Vicky Christina Barcelona [2008]
மொழி: ஆங்கிலம்
வகை: காதல்
இயக்குனர்: வூடி ஆலன்
நடிகர்கள்: ஜேவியர் பார்டெம், ஸ்கார்லெட் ஜோஹான்சென், பெனலோப்பி க்ரூஸ்.
மரியா எலீனா: "நீ எல்லா பெண்களிடமும் என்னைத்தான் தேடுகிறாய்!" ழான் அண்டோனியோ: "முழுமையாகாத காதல் தான் ரொமாண்டிக்காக இருக்க முடியும்" விக்கி: "நீ என் கண்ணில் வந்த கண்ணீரை பார்த்தியா?" (முத்தமிடுகிறாள்) க்றிஸ்டினா: "ஆமாம், நான் மரியாவை காதலிக்கிறேன். பைசெக்ஷுவல்...? ஆனா என்னாத்துக்கு எல்லாத்தையும் 'லேபிள்' பண்ணனும்?"
இப்படி படம் நெடுக காமமும் கலையும் வழிந்தபடியே இருக்கின்றன. மகனிடம் "உன் மனைவி இன்னும் என் கனவுகளில் வருகிறாள்!" என்கிறார் தந்தை. கிட்டார் இசையை கேட்டுவிட்டு அங்கேயே ஒரு புதரில் புணர்கிறார்கள் ழானும், விக்கியும். எல்லா காட்சிகளிலும் விரலிடுக்கில் புகையோ வைன் புட்டியோ வளையவந்துகொண்டே இருக்கிறது. கட்டுடைப்பு கண்றாவியெல்லாம் பரிச்சயமில்லாதவர்கள் இவர்கள். பிறரைப் பற்றிய பிரக்ஞையே இன்றி தத்தம் இஷ்டப்படி வாழ்வது தான் ஐரோப்பிய லைஃப்ஸ்டைல். இசை, மது, கட்டிடங்கள், காதல், கடற்கரைகள் - ஸ்பெய்னின் அப்பட்டமான ஆனால் ரம்மியமான வாழ்க்கை முறையை அவரது பாணியில் சொல்லியிருக்கிறார் வூடி ஆலன். நகைச்சுவைக்கு புகழ்பெற்ற வூடி ஆலன் (சுருக்கமாக சொன்னால், நம்ம பாக்யராஜ் மாதிரியே தான்.. அதே மாதிரி நீள்சதுர கண்ணாடி + பெல்பாட்டம்மை மாட்டிகிட்டு நடிச்சிக்கிட்டும் இருந்தார்) ஐரோப்பிய கலை மற்றும் கலாச்சாரத்தை பின்புலமாகக் கொண்டு இயக்கிய படம் தான் விக்கி க்றிஸ்டினா பார்சலோனா.
கதை என்றெல்லாம் ஒரு இழவும் கிடையாது. இரண்டு மாத விடுமுறையை கழிக்க விக்கியும் க்றிஸ்டினாவும் பார்சலோனாவுக்கு வருகிறார்கள், திரும்புகிறார்கள். அவ்வளவே. வந்த இடத்தில் ழான் ஆண்டோனியோ என்கிற ஓவியக்கலைஞனின் மீது க்றிஸ்டினாவுக்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. ஓவியனுக்கு ஏற்கனவே மணம் முடிந்துவிட்டதென்பதும், மனைவி அவனை கொல்ல முயற்சித்திருப்பதும் அவர்கள் அறிந்ததே. விக்கி, க்றிஸ்டினா, ழான், மரியா, பார்சலோனா- பகடையின் ஐந்து முகங்களாக இருக்க ஆறாம் முகத்தில் இருந்தது யார் என்பது தான் படத்தின் கடைசி ட்விஸ்ட். திரைக்கதையில் மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். இவரது சற்றே பழைய பெர்பிள் ரோஸ் ஆஃப் கெய்ரோ என்ற படத்தைப் போலவே இந்த படத்தின் முடிவும்... ம்ஹூம் சொல்லமாட்டேன். படத்தில் என்னை குறிப்பாகக் கவர்ந்தது ஜேவியர் பார்டமின் நடிப்பு. ஆமாம், அவரே தான் - நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்-னில் வில்லனாக வருவாரே, அவரே தான். தத்ரூபம்.
உலகின் முக்கியமான ஆர்க்கிடெக்ட்களில் ஒருவரான ஆண்டோனியோ காடியின் படைப்புகள் படத்தில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. சிற்பங்கள், ஓவியங்கள், இசைக்கோவைகள் என கலை ஆங்காங்கே தூவப்பட்டிருக்கிறது. முதல் ஃப்ரேம் Vignette-டில் ஏர்ப்போர்ட் சுவரில் இருக்கும் ஓவியம் முதலே படத்தில் கலையின் ஆக்கிரமிப்பு தொடங்குகிறது. குறிப்பாக ஸ்பானிய படங்களின் சாயலிலேயே கேமிரா டோனும், ஸ்பானிய இசைக்கருவிகளும் மனதில் ரொம்ப நேரத்துக்கு ரீங்காரமிட்டுக்கொண்டேருக்கின்றன. ஒளிப்பதிவும் சும்மா சொல்லக்கூடாது, ஆர்ப்பரிக்கும் கடற்கரை, ஐரோப்பிய கிராமம், கலைப்பொருட்கள், லேண்ட்ஸ்கேப்புகள் என்று எல்லாவற்றையும் நல்லாவே பிடித்திருகிறார்கள். வசனங்களில் ஒளிந்திருக்கும் நகைச்சுவை முதல் பாதி முழுக்க இழையோடுவது வூடி ஆலனின் Trademark. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெனலோபி க்ரூஸ் வாங்கியதை உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
படத்தின் Diametrically opposite கேரக்டரைசேஷன் தான் மிகச்சாதாரணமான ஸ்டோரிலைனை Masterstroke-காக மாற்றுகிறது. விக்கி சராசரியான அமெரிக்கப் பெண். பாய்ஃப்ரெண்ட், கடிவாளக் கம்மிட்மெண்ட், மாலை நேர வகுப்புகள் என்று நேரம் கழிப்பவள். க்றிஸ்டினா மெட்ரோ-செக்ஷுவல் யுவதி- கலைகளில் ஈடுபாடு, பாய்ஃப்ரெண்டுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது, நிலையற்ற மனநிலை. ழான் ஒரு ப்ளேபாய் - ஒரு கோணத்தில் வாலி அஜித்தைப்போல தன் மனைவி மரியா என்று தொடங்கி அடிச்சு ஊத்துறார், இவர்கள் இருவரை மயக்கி படுக்கைக்கும் அழைத்துச்சென்று விடுகிறார். மரியா எலீனா எக்சென்ட்ரிக்-கான பெண். இவர்களைத் தவிர ழானின் தந்தை, விக்கியின் அமெரிக்க காதலன், தங்க இடம் தரும் தம்பதி, ஸ்பானிஷ் வகுப்பில் விக்கியின் கையைப் பிடித்து இழுக்கும் அரை வேக்காடு என சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் கூட வூடி ஆலனின் அனுபவச்செறிவும், Craftmanship-பும் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை சிகரெட் புகையும், தேநீருமாய் கழிகிற அழகான நிமிடங்களில் காதலியுடன் பார்க்க பலமாக பரிந்துரை செய்யப்படுகிறது.
_____________________________________________________________________