மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

07-Sep-2015

தனி இருவர் - சுபா

பல வருடங்களுக்குப் பிறகு ஒரு விறுவிறுப்பான, வித்தியாசமான படம் என்று பலரும் சிலாகிக்கிற தனி ஒருவன் சுமாராக நன்றாகவே இருந்தது. கதை ரீமேக் ராஜாவுடையது என்று தான் கிரெடிட்சில் வந்தாலுமே, சர்வநிச்சயம் சுபா இரட்டையர்களின் திரைக்கதை, பாத்திரங்களின் தாக்கம், எழுத்திலிருப்பதாகவே நான் உணர்கிறேன். குறிப்பாக, அவர்களின் சில recurring patternகள் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. (டிஸ்கி: அந்த வேவு பார்ப்பதை கொரியாவிலிருந்து உருவியதாக எழுதுவதெல்லாம் அல்ல)அபரிமிதமான வரவேற்பைப் பெற்றிருக்கும் அரவிந்தசாமியின் பாத்திர்ப்படைப்பை குறிப்பிட்டு சொல்ல முடியும். சண்டை போட மாட்டேன்கிறார், பான் பராக் மென்றுகொண்டோ கஞ்சா கசக்கிக்கொண்டோ வலம் வரமாட்டேன்கிறார் என்றெல்லாம் புகழ்கிறார்கள்.  மாறாக, அவர் நிச்சயம் சுபா-வின் வில்லன்களின் சாயலில் நிறைய செய்திருப்பதாகாவே படுகிறது. அதில் நிச்சயம் ராஜா, ரவி போன்றவர்களின் முந்தைய படங்களின் பாதிப்புகள் இதில் இல்லை. கனா கண்டேன் பிருதிவிராஜ், ஆரம்பம் அஜித், மாற்றான் சச்சின் கேடேகர், ஐ சுரேஷ் கோபி (வசனங்கள் மட்டும் தான் என்றாலும்), கோ அஜ்மல், அநேகன் கார்த்திக் (இன்னும் அநேகன் முழுதாகப் பார்க்கவில்லை. ஊகம் தான்) இவர்கள் யாரும் உரக்க கத்துபவர்கள் அல்ல. எல்லாருமே பீட்டர் விடும் ஆசாமிகள் தான். மெத்தப் படித்த, நல்ல உத்தியோகத்தில் இருக்கிற வெள்ளைக்காலர் மனிதர்கள் தான். இவர்கள் யாருமே 80களின் வில்லன்களைப் போல மதுப்புட்டியோடு விலைமாதர்கள் பலரை கட்டியணைத்தபடி வருபவர்களல்ல. ஜெயம் வில்லனைப் போல.


மாற்றானில் சச்சின் கேடேகர், கோ அஜ்மல், ஐ சுரேஷ் கோபி, கனா கண்டேன் பிருதிவி - நேரடியாக வில்லன் என்று முதல் ஃபிரேமிலிருந்து அறிவிப்புடன் வருபர்கள் அல்ல. மாற்றானில் பெற்ற பிள்ளையை கொல்லும் ராமச்சந்திரன் போல தனி ஒருவனில் பெற்ற தந்தையைக் கொல்லும் சித்தார்த் என்று அளவிலிருந்து துவங்கலாம். இன்னும் காட்சிப்படுத்தல் ரீதியாக, மேலே இருக்கிற படத்திலுள்ளபடி பிஞ்சுக்குழந்தையை கொல்லுமளவு வன்மத்தை முழுக்கை சட்டை பொத்தானுக்குள் வைத்திருப்பவர்கள் என்ற அளவிலாவது கருதிக் கொள்ளலாம், இவர்கள் மென்மையானவர்களாகவே முதலில் அறிமுகப்படுத்தப்படுவதால், தேர்ந்த அடியாள் காரியதரிசியாக வருவதுண்டு. கோ-வில் அஜ்மலுக்கு போஸ் வெங்கட், மாற்றானில் சச்சினுக்கு ரவிப்பிரகாஷ், பெரும்பாலும் இவர்கள் வில்லனாலேயே, அதே கொலைவெறியால் பிணமாகியும் விடுவார்கள். (அயனில் ஜெகனை இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும்) இன்னபிற. த.ஒ அரவிந்தசாமிக்கு வம்சி கிருஷ்ணா. கனா கண்டேனில் ஸ்ரீகாந்தின் குழந்தைக்கரு, கோ-வில் பியா, மாற்றானில் இரண்டில் ஒரு சூர்யா, ஆரம்பத்தில் ராணா என்று முக்கியக் கதாபாத்திரம் ஒன்றின் மரணம், பின்னாடி prompt-ஆக வருவதற்கு செத்துப்போய் பயன்படுவார்கள். இங்கு த.ஒ-வில் அந்த மலையாளி ஐபிஎஸ்.மக்களின் அபிமானம் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், பெருமுதலாளிகள் - அனைவருக்கும் இருக்கும் இருண்ட பக்கத்தை நாயகன் உணர்ந்து, அவர்களிடமிருந்து மக்களை விடுவிக்கிற சராசரி ஆண்மகன் என்ற அமிதாப் காலத்து மாவு தான் கதை. முன்பாதியில் நாயகனின் பணியிடம் குறித்த சம்பவங்கள் - அயன் பர்மா பஜார், ஐ- மிஸ்டர் மெட்ராஸ், அநேகன் - கேமிங் அலுவலகம், கனா கண்டேன் - கடல்நீரை குடிநீராக்கும் ஆராய்ச்சி, கோ - பத்திரிக்கை நிறுவனம் முதலியவற்றில் டீட்டெய்லிங், பின்பாதிக்கு தேவையான சில துருப்புசீட்டுகள். மொழிபெயர்ப்பு செய்யும் காஜல் அகர்வால், கைரேகை நிபுணி நயந்தாரா, ஈழத்தைப் பற்றி எழுதுகிற  ரிப்போர்ட்டர் கார்த்திகா ஆகியோர் ஒரு காட்சியில் பயன்படக்கூடிய நாயகிகள். போலீஸ்காரர், ஆராய்ச்சி மாணவர், விடலை இளைஞன், உடற்பயிற்சி பயில்வான், எட்செட்ரா மிடில்கிளாஸ் மாதவ ஹீரோக்கள் தான் கதையின் மையம். சர்வவல்லமை பொருந்திய வில்லன் முதலில் தனது எதிரியைக் கண்டுகொண்டு, அவனுக்கு தெரியாமல் அவனை அழிக்க முயன்று அதில் தோற்று, பின் நாயகன் வில்லனின் சுயரூபத்தைக் கண்டுகொள்வது தான் அக்மார்க் சுபா திரைக்கதை. மர்ம நாவலின் சில அம்சங்களையும் அச்சு அசலாக காட்சிப்படுத்தியிருப்பதை பார்க்க முடியும், அயனில் வரும் பற்பல Prompting காட்சிகள். நினைவில் பின்னால் சென்று அதை வேறு கோணத்தில் நிகழ்த்திக்காட்டுதல். கிட்டத்தட்ட பிசகாமல் தனி ஒருவனில் பார்க்கலாம்.

இல்லையென்றால், உண்மையாகவே, சந்தோஷ் சுப்பிரமணியத்தில் வருவதைப் போல ஜெயம் ராஜாவை அவரது அப்பா கேரம்போர்டில் அடிக்க விடாமல், அவரது திணிப்பினாலேயே தெலுங்குப் படங்களை தமிழ்ப்”படுத்தி” இத்தனை நாள் இயக்கிக்கொண்டிருந்துவிட்டு, ஒரு தடவையாவது என் கேரம் ஆட்டத்தை நான் ஆடித்தான் பார்க்கிறேன் என்று தனி ஒருவனாகக் களம் இறங்கியிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. #Meta எது எப்படியோ அயன், அரிமா நம்பி, மீகாமன் வரிசையில் விறுவிறுப்பானதொரு அதிரடித் திரைப்படத்தை தமிழுக்கு அளித்ததற்கு நன்றி.

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP