மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

19 Jun 2009

Spring, Summer, Fall, Winter... and Spring [2003]

பெயர்: ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்... அண்ட் ஸ்ப்ரிங் (2003)
இயக்குநர்: கிம் கி டுக்.
மொழி: கொரியன்.



இதை ஏண்டா படிக்கணும்னு ஃபீல் பண்ணினா, இந்தாங்க:
ஆசிப் அண்ணாச்சி
தலைவர் லக்கி லுக்

சினிமா தகவல் பெட்டகம் வண்ணத்துப்பூச்சியார்




கலமுமே பூடகம். ஒரு புள்ளியின் மையத்திலேயே சுழன்று கொண்டிருக்கும் ராட்டினத்தைப்போல் வாழ்க்கையும் ஒரே பாதையில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறது. காலம் மாறினாலும் காட்சிகள் மாறாமல் இருக்கின்றன என்ற கருப்பொருளை விரித்துரைக்கிறது படம். அற்புதமான களத்தில், வண்ணங்களால் நகரும் ஓவியம் ஒன்றை நமக்காக புனைந்து தருகிறார்கள் கொரியர்கள். ரம்மியமான கிழக்காசிய (சீன, கொரிய, ஜப்பானிய, தாய்லாந்து) படங்களின் வரிசையில் இந்தத் திரைப்படத்திற்கு என்றும் இடமுண்டு. ப்ரெஸ்டீஜில் எப்படி மேஜிக் திரைக்கதை உத்தி ஆனதோ அவ்வாறே பருவங்களை வைத்து திரைக்கதை பின்னியிருக்கிறார் இயக்குநர். மூன்று தலைமுறைகளின் கதையை ஒரு தலைமுறையைக் கொண்டே புரியச்செய்வதே ஆகப்பெரும் சாதனை, கை என்பதை உணர்த்த நகம் மட்டும் காட்டுவது மாதிரி. மௌனத்தின் இசையும், ஆத்மாவின் வரிகளும் ஆக்கிரமிக்கும் திரையில் பசும்புல்லும், நீர்நிலையும், ஆகாயமும் பேசிக்கொண்டே இருக்கின்றன. மனநிலை பிறழ்ந்து, அசாதாரண நிலையில் அனுபவிக்கக் கூடிய வலியின் வெளிப்பாடாகவே படைப்பு எனக்கு படுகிறது. பளிச் என்றிருந்தாலும் எப்படியோ ஓரத்தில் ஒட்டிக்கொள்ளும் சோகம் கசப்பாகவே இருக்கிறது. ஆமா இல்லை?

கதவுகளைத் தாங்க சுவர் கிடையாது. வேலி இருக்கையிலேயே மாடு மேயப் பார்க்கும்! பரமார்த்த குருவின் சீடர்கள் கிடையாது. ஒரே படுக்கையில் இருக்கும் குருவைத் தாண்டி, இளம் பெண்ணுடன் அதே அறையில் உறங்கும் சீடன் தான் உண்டு. நீண்ட சொற்பொழிவுகளாற்றும் குருநாதர் கிடையாது. கன்னத்தில் அறைந்தால் முதுகில் டின் (கல்) கட்டும் குரு தான் உண்டு. ஆங்காங்கே சேவல், பூனை, ஆமை, மீன், பாம்பு, தவளை, மனிதன் என ஏகப்பட்ட ராம நாராயணன் செட் ப்ராபர்டிகள் வந்து போகின்றன. படத்தில் வரும் மிச்சம் மீதி ஜீவராசிகளும் எக்செண்ட்ரிக்காகவே இருப்பது தனிச்சிறப்பு. படத்தின் இறுதியில் வரும் பெண் யார் என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நம்ம ஊரில் கோவில்களிலும், குப்பைத்தொட்டிகளிலும் துணியால் போர்த்தப்பட்டு விடப்படும் கர்ணர்களின் தாய்மார்களின் வடிவமே அந்தப் பெண். ஏனெனில் பால்யத்தில் ஒரு சிறுவனால் துள்ளித்திரிந்து துறவியின் ஆசிரமத்தில் வாழ்வது இம்மாதிரி கைவிடப்பட்டு வேறு வழியில்லாத சிறுவர்களால் தான் முடியும். சந்நியாசத்திற்கு அத்தனை இளம் பிராயத்தில் ஆய்-அப்பனைத் துறந்து தம்மை கட்டுப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று என்று தோன்றுகிறது.
படம் பற்றிய அளாவிய மதிப்பீடுகள் எனக்கில்லை என்றே சொல்லவேண்டும். வயது பற்றாக்குறையோ என்னவோ, இந்த ஆன்மீக சித்தாந்தங்களில் மூழ்கி முத்தெடுப்பதும், இது போன்ற விஷயங்களை திரைப்படம் மூலம் சொல்வதும் ஏற்புடையதல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்கென ஆவணப்படமாக SSFWaS-கை கருதுவதும் தவறாகவே படுகிறது. பூனை வாலால் எழுதப்படும் ஜென் கோட்பாடுகளைப் புரியாமலே சிலாகிப்பதெல்லாம் எனக்கு ஒத்துவரவில்லை. வெவ்வேறு நிறங்களில் எழுதுவதற்கான காரணமென்ன, வலமிருந்து இடம் எழுதுவதன் உள்நோக்கமென்ன, எழுதி செதுக்கி எழுதுவதன் பயனென்ன, கொரிய எழுத்துகளுக்கு சப்-டைட்டில் போடாமல் பத்து நிமிடத்திற்கு மேல் கடத்துவதேன் என படம் நெடுக பல கேள்விக்குறிகள். ஆனாலும் கலை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - இம்மூன்றும் அற்புதமாக கையாளப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே சொன்னதைப் போல-
* கிறிஸ்துவரான கிம் கி டுக் இத்தனை அழகாக புத்தமத கோட்பாடுகளை எடுத்துரைத்த பராக்கிரமம்,
* ஓவியம், சிற்பம், தற்காப்பு, இசை, புகைப்படம்(அசையாத் தன்மை), கட்டிடம் என பலவித கலை வடிவங்களை ஒருங்கிணைத்தது,

* கட்டிடக்கலையில் கதைக்கும் Symmetry, Axiality, Tangentiality, Unity, Flow, Focus, Proportion இன்னபிற குறிகள் திரைக்கதையில் வியாபிக்கும் அழகு.

* அடர்த்தி: ஒவ்வொரு சின்ன செயலுக்கும் புத்தக புத்தகமாக ரெஃபர் செய்யவேண்டியிருக்கிறது. அதில் ஒரு சின்ன கல்லை எடுத்தாலும் கட்டிடமே குலைந்துவிடும் நேர்த்தி.


இது கலை சார்ந்த படைப்பல்ல. இதனை ஒரு வரியில் சுருக்கிச்சொல்வது கஷ்டமான காரியம். மேலும், இவ்வகை பாட்டம் லைன் விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு உவந்ததும் அல்ல. டாக்டர் விஜய் சொன்னது தான், "வாழ்க்கை ஒரு வட்டம்டா!"

_________________________________________________________________________________________________

8 Jun 2009

The Prestige [2006]

பெயர்: தெ ப்ரஸ்டீஜ்
மொழி: ஆங்கிலம்
வகை: மர்மம்/ தொன்மம்.
இயக்குனர்: க்றிஸ்டோஃபர் நோலன்
நடிகர்கள்: க்றிஸ்டியன் பேல், ஹக் ஜேக்மன், மைக்கேல் கெய்ன், ஸ்கார்லெட் ஜோஹேன்சன்.




"ஒவ்வொரு சிறந்த மந்திரஜாலத்திலும் மூன்று பாகங்கள் இருக்கின்றன. முதல் பாகமானது 'ப்ளெட்ஜ்' ஆகும். மந்திரவாதி முதலில் ஏதோ ஒரு சாதாரணமான பொருளைக் காட்டுகிறார்- சீட்டுக்கட்டையோ, பறவையையோ, மனிதனையோ. சமயங்களில், இதை அசலா, நகலா, வடிவமைக்கப்பட்டதா என்று பரிசோதித்தும் பார்க்கச்சொல்கிறார், பெரும்பாலும் அது நிஜமல்ல. பின் அந்த சாதாரண பொருளை காற்றில் கரைக்கிறார்.. காணாமல் போகச் செய்கிறார். இந்த பாகம் 'ட்ரன்' எனப்படும். ஆனால், இப்போது பார்வையாளர்கள் யாரும் கைகளை தட்டுவதில்லை, ஏனென்றால் உண்மையான மாயாஜாலம் பொருளை மறையச்செய்வதில் இல்லை. அதனால் தான் எல்லா தந்திரங்களுக்கும் ஒரு மூன்றாம் பாகம் தேவைப்படுகிறது. காணாமல் போன அந்த பொருளை இப்போது மந்திரவாதி திரும்ப கொண்டு வரவேண்டும். இதுதான் மூன்றில் மிகக் கடினமான பகுதி. அந்த மூன்றாம் பகுதியை நாம் 'ப்ரெஸ்டீஜ்' என்கிறோம்."

இந்த வசனம் வெறும் வார்த்தைகளால் கோக்கப்பட்டிருக்கிறது. பொய்... மாயை. திரையில் இதே வசனம் பொருந்தக்கூடிய மூன்று பின்புலன்களுடைய ஒரே கதை ஓடிக்கொண்டிருக்கிறது. விசேஷமான இந்த திரைக்கதை வடிவத்துடைய நோக்கம் இதுதான்- 'மேஜிக்' கலையைப் போலவே ப்ளெட்ஜ் எனப்படும் முதல் அத்தியாயம், டர்ன் எனப்படும் இரண்டாம் அத்தியாயம், ப்ரஸ்டீஜ் எனப்படும் மூன்றாம் அத்தியாயம். முக்கிய பாத்திரங்களான இரு மந்திரவாதிகள், அவர்களது குடும்பத்தினர், இவர்களின் குரு தந்திரங்களை வடிவமைக்கும் கட்டர் - இவர்களின் அறிமுகமே ப்ளெட்ஜ். ஒரு மரணமும், தொழில்முறைப் போட்டியும் அவர்களை புதிர்களின் குவியல்களினூடே இட்டுச்செல்வது தான் டர்ன். போட்டியில் வென்றது யார், இழந்தது யார், விரிந்த புதிர்களுக்கான விடை என்ன என்பதே ப்ரஸ்டீஜ். இந்த இலேசான கதையை புதிர்களாக மாற்றி, அவற்றை போர்டன் செய்து காட்டும் வளையங்கள் தந்திரத்தைப்போல ஒன்றினுள் ஒன்றாக பிணைத்து நாம் மண்டை காய்வதை ரசிக்கிறார்கள் நோலன் சகோதரர்கள். இதில் காலம் என்பது ஒரு பொருட்டே அல்ல, டைம்லைனின் கோட்பாடுகள் ஏதுமற்ற வெளியில் முன்பின்னாக வளைந்து நெளிந்து ரசிகனின் முழு ஈர்ப்போடும், பங்கேற்போடும் நம்மையும் ஒரு பாத்திரமாக்கி, தியேட்டர்களில் ஜாலங்களை கண்டுகளிக்கும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களில் ஒருவராக நம்மையும் ஆக்கிவிடுவதே படத்தின் தனிச்சிறப்பு.

லண்டன் நகரின் பிரதான பொழுதுபோக்கே அரங்கங்களில் அரங்கேறும் ஓபரா, இசை நாடகம், சர்க்கஸ், மாயாஜாலம் முதலிய மேடை நிகழ்ச்சிகளே. படத்தில் இடம்பெறும் பல கண்கட்டி வித்தைகள் பதினெட்டாம்/ பத்தொன்பதாம் நூற்றாண்டு மாயாஜால நிபுணர்களின் மாஸ்டர்பீஸ். சைனாக்காரரின் மீன்தொட்டி ட்ரிக், கட்டரின் கூண்டில் மாயமாகும் புறா, போர்டன் செய்யும் தோட்டாவை கையில் பிடித்தல், ஜேக்மன் செய்யும் ட்ரேன்ஸ்போர்டட் மேன் என பலதும் சென்ற நூற்றாண்டுகளின் பிரபல சித்து விளையாட்டுகள். ஐரோப்பிய கலாச்சாரத்தின் பிரதியான இந்த படம் அதன் மூத்த அடையாளங்களான கோதிக்/ ரினைசான்ஸ் கட்டிடக்கலை, தனித்துவமான ஒப்பனை- 'விக்'குகள், தலையில் அணியப்பெறும் ஜோடிக்கப்பட்ட தொப்பிகள், நீள அங்கிகள், மையிருள் அடர்ந்த வீதிகள், மக்கள் பெருமளவில் புழங்கும் விஸ்தாரமான அங்காடி தெருக்கள், கௌரவமாக எண்ணிய வீட்டின் முகப்புகள் என சின்னச்சின்ன விஷயங்களிலும் டீட்டெய்ல்களில் அசத்துகிறார்கள். கட்டரின் புறா, போர்டனின் பந்து, நாணயம் என குறியீடுகளும் படத்தில் உண்டு. மேற்கத்திய பாரம்பரிய பிண்ணனி இசை, அவர்களது பிரத்தியேக ஆங்கிலேய வட்டார வழக்கு- அதற்கென மைக்கேல் கெய்ன் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட ப்ரிட்டிஷ் நடிகர்களை தெரிவு செய்த நயம் என அங்குலம் அங்குலமாக செதுக்கப்பட்ட காவியம் ப்ரெஸ்டீஜ்.

"ரகசியத்தைக் கண்டுகொள்ளப் பார்க்கிறீர்கள், நீங்கள் கவனமாகப் பார்க்கிறீர்களா? இல்லை. உண்மையில் நீங்கள் பார்ப்பதே கிடையாது: நீங்கள் முட்டாளாக விரும்புகிறீர்கள்."

கத்தியால் அறுத்தால் உடல் செயலிழக்கும் என்று அறிந்தும் இந்திக்கார ஜாதுகர்கள் மூர் மார்க்கெட்டின் அருகில் கூடாரம் அமைத்து வித்தை காட்டுகையில் வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதையே மூலதனமாக்கி திரைக்கதை எனும் மாயவித்தையால் நம்மை ஆட்கொண்டு நம் கண்களில் மண்ணைத் தூவி ஊரறிந்த ரகசியத்தையே நோலன் உச்ச காட்சியில் போட்டு உடைக்கிறார். படம் முடிந்த பின் "அடச்சே! நான் அப்பவே நெனச்சன் மாப்ள...!" மாதிரி வசனங்கள் காதில் விழுவது சகஜமே. திரைக்கதைக்கு உறுதுணையாக எடிட்டிங்கில் பின்னி எடுத்திருக்கிறார்கள் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. என்ன தான் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட படமாயினும், கதை நேர்க்கோட்டில் வெறுமையாக இருந்திருக்கும்; நோலனின் ஆகச்சிறந்த திரைக்கதை உத்தியே படத்தின் பெரும் பலமாகும். திரைப்பட விமர்சகர்களே குழம்பிப்போன இந்த படம் மூன்று ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உலகெங்கும் பதினான்கு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும், இதைத்தவிர்த்து இன்னும் பற்பல க்ளூக்களை படம் நெடுகிலும் விட்டுச்செல்கிறார் கதாசிரியர்:

* படத்தின் ஆரம்பத்திலேயே தொப்பிக் குவியல் காட்டப்பெறுகிறது. மீண்டும் தொப்பியை மறைய வைக்க முயல்கையில் அதே இடம் காட்டப்படுகிறது.

* பெயர்களை மாற்றுவது ஆஞ்சியருக்கு புதிதல்ல, காட்லோவ் என்ற ஆசாமியை ஆரம்பம் முதல் காட்டாமலேயே கதையை நகர்த்திச்செல்கையில் சந்தேகம் வலுக்கிறது.

* கைகளில் எந்த முடிச்சு போட்டாய் என்பதற்கு ஒவ்வொரு முறையும் தெரியவில்லை என்பதையே பதிலாக சொல்கிறார் போர்டன் / ஃபெல்லன். ஏனெனில், கட்டியது இருவரில் ஒருவர்; வினவப்படுவது மற்றொருவர்.

* என்னுடைய ஒரு பகுதி தான் அவளை மணந்தது, மற்றொரு பகுதி உன்னை இங்கு காதலித்துக்கொண்டிருந்தது என்று போர்டன் சொல்கிறான். அவனே, ஃபெல்லனின் மனைவியிடம் நீ என்னிடம் இவ்வாறு பேசலாகாது என்கிறான்.

ஒரு முடிச்சை அவிழ்க்கும் நீங்கள் இன்னொரு முடிச்சில் சிக்கிக்கொள்கிறீர்கள். அந்த முடிச்சை அவிழ்க்க நீங்கள் பிறிதொரு முடிச்சை அவிழ்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் அவிழ்க்க வேண்டிய அந்த முடிச்சை நீங்கள் ஏற்கனவே அவிழ்த்தாகிவிட்டது.

****1/2
9/10
_________________________________________________________________

6 Jun 2009

விமர்சனம் என்றால் என்ன?

அண்ணன் தாமிரா அவ்வப்போது சிக்ஸ் சிக்மா, ஃபெயில் சேஃப் முதலிய தொழில் சார்ந்த பதிவுகள் போடுகிறார், கேபிள் சங்கரும், முரளிகண்ணனும் சினிமா நுணுக்கங்களை அணுகுகின்றனர், மைத்துனர் கார்க்கி காதல் பற்றி எழுதுகிறார், மதிப்புக்குரிய நாகார்ஜுனன் தத்துவம், கவிதை போன்ற பராக்கிரமங்களைக் கையாள்கிறார், கோவியார் ஆன்மீகம் பற்றி பேசுகிறார், நர்சிம் கார்ப்/கம்பர் சிலாகிக்கிறார். பதிவர்கள் கதைக்கும் இந்த அடுத்த தளத்திற்கு செல்லுதல் மேனியா என்னையும் (எந்த தளத்துலடா நீ இருந்த?) காந்தசக்தியால் இழுத்துக்கொண்டுவிட்டபடியால் இப்படி துறை சார்ந்த பதிவுகள் சிலவற்றைப் போடலாமென்ற எண்ணக் கல்லை குளத்தில் எறிந்ததற்கு வட்டமடிக்கும் நீர்த்திவலைகள் இனி இந்த லேபிளில்: தொழில் சார்ந்தவை.

எல்லா குழந்தைகளும் செய்வது பற்றிய ப்ரக்ஞையே இன்றி கிடைக்கும் கரித்துண்டால் சுவரில் தூரிகை புனையத் துவங்கும், மனிதன் குகைகளில் வாழ்ந்த காலம் தொட்டே ஒலி வரி வடிவங்கள் இல்லாத யுகங்களில் கிறுக்கல்களாலேயே கருத்து பரிமாற்றம் செய்து கொண்டான். இப்படியாக துளிர்த்த கலையின் பரப்பு விரியத் தொடங்க ஒன்றாக இருந்த திரி இடியாப்ப சிக்கலாகிப் போனதால் விமர்சனத்தின் தேவை வந்தது. வெறுமனே கலைப்படைப்பினை விவரிப்பது விமர்சனம் என்று விட்டுவிட முடியாது. இன்னொரு மழலைக்கு புரியும் கரித்துண்டு கிறுக்கலை நம்மால் அதே வேவ்லெந்த்தில் புரிந்து கொள்ள முடியாது, இன்னொரு குகைமனிதன் புரிந்துகொள்ளும் லிபிகளை நம்மால் அதேபோல அர்த்தம் செய்ய முடியாது. அப்படித்தான் பதிணெண்கீழ்கணக்கு நூல்களும் நமக்கு இன்று புரிவதில்லை. இவற்றுக்கு தெளிவுரை வேண்டியிருக்கிறது, விளக்கவுரை வேண்டியிருக்கிறது. இதிலும் மு.வ எழுதிய விளக்கமும், மு.க எழுதிய விளக்கமும் வெவ்வேறாக தொனிப்பது காண்க. இதுதான் சூட்சுமம். ஆர்க்கிடெக்சுரல் க்ரிட்டிசிஸம் என்று ஒரு பாடப்பகுதி இருந்தது, அதை ஜெனரலைஸ் செய்ததில் இதோ: விமர்சன வகைகள். இது ஒரு துறைக்கான விளக்கங்கள் மட்டுமே, எனில் இது எப்படி பிற துறைகளைச் சாரும் என்றால், கட்டிடம் என்பது ஓவியம், புகைப்படம், சிற்பம், திரைப்படம் வரை விரியும் ஒரு இயலே, அங்ஙனம். சுஜாதா சொல்வதைப் போல மேகங்களைப் பார்க்கும் இருவருக்கு மேகத்திரட்சிகள் வெவ்வேறு வித உணர்வுகளைக் கிளர்வது தான் கலையின் பண்பு. சரி, முதலில் விமர்சனம் என்றால் தான் என்ன? படைப்பின் பயனாக வாசகனாக நீங்கள் அடையும் அனுபவத்தின் குறிப்பு தான் விமர்சனம். ஆனால் கிளர்ந்த உணர்வின் பாங்கையும், ஒரு வித நிர்ணயிப்பையும் செய்வது விமர்சனம். நிதர்சனத்தில், வலையில் இருக்கும் அத்தனை பேரும் விமர்சித்துக்கொண்டிருந்தாலும் விமர்சனத்திற்கென்று சில சாம பேதங்கள், இலக்கணங்கள், ஏன் ரெஃபரன்ஸ் புத்தகங்கள் கூட இருக்கின்றன.
அடிப்படையில், விமர்சனம் மூன்று வகைப்படும்-
- நார்மேட்டிவ்
- இண்டர்ப்ரெட்டிவ்
- டிஸ்க்ரிப்டிவ்.

நார்மேட்டிவ் என்பது ஆசிரியர் எவ்வழியோ, மாணவன் அவ்வழி ரகம். கோடு போட்டால் ரோடு போடும் பேர்வழிகளுக்கு. ஒரு கலைப்படைப்பை அதை நிறுவியவர் எவ்வாறாய் விளங்கச்செய்ய முனைகிறாரோ, அதன் கூற்றுபடி செவ்வன நடந்துகொள்வது. ஏன் எதற்கு போன்ற கேள்விகள் எழாது. இவ்வகையானது ஊடகங்களை விட ஆய்வு, நூலாசிரியர், கல்லூரி பேராசிரியர் அந்தஸ்துகளில் இருப்பவர்களது தொழில்.

இண்டர்ப்ரெட்டிவ் என்றால்.. அதே தான் புரிந்து கொள்ளுதல். இன்னும் சொல்லப்போனால் எதிர்வினை புரிதல். இவ்வகை விமர்சகர்கள் தான் ஜாஸ்தி. "படம் மொக்க மச்சி!" தொடங்கி "..இது எழுத்தாளரின் ஆகச்சிறந்த ஆளுமை.." ரேஞ்சில் செயல்படக்கூடியது. கலைக்குள் மூழ்கி முத்தெடுத்து தனது அனுபவத்தை முன் வைக்கும் முயற்சி. இங்கு முந்தைய பகுப்பிற்கு நேரெதிராக விமர்சகனும் வாசகனும் சமநிலையில் இருக்கிறார்கள் என்பது காண்க.

டிஸ்க்ரிப்டிவ் என்பது வரலாற்றுப் புத்தகம் மாதிரி. வெறுமனே தகவல் தெரிவிக்கும் வேலையை செய்வது. விக்கிப்பீடியாவைப் போல. பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.

மேலோட்டமாக இவ்வளவே. இன்னும் உபபிரிவுகளென முதல் வகையில் நான்கு, மீதியிரண்டிலும் மூன்று மூன்றாக மொத்தம் விமர்சனம் பத்து வகைப்படும். உலக சினிமா விமர்சகர்களாக பார் போற்றும் பெரியவர்கள் ஜோனதன் ரோசன்பாம், ரோஜர் ஈபர்ட் முதலியவர்கள், தேர்ந்த புகைப்பட/ கட்டிடக்கலை நடுவர்கள், விமர்சகர்கள் அனைவரும் இரண்டாம் வகையான இண்டர்ப்ரெட்டிவ் க்ரிட்டிசிசத்தையே செப்பனிட்டும், செவ்விய முறையில் தழைத்தோங்கவும் செய்ய விழைகிறார்கள்.

பி.கு 1: தி ப்ரெஸ்டீஜ் என்ற படம் ஒன்றை நான்காவது முறையாக பார்த்து விமர்சனம் எழுத எண்ணுகையில் பாடம் ஞாபகம் வந்தது... அரியர் பரீட்சை அடுத்த மாதம் இருப்பதன் சுய நினைவுகூரலின் ஒரு பாகம் இது.
பி.கு 2: பட விமர்சனம் வெகு விரைவில் உங்களைத் துன்புறுத்த ட்ராப்டில் தயாராகிக்கொண்டிருக்கிறது.
_______________________________________________________________

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP