மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

30-Mar-2009

புதிய அத்தியாயம் #2: துவாரபாலகன்.

சிறுவயதிலிருந்தே நமக்கு பயம் கொஞ்சம் அதிகம். பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் சைக்கிளில் அண்ணன்கள் தங்களுக்குள் ரேஸ் விடுவதுண்டு. எப்போதும் நான் விசில் ஊதுபவனாகவே இருப்பேன். கிராம எல்லை முடிவு வரை சென்றுவிட்டு திரும்ப முதலில் யார் வருவதென்று தான் போட்டி இருக்கும். ஐயன்பேட்டைக்கும் முத்தியால்பேட்டைக்கும் இடையில் அகழி ஒன்று இருப்பதாகவும் அதில் முதலைகள் பசியுடன் எப்போதும் நீந்திக்கொண்டிருப்பதாகவுமே பயமுறுத்தி வைக்கப்பட்டிருந்தேன். குரங்கு பெடல் அடித்து, பின் டபுள்ஸ் ஓட்டும் வரை இதே நிலையில் தோப்பிலேயே வாயிற்காவலனாகத்தான் இருந்துவந்தேன்.

விடுமுறைக்காலம் தவிர்த்து பள்ளி வாழ்க்கை மொத்தமும் சென்னையில் தான் கழிந்திருக்கிறது. அதன் பெரும் பகுதியை போரூரில் தான் செலவிட்டிருக்கிறேன். பள்ளியிலிருந்து மிகவும் தொலைவிலிருக்கும் வீடு என்னுடையது தான். சைக்கிளில் போரூர் சிக்னலைத் தாண்டி வருவதே பானிபட் யுத்ததில் அக்பரின் முன்னேற்றத்தைப் போன்றது. இந்த சமயத்தில் போரூரின் பிரசித்தி பெற்ற இரவுண்டானாவைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும். சென்னையின் புறநகர் பகுதியில் முதன்முதலில் ஒரு சிக்னல் வந்தது இங்கு தான். அது போல சென்னையின் மிக முக்கியமான சாலைகள் புணர்வதும் இங்கு தான். ஒரு பக்கம் ஆற்காடு சாலை (கோடம்பாக்கம், வடபழனி, விருக/வளசரவாக்கம்) சிக்னல் அடைந்து குன்றத்தூர் சாலையாக உருமாறும். மற்றொரு திசையில் மவுண்ட் ரோடு கிண்டியில் முடிந்து பட் ரோடு, வர்த்தக மையம் வழியாக வந்து போரூராகி ரவுண்டானா வந்தடைந்து பூந்தமல்லி சாலையாக பூப்படைந்து செல்லும். அநியாயத்துக்கு விபத்துகள் சம்பவித்த வண்ணமிருக்கும். பள்ளி முடிந்து வசீம், ஜகன், ஜோ, செல்வா, திருமலை, அன்வேஷ், நான் எல்லோரும் ஒன்றாக வருவோம். இதில் ஆற்றின் கிளை போல சாகரத்தில் சங்கமித்துவிடும் ஆசாமிகள் போக நானும் அன்வேஷும் மட்டும் போரூர் சிக்னலைத் தாண்டி இரட்டை ஏரி வழியாக ட்ராஃபிக் பரமபதம் ஆடி முடிப்போம். வழியில் பாரதி பேக்கரியில் ஸ்வீட் பன்னும், வெங்கடேஸ்வராவில் சுடச்சுட சமோசாவும் வாங்கித் தின்போம். ஊடே கொஞ்சம் வெங்காய பகோடாவையும், பம்பாய் லக்கடியையும் லவட்டிக்கொள்வோம். சீருடையெல்லாம் நல்ல செம்பழுப்பில் இருந்தமையால் பிரச்சனையில்லை, அப்படியே துடைத்துக்கொள்ளலாம். சொல்ல மறந்துவிட்டேன், வருவதற்கு முன் ஏதேனும் டீச்சருடைய ஸ்கூட்டியின் காற்றை பிடுங்காமல் வந்ததில்லை.

நமது வீட்டைச் சுற்றியிருக்கும் 'எங்க ஏரியா'-வின் வழிகள் எல்லாம் நமக்கு அத்துப்படியாகத் தான் இருக்கும். கிட்டத்தெட்ட அப்படித்தான். எப்படிப் புகுந்தாலும் போரூரின் சக்கரவியூகத்தினூடே நாங்கள் மீண்டு வரக்கூடிய சக்தி பொருந்தியவர்களாகத் திகழ்ந்தோம். வரும் வழியில் எல்லா சிற்றூர்களைப் போலவே குட்டிக் குட்டி ஹவர் சைக்கிள்கள் வரிசையில் நிற்கும் சைக்கிள் கடை, ஆல்-இன்-ஆல் அழகுராஜா மெக்கானிக் ஷெட், பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும் சலூன், மிளகாய் வாசம் படிந்த மாவு மில், அப்பா முன்னாடியும், பிள்ளை பின்னாடியும் தம் அடிக்கும் பங்க் கடை, மஞ்சள் நிற காலாவதி தொலைபேசி பெட்டிகள், ஃபிரேம் இல்லாத கண்ணாடி மாட்டிய பீட்டர்கள் மொய்க்கும் இன்டர்நெட் செண்டர்கள், டென்த், ப்ளஸ்-டூ மாணவர்களுக்கான கோச்சிங் சென்டர்கள் இத்தியாதி.சமாசாரங்கள். சில விசேஷங்களும் நடைபெறுவதுண்டு: கிறிஸ்துமஸ், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என எந்த பண்டிகை வந்தாலும் அமோகமாக கொண்டாட இடங்கள் இருந்தன. பாலமுருகன் சன்னதியும், மசூதியும், மாதா கோயிலும் சில தெருக்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எந்தவிதமான சச்சரவும் வந்ததாக நினைவில்லை. இவை விடுத்து மாதம் ஒருமுறை பார்வையிழந்த சகோதரர்கள் ஒரு வேனில் வந்து இசைச்சேவை புரிவார்கள், பெரிய புள்ளி ஒருவரை பொடா நீதிமன்றத்திற்கு பந்தோபஸ்துடன், வாகன நிறுத்ததிற்கு இடையே அழைத்து (தவறு, இழுத்துச்) செல்வார்கள். ஏகப்பட்ட சினிமா, சீரியல் ஷூட்டிங்கு நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி கௌபாய் படங்களில் வருவது போல காய்ந்த புற்கள் நிறைந்த ஒரு பெரிய மைதானம் ஒன்று இருந்தது. அங்கு விமான நிலையம் வரப்போவதாக சொன்னார்கள். ஒரு பெரிய ரேடாரையும் நிர்மானித்துவிட்டு பிரும்மாண்டமான கதவுகளையும் போட்டு வைத்திருந்தனர். இப்போதும் அங்கு அனாமத்தாக சில வை-ஃபை கனெக்ஷன்கள் தட்டுப்படுகின்றன. பாதி முடித்து கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்று கிலியூட்டியபடி பூதாகரமாக இருந்தது. அன்று சைக்கிள்களை அங்கு நிறுத்தினார்கள். நான் தான் அந்த கதவுகளுக்கு அருகில் துவாரபாலகன் போல நின்றுகொண்டிருந்தேன்.

(தொடரும்)

நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்!

பரிசல் அண்ணனின் பதிவில் ஈர்க்கப்பட்டு இதை எழுதுகிறேன். யாருடைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டேன் என்று மறந்துவிட்டேன். இது ஒரு புதிய பதிவரின் அறிவுஜீவித்தனத்தைக் காட்டும் கருவியும் அல்ல, நான் ஒன்றும் அதீதமான புத்தகப்புழுவும் அல்ல. ஏதோ என்னாலும் இந்த நல்ல முயற்சியில் பங்கெடுக்க விழைந்து இடும் ஒரு பதிவு. வெறுமனே என்னுடைய இரசனை இது, உனக்கும் எனக்கும் ஒத்துப்போகிறதா பார் என்ற எண்ணவோட்டத்தின் வடிகாலே.

10. துணையெழுத்து (எஸ்.ராமகிருஷ்ணன்)
எனக்கு மிகவும் பிடித்தமான கட்டுரைக் கோவை. அவரது அனுபவங்களினூடே வாழ்க்கையின் சாரத்தைக் கண்டறியும் சாவி. மருதுவின் அசரவைக்கும் ஓவியங்கள், குறிப்பாக கடைசியில் குஸ்டாவ் டோரின் ஓவியத்தை வைத்து விளையாடியிருப்பார். கடந்த சில ஆண்டுகளில் வந்த பத்திரிக்கத் தொடர்களில் சமன் செய்ய முடியாத எழுத்து.

9. அகி (முகுந்த் நாகராஜன்)
பின் நவீனத்துவத்தில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை. பெரும்பாலும் பால்யத்தின் நினைவுகளையும், நகரத்தின் குரூரத்தையும் விவரிக்கிறார். ஏகப்பட்ட பேரால் மேற்கோள் காட்டப்பெறுகிறார். சமகால கவிஞர்களில் சாலச்சிறந்தவர். குறிப்பாக உயிர்மை வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் கவிதைகள் சமூக சாடலும், புதிய தேடலுமாய் விஸ்தாரித்து நிற்கிறது. கவிஞர் இதுபோல மேன்மேலும் எழுத வாழ்த்துவோம்.

8. லா.சா.ரா எழுத்துக்கள் (லா.சா.ராமாமிர்தம்)
பெரும்பாலும் கட்டுரைகள். திலகவதி பதிப்பகம் என்று தான் நினைக்கிறேன். பல்துறை பரிச்சயம் என்பதாலும், அற்புத மொழிநடையாலும் கவர்பவர். இவருடைய பல்வேறு படைப்புகளின் கோவை. குறிப்பாக நான் என்ற தலைப்பில் இவரது முன்னுரை மிகவும் பிரமாதமான படைப்பு. புனைவை விட நிதர்சனமும், இசைக்குறிப்பைப் போன்ற தன்மையுடைய இவரது அணுகுமுறையும், ஆழ்ந்த ஞானத்தின் வெளிப்பாடாகும்.

7. கண்ணீர் பூக்கள் (மு.மேத்தா)

வானம்பாடிக் கவிதைகள் மரபிலிருந்து புதுமைக்கு மாறிய இளைஞர்களின் உற்சாகக் குரல். அவர்களுள் முன்னோடியாக இருந்த ஈரோடு தமிழன்பன், வாலி, வைரமுத்து, மீரா மற்றும் பலரது உழைப்பில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கவிஞர்க்ளாகி அந்த பாரம்பரியம் இன்று வரை தொடர்கிறது. இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான உணர்ச்சிப்பூர்வமான பதிவு இந்த தொகுதி. கூர்மையான சிந்தனையும், நேரான பார்வையும் துரித காலத்தில் அனைவரது நெஞ்சங்களிலும் பாய்ந்த கவித்துவ உரம்.


6. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
தமிழ் இலக்கியத்தின் திருப்பு முனையாக கருதப்படும் நூல். 12 சிறுகதைகளுடைய இன்னூலை பள்ளியின் நூலகத்திலிருந்து இரவல் வாங்கிப் படித்தது இன்னும் நினைவிருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் நினைவுப் பாதையும், கயிற்றிரவும். அன்றாட வாழ்வின் கேவல்களையும், அழுத்தும் சோகத்தையும் மெல்லிய நகைச்சுவயோடு பருகத் தரும் சுருக்க நாவல்கள்.

5. இரும்பு குதிரைகள் (பாலகுமாரன்)
நாவல் உலகின் முடிசூடா மன்னன். பிராமணீயத்திற்கு எதிரானவர்கள் கூட இவரது மெர்க்குரிப் பூக்கள் நாவலை விரும்பிப் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். இரும்பு குதிரைகள் நாவலின் முக்கிய அம்சமே அதன் கதாபாத்திரங்க்கள் தான். கல்கியில் தொடராகவும், பின்னர் நாவலாகவும் விசா பதிப்பகத்தாரால் அச்சிடப்பட்ட இன்னூல் கவிதை - கதை இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்த அபூர்வமான புத்தகங்களுள் ஒன்று.

4. புறனானூறு
சுஜாதாவின் விளக்கத்தோடு சேர்த்து படிப்பது நல்லது. இந்த இலக்கியச்சிகரத்தைப் பற்றி எழுத எனக்கு நிச்சயம் வக்கில்லை.

3. பால்வீதி (அப்துல் இரகுமான்)
ஹைக்கூவை தமிழில் கொண்டு வந்த கவிக்கோ பேராசிரியர். அப்துல் இரகுமானின் ஆகச்சிறந்த புத்தகம். கைக்கு அடக்கமாய் இருப்பினும் துளி நஞ்சின் வீரியம் பொருந்திய வித்து. எடுத்துக்காட்டாய்:
"வேலியைத் தாண்டிய என்
கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?"
அனாசாயமாய் வீழ்த்தும் எழுத்து.

2. ஸ்ரீரங்கத்து தேவதைகள் (சுஜாதா)
எதிர்பாராத திருப்பங்களின் தீவிர விரும்பி நான். சுஜாதாவைப் போல சிறுகதை எழுத இன்னொருவர் பிறந்து வர வேண்டும். தனது நினைவுச்சுழலில் சமபவங்களை தனது பாணியில் தத்ரூபமாக அந்தகாலத்து திருச்சி-திருவரங்கத்தை கண்முன் நிறுத்துகிறார். சுஜாதா சுவடுகள் என்ற பெயரில் குமுதமும், விகடனும் இந்த புத்தகத்திலிருந்தும் சில கதைகளை வெளியிட்டிருக்கின்றனர். ஒருமுறை எதேச்சையாக ரயிலில் படித்தது. அதற்கு பின் ஒவ்வொரு இரயில் பயணத்திலும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

1. பாரதியார் கவிதைகள்
தமிழின் மிகச்சிறந்த நூலாக நான் கருதுவது பாரதியாரின் உக்கிரமான இந்த நூலே. பழனியப்பா பிரதர்ஸின் ('கோனார்' நோட்ஸ் புகழ்) தலைசிறந்த நூல். கர்மவீரர் காமராசர் எழுதிய பாராட்டுரையை அவசியம் வாசிக்கவும். இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களையும் துணைக்கு வைத்துக்கொள்ளலாம்.

விட்டுப்போனவை: கலிங்கத்துப் பரணி (இன்னும் முடிக்கவில்லை), அ.முத்துலிங்கம் கட்டுரைகள் (தனித்துவத்தின் மறுபெயர்), தபூ சங்கர் படைப்புகள் (யாரேனும் அவரது எல்லா கவிதைகளையும் ஒரே அட்டைக்குள் அடைத்து, புகைப்படங்களின்றி அச்சிட்டால் தேவலை).

29-Mar-2009

ஐந்நிலம்

மரத்திற்கு பின்
மறையும் மலை-
தூரம்.

என்றோ தொலைந்த செருப்பை
மாட்டி நடந்தேன்
சருகுகளின் ஓசை.

புல்நுனி பனித்துளி
சறுக்கி விழுந்தது
சேற்றில் சலனம்.

காதில் கூழாங்கற்கள்
உறைந்து கிடந்தது
கடல் அலை.

சட்டென விழித்தேன்
இன்னும் ஈரமாகவே இருக்கிறது
குடுவை.

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP