய சிறுகதைச் சங்கிலி.
_____________________________________________________________________

15 comments:

நர்சிம் 26 August 2009 at 12:34 PM  

மிக நல்ல பதிவு.

பைத்தியக்காரன் 26 August 2009 at 12:39 PM  

நல்ல முயற்சி வெங்கி. நுணுக்கமா பதிவு செய்திருக்கீங்க. மொழி என்னமா உங்களுக்கு வசப்படுது...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

butterfly Surya 26 August 2009 at 3:05 PM  

நன்றி வெங்கி.. நண்பர் சிவராமனை வழி மொழிகிறேன்.

மண்குதிரை 26 August 2009 at 3:34 PM  

nalla irukku vengi

anthap padam rompa arumai mikavum rasiththen

Achilles 26 August 2009 at 3:35 PM  

Nice one Venki... Excellent work... :)

Vidhoosh 26 August 2009 at 4:12 PM  

அருமை வெங்கி.

--வித்யா

Nundhaa 26 August 2009 at 8:08 PM  

இது நல்லா இருக்கு வெங்கி ...

வனவிலங்கு புகைப்படங்கள் பதிவு பற்றி - ஆம் பிளாகருக்கு கிறுக்கு தான் பிடித்திருக்கிறது ஆனால் உங்கள் படங்கள் தெளிவாக அருமையாக இருக்கின்றன ...

அ.மு.செய்யது 26 August 2009 at 9:49 PM  

இப்ப இருக்க இளம்பதிவர்களில் உங்களுடைய நடை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது வெங்கி.

நல்லா எழுதுறீங்க..வாழ்த்துக்கள் !!

வெங்கிராஜா 26 August 2009 at 9:53 PM  

எனது அண்மைய பதிவுகள் அனைத்திற்கும் மறுமொழிகள் தட்டச்சும் நண்பர்கள் ஏஷில்ஸ், விதூஷ், மண்குதிரை, நந்தா... நன்றி.
நர்சிம் சார், எதிர்பாராத பின்னூட்டம். மீண்டும் மீண்டும் நீங்கள் பின்னூட்டமிட உழைப்பேன்!
வண்ணத்துப்பூச்சியார்.. நன்றி. மொபைல் எப்படியிருக்கு?
சிவராமன் சார்.. உங்கள் வார்த்தைகள் என்னை வார்த்தெடுக்கின்றன. மிக்க மகிழ்ச்சி.
மண்குதிரை, என் புகைப்படங்கள் உங்கள் கவிதைகளுக்கென காத்திருக்கின்றன!
நந்தா, நன்றி. எனக்கு பயமாகிவிட்டது, ஒருவேளை என் சிஸ்டமில் எல்லாம் குளறுபடியோன்னு. கூகுளிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டுமோ?

வெங்கிராஜா 26 August 2009 at 9:57 PM  

மிக்க நன்றி செய்யதுண்ணே. என்னுடைய டெஸ்டிமோனியல்களில் நிச்சயம் இந்த வாசகம் ரொம்ப ஊக்கமளித்ததாய் என்றும் இருக்கும். நன்றி!

யாத்ரா 26 August 2009 at 10:25 PM  

ரொம்ப நல்லா இருக்கு வெங்கி.

shortfilmindia.com 26 August 2009 at 11:27 PM  

/மொழி என்னமா உங்களுக்கு வசப்படுது...//

பைத்தியககாரன் சொன்னதை ரிப்பீட்டுகிறேன்.

கேபிள் சங்கர்

Sujay 28 August 2009 at 9:47 AM  

வெங்கி தீம் போராட்டம் தொடர்கிறது...97 இல் பிலிம்சுருள் தையல்காரன் என்றால், இப்போது!

அருமையான பாணி, தொடக்கம்...முதல் அத்தியாயம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும், நெடு நாள் வாழ்ந்த இடத்தை தூரத்தில் இருந்து பார்த்தது போல் ஒரு அனுபவம்...

வெங்கிராஜா 28 August 2009 at 3:29 PM  

நன்றி கேபிளாரே.

நன்றி யாத்ரா.

அய்யய்ய! இது சுயசரிதை இல்லீங்கோவ்! ஏதோ கனாவுல கண்டாப்ல எழுதினது... நான் 97ல ஒண்ணாம் வகுப்பு குட்டிச்சாத்தான்! ஒரு தீம் அனுப்பினேனே சுஜய்?! இல்லைன்னா, வேர்ட்பிரஸ் மோனோக்ரோம் தீமையே யாராவது வெப் டிசைனரை கன்வெர்ட் பண்ண சொல்லுங்க. சிம்பிள் தீர்வு.

க. தங்கமணி பிரபு 29 August 2009 at 2:44 AM  

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP