மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

01-Sep-2009

ஏதாவது செய்யணும் பாஸ்!

இளநிலை பட்டப்படிப்புகளும், நுழைவுத்தேர்வுகளும் குறித்த பதிவு ஒன்றினை எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த சில வாரங்களாக இருந்தது. சமச்சீர் கல்விமுறையை உயர்நிலைப் பள்ளி அளவில் அமல்படுத்த மத்திய அரசு முன் வந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கும் இந்தத் தருணத்தில், இது குறித்த எனது புரிதலை விவாதம் கருதி முன் வைக்கிறேன். இதெல்லாம் பாதி அப்பாக்களுக்கும், முக்கால்வாசி அம்மாக்களுக்கும் தெரிவதில்லை/புரிவதில்லை என்பது பெரும் சோகம். நர்சிம் அண்ணனின் 'ஏதாவது செய்யணும் பாஸ்' சங்கிலிப் பதிவுகளின் பாணியில் எனக்குத் தோன்றிய யோசனையையும் இடுகையின் முடிவில் சொல்லியிருக்கிறேன்.

பள்ளிகளில் பனிரெண்டாம், பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மூலம் மாணவர்களை வடிகட்டுகிறார்கள். முன்னர் எட்டாம் வகுப்பிலும் ஒரு தேர்விருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தகுதியாக (Minimum eligibility criteria) எட்டாம் வகுப்புத்தேர்ச்சியே இருந்து வந்தது. தவிர டி.வி மெக்கானிக் போன்ற ஆறு மாதகால பயிற்சி அடிப்படையிலான பணிகளுக்கு அந்தத் தேர்வே அளவுகோலாக இருந்தது. தற்போது, அதுவே பத்தாம் வகுப்பு தேர்வுகளாக ஆகியிருக்கிறது. பாலிடெக்னிக் எனப்படும் டிப்ளோமா படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பில் கட்டாயத்தேர்ச்சி அவசியமாகிறது. விருப்பத்தின் பேரில், டிப்ளமோ பட்டதாரிகள் லேட்டரல் எண்ட்ரி முறையில் மூன்றாண்டு கால படிப்பிற்குப்பின்னர் இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் சேர வழியுண்டு.

பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் சற்றே ஜாஸ்தி. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் பிரிவுகள் உட்பிரிவுகள் எல்லாம் தவிர ஏனைய துறைகளிலும் வாழைத்தார் மாதிரி குவித்து கூவிக்கூவி அழைக்கிறார்கள். இதில் நம்மூரில் ஸ்டேட் போர்ட், சென்ட்ரல் போர்ட் தவிர மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாண்ட்டசோரி என்று எல்லாம் குழப்படிகள் உண்டு. பத்தாவது வரை தான் மெட்ரிக் முதலிய பிற சிலபை (Syllabi), அதற்கு மேலே மெட்ரிக் பள்ளிகளிலேயே ஸ்டேட் போர்ட் முறைமையில் படிக்க வேண்டியது தான். தனியார் பள்ளிகள் வசதிகளிலோ (Facilities), வகுப்பு நேரங்களிலோ (Contact hours), கட்டணங்களிலோ (Fee) அரசின் கட்டுப்பாடுகளை முக்கால்வாசி இடங்களில் கடைபிடிப்பதில்லை. பல இடங்களில் அனுமதியே வாங்காமல் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது, பத்தாம் வகுப்புத்தேர்வை ரத்து செய்வதன் மூலம், தென்னிந்தியாவில் மிகப்பரவலாக செயல்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐ.டி.ஐ-க்கள் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே பத்தாம் வகுப்பு வரையே சிரமத்துடன் படித்து முடிக்கும் ஒருவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பொருளாதாரச்சுமை. ப்யூர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், பிசினஸ் மேத் பகுப்புகளுள் தேர்ந்தெடுப்பதில் மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் குழப்பம் ஏற்படும். மின்கம்பிகளில் பழுது பார்க்கும் லைன்மேன்/ கூட்டல்-பெருக்கல் குமாஸ்தா போன்ற பணிகளில் அமரக்கூட கேல்குலஸும் ஐன்ஸ்டைனையும் படிக்க வேண்டிய சாபக்கேடு. தேர்ச்சி விகிதம் அனாசாயமாக குறைந்து இன்னும் சில பெட்டிச்செய்தி தற்கொலை சிறுவர்கள் உற்பத்தியாவார்கள். பெண்களின் தனிப்பட்ட தேர்ச்சி விகிதத்திலும் வீழ்ச்சி இருக்கலாம்.

அதிமுக்கியமாக இந்த மாற்றத்தினால் நிகழ்வது யாதெனில், பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளை பெருமளவில் ஒழிக்க முடியும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்கலாம், கல்வித்தரம் என்று பொய் சொல்லி வியாபாரம் செய்ய முடியாது . சட்டீஸ்கர், திரிபுரா, ராஜஸ்தான், கேரளம் என்று எங்கிருக்கும் ஏழாம் வகுப்பு மாணவனும் நிகர்நிலைக் கல்விமுறையிலேயே பயிற்றுவிக்கப்படுகிறான், சோதிக்கப்படுகிறான். கட்டணங்களும், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் சமமாகவே இருக்கும். (பாடங்களின் எண்ணிக்கை, கடினம்/சுலபம், மதிப்பெண் வழங்கும் வழிமுறைகள், பிற செலவுகள், கூடுதல் பயிற்சிகள்) பணிமாற்றம், கல்லூரி நுழைவு ஆகியவற்றின் போதும் சிக்கல் இராது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் பள்ளிப்படிப்பிற்கென ஒரே சான்றிதழ் இருக்கும் பட்சத்தில் மொத்தமாக தேர்வினை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பிருக்கிறது.

மேலும், மதிப்பெண்களுக்கு மாற்றாக க்ரேடிங் முறையை அறிமுகப்படுத்த அரசு இசைந்துள்ளது. இது வகுப்புத்தேர்வுகள் முதலிய சிறு அளவிலான பரீட்சைகளில் குதிரைப்பந்தய மனப்பான்மையை போக்க உதவுமே தவிர, விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை இலட்சங்களில் இருக்கையில் ஏகப்பட்ட இம்சைகளுக்கே வழிவகுக்கும். ஒவ்வொரு கல்லூரிக்கும் விண்ணப்பிக்கும் மாணவர்களிடையே மதிப்பெண் அடிப்படையிலான பட்டியலின்படியும் இட ஒதுக்கீட்டின்படியும் சேர்க்கை நடைபெறுகிறது. க்ரேட் பத்து மதிப்பெண் ரேஞ்சில் (Range) வழங்கப்பெறும், ஆனால் தற்போது கடைபிடிக்கப்படும் மிக்கக்குறைந்த மதிப்பெண் வேறுபாடு (Minimum difference in marks between two students) 0.01% வரை இருப்பதால், க்ரேட்டில் இதைக்கொண்டுவர சாத்தியமில்லை. பொதுத்தேர்வைப் பொறுத்தவரை க்ரேடிங் மதிப்பெண் உதவாது என்பதே என் தாழ்மையான கருத்து.

இவற்றைக் குறித்து, நமக்கு அருகாமையில் இருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு(வாகங்களுக்கு) ஒரு மடல் எழுதலாம். ஐம்பது பதிவர்கள் எழுதினால் ஐம்பது பள்ளிகளின் பிள்ளைகளுக்கு விஷயம் தெரியும், பரவும். தெரிந்த ஆசிரியர்களிடம் விவாதிக்கலாம். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி போன்ற பெரு/சிறு நகரங்கள் தவிர்த்து இந்திய அளவிலான கல்லூரிகளின் தரம்/ நுழைவுப்படிவம் குறித்த விவரங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு தெரிவதில்லை. அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் முயலவேண்டும் என்பதே என் விழைவு. அதற்கென கல்லூரிகளே விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகின்றன. அக்கல்லூரி நிர்வாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். நாம் பயின்ற பள்ளியைத் தொடர்பு கொள்ள முயன்று நிச்சயம் விவரிக்க இயலும் என்று நம்புகிறேன். ஒரு உறவினரின் அல்லது நண்பரின் பிள்ளையிடம் இது குறித்து தொலைக்காட்சிகளிலும், பிற ஊடகங்களிலும் கிடைக்கும் தகவல்களை சொல்லி, அவர்களைப் பின்தொடரச் சொல்லலாம்.

ஆக, இந்திய மாணவர்கள் அனைவருக்கும் ஒரே குடையின் கீழ் விதிகள் பட்டியலிடப்பட்டு, ஒரே பாடதிட்டத்தில் புத்தகங்கள் விநியோகித்து, ஒன்று முதல் பனிரெண்டு வரை அட்டவணை சகிதம் கல்வி பயிலச்சொல்வது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. இதனால் நுழைவுத்தேர்வுகள் வரை ஒரு மாணவனின் எதிர்காலத்தை சீர் செய்ய முடியும். இந்தியாவில் பொறியியல்/ மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.

15 comments:

Cable Sankar 1 September 2009 at 11:49 pm  

நீங்கள் சொல்வது போல் சில சிறு குறைகள் இருந்தாலும் நான் இதை வரவேற்கிறேன்

எம்.எம்.அப்துல்லா 2 September 2009 at 5:32 am  

//டிப்ளமோ பட்டதாரிகள் //

டிப்ளமோ என்பது பட்டம் அல்ல பட்டயம். டிப்ளமோ பட்டையதாரர்கள் என்பதே சரி.

எம்.எம்.அப்துல்லா 2 September 2009 at 5:34 am  

//பல இடங்களில் அனுமதியே வாங்காமல் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் //

இன்றைய நிலையில் அனுமதி பெறாத தனியார் பள்ளி என்பதே கிட்டத்தட்ட இல்லை எனலாம்.கும்பகோணம் சம்பவத்திற்குப் பிறகு இந்த விஷயத்தில் அரசு இன்றுவரை உறுதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எம்.எம்.அப்துல்லா 2 September 2009 at 5:38 am  

இந்திய அளவில் சமச்சீர் கல்வி என்பது கானல்நீர்தான் அண்ணே. தமிழகத்திலும் மெட்ரிக் கல்வி வியாபாரிகள் இனி தங்கள் நிறுவனத்தை சி.பி.எஸ்.சியாக மாற்றி விடுவார்கள். அதையே சொல்லி ஃபீசும் அதிகரித்துவிடுவார்கள்
:)

மண்குதிரை 2 September 2009 at 11:03 am  

nalla ezhuththu nadai venki

em em abdullah solvathu pool athu kaanal niirthaanoo?

நர்சிம் 2 September 2009 at 12:19 pm  

நல்ல பதிவு வெங்கிராஜா.நல்ல சிந்தனை.

வெங்கிராஜா 3 September 2009 at 1:18 pm  

//நீங்கள் சொல்வது போல் சில சிறு குறைகள் இருந்தாலும் நான் இதை வரவேற்கிறேன்//
நன்றி கேபிளாரே!

//டிப்ளமோ என்பது பட்டம் அல்ல பட்டயம். டிப்ளமோ பட்டையதாரர்கள் என்பதே சரி.//
திருத்தியமைக்கு நன்றி.

//இன்றைய நிலையில் அனுமதி பெறாத தனியார் பள்ளி என்பதே கிட்டத்தட்ட இல்லை எனலாம்.கும்பகோணம் சம்பவத்திற்குப் பிறகு இந்த விஷயத்தில் அரசு இன்றுவரை உறுதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.//
தமிழகம் மட்டுமல்ல... இந்தியா மொத்தத்திலும் சொன்னேன். தமிழகத்தில் வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

//இந்திய அளவில் சமச்சீர் கல்வி என்பது கானல்நீர்தான் அண்ணே.//
சென்ட்ரல் போர்ட், ஸ்டேட் போர்ட் என்று ஆகிவிட்டால் அது சமம் தானே? இத்தியாதிகளின் இம்சைகள் குறையும் தானே?

//தமிழகத்திலும் மெட்ரிக் கல்வி வியாபாரிகள் இனி தங்கள் நிறுவனத்தை சி.பி.எஸ்.சியாக மாற்றி விடுவார்கள். அதையே சொல்லி ஃபீசும் அதிகரித்துவிடுவார்கள்
:)//
கட்டணக் கட்டுப்பாடுகளை எவருமே கண்டுகொள்வது கூட இல்லை.. அதை கறாராக செயல்படுத்தினால் பரவாயில்லை.

வருகைக்கு நன்றி மண்குதிரை... கபில் சிபல் தான் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறாரே. நம்பிக்கை தெரிகிறது!

நன்றி நர்சிம். அவ்வப்போது வந்து குறைகளை சுட்டவும்! :)

Shakthiprabha 3 September 2009 at 7:05 pm  

நல்ல பதிவு வெங்கிராஜா.

//மின்கம்பிகளில் பழுது பார்க்கும் லைன்மேன்/ கூட்டல்-பெருக்கல் குமாஸ்தா போன்ற பணிகளில் அமரக்கூட கேல்குலஸும் ஐன்ஸ்டைனையும் படிக்க வேண்டிய சாபக்கேடு. //

எட்டாம் வகுப்புக்கு பின்பே "தனித்துறை" / "விருப்பத்துறை" தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும். எட்டாம் வகுப்பில் பள்ளியிலேயே தேர்வு செய்து வடிகட்டலாம் (பொதுத் தேர்வு இன்றியே) . அதன் பின் மாணவர்கள் தங்களின் விருப்பமிக்க தனித்துறையில் மின்னுவது எளிதாய் இருக்கக்கூடும். மதிப்பெண்ணுக்கும்/சீட்டுக்கும் அலைவதைத் தாண்டி குறைந்த பட்சம் படிப்பில் ஆர்வம் கூடலாம் என்பது என் கருத்து.

ஆதிமூலகிருஷ்ணன் 3 September 2009 at 11:25 pm  

நல்லபதிவு வெங்கி. தொடர்க..

வெங்கிராஜா 4 September 2009 at 9:44 am  

//எட்டாம் வகுப்புக்கு பின்பே "தனித்துறை" / "விருப்பத்துறை" தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்.//
வடிகட்டுதலுக்கு பொதுவான அளவுகோல் தேவை, இல்லையா? ஒரே வினாத்தாளை வேறு பள்ளிகளுக்கு சென்று பிள்ளைகள் ஒரேவித நெறிமுறைகளுக்குட்பட்டு சோதிக்கப்படும் போதே அதைச் செய்ய முடியும்.உதாரணத்துக்கு ஒரு மாணவன் பள்ளி மாறுகையில், அந்த பள்ளியின் பரீட்சையை கணக்கில் கொண்டு பாடப்பிரிவினைத் தர முன்வர மாட்டார்கள். அரசுச்சான்றிதழின்றி அதிகாரப்பூர்வமான வேலைகளிலும் சேர இயலாது. முதல் சான்றிதழைப் பெறவே பனிரெண்டாம் வகுப்பு வரை காத்திருப்பதைத் தான் எதிர்க்கிறேன்.

வெங்கிராஜா 4 September 2009 at 9:45 am  

//நல்லபதிவு வெங்கி. தொடர்க..//
நன்றி சார். ப்ளாக்ரோல், ஃபாலோ எல்லாவற்றிலும் எனது தளத்திற்கு வலுசேர்க்கும் உங்களுக்கு நன்றி!

தராசு 4 September 2009 at 11:12 am  

அருமையான பதிவு,

முதலில் சமச்சீர் கல்வி வரட்டும். எப்படியும் ஆரம்பத்தில் சில குளறுபடிகள் இருக்கும். கல்வி வியாபாரிகள் இந்த கல்வி முறையை பயனில்லாத ஒன்று என காண்பிக்க இப்பொழுதே ஊடகங்களின் துணையை நாட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இதில் பார்க்க வேண்டியது என்னவென்றால் இந்தக் கொள்கையில் அரசு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதுதான்.

வெங்கிராஜா 4 September 2009 at 2:37 pm  

//ஆனால் இதில் பார்க்க வேண்டியது என்னவென்றால் இந்தக் கொள்கையில் அரசு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதுதான்.//
Bull's eye!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!

ஊடகங்களில், மாணவர்களும் பாதிக்கு பாதி அதிருப்தியே தெரிவிக்கிறார்கள். எனக்கென்னவோ, சமச்சீர் கல்வி முறையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, மதிப்பெண்ணுக்கு பதில் க்ரேட் எல்லாம் கொஞ்ச காலம் அசௌகர்யமாக இருந்தாலும், போகப் போக முந்தின சிஸ்டமுக்கு பரவாயில்லை என்று ஆகிவிடும் என்றே நினைக்கிறேன்.

வித்யா 4 September 2009 at 5:48 pm  

நல்ல பதிவு. மருத்துவம்/பொறியியல் நுழைவுத் தேர்வு பற்றிய உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

வெங்கிராஜா 4 September 2009 at 7:56 pm  

நன்றி வித்யா.

//மருத்துவம்/பொறியியல் நுழைவுத் தேர்வு பற்றிய உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்//
இது எப்போதிலிருந்து?

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP