தி டார்க் நைட் ரைசஸ் (2012)
நன்றி: misguidegeek.tumblr.com |
பெயர்:
தெ டார்க் நைட் ரைசஸ்
மொழி: ஆங்கிலம்
வகை: அதிரடி/ புனைவு
இயக்குனர்: க்றிஸ்டோஃபர் நோலன்
நடிகர்கள்: க்றிஸ்டியன் பேல், டாம் ஹார்டி , மைக்கேல் கெய்ன், கேரி ஓல்ட்மன், மார்கன் ஃப்ரீமன், ஆன் ஹாத்தவே, மரியன் காட்டிலர்ட், ஜோசஃப் கார்டன் லூவிட்.
மொழி: ஆங்கிலம்
வகை: அதிரடி/ புனைவு
இயக்குனர்: க்றிஸ்டோஃபர் நோலன்
நடிகர்கள்: க்றிஸ்டியன் பேல், டாம் ஹார்டி , மைக்கேல் கெய்ன், கேரி ஓல்ட்மன், மார்கன் ஃப்ரீமன், ஆன் ஹாத்தவே, மரியன் காட்டிலர்ட், ஜோசஃப் கார்டன் லூவிட்.
தி டார்க் நைட் ரைசஸ் - நோலனின் சதுரங்கம்.
Bane: “Let the games begin.”
சதுரங்கம் ஒரு வேடிக்கையான ஆட்டம். ராஜாக்களுக்கு ஒரே ஒரு
கட்டம் மட்டும் தான் தாண்ட அனுமதி. ராணிகளால் விருப்பம் போல் ஆட இயலும். பகடைக்காய்.
யானை ஒரே மூச்சாக நேர்க்கோட்டில் தாக்கும். மந்திரி கோணலாக அல்லது மாணலாக செல்லும் திறமை
படைத்தவர். பிற சதுரங்கப் பதுமைகளைக் காட்டிலும் குதிரை கொஞ்சம் விசேஷமானது. யானை,
மந்திரி.. ஏன் ராஜா ராணிகளையே அசாத்தியமாக தாண்டிச்சென்று தாக்க வல்லது.
அமெரிக்க நகரங்கள், அங்கு வாழும் மக்கள் பற்றிய ஒப்பனை அணிந்த
பிம்பங்கள் ஒய்யாரமும் கும்மாளமுமாக அமெரிக்காவில் வாழாதவர்களால் தொடர்ந்து பூதாகரமாகவே
சித்தரிக்கப்பட்டாலுமே பயத்தால் சபிக்கப்பட்ட அந்நகரங்களின் உண்மையான முகம் மெல்ல பிரகடனமாகிக்கொண்டிருப்பதை
அவர்களின் முக்கிய இயக்குனர்கள் தொடர்ந்து காட்சிப்படுத்தியிருக்கின்றனர். வெறும் வர்த்தக
ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ எந்த அமெரிக்க பெருநகரத்தையுமே அழித்துவிட இயலாது என்பதைத்
தான் முந்தைய இரு அத்தியாயங்களில் நோலர் நிறுவியிறுந்தார். அதன் தொடர்ச்சியாகவே யுத்த
ரீதியிலான தீவிரவாத மார்க்கமும் அமெரிக்காவை அசைத்துப் பார்க்க முடியாது என்பதையே டார்க்
நைட் ரைசஸ் சொல்ல முயல்கிறது. முதல் இரண்டு பாகங்களின் பங்களிப்பு திரைக்கதை நெடுகிலும்
விரவிக்கிடக்கிறது. இலக்கணம் தவறாமல் அளவான கிளைக்கதைகளையும், பாத்திர-வசன பின்பற்றலையும்
முதல் இரு அத்தியாயங்களிலிருந்து எடுத்தாள்கிறார்கள் நோலர்கள். திரைக்கதை, இசை தவிர
படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அதிரடிக் காட்சிகள் டார்க் நைட்-டை விட கோவையாக இயக்கப்பட்டிருக்கின்றன.
இயற்பியல் விதிகளை மீறும் இரண்டாம் பாக சண்டைக்காட்சிகளின் கண்டின்யுவிட்டி குளறுபடிகள்
இந்தப்படத்தில் இல்லை. ஐமேக்ஸ் ஒளிப்பதிவென்பதால் துல்லியத்திற்கு குறையில்லை. வரைகலையும்
எதார்த்தத்திற்கு வெகு அருகில் இருப்பது கண்கூடு. ஆனாலும் கூட மூன்று மணிநேர அவகாசம்
வியாபித்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
நோலர் ஆஸ்கர் வென்றதாய் வரலாறு இல்லை. ஃபின்ச்சருக்கும் பிம்பிளிக்கி
பியாப்பி. 1973-ல் மீன் ஸ்ட்ரீட்ஸ் தொடங்கி பிரபலமாயிருக்கும் ஸ்கார்சசிக்கும் இதே
நிலைமை தான். 2007 வரைக்கும் அவர் காத்திருந்து டிபார்ட்டெடுக்காக ஆஸ்கர் வென்றெடுத்தார்.
அகாதமி விருதுகளில் படிந்திருக்கும் அரசியல் எனக்கு விளங்கவில்லை. குடியரசுத் துல்லியமாக
படமாக்கப்படும் ஸ்லம்டாக் மில்லியனேருக்கு 8 விருதளிக்கும் போங்காட்டமே சான்று. முதலாளித்துவம்,
கம்யூனிச-சோசியலிச எதிர்ப்பு, இத்தியாதி சமாச்சாரங்களின் கருப்புப் பக்கங்களை, அதிகார
மையங்களைக் குறிவைத்த படைப்புகளை அகாதமி கண்டுகொள்ளாது. அயல்நாட்டுப் படங்களுக்கென
தரப்படும் விருதுக்கான பட்டியலில் இடம்பெறும் படங்களும் பெரும்பாலும் இத்தகு அரசியல்
(குறைந்தது அமெரிக்கா சாராத அரசியல்) களங்களிலேயே பயணிப்பதும் கண்கூடு. இன்செப்ஷனிலேயே
நோலர் தனது கர்வத்தை சற்றே விட்டுக்கொடுத்து, டிக்கெட்டுடன் கோனார் நோட்ஸ் தந்தனுப்பாத
குறையாய் கிக், லிம்போ, டோடெம் இவற்றுக்கான விளக்கத்தைக் குறைந்தது மூன்று முறையேனும்
கதாபாத்திரங்கள் விளக்கச் செய்திருந்தார். அதன்மூலம் மெமண்ட்டோவுக்கும், ப்ரெஸ்டீஜுக்கும்
கிட்டாத மகத்தான வெகுஜன அபிமானத்தையும் வசூல் சாதனையையும் எட்டிப்பிடித்ததென்னவோ உண்மை
தான். ஆனாலும், அவரது பூடகத்தன்மையை மிஸ் செய்த உண்ர்வு மிஞ்சுவதை தவிர்க்க முடியவில்லை.
அவரது அடுத்த கணை, போயும் போயும் ஆஸ்கர் இலக்கை நோக்கித்தானா?
ஹார்வி டெண்ட். மறைந்த மேயர். இரண்டுக்கும் மேற்பட்ட சூழ்நிலைகளில்
மூலைக்கு தள்ளப்படுகிறார். பகைவன் ஒருபுறமிருக்க, இரண்டே கட்டங்களுக்குள் அடுத்த அடியை
எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். எரிபொருள் கிடங்கில் பிணைக்கப்பட்டு
தன்னை விடுவித்துக்கொள்ள வாய்ப்பிருந்தும் இன்னொரு கட்டத்தில் இக்கட்டிலிருக்கும் ராணி
ரேச்சலை விடுவிக்கக் கோரும் இடம், அல்லது நாணயத்தைச் சுண்டி தன் போக்கை நிர்ணயிக்கும்
இடம். இரண்டையும் சொல்ல முடியும். சதுரங்க ராஜா.
ரேச்சல் (இருவேறு நடிகைகளால் புனையப்பட்ட), முதல் அத்தியாயத்திலிருந்தே
ப்ரூஸ் வ்வேனின் குழப்பமான காதலி. ஆட்டம் மாறி, வ்வேன் வ.மனிதனாகிப்போக காதல் கட்டம்
மாறி டெண்ட்டுடன் இணைகிறார். மூன்றாம் அத்தியாய நாயகி செலீனாவுக்கு விவரணையே தேவையில்லை.
திருடி. பல நேரங்களில் இரு தரப்பினருக்குமே சாதகமாய் ஆட்டத்தை மாற்றிக்கொள்பவள். சுயலாபத்திற்காக
எந்த திசையிலும் செல்பவள். ராணி.
ஜோக்கர். ஹீத் லெட்ஜர். ஸிம்மரின் அந்த பயமுறுத்தும் ரீங்கார
இசையின் நாயகன். “I'm a dog chasing cars” என்று
சொன்னாலுமே ஜோக்கர் தான் அங்கிருக்கும் கெட்டிக்காரர்கள் எல்லாரையும் விஞ்சும் கெட்டிக்காரராக இருக்கிறார். வ.மனிதனின் மந்திரிகள் நிமித்தம் லூசியஸ் ஃபாக்ஸ்/ ஆல்ஃப்ரெட் இருப்பது
காண்க. ஒவ்வொரு தருணத்திலுமே இரண்டு கோணங்களில் பிற மந்திரிகள் அவரைத் தாக்கக்கூடும்.
கருப்புக் கட்டத்திலிருந்தால் கருப்புகட்ட மந்திரி, வெள்ளைக்கட்டத்தில் இருந்தால் வெள்ளைக்கட்ட
மந்திரி. பிரச்சனையே எதிராளிடம் நீ கருப்பு கட்டத்திற்கு நகர விரும்புகிறாயா வெள்ளைக்
கட்டத்திற்கு நகர விரும்புகிறாயா என்ற வாய்ப்பை அளித்து, அவ்விரு மந்திரிகளுக்கும் கலகம் விளைவித்து ஆட்டத்தில்
திருப்பங்களையும் உருவாக்கிவிடுகிறார்.
பேன். (வேறு எப்படி
எழுதித் தொலைப்பது?) ரிட்லர், ஜோக்கர், ரா-வின் ஆல் குல், ஸ்கேர்க்ரோ, ஹார்லே
க்வின், ப்ரொஃபெசர் ஹ்யூகோ, டூ ஃபேஸ், மேட் ஹாட்டர் இன்னபிற வில்லன்கள் அனைவரையும்
விட புஜபலம் வாய்ந்தவர்.
பேட்மேனின் முதுகெலும்பை உடைத்து
முகமூடியை நொறுக்கிவிடும் மகா பலசாலி. ஜோக்கர் கருப்பிலோ வெள்ளையிலோ இருவேறு திசைகளில்
செல்லும் திறமை படைத்தவர். பேன் ஒரே மூச்சாக நேரே சென்று தாக்குபவர். ஜோக்கரின்
திட்டங்கள் இரு முடிவுகள் ஏற்படுத்த வல்லவை. இரண்டில் எவ்வாய்ப்பு நடப்பினும் அதற்கென
அடுத்த சதுரங்கக் காய் நகர்த்தலை ஜோக்கர் ஏற்கனவே வகுத்திருப்பார். உதா: கிளைமேக்ஸ்
கப்பல் குண்டு – ரிமோட் காட்சி. பேன் இங்கு தான் அணுகுமுறையில் வேறுபடுகிறார்:
Scarecrow: “Death or Exile?”
Gordon: “Death.”
Scarecrow: “It is then. Death by Exile.”
Gordon: “Death.”
Scarecrow: “It is then. Death by Exile.”
இது தான் பேன். வாய்ப்புகள் வழங்காமல்/ எடுத்துக்கொள்ளாமல்
ஒரே கோட்டில் சென்று அழிப்பவர். மதம் பிடித்த யானை.
கோத்தம் நகரின் வெண் போர்வீரனாக பின்னர் (White Knight) புகழப்படும்
ஹார்வி டெண்ட் அத்தகு தன்மையை டூ ஃபேஸாக உருமாறுகையில் தான் அதீதமாக வெளிப்படுத்துகிறார்.
பேட்மேனை நண்பனாகவோ, எதிரியாகவோ, கூட்டாளியாகவோ.. ஏன் ரயில் சிநேகிதனாகவோ ஆக்கிக்கொள்ளும்
பல கட்டங்கள் அருகில் இருந்தாலும் குற்றவாளியாக அறிவிக்கும் இடத்தையோ, செத்தும் கெடுத்து
துரோகி பட்டம் கட்டும் இடத்தையோ குறிப்பிடலாம். இந்நிலையில் டைட்டில் ரோலில் நடித்திருக்கும்
பேட்மேனை கருப்பு குதிரை என்று வர்ணிப்பது பொருத்தமாகவே இருக்கும். ப்ரூஸ் வ்வேனாக
ஒருபுறம் ராஜ தோரணையிலும், வ.மனிதனாக சீறும் கருப்பு குதிரையாக ஒருபுறமும். நோலனின்
இந்த வினோத சதுரங்கம் ஒரு காவிய முடிவை எட்டியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
பயத்தால் சபிக்கப்பட்ட. வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள்
நாம் சேமித்த தங்கத்தை எல்லாம் திருடிவிடக்கூடுமென்ற பயத்தில் தலையணையடியில் சாவியுடன்
தூங்கும் இந்தியர்கள் போலவே கணிணி பம்மாத்துகளால் தங்கள் மொத்த பங்குச்சந்தை முதலீடுகளை
லவட்டும் பயத்தில் குடும்பங்கள், எந்நேரத்திலும் ஒரு தீவிரவாதி தங்கள் கட்டிடங்களை
வெடித்து சிதறடிக்கும் பயத்துடன் வேலை பார்க்கும் இளைஞர்கள், இனவெறியில் தங்களை காயப்படுத்திவிடக்கூடிய
பயத்தில் அமெரிக்கவாழ் வந்தேறிகள் (அமெரிக்கர்கள் மட்டும் என்ன புர்வகுடிகளா என்றெல்லாம்
கேட்கக்கூடாது). இதுதவிர யாரும் கண்டுகொள்ளாத அமெரிக்காவின் கீழ்த்தட்டு மக்களின் குமுறல்
– எல்லாவற்றையுமே நோலன் சித்தரிக்க முற்பட்டிருக்கிறார். தீவிரவாதத்திற்கு உரமிட்டு
வளர்க்கும் பெரும் பணமுதலைகள், தீவிரவாத மிரட்டலுக்கு வழியின்றி ஒத்துழைக்கும் நடுவண்
அரசு, வர்த்தக ஜாம்பவான்களின் குழாயடி சண்டை, இசுலாமியத் தீவிரவாதம் வரைக்கும் நோலனின்
அரசியல் காட்சிப்படுத்தல் பாய்கிறது. ஒருவிதத்தில் இதனால் ஆக்ஷன் ரசிகர்களின் விருப்பங்களை
தளர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் நோலன் சிக்கிக்கொள்கிறார். முதல் அரை மணிநேரத்தை
ப்ரூஸின் குற்ற உணர்வு, வ.மனிதனின் தேவையின்மை ஆக்கிரமித்துக்கொள்வதால் விசிலடிக்கக்
காத்திருக்கும் அவர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். அதற்கும் சேர்த்து
கடைசி அரை மணிநேரம் அதிபயங்கர விறுவிறுப்புடன் கடந்து செல்கிறது. முந்தைய பாகங்களில்,
குறிப்பாக டார்க் நைட்டில் மனநலம் குன்றியவர்களுக்கான புகலிடத்திலிருந்து தப்பி வந்த
ஜோக்கரை மறுபடி கூடுதல் பாதுகாப்புடன் சிறைபடுத்துவதைப் போன்ற மழுங்கிய முடிவாயில்லாமல்
தீர்க்கமாக, திடமாக இப்படம் நிறைவு பெறுகிறது.
மதம் பிடித்த யானை. பர்தா காட்சியமைப்பை மாதிரி பச்சையாக
இசுலாமிய தீவிரவாதத்தை நோலர் சொல்லியிருக்க வேண்டாம். போதாக்குறைக்கு தெற்காசியாவை
மையமாகக் கொண்ட லீக் ஆஃப் ஷேடோஸில் (பூட்டான் தானே?) பயிற்சி பெறுவதாக சித்தரிக்கப்பட்டிருந்த
முதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படம். ஸிம்மரின் முந்தைய பயமுறுத்தும் ரீங்காரத்தை
ஒத்த அந்த முழக்கம். சதுரங்கம் – போர் எக்காளம் எல்லாமே ஒருங்கிணைப்புதானோ என்ற பலத்த
கேள்வி எழுகிறது. ஜோக்கரின் பைத்திய தாண்டவம் அவரது ஒப்பனையை மாதிரி ஒரு முகமூடியே.
நிலையான சிந்தனையும், நிலமதிரும் கலகங்களும் அவனது வித்தைகளில் மறைந்துள்ளன. பேனின்
முகமுடி அவனது குரலை மறைப்பதைத் தவிர கத்தோலிக்க தர்மம் நிலவும் அமெரிக்காவில் அது
தீவிரவாதம் அணிந்திருக்கும் மதம் என்ற முகமூடி. வணிகனூடாக நுழைந்து, எதிரியின் செல்வத்தை
சுணக்கி, நகரத்தின் வேர்வழி ஊடுருவி, பெரும்படை நிர்மாணித்து, காவல்துறையை முடக்கி,
பேரழிவை முடுக்கி Dystopia எனப்படும் பொலிவற்ற நிதர்சனத்தை அரங்கேற்றுகிறான். ஜோக்கரின்
வங்கிக்கொள்ளையில் எப்படி வேலை முடிய முடிய பணியாட்களை கொன்றுவிட்டு செல்கிறானோ, அவ்வாறே
பேனும் தனது பணி முடிய முடிய இடையூறுகளை கொன்று குவிக்கிறான். இனத் துவேஷத்தையும்,
அதிகார சுரண்டலையும் திசைதிருப்பி தனது தீவிரவாதப் படைக்கு பலம் சேர்க்கிறான். இதில்
இன்னொரு பாதையே கிடையாது. ஆட்டத்தின் ஆதி முதல் அந்தம் வரை பேன் தான் தீர்மானிக்கிறான்.
Crowd: [chanting]
Deh-Shay, Deh-Shay, Bah Sah Rah. Bah Sah Rah.
Bruce Wayne: What does
that mean?
Prisoner: "Rise."
ஒருவிதத்தில் இது தவிர்க்கமுடியாதது என்று அமெரிக்கர்களின்
உணர்தலையே கேட் வுமன் வாயிலாக நோலன் சொல்ல விழைகிறார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னான
வரலாற்றில் உலக அரசியல் ஆதிக்கத்திற்கு மல்லுக்கட்டிய அமெரிக்காவும் சோவியத் ஐக்கியமும்
ஒருகட்டத்தில், உலகறிய சோவியத்தின் போலி பராக்கிரமம் வெளிப்பட்டுவிட அமெரிக்கா பகைவர்கள்
இல்லாத உலகில் வேறு வழியின்றி வெட்டியாக இருக்கவேண்டிய சூழல். தனது ஆயுத வியாபாரத்தில்
நட்டம் ஏற்பட்டு அடிக்க ஆளில்லாமல் அல்லாடிக்கொண்டிருந்தது. அதே சோம்பல் நிலையில் தான்
வ.மனிதனின் தேவையின்றி வர்த்தகத்திலும், சொந்த வாழ்விலும் தோல்வி கண்ட நாயக பிம்பம்
அமைகிறது. இசுலாமியத் தீவிரவாதம் கிளர்ந்தெழுந்து இன்று அமெரிக்காவை அனைத்து தளங்களிலும்
அச்சுறுத்தி வருவதையே நோலர் நுணுக்கமாக சித்தரித்திருக்கிறார். அந்தத் தடைகளை எல்லாம்
முறியடிக்கும் நாயகன் அமெரிக்காவை விளிம்பிலிருந்து காத்து நன்னெறியில் மேய்த்துச்
செல்வார் என்ற முடிவில் தான் படத்தின் எடை மொத்தமும் நிற்கிறது. தனது மரபை தொடர்ந்து
தலைமை தாங்க ஒரு வாரிசையும் அடையாளம் காண்பதாய் படம் நிறைவு பெறுகிறது. இந்த அணுகுமுறையை
ஆழ்ந்த கத்தோலிக்க நம்பிக்கைளை பின்பற்றும் ஆஸ்கர் குழுவை திருப்திபடுத்துதலாக ஒரு
விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் கூட, இதில் குற்றம்சாட்ட ஏதுமில்லை. ஒரே பெரிய பிழை வலிந்து திணிக்கப்பட்ட/ திரிக்கப்பட்ட ராபினின் பாத்திரம் மற்றும் பின்புலம். எது எப்படியோ, சராசரி அமெரிக்க
ரசிகர்கள்/ உலகெங்கிலுமுள்ள அதிரடிப்பட ரசிகர்களை படம் எவ்விதத்திலும் ஏமாற்றாது.
மூன்று விரல்களில் ஒன்றைத் தொட்டே ஆகவேண்டும் என்ற வற்புறுத்தலின்
பேரில், நான் என் நடுவிரலை உயர்த்திக் காட்டுகிறேன்.
4 comments:
there were few questions when i left the movie hall .
1.when there are more bad ones like poison ivy and people who u mentioned why should the series end. 2. the mask of Bane was not completely explained. comics says the bane gets a suppply of drug through that thing in his mouth, which keeps him strong.
3. in the comics when Bane breaks the back of batman they create another character similar to batman to destroy bane. why was it different here.
loved your analysis .. :) loved the movie too.
1. Nolan wants to move on. Maybe Legendary/ DC might take the Robin trilogy or the like in the future.
2. Yes, it wasn't. I simply assumed it to be a symbol of the sacred beard the muslims have.
3. AFAIR, Robin isn't any officer. He is a criminal who is tamed by Batman, who helps Gotham at the time of Batman's recovery after the showdown. Batman and Robin lived happily ever after :-P
Brilliant Venki :) Am yet to see the movie, this gives me a good insight
very good review thanks
Post a Comment