மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

25-Dec-2009

அநாமதேயன்

”நீயி மூத்தவனாப் பொறக்காம தம்பிப் பாப்பாவா பிறந்திருந்தா விக்னேஷ்னு பேர் வைச்சிருப்பேன்” - அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. அதனாலோ என்னவோ, ரொம்ப செல்லமாக கொஞ்சும் போது விக்னேஷ் என்றே கொஞ்சுவாள். பண்டிகை நாட்களில் தவறாமல் வீடு வரும் மாமா காதலித்து கட்டிக்கொண்ட விசாகப்பட்டின அத்தை என்னை விக்ட்டரி வெங்கடேஷ் என்பார். அவர்கள் ஊரில் சரத்குமார் மாதிரியாம். நல்ல உயரமாம், நல்ல உடற்கட்டாம். அவள் வழிந்து தொலைப்பதற்கு என்னை தொடையில் நிமிட்டுவார் மாமா. அடிக்கடி க்ரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்கும் பக்கத்துவீட்டு ரமேஷ் அங்கிள் ’எங்க வீட்டு கண்ணாடியை உடச்ச’ வெங்கடேஷ் பிரசாத்... எப்படி இருக்கே ‘ம்பார். அப்பாவிடம் நன்கொடை வாங்க வரும் கோவில் குருக்கள் ஸ்ரீஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமிகள் என்று என்னைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே புள்ளையாண்டான் எப்படியிருக்கான் நல்லாயிருக்கானா என்று அவரே கேள்வி பதில் எல்லாம் சொல்லிக்கொள்வார். ”இளையராஜா தான்யா தெய்வம்! ஜனனி ஜனனி... சே! பாட்டுக்கு இன்னொருத்தன் வரணும்யா!” என்று உச்ச ஸ்தாயியில் பேசும் சித்தப்பாவின் சிகரெட் சிநேகிதர் என்னை வெங்கிடு வெங்கிடு என்பார். யார் அவர் என்று கேட்டால் தொடையைத் தட்டிக்கொண்டு ஏதாவது பாடிக்காட்டுவார். பதினொன்றாவது படிக்கும் பெரியப்பா மகள், ”ஆமா நீ பெரிய சர்.சி.வெங்கட்ராமனாடா? சாப்பாட்டு ராமா!” கெக்கேபெக்கே என்று இளிப்பாள். சோஷியல் ஸ்டடீஸ் க்ளாசில் மாஸ்டருக்கு குச்சி முடி, வால் எல்லாம் வைத்து ஜோடனையாக வரைந்துவிட்டு மங்கி பை வெங்கி என்று போட்டேன். கிண்டல் பண்ணினதுமில்லாம பேர் எல்லாம் வேற வச்சுக்குறியான்னு கைவிரலையெல்லாம் ஸ்கேலாலேயே நொறுக்கிட்டாங்க. இதையெல்லாம் விட நேத்து ரோட்டில ட்ராஃபிக் போலீஸ்கார், ”ஏம்பா கட்டம் போட்ட யூனிஃபார்ம் தம்பி சீக்கிரம் க்ராஸ் பண்ணு!” என்றார். யார் எப்படிக் காதுபடக் கூப்பிட்டாலும் அதற்கு மறுசெய்கை காட்ட பழகிக்கொண்டேன். என்னவோ இப்போதெல்லாம் ராக்கேஷை நாலு வாட்டி சத்தமாக ”ராக்.. ராக்கி கம் ஆன்!” என்று செல்லமாக கூப்பிட்டாலும் வாலைக் கூட அசைக்கமாட்டேன்கிறான்.

பி.கு: இது உரையாடல் கவிதைப் போட்டிக்கான முயற்சி தோல்வியுற்றதின் வினைப்பயன். ட்விட்டர் என்னை ரொம்ப கெடுத்துவிட்டிருக்கிறது.

10-Dec-2009

முகங்கள்

Bokeh!

இரவுகளில் தனியாக நடந்து சென்று சென்னையை அனுபவிப்பது பள்ளிக்காலங்களில் வாரக்கடைசி கடமைகளுள் ஒன்றாக இருந்தது. பெயர் தெரியாத தெருக்களில் நாலைந்து பேர் கத்திக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சைக்கிள்களில் வலம் வந்ததுண்டு. கல்லூரியில் சேர்ந்த பின்னால், இரவு பகல் பேதங்கள் எல்லாம் சுத்தமாக மறைந்தே போய்விட்டன. தூங்காமலிருந்த நாட்கள் என்றே அரை வருடம் கடந்துபோயிருக்கலாம். சென்னை வரும் போதெல்லாம் நண்பர்களுடன் பைக்குகளில் அர்த்தஜாமத்தில் உலாத்துவது ஒரு தனி சுகம்! மீண்டும் துளிர்த்தெழுந்த ஆசையில், ரொம்ப நாள் கழித்து சென்னையை பாதசாரியாக அனுபவிக்க நேர்ந்தது. சென்னை ராமாவரம் பாலம் முதல் தோமையர் மலை வரை வந்து, ஏர்போர்ட் ரோட்டில் ராடிசன் விடுதி வரைக்கும்! மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் சேர்ந்து, திருவல்லிக்கேணியிலும் இரவெல்லாம் சுற்றியலைந்து, நண்பன் ஒருவனின் வீட்டிலேயே உறங்கிவிட நேர்ந்தது. எத்தனை முகங்கள்! இந்த நகரம் முழுக்க முகங்களால் தான் நிரம்பியிருக்கிறது. சென்னையின் வரைபடத்தை இன்றும் என்னால் முகங்களின் கூடாகத் தான் பார்க்க முடிகிறது. அப்படி, என்னை பாதையெங்கும் பாதித்த சில முகங்கள், இதோ.

*Star(v)e*

St.Thomas mount

Flower vendor

Building a better future

Tea and smiles

Insomniac

Midnight oil

Sannidhi street

07-Dec-2009

ப்ரொமோஷன்.

பீஸின் பக்கத்து சீட்டு பாஸ்கர் (கேண்டீனில் மாலை வெஜிடபிள் கட்லெட் ஸ்பான்ஸர்) காய்ந்த ரோஜாவுடன் சாலையை வெறித்துக்கொண்டிருந்தான். மாலினி செருப்பைக் காட்டியிருக்கிறாள். பின்னே, நிச்சயமான பெண்ணிடம் க்ரீட்டிங் கார்டும் ரோஜாவும் தந்தால், மெட்ராஸ் கண்ணகிகள் குறைந்தபட்சம் டி.எல்.எஃப் வளாகம் எரியுமளவிற்காவது பார்ப்பார்கள். வேறு வழியில்லாததால் (அன்று மாலை கட்லெட்டுடன் ஒரு பெப்சி வேறு), ஒரு டீச்சர்ஸ் விஸ்க்கி வரைக்கும் (என் பர்ஸிலிருந்து) சமாதானம் செய்ய நேரிட்டது. ஒழுங்காக அம்மா சொன்ன குலாப் ஜாமுன் மிக்ஸும், சிநேகிதியும் (மறக்காம அந்த 30 வகை உப்புமா கேட்டு வாங்கிட்டு வாப்பா!) வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்திருக்கலாம். இரண்டு நாட்களில் பாஸ்கர் பேக் டு ஃபார்ம் (ப்ராஜக்ட் மேனேஜர் ட்ரில் எடுத்திருக்கிறார்). மேற்படியெல்லாம் சுமூகமாக முடிந்து மாலினியின் கல்யாண ரிசப்ஷனில் (ஊஞ்சலாடும் குழந்தையுடன் கூடிய) கடியாரமெல்லாம் கிஃப்ட் ராப் செய்து தந்தும் முடிந்தது. அந்த மாசமே இன்னும் இரண்டு காய்ந்த ரோஜாக்களும் (ஒருத்தி அறைந்திருக்கிறாள். இன்னொருத்தியால் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் தர்ம அடி) சில கோப்பைகளும் (என் செலவல்ல, அதனால் 60 மில்லி ஃபெக்குகளில் ரம்) காய்ந்தன. கடைசி ரவுண்டுக்கு முன்னால் பாஸ்கர், "மாலினி ரொம்ப மாறிட்டா மாப்ளே! இப்போல்லாம் முறைக்கிறதில்லை.." என்றான். மறுநாள் காலை லிஃப்டிலிருந்து பாஸ்கரும், மாலினியும் வெளியே வந்தார்கள். அவளது சேலை கலைந்திருந்தது.

06-Dec-2009

ஏதாவது செய்யணும் பாஸ் - II

சென்ற பகுதியின் தொடர்ச்சி...

இந்தியக் கல்லூரிகளை சௌகரியம் கருதி மூன்றாகப் பிரிக்கலாம்:

1. மத்திய அரசின் நிதிபெறும் கல்லூரிகள்:
நாட்டில் மாகாண (Zone) வாரியாக ஐ.ஐ.டி (இந்திய தொழில்நுட்பப் பயிலகம் / Indian Institute of Technology), மாநிலம் வாரியாக என்.ஐ.டி (ஆதியில் ஆர்.இ.சி) (தேசிய தொழில்நுட்பப் பயிலகம் / National Institute of technology) இவையிரண்டும் மிகக்குறைந்த கட்டணத்தில் உலகத்தரக்கல்வி பாலிக்கின்றன. சந்தேகமேயின்றி, இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகள். நுழைவுத்தேர்வின் மூலம் சேர்க்கை நடைபெறும்- ஜாயிண்ட் எண்ட்ரென்ஸ் எக்ஸாம் (J.E.E), அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுகள் (A.I.E.E.E) இவற்றை சில தனியார் கல்லூரிகளும் ஏற்றுக்கொள்கின்றன, ஏ.ஐ.ட்ரிபிள் இ தேர்வினை என்.ஐ.டி-கள் தவிர இன்னும் சில பங்குகொள்ளும் கல்லூரிகளும் ஏற்றுக்கொள்கின்றன, உதா- ஐ.டி- பி.எச்.யு எனப்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், தன்பாத் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ், ஏனைய பல்கலைக்கழகங்கள்.

2. மாநில அரசின் நிதிபெறும் கல்லூரிகள்:
அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (J.N.T.U) - ஆந்திரம், விஸ்வேஸ்வரய்யா பல்கலைக்கழகம் (V.T.U) - கர்நாடகம், தில்லி பல்கலைக்கழகம் (D.U) மாதிரி மாநில, ஒருங்கிணைந்த பிரதேசங்கள் எல்லாவற்றிலும் ஒரு பல்கலைக்கழகமும், அதன் கீழ் பலக் கல்லூரிகளும் இயங்குகின்றன. இங்கும் கட்டணம் குறைவுதான். சேர்க்கை பெரும்பாலும் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மட்டுமின்றி நுழைவுத்தேர்வும் கூடுதலாக அவசியமாகிறது. நம்மூர் போல சில இடங்களில் நுழைவுத்தேர்வை ரத்து செய்தாயிற்று. இவை அடுத்த நிலை. ஐ.ஐ.டி, என்.ஐ.டி அளவிற்கு இல்லாவிட்டாலும், மிகச்சிறந்த கல்வி பாலிக்கும் பல்கலைக்கழகங்களே.

3. தனியார் சுயநிதிக் கல்லூரிகள்:
பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கேந்திரம் எனப்படும் பிட்ஸ், தாபர் பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், மணிப்பால் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பப் பயிலகம் போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள். இங்கு கல்விக்கட்டணம் சற்றே உயர்வு. ஆனால், கல்வித்தரம் மாநில மத்திய அரசுக்கல்லூரிகளுக்கு சில மாற்றுகள் குறைவே. இத்தகு தனியார் கல்லூரிகளில் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் எனப்படும் தொழில்நுட்ப வசதிகள், வாழும் சூழல் ஆகியன முதல் தரத்தில் இருந்தாலும், ஆசிரியர்கள் அரசுக்கல்லூரிகளுக்கு நிகராகாது. இங்கு பயிலும் மாணவர்களும் ஏ.ஐ.ட்ரிப்பிள் இ / ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை சில புள்ளிகளில் கோட்டை விட்டவர்களாகவே இருப்பார்கள்.

நாலாவதாக, இருக்கும் மிச்சசொச்ச கல்லூரிகள் மற்றும் (பணபலத்தால் கல்லூரிகளாய் இருந்து இப்போது) பல்கலைக்கழகங்கள். இவை நமக்கு வேண்டாம். மேற்சொன்ன மூன்று பிரிவுகளில் தமிழக மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது நம்மூருக்குள்ளேயே இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளை மட்டுமே. தமிழர்களின் எண்ணிக்கை பிற ஐ.ஐ.டி/என்.ஐ.டிகளில் மிகவும் குறைவு. விகிதாச்சார அடிப்படையில் பார்த்தாலும் சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய பள்ளிக்கல்வி முறையில் பயிலும் மாணவர்களே மெட்ராஸ் ஐ.ஐ.டியின் மாநில ஒதுக்கீட்டு அடிப்படையில் நுழைகிறார்கள். ஒரு உதாரணத்துக்கு, என் கல்லூரியில் என் பிரிவில், மாநில பள்ளிக்கல்வி முறையில் பயின்ற தமிழ் மாணவர்கள் என்னைத்தவிர யாருமே இல்லை. பிற பிரிவுகள் எல்லாவற்றையும் சேர்த்து (70 சொச்சம்) மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பயின்ற தமிழ் மாணவர்கள் இருநூறு பேரில் மாநில பள்ளிக்கல்வி முறையில் பயின்றவர்கள் கை மற்றும் கால்விரல்களுக்குள் அடங்குபவர்கள் தாம்! ஸ்டேட் போர்ட் மாணவர்கள் ஏன் தேசிய அளவில் பெயர்பெற்ற தரம் உயர்ந்த கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க அஞ்சுகின்றனர்?

1. அக்கல்லூரிகளில் சேர மத்திய அரசுப் பள்ளிக்கல்வி முறையில் பயின்றால் மட்டுமே முடியும் அல்லது, பயிற்சி நிலையங்களுக்கு சென்றால் மட்டுமே முடியும் என்ற மாயை. கோட்டா, ஹைதராபாத் முதலிய இடங்களுக்கு சென்று விடுதிகளில் தங்கி நுழைவுத்தேர்வுக்கென படிக்கும் மடையர்கள் உண்டு. அந்த பயிற்சி நிலையங்களில் சேரவே தனித்தேர்வுகள் இருப்பதும், அதற்கு தனி பயிற்சி நிலையங்கள் இருப்பதும் தனிக்கூத்து.

2. அறியாமை. (எந்தெந்த கல்லூரிகளில் எந்தெந்த பிரிவு சிறந்து விளங்குகிறது என்பது வரை தெலுங்கர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். அண்மைய வருடங்களில் பி.எஸ்.ஜி, சாஸ்திரா, வேலூர் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களில் சேரும் ஆந்திர மாணவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர்) நம் ஆட்களுக்கு எந்தெந்த ஐ.ஐ.டி எந்தெந்த ஊர்களில் இருக்கிறது என்பது கூட தெரியாது. கிராமப்புறங்களில், மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் தாண்டி சிந்திப்பதே இல்லை. நகர்ப்புற மாணவர்களும் பொத்தாம்பொதுவாக Peer pressure-ஆல் உந்தப்படுகிறார்கள்.

3. அவ்வளவு பாடுபட்டு அங்கு படிக்கவேண்டுமா என்று ஒதுக்கிவிடுதல். இங்கில்லாத எது அங்கிருக்கிறது என்ற அலட்சியம். பேரம் பேசி எப்படியேனும் பிள்ளைகளை கல்லூரிகளுக்கு தாரை வார்த்துவிடலாம் என்ற தைரியம். அங்கு செலவுகள் அதிகமாகும், பிள்ளைக்கு விடுதி சாப்பாடு ஒத்துக்காது போன்ற நொண்டி சாக்குகள். அப்ளிகேஷன்கள் வாங்குவதில் கஞ்சத்தனம்.

4. கல்வி ஆலோசகர்கள் அத்தனை திடமான வழிகாட்டிகளாக இருப்பதில்லை. அவர்களின் வட்டங்களும் மிகக் குறுகலாகவே இருக்கின்றன. பெரும்பாலும், துறையை கண்டுபிடிப்பதோடு அவர்கள் பணியும் முடிந்துவிடுகிறது. கல்லூரிகள் சாளர முறை தேர்ந்தெடுப்பில் நிமிட நேர முடிவின்படி அமைந்து தொலைக்கிறது.

5. கண்காணிப்பு இன்றி பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்ற பொதுபுத்தி. இது நம்மூரில் கொஞ்சம் ஜாஸ்தி. இல்லாவிட்டால், அடித்து துவைத்து அரசுத்தேர்வில் மதிப்பெண் பெறவைக்கும் இயந்திரபுரிகளுக்கு பிள்ளைகளை நேர்ந்து விடுவதும், லகரங்கள் பல செலவு செய்து வனவிலங்கு காட்சியகம் மாதிரி பிள்ளைகளை துன்புறுத்தும் கல்லூரிகளில் பிள்ளைகளை கொண்டு அடைப்பதும் நடக்குமா?

இதற்கு என்ன தான் தீர்வு? போன பதிவில் சில விளக்கங்கள் இருக்கின்றன. அடுத்த பதிவு என் பார்வையில் இந்திய பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் . இன்னும் விளக்கமான விளக்கங்களோடு.
__________________________________________________________________________________________________________

07-Nov-2009

கொலாஜ் 9/11/09

போன மாசம் தொடர்ச்சியாக பதிவிட முடியவில்லை. கல்லூரி வேலைகளில் மூழ்கி முத்தெடுத்தாச்சு. ஒரு கல்லூரியை வடிவமைப்பது தான் வேலை. நத்தை வடிவில் ஒரு கட்டிடம் கட்ட முயன்று ஒரு மாதிரியாக முடித்துக் கொடுத்தேன். வடிவம் நல்லா இருந்தாலும் வட்டத்தின் அடிப்படையில் உருவானதால் இடம் விரயமாவதாக சொன்னார் எக்ஸ்டெர்னல் வாத்தி... பார்த்துக்கலாம்.அடுத்த அசைன்மெண்ட், சென்னை நகரில் ஒரு பூங்கா. வெறும் பூங்கா என்றில்லாமல், கூடவே உபயோகப்படும் இடங்களாகவும் வடிவமைப்பது. அதில் விசேஷம் என்னவென்றால், இது ஒரு தேசிய அளவிலான போட்டி. வெற்றிபெறும் வரைபடம் அநேகமாக கட்டமைக்கப்படும். எனவே, சென்னையில் எந்த இடத்தில் பூங்கா கட்ட இடமருக்கிறது என்று சொல்லவும் (மொக்கை பதில்கள் வேண்டாம், ப்ளீஸ். மொத்த இடம் 4 ஹெக்டேருக்குள் இருக்கவேண்டும்)

சென்னையில் பெரிய பெரிய கட்டிடங்கள் வரப்போகின்றன. ஸ்பென்சருக்கு எதிரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் பக்கம் போயிருப்பீர்கள். சென்னையில் மீதமிருக்கும் பெரிய காலியிடங்கள் வெகுசில. அவற்றில், சற்றே பெரிய ஏரியா. நிச்சயம் 50C-க்கு விக்கலாம், கால்வாசிக்கும் கம்மி இடத்தை. சத்யம் சினிமாஸின் 8 ஸ்க்ரீன் மல்ட்டிப்ளெக்ஸ், ஏறத்தாழ 60 அயல்தேச ப்ராண்ட்களின் பிரத்தியேகக் கடைகள்... முழுக்க முழுக்க பச்சைக் கட்டிடம் (Eco-friendly) என ஏகப்பட்ட முஸ்தீபுகளோடு வருகிறது. தேனாம்பேட்டையில் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருப்பதையும் பார்த்திருக்கலாம். அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி.. நம்ம சோழா தான். அறுநூறு அறைகள் உண்டாம்! அதே வீதியில் ஒன்றரை கி.மீ தொலைவில் ரமீ மால் என்றொன்றும் வருகிறது. அம்பா ஸ்கைவாக் வந்து சற்று ஏமாற்றியதைப் போலில்லாமல், இவை இன்னும் கெத்தாக இருக்கப் பிரார்த்திப்போம். சென்னையின் இரண்டாம் ட்ராஃப்ட் வரைபடம் தயாராகிக்கொண்டிருக்கிறது. பூந்தமல்லி தாண்டியும் நீண்டு விரிகிறது. ஸோ, சென்னையின் மக்கள்தொகை மட்டுமே 80 இலட்சமாம்!

ஜன்னலோரம்

நீல லாரி

சிதறுதுளி

மோபியஸ் ரிங்

வர்ல்பூல்

எங்க ஏரியாவிலும் மழை பொத்துக்கொண்டு கொட்டுகிறது. நல்லவேளையாக போரூர் ஏரியை பழுது பார்த்து, மேடுகள் எல்லாம் அமைத்திருக்கிறார்கள். போன வருடமெல்லாம் இடுப்பளவு நீரில் சைக்கிள் மிதித்தது நினைவிருக்கிறது. தீபாவளிககு வந்து போனதிலேயே செம காண்டாகிவிட்டது. பதிவர் சந்திப்பு ஏற்கனவே பணால் ஆயிருச்சு. சரி, படத்துக்கு போலாம்னு பார்த்தா, அதுவும் புட்டுக்கும் போலத்தெரியுது. ஒரே பயன் ட்விட்டரில் ஹாஸ்யமான, சுவாரஸ்யமான ட்வீட்டுகள் வாசிக்க கிடைத்தது மட்டுமே. ஃப்ளிக்கர் அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ஃபோட்டோ வாக்கும் டுமீல். எப்போதாவதுதான் ஃப்ளிக்கரில் மொக்கை படங்கள் பார்க்கலாம். மலையாளத்தில் 'அடிபொளி' என்கிறார்கள். அவை மட்டுமே அங்கு கிடைக்கின்றன. சமீபத்தில் மணிக்கணக்கில் ரசித்த திரி இது.

சத்யம் சினமாஸின் ப்ளர் போயிருந்தேன். அட்டகாசமான இடம்! குறிப்பாக நிண்டெண்டோவின் WII. ஏற்கனவே போட்டிருந்தாலும், மறுபடி இதைப் பாருங்கள்.

சல்லிசான தொழில்நுட்பம் எத்தனை பராக்கிரம் படைக்கவல்லது என்றும், தெற்காசியர்கள் எப்படி இதில் பணம் பண்ணுகிறார்கள் என்பதும் விளங்கும். அதைவைத்தே எவ்வளவு எழவெடுக்க முடியும் என்பதற்கு அன்று பார்த்த ஷார்ட்ஸ் என்றொரு திராபை எ.கா. குழந்தைகள் படத்திருவிழா என்று போட்டிருந்தார்கள், ராபர்ட் ராட்ரிகெஸ் என்றும் போட்டிருந்தார்கள். சின் சிட்டி எடுத்த பிரகஸ்பதி நல்லா பண்ணியிருப்பார்னு நம்பி போனேன். கோட்டைச்சுவரில் நடக்கும் முதலைகள், மூக்குச்சளி அரக்கன், வானவில் கூழாங்கல், வேற்றுக்கிரக காமெடி பீஸ்கள்.... த்தா! படமாடா இது? திரையரங்கில் நான் பார்த்த மிகக் கேவலமான (படம் என்று சொல்லமுடியாது) சனியன் இது தான்.

கிரிக்கெட் டென்ஷன்ஸ் ஆஃப் இண்டியா ஆகிவிட்டது. முன்பெல்லாம் ஹர்ஷா போக்லேவும் பார்த்தோ முகர்ஜியும் மொக்கை போடுவதையெல்லாம் கூட கேட்டுக்கொண்டிருப்பேன். இப்போது க்ரிக்கின்ஃபோவோடு மட்டுமே சரியாப்போச்சு. சித்து எல்லாம் பேசுவதை கேட்பதற்கு, "சார் ரன் கே லியே", "சௌக்கா... பஹூத் அச்சா ஷாட் ஹே!" க்களை கேக்கலாம் போலிருக்கிறது. பிட்ச் ரிப்போர்ட், டாஸ் எல்லாம் கடைசி உலகக்கோப்பையில் பார்த்தது. அடுத்த கோப்பை இந்தியால இல்லை? இணையத்தில் சச்சின் vs. பாண்ட்டிங் சண்டைகளும் கடுப்பைக் கிளப்புகின்றன.. என்ன விதமான கேள்வி இது? ரஜினிகாந்தா விஷாலா என்பது மாதிரி? ஹ!

இளையராஜா 'பா' என்ற பிக்பி படத்திற்கு இசையமைத்திருக்கிறாராம். ட்ரெய்லர் வயலின்கள்... யானைகள் நெஞ்சில் மிதித்தல்!பல நாட்கள் தலைமறைவாக இருந்தாலும், விதூஷ் தோண்டித் துருவி விருது ஒன்று கொடுத்திருக்கிறார். அன்புக்கு நன்றி. நந்தா டெத் ட்ரைலாஜி பற்றி எழுத சொல்லியிருக்கிறார். அவசியம் செய்றேன் சகா.
_________________________________________________________________________________________________________________

31-Oct-2009

மெட்ராஸ் மழை

கயாஸ் தியரி. அப்படித்தாங்க கமல் தசாவதாரத்துல சொல்றாரு.
ட்விட்டரில் ட்ரெண்டிங் டாபிக்ஸ் ரொம்ப சுவாரசியமானவை. லக்கிலுக் ட்விட்டரில் அடிக்கடி தென்படுகிறார். லக்கிலுக் சென்னையில் மழை பெய்வதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார். மழைத்துளிகளை படம் எடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ படம் போட்டு பதிவு எழுதுறது ட்ரெண்டாம். பரிசல் ஆரம்பித்த ட்ரெண்டை ஆதியும் அனுவும் தொடர்ந்தார்களாம். மழையும் இப்படி சங்கிலி போன்ற இணைப்புகளால் உருவாவது தானே? நானும் ஜோதியில் ஐக்கியம் ஆகிறேன்.
27-Oct-2009

பல்ப் ஃபிக்ஷன் (1994)


பெயர்: பல்ப் ஃபிக்ஷன்
மொழி: ஆங்கிலம்
வகை: குற்றம்
இயக்குநர்: க்வெண்ட்டின் டாரண்ட்டினோ
நடிகர்கள்: சாமுவேல் ஜாக்ஸன், ஜான் ட்ரவோல்ட்டா, உமா த்தர்மன், ப்ரூஸ் வில்லிஸ்

pulp /'p&lp/ n.
1. A soft, moist, shapeless mass of matter.
2. A magazine or book containing lurid subject matter and being characteristically printed on rough, unfinished paper.
American Heritage Dictionary
New College Edition

ஹாலிவுட்டின் மிகப்பிரலமான படத்தைப் பற்றி எழுதுவதாக பாலா அண்ணனிடம் வாக்குமூலம் தந்துவிட்ட பிறகுதான் இது ஹாலிவுட்டிலேயே மிகுந்த வாக்குவாதங்களையும் விதைத்த படம் என்பதும் ஞாபகம் வந்தது. படத்தைப் பற்றி மாற்றுக்கருத்து என்றே எக்கச்சக்கமாக இருக்கின்றன. வினைகள், எதிர்வினைகள், அதற்கு துணைவினைகள், மீண்டும் எதிர்வினைகள், முரண்கள் என்று இணையத்திலும், பிற ஊடகங்களிலுமே குழாயடிச் சண்டை குடுமிப்பிடி சண்டை எல்லாம் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. படத்தின் தனித்துவமான திரைக்கதை தான் முக்கால்வாசி இம்சைகளுக்குக் காரணம். ஸ்டோரி-போர்ட் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். படத்தின் ஸ்டோரி போர்ட்டை கார்ட்டூன் படங்கள் நிரம்பிய ஃப்ளிப் புத்தகம் போன்ற ஒன்றில் பதித்துப் புரட்டினால், கதை உங்களுக்கு மையமாக புரியவேண்டும். மூன்று-அங்க அமைப்பை பின்பற்றும் படங்களுக்கு இது பொருந்தும். பல்ப் ஃபிக்ஷன் இங்கு மாறுபடுகிறது. அதாவது நிரல் நிரை எல்லாம் கிடையாது. க்வெண்ட்டின் இயக்குநர் ஆவதற்கு முன்னர் வீடியோ கடையொன்றில் வேலை பார்த்த சமயம் வெவ்வேறு படங்களின் சுருள்களை இணைத்து படம் ஒன்றை ஏரியா பொடிசுகளுக்கெல்லாம் காட்டி கைதட்டல் வாங்கியிருப்பதாக வரலாறு சொல்கிறது. அதன் பாதிப்பாகவே அவரது நான்-லீனியர் திரைக்கதை முறையை நான் பார்க்கிறேன், இதில் நிபுணத்துவம், அறிவுஜீவி, கலைநுட்பம் போன்ற இத்தியாதிகள் இருந்தாலும் கூட. இந்த வடிவத்தைப் பற்றி அதிகம் பேச அவசியமே இல்லை. எழுபதுகளில் பிரபலமான அமெரிக்க நாவல்கள் என்றெல்லாம் போட்டிருப்பார்கள், தற்போது வரும் மெகாசீரியல்களைப் போல என்று உருவகப்படுத்திக்கொள்ளவும், போதும். இவரது பிற படங்களில் எனக்கு மிகப்பிடித்தது கில் பில் - அங்கம் I & II : அதைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.

ட்ரிப்ளிகேண் டைம்ஸில் கணவனை அம்மிக்கல்லால் அடித்துவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் என்று எட்டாம் பக்கத்தில் பத்து மார்க் விடையளவில் பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதியிருப்பார்கள். கூடவே தலை நசுங்கிய அந்த அப்புராணிக் கணவனின் ரத்தம் படிந்த ஃபோட்டோ கருப்பு-வெள்ளையில் பல்லிளிக்கும். பல்ப் என்றால் அந்த மாதிரி தரம் தாழ்ந்த சாணி பேப்பர் செய்திகள். குவெண்டினின் கதைகள் சாதாரணமானவை. அப்பா தந்த தாத்தாவின் கைக்கடிகாரத்தை பொக்கிஷமாக மதிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரன் ஒரு தாதாவிடம் மாட்டிக்கொள்வது ஒரு கதை. அந்த தாதாவை ஏமாற்றிய பார்ட்னரைக் கொல்ல சென்று திரும்பும் இரண்டு அடியாட்களின் கதை இரண்டாவது கதை. இரண்டு அடியாட்களில் ஒருவன் தனது பாஸின் மனைவியை ஒரு நாள் கவனித்துக்கொள்வது இதன் கிளைக்கதை. இரண்டு அடியாட்களில் இன்னொருவன் உணவு விடுதியில் பிக்பாக்கெட் தம்பதியை மெர்சலாக்குவது இன்னொரு கிளைக்கதை. இதுதான் ஃபிக்ஷன். குவெண்டின் இந்த மாதிரி ஸ்டீரியோடைப்பிக் பாத்திரங்களை அன்றாட நிகழ்வுகளில் உலவவிடும்போது, என் கதைகள் உருவாகின்றன என்கிறார். அப்படி, இந்தக்கதையில் இருக்கும் பாத்திரங்களின் போக்கை அவர்கள் இஷ்டத்துக்கு விட்டு, முன்பின்னாக மாற்றி, சிதறடிக்கும் இசையும், தோட்டா தெறிக்கும் வசனங்களும் படம் பார்ப்பதை ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம் ஆக்குகின்றன. இந்த அணுகுமுறை ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும், புதிதாகத் தெரியவைக்கிறது.

குவெண்டின் ஒரு உலக சினிமா ரசிகர். பல்வேறு பிராந்திய, பாஷைப் படங்களை பார்த்து, பிடித்திருக்கும் பட்சத்தில் அமெரிக்க வினியோகமெல்லாம் செய்பவர். கொரியப் படமான ஓல்ட்பாய், ஹாங்காங்கின் வொங்க் கர் வாய் இயக்கிய சங் கிங் எக்ஸ்ப்ரெஸ் முதலிய பற்பல படங்களை உலகிற்கு அறிமுகம் செய்தவர். இந்த சர்வதேச கலாச்சார தாக்கங்களை இவரது படங்களில் பார்க்கலாம். உதாரணத்திற்கு, ப்ரூஸ் வில்லிஸ் தோன்றும் அத்தியாயங்கள் ஒருவித ஸ்பானியத் தன்மை கொண்டதாகவே எனக்கு பட்டது. 'Restless' என்ற நிலையற்ற தன்மையுடன் ஓடிக்கொண்டேயிருப்பது, காட்டமான, வெக்கையான சூழலிலேயே அந்த அங்கம் நகர்ந்துகொண்டிருந்தது. அதுவே, உமா தர்மன் தோன்றும் அத்தியாயங்கள் ஒரு பிரிட்டிஷ் படத்தைப் போல கள-கதாபாத்திர அறிமுகம், மெல்லிய நகைச்சுவை, சின்ன நடன அங்கம், திடீரென்று ஷேக்ஸ்பியர் சொல்கிற 'பிரச்சனை' பின்னாடி அதன் 'தீர்வு' என்று சம்பிரதாயமாக நடந்து முடிக்கிறது. முடிக்கப்படாத ஜிக்ஸா புதிர் பார்க்க ஒரு தினுசான கிளர்ச்சியைத் தரும். என்ன படம் என்று அடுக்காமல் இருந்தாலும் தெரியும் அந்த அழகியலின் பால் பல்ப் ஃபிக்ஷன் உச்சத்தை தொட்டிருக்கிறது. படத்தில் நான் ரசித்த இன்னொரு விஷயம் இந்த 'பேஸிங்'- காட்சிகள் நகரும் வேகம். வெஸ்டர்ன் எனப்படும் அமெரிக்காவின் தென் பகுதி பாலைவனங்களை மையமாகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் நடக்கும் கதைகளைப் போன்ற வேகம். (இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் சொல்கிறேன்.)படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் வசனம். பொதுவாகவே நீண்ட வசங்களுக்கு பேர்பெற்றவர் குவெண்டின். குறிப்பாக இஸகீல் 25:17 என்ற விவிலிய வசனமும் அந்த மொத்த காட்சியுமே சரவெடி! இது தவிர அய்யனார் அண்ணன் குறிப்பிட்டிருந்த ஸெட்'ஸ் டெட் வசனமும் ரொம்ப சுவாரஸ்யமானதே. படத்தில் எனக்கு (அனேக இளைஞர்களுக்கு) பிடித்தமானவர் ஜூல்ஸ் வின்ஃபீல்டாக வரும் சேமுவல் ஜாக்ஸனே. படத்தின் தனித்துவமான கலர் டோன், படத்தின் அணுகுமுறைக்கேற்ற எடிட்டிங் மற்றும் கேமிரா கோணங்கள் (படத்தின் முதல் காட்சியிலேயே ஜான் ட்ரவோல்ட்டா பிண்ணனியில் மங்கலாக நடந்து செல்வார், இஸகீல் 25:17 இரண்டாவது முறையாக ஒலிக்கையில் மாறும் பாய்ண்ட் ஆஃப் வ்யூ, இன்னபிற) எல்லாவற்றையும் ப்ளு-ரே அல்லது எச்.டி-யில் கண்டுகளியுங்கள். நாம் நாளெல்லாம் என்ன செய்கிறோம்? ஆதவன் குப்பையா இல்லையா என்று வாதாடுகிறோம், உ.போ.ஒ ஹிந்துத்வ படமா இல்லையா என்று கும்மியடிக்கிறோம். படம் நெடுக இப்படி முக்கியத்துவமே இல்லாத விஷயங்களைக் கூட தன் கூர்மையான வசனங்களால் சிதறடிக்கிறார் குவெண்டின். ஃபுட் மஸாஜ் ஆகட்டும், ஆம்ஸ்டர்டாமும் ரொயா(ல்) வித் சீஸ் ஆகட்டும், 5$ மில்க்ஷேக் ஆகட்டும், டிவைன் இண்டெர்வென்ஷன் ஆகட்டும்..! அமெரிக்க குற்ற உலகை நுணுக்கமாக விவரிக்கும் பல்ப் ஃபிக்ஷன வெறித்தனமான பிரத்தியேக ரசிகர் கூட்டத்தையும் பெற்று கல்ட் க்ளாசிக் என்று போற்றப்படுகிறது. படம் வெளிவந்த 94ம் ஆண்டு ஃபாரஸ்ட் கம்ப் (5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய டாம் ஹேண்க்ஸின் மாஸ்டர்பீஸ்), ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் (IMDb #1 ஆண்களையும் அழவைத்த படம் என்ற பெருமைக்குரிய) ஆகிய இரண்டு ஜாம்பவான்களுக்கிடையில் தன் திரைக்கதைக்காக ஆஸ்கர் வென்றார் க்வெண்டின் டரண்ட்டினோ.

(அடுத்த பகுதியோடு நிறைவு பெறும்)

20-Sep-2009

கொலாஜ் 21.9.09

வெள்ளி விழா!
தனித்தளம் தொடங்கி வெற்றிகரமான 25-வது வாரம்! தோழர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்.
~
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வருடாவருடம் கட்டிடக்கலை மாணவர்களுக்கான இந்தியக் கூட்டமைப்பான NASA National Association for Students of Architecture-இன் தென்னிந்திய கலந்தாய்வு, போட்டிகள் இன்னபிற நடைபெற்றது. கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் 17 கல்லூரிகள் பங்குகொண்டன. முக்கியப் போட்டியின் சாரம் 'Blob'-itecture எனப்படும் வடிவில்லா வடிவங்கள் கொண்ட கட்டிடக்கலை. இதற்கான எங்கள் கல்லூரி மாணவர்களின் கட்டிட வடிவமே குஜிலிபான்ஸாக எனக்கு பட்டது... இரண்டு மரங்கள் அருகருகே இருப்பதாக வைத்துக்கொள்வோம்- பனித்துளிகள் படர்ந்த இரண்டு மரங்கள். இங்கே மரங்களை அகற்றினால், வெறும் பனித்துளிகள் படிந்திருந்த வெளி நமக்கு கிடைக்கிறது, கட்டிட வடிவமாக அந்த வடிவற்ற வடிவத்தைக் கற்பித்துக்கொண்டு கவின்கலை காட்சியரங்கம் ஒன்றை வடிவமைத்தோம். இப்போட்டியில் இரண்டாம் பரிசை எங்கள் கல்லூரி மாணவர்கள் பகிர்ந்து கொண்டோம். ஆட்டம்-பாட்டத்தில் நாங்கள் க்ராண்ட் சாம்பியன்கள்! மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கை வரலாற்றை நடன-நாடகமாக அரங்கேற்றிய போது, திரையைக் கிழித்துக்கொண்டு எம்.ஜே-வின் மூன்வாக் செய்த கணம் அரங்கமே அதிர்ந்தது! ஒட்டுமொத்த தரவரிசையிலும் இரண்டாம் இடத்தை எங்கள் பல்கலைக்கழகமே பிடித்தது. இது தவிர, புகைப்படப் போட்டி ஒன்றும் நடந்தது. 'Power and control' என்ற தலைப்பில் எனது படத்தையும் அனுப்பினேன். மீட்டருக்கு மேல் போட்டுக்கொடுத்தார்கள்.

தாரை, தப்பட்டை, சங்கு சகிதம் கல்லூரி வளாகம் கலகலக்க மூன்று நாட்களும் டப்பாங்குத்து ஆடிவிட்டு வந்தோம். ஜல்ஸா விளையாட்டுகள், டப்ஸா சண்டைகள், நச் ஃபிகர்கள், குஜால் பிரியாணி, டக்கர் கொண்டாட்டங்கள் என்று அல்லோலகல்லோலப்பட்டு வந்த அடுத்த நாள் விடுமுறை வேறு!

~


உன்னைப்போல் ஒருவன் படம் பார்க்க ஆவலாய் இருக்கிறது. இன்னொரு காரணம் சதிலீலாவதி, மே மாதம் போன்ற படங்களில் கு.ந-வாக இருந்து இப்போது ரீ-எண்ட்ரி தந்திருக்கும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. அவரது சுவாரசியமான பதிவு ஒன்று இங்கே.

~

எனக்கு மிகப்பிடித்த 'கண்கள் இரண்டால்' பாடலை மிஞ்ச ஒரு பாடல் அதற்குப்பின் வரவில்லை, IMO. ஏற்கனவே ஷெபின் கித்தாரில் செய்த அற்புதத்தை நண்பர்கள் தினப்பதிவில் சொல்லியிருந்தேன். படத்தில் இடம்பெறும் புல்லாங்குழல் மெட்டு ஐஸ்க்ரீமில் வழியும் தேன் ரகம். கூடவே ஹிந்தி வீடியோ ஒன்றினுக்காக டி.ஜே ரீமிக்ஸ் வடிவம் ஒன்றும், கவர் மற்றும் குழல் வடிவங்களும் இதோ. நன்றி ஜேம்ஸ் வசந்தன் சார்!

~


டெட்.காம் உலகப்புகழ்பெற்ற மனிதர்களின் பேச்சுகளை தொகுக்கும் ஒரு வலைத்தளம். சுஜாதா க.பெ-வில் இதைப் பற்றி சொல்லியிருந்தார். கிருபா சார் ட்விட்டரில் இதன் சென்னை அத்தியாயம் பற்றி எழுதியிருந்தார். வி.எஸ்.ராமச்சந்திரனின் பேச்சு டெட்.காமில் சேர்க்கப்பட்டிருக்கிறது. டெட்.காமில் டாப் 10 வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன், அதிலும் குறிப்பாக ஜானி லீ வழங்கிய சொற்பொழிவில் Wii ரிமோட் என்ற 50$ சமாச்சாரத்தைக்கொண்டு அவர் செய்யும் வித்தைகள் ரொம்ப ரொம்ப விந்தையாக இருந்தது! ஆறு நிமிஷம் மட்டுமே பேசி, வாய்பிளக்க வைத்துவிட்டார்!


~

விநாயகர் சதுர்த்தி முடிந்து அடுத்து ரமலான் விடுப்புகள் வந்துவிட்டன. ஆயுத பூஜை விடுமுறைகள் வேறு வேகமாக வருகின்றன. சீரியல், பெர்ஃபார்மென்ஸ், ரியாலிட்டி, டாக், விமர்சனம், வெட்டிப்பேச்சு எல்லாம் பார்ப்பதை நிறுத்தி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. கே தொ.கா அல்லது செய்திகள் பார்ப்பேன். கவுண்டமணி என்ற நிகரற்ற கலைஞன் தோன்றினால் மட்டும் நகைச்சுவை. கடந்த வி.ச.வி-யில் அப்படி இப்படியென்று 20-25 படங்கள் வளைத்து வளைத்து பார்த்தாச்சு. அடுத்த அசைன்மெண்ட் இப்போது ரெடி. பார்க்க ஆசைப்படும் திரைப்படங்கள்: முகவரி, அலைபாயுதே, சத்யா, ஆஹா என்ன பொருத்தம், ரமணா, இருவர், முதல்வன், ஆண்பாவம், கண்ட நாள் முதல், கில்லி, நெற்றிக்கண். மூன்று படங்களாவது காணக்கிடைத்தால் திருப்தியடைவேன். தீபாவளிக்கு சந்திரமுகியாமே?

~


நர்சிம் அண்ணன் 'ஏதாவது செய்யணும் பாஸ்' பதிவை அவரது என்'ணங்கள் பதிவில் லிங்கியிருந்தார். 180 பேர் அங்கிருந்து மட்டும் அந்த பதிவு வந்து சேர்ந்திருக்கின்றனர். நன்றிண்ணே! அவருக்காகவாவது அந்தப் பதிவின் தொடர்ச்சியை எழுதவேண்டும். இப்போது ஹை-ஸ்பீட் படங்களின் மேல் பித்து பிடித்ததுபோல துளி, நகரும் வாகனங்கள், பறவைகள் எல்லாவற்றையும் எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறேன். டிப்ஸ் வெல்கம். பதிவுலகத் தொடர்புகள் அதிகரித்துக்கொண்டிருப்பதாலும், பதிவுகள் படிப்பதும் படிப்படியாக ஜாஸ்தியாவதலும் சும்மா ஒரு சேஞ்சுக்கு வலைப்பக்க விமர்சனங்கள் எழுதலாமென்று பார்க்கிறேன். எனி கமெண்ட்ஸ்? ஹாலிவுட் பாலாண்ணே நான் எழுதுவதாகச் சொன்ன பல்ப் ஃபிக்ஷன் பதிவை ரொம்ப எதிர்பார்ப்பதாக சொன்னார். பயமாக இருந்தாலும், சத்தியமா எழுதுறேன் பாஸ்! பல்கலைக்கழகக்காரர்கள் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்களே!

பி.கு: கேபிள் சங்கர் அண்ணன் தனது படத்தின் போஸ்டரில் மேலே இருக்கும் உறைந்த துளியை உபயோகிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். பதிலுக்கு என்ன கேட்கலாம்?
____________________________________________________________________________________________________

04-Sep-2009

செல்ஃபோன் படங்கள் - III சில்ஹவுட்

பிட் குழுவினரின் இம்மாதப் போட்டித்தலைப்பு சில்ஹவுட். எந்தப் படத்தையும் கிம்ப்பில் சில்ஹவுட்டாக எப்படி உருமாற்றம் செய்வதென்று பயிற்சிப்பதிவும் அங்கு காணக்கிடைக்கிறது. கூகுளின் பிக்காசாவைக்கொண்டும், இதே போல் சில்ஹவுட் செய்ய இயலும். பிக்காஸா 3-யை பொறுத்தவரை, அதன் மிகச்சிறந்த அம்சமாக நான் கருதுவது புள்ளிகள் (Noise) அதிகமின்றி ஒளியளவை (Exposure) சரிசெய்ய முடிவதைத்தான். ட்யூனிங் என்ற டேப்பில் (Tab) , இருக்கும் ஃபில் லைட், ஹைலைட்ஸ், ஷேடோஸ் ஆகிய மூன்று மானிகளை விருப்பத்திற்கேற்ப ற்றுகையில், படத்தின் ஒளி மெருகேறுவதோடு இவ்வகை சில்ஹவுட்களையும் செய்ய முடியும். ஏற்கனவே பழைய பதிவுக்கிடங்கில் இருக்கும் படங்களையும் தந்திருக்கிறேன் (கடைசி ஐந்து). உங்கள் விமர்சனத்தின் அடிப்படையில் ஒரு படத்தை அனுப்பலாம் என்றிருக்கிறேன். இதில் முதல் படம் மட்டும் புதுக் கேமராவில் எடுத்தது. மீதியெல்லாம் அலைபேசியில் எடுத்தவைதான், பெரும்பாலும் சோனி எரிக்சன் ஜி-700. Let the best shot win!

சிறகுகள்

Image and video hosting by TinyPic

தென்னங்கீற்று.

Image and video hosting by TinyPic

சூரியக்கதிர்

Image and video hosting by TinyPic

கூரையின் கீழ்

Image and video hosting by TinyPic

அந்திமாலை

Image and video hosting by TinyPic

ஜன்னலோரம்

Image and video hosting by TinyPic

இது ஒரு பொன்மாலைப் பொழுது!

Image and video hosting by TinyPic

நீலவான ஓடை

Image and video hosting by TinyPic

காஞ்சிபுரம் தேரடி வீதி

Image and video hosting by TinyPic

சன்செட் பாய்ண்ட்

Image and video hosting by TinyPic

கருப்பு வெள்ளை

Image and video hosting by TinyPic

ஆகும்பே அஸ்தமனம்

Image and video hosting by TinyPic

பி.கு: இவை டைனிபிக்கில் இணைக்கப்பட்டு, அங்கிருந்து உரல் தந்து பதிவிட்டவை. இதனால், நம் தனிப்பட்ட ப்ளாகர் கணக்கின் சேமிப்பு அளவும் பாதிக்கப்படுவதில்லையாம், வாசகர்களுக்கும் அதிக பளு இன்றி படங்கள் திறக்க வசதியாய் இருக்குமாம்... செவிவழிச்செய்தி.
______________________________________________________________________________________________

01-Sep-2009

ஏதாவது செய்யணும் பாஸ்!

இளநிலை பட்டப்படிப்புகளும், நுழைவுத்தேர்வுகளும் குறித்த பதிவு ஒன்றினை எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த சில வாரங்களாக இருந்தது. சமச்சீர் கல்விமுறையை உயர்நிலைப் பள்ளி அளவில் அமல்படுத்த மத்திய அரசு முன் வந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கும் இந்தத் தருணத்தில், இது குறித்த எனது புரிதலை விவாதம் கருதி முன் வைக்கிறேன். இதெல்லாம் பாதி அப்பாக்களுக்கும், முக்கால்வாசி அம்மாக்களுக்கும் தெரிவதில்லை/புரிவதில்லை என்பது பெரும் சோகம். நர்சிம் அண்ணனின் 'ஏதாவது செய்யணும் பாஸ்' சங்கிலிப் பதிவுகளின் பாணியில் எனக்குத் தோன்றிய யோசனையையும் இடுகையின் முடிவில் சொல்லியிருக்கிறேன்.

பள்ளிகளில் பனிரெண்டாம், பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மூலம் மாணவர்களை வடிகட்டுகிறார்கள். முன்னர் எட்டாம் வகுப்பிலும் ஒரு தேர்விருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தகுதியாக (Minimum eligibility criteria) எட்டாம் வகுப்புத்தேர்ச்சியே இருந்து வந்தது. தவிர டி.வி மெக்கானிக் போன்ற ஆறு மாதகால பயிற்சி அடிப்படையிலான பணிகளுக்கு அந்தத் தேர்வே அளவுகோலாக இருந்தது. தற்போது, அதுவே பத்தாம் வகுப்பு தேர்வுகளாக ஆகியிருக்கிறது. பாலிடெக்னிக் எனப்படும் டிப்ளோமா படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பில் கட்டாயத்தேர்ச்சி அவசியமாகிறது. விருப்பத்தின் பேரில், டிப்ளமோ பட்டதாரிகள் லேட்டரல் எண்ட்ரி முறையில் மூன்றாண்டு கால படிப்பிற்குப்பின்னர் இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் சேர வழியுண்டு.

பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் சற்றே ஜாஸ்தி. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் பிரிவுகள் உட்பிரிவுகள் எல்லாம் தவிர ஏனைய துறைகளிலும் வாழைத்தார் மாதிரி குவித்து கூவிக்கூவி அழைக்கிறார்கள். இதில் நம்மூரில் ஸ்டேட் போர்ட், சென்ட்ரல் போர்ட் தவிர மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாண்ட்டசோரி என்று எல்லாம் குழப்படிகள் உண்டு. பத்தாவது வரை தான் மெட்ரிக் முதலிய பிற சிலபை (Syllabi), அதற்கு மேலே மெட்ரிக் பள்ளிகளிலேயே ஸ்டேட் போர்ட் முறைமையில் படிக்க வேண்டியது தான். தனியார் பள்ளிகள் வசதிகளிலோ (Facilities), வகுப்பு நேரங்களிலோ (Contact hours), கட்டணங்களிலோ (Fee) அரசின் கட்டுப்பாடுகளை முக்கால்வாசி இடங்களில் கடைபிடிப்பதில்லை. பல இடங்களில் அனுமதியே வாங்காமல் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது, பத்தாம் வகுப்புத்தேர்வை ரத்து செய்வதன் மூலம், தென்னிந்தியாவில் மிகப்பரவலாக செயல்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐ.டி.ஐ-க்கள் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே பத்தாம் வகுப்பு வரையே சிரமத்துடன் படித்து முடிக்கும் ஒருவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பொருளாதாரச்சுமை. ப்யூர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், பிசினஸ் மேத் பகுப்புகளுள் தேர்ந்தெடுப்பதில் மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் குழப்பம் ஏற்படும். மின்கம்பிகளில் பழுது பார்க்கும் லைன்மேன்/ கூட்டல்-பெருக்கல் குமாஸ்தா போன்ற பணிகளில் அமரக்கூட கேல்குலஸும் ஐன்ஸ்டைனையும் படிக்க வேண்டிய சாபக்கேடு. தேர்ச்சி விகிதம் அனாசாயமாக குறைந்து இன்னும் சில பெட்டிச்செய்தி தற்கொலை சிறுவர்கள் உற்பத்தியாவார்கள். பெண்களின் தனிப்பட்ட தேர்ச்சி விகிதத்திலும் வீழ்ச்சி இருக்கலாம்.

அதிமுக்கியமாக இந்த மாற்றத்தினால் நிகழ்வது யாதெனில், பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளை பெருமளவில் ஒழிக்க முடியும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்கலாம், கல்வித்தரம் என்று பொய் சொல்லி வியாபாரம் செய்ய முடியாது . சட்டீஸ்கர், திரிபுரா, ராஜஸ்தான், கேரளம் என்று எங்கிருக்கும் ஏழாம் வகுப்பு மாணவனும் நிகர்நிலைக் கல்விமுறையிலேயே பயிற்றுவிக்கப்படுகிறான், சோதிக்கப்படுகிறான். கட்டணங்களும், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் சமமாகவே இருக்கும். (பாடங்களின் எண்ணிக்கை, கடினம்/சுலபம், மதிப்பெண் வழங்கும் வழிமுறைகள், பிற செலவுகள், கூடுதல் பயிற்சிகள்) பணிமாற்றம், கல்லூரி நுழைவு ஆகியவற்றின் போதும் சிக்கல் இராது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் பள்ளிப்படிப்பிற்கென ஒரே சான்றிதழ் இருக்கும் பட்சத்தில் மொத்தமாக தேர்வினை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பிருக்கிறது.

மேலும், மதிப்பெண்களுக்கு மாற்றாக க்ரேடிங் முறையை அறிமுகப்படுத்த அரசு இசைந்துள்ளது. இது வகுப்புத்தேர்வுகள் முதலிய சிறு அளவிலான பரீட்சைகளில் குதிரைப்பந்தய மனப்பான்மையை போக்க உதவுமே தவிர, விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை இலட்சங்களில் இருக்கையில் ஏகப்பட்ட இம்சைகளுக்கே வழிவகுக்கும். ஒவ்வொரு கல்லூரிக்கும் விண்ணப்பிக்கும் மாணவர்களிடையே மதிப்பெண் அடிப்படையிலான பட்டியலின்படியும் இட ஒதுக்கீட்டின்படியும் சேர்க்கை நடைபெறுகிறது. க்ரேட் பத்து மதிப்பெண் ரேஞ்சில் (Range) வழங்கப்பெறும், ஆனால் தற்போது கடைபிடிக்கப்படும் மிக்கக்குறைந்த மதிப்பெண் வேறுபாடு (Minimum difference in marks between two students) 0.01% வரை இருப்பதால், க்ரேட்டில் இதைக்கொண்டுவர சாத்தியமில்லை. பொதுத்தேர்வைப் பொறுத்தவரை க்ரேடிங் மதிப்பெண் உதவாது என்பதே என் தாழ்மையான கருத்து.

இவற்றைக் குறித்து, நமக்கு அருகாமையில் இருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு(வாகங்களுக்கு) ஒரு மடல் எழுதலாம். ஐம்பது பதிவர்கள் எழுதினால் ஐம்பது பள்ளிகளின் பிள்ளைகளுக்கு விஷயம் தெரியும், பரவும். தெரிந்த ஆசிரியர்களிடம் விவாதிக்கலாம். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி போன்ற பெரு/சிறு நகரங்கள் தவிர்த்து இந்திய அளவிலான கல்லூரிகளின் தரம்/ நுழைவுப்படிவம் குறித்த விவரங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு தெரிவதில்லை. அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் முயலவேண்டும் என்பதே என் விழைவு. அதற்கென கல்லூரிகளே விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகின்றன. அக்கல்லூரி நிர்வாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். நாம் பயின்ற பள்ளியைத் தொடர்பு கொள்ள முயன்று நிச்சயம் விவரிக்க இயலும் என்று நம்புகிறேன். ஒரு உறவினரின் அல்லது நண்பரின் பிள்ளையிடம் இது குறித்து தொலைக்காட்சிகளிலும், பிற ஊடகங்களிலும் கிடைக்கும் தகவல்களை சொல்லி, அவர்களைப் பின்தொடரச் சொல்லலாம்.

ஆக, இந்திய மாணவர்கள் அனைவருக்கும் ஒரே குடையின் கீழ் விதிகள் பட்டியலிடப்பட்டு, ஒரே பாடதிட்டத்தில் புத்தகங்கள் விநியோகித்து, ஒன்று முதல் பனிரெண்டு வரை அட்டவணை சகிதம் கல்வி பயிலச்சொல்வது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. இதனால் நுழைவுத்தேர்வுகள் வரை ஒரு மாணவனின் எதிர்காலத்தை சீர் செய்ய முடியும். இந்தியாவில் பொறியியல்/ மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.

26-Aug-2009

சென்னைக்கதைகள் - I

போரூர்.


குறிப்பு: மேலே உள்ள படம் போரூர் ஏரியிலிருந்து ஏரியாவை நோக்கி. அடியேன் எடுத்ததே. பயன்பாடு க்ரியேட்டிவ் காமன்ஸ் காப்புரிமைக்கு உட்பட்டது.

டேப்பை பொருத்திவிட்டு திரையை நோக்கினேன். கருப்பு வெளியில் வெள்ளைப் பொத்தல்கள் விழுந்தமாதிரி இருந்தது. பின்னணியில் இசையா சத்தமா என்று தரம் பிரிக்க முடியாத ஒரு ஒலி. சிவப்புப் புள்ளி ஒன்று தொலைக்காட்சியின் ஓரத்தில் கண்சிமிட்டிக்கொண்டே ஆர்.இ.சி என்று அறிவித்தபடி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தது. ஜெ.ஜெ டிவியின் சென்னை மவுண்ட் ரோட் அலுவலக செய்திப்பிரிவில் வேலை செய்துகொண்டிருக்கும் நானும் என் அலவன்சில் கம்பெனி தந்த பேஜரும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தோம். தமிழகக் கழகங்கள் ஸ்பான்சர் செய்யும் செய்திகளை குளியல் சோப்பு விளம்பரங்களுக்கு இடையில் முடிந்து வைக்கும் பிலிம்சுருள் தையல்காரன் நான். நாளை காலை செய்திகளுக்கு வந்திருந்த பிலிம்களை பரிசீலித்து காஜா போடவேண்டியிருக்கிறது, தம்பியிடம் இருந்து ஓயாமல் பேஜரில் குறுந்தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.
8:28 p.m <>
8:33 p.m <>
எடிட்டரின் க்யூபிக்கிளில் வீடியோ வில்லைகள் எல்லாவற்றையும் சமர்ப்பித்துவிட்டு கிக்கரை உதைத்தேன். சிகப்பு விளக்குகள் ஏதும் இல்லாமலேயே போரூர் ரவுண்டானா பயங்கர நெரிசலாக இருந்தது. என்னை நோக்கி வந்த ஒரு உருவம் பைக்கின் ரியர்-வ்யூ கண்ணாடியை தன் இடுப்பால் உடைத்துவிட்டு மறைந்தது. கெட்டவார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருக்கும் என் உதடுகள் இருபதாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.
[20.2.97]

தெருவோர விநாயகர் கோயில். கோடம்பாக்கம் டிபன்ஸ் காலனி ஏரியாவில் யாரும் இவளை பார்த்ததில்லை. நார் நாராக இருந்த கந்தலால் அவள் மூடப்பட்டிருந்தாள். கேசத்தில் சிமெண்டும் சிடுக்கும் மீதி இருந்தன. வரப்பட்டினி, ஆனால் பற்களில் இருந்த கறைகளில் ஈயாடிக்கொண்டிருந்தது. ஏரியாவிற்கு புதியவர்கள் இவளிடம் விலாசம் கேட்கப்பார்த்தார்கள். நாய்கள் அவளை வெறித்தும் குரைத்தும் விரட்டப்பார்த்தன. அம்மாக்களுக்கு ஒரு புதிய பூச்சாண்டி கிடைத்திருந்தாள். வரவர அந்த ஏரியாவில் ஒருத்தியாகிவிட்டாள், மீதி சோற்றை இவளுக்கு கொட்டினர். எப்போதாவது அந்த வீதியில் வந்துபோகும் பச்சை நிற பல்லவனைப்பார்த்தால் மட்டும் வீறுகொண்டு எழுந்து விளங்காத பாஷையில் திட்டி மண்ணைத்தூற்றினாள். பள்ளிக்கூட பொடிமாஸ் எல்லாம் இவளை சுற்றி சுற்றி விளையாடின. அவர்கள் பஸ் பொம்மையை கிட்டே எடுத்துவந்தால் மட்டும் சுக்குநூறாக உடைத்துவிடுவாள்.
[20.3.97]

"லவ்வு சிகரெட் மாதிரி!"
"போதையை குடுக்குறாப்ல கொடுத்திட்டு கடைசியில கொல்லுறதாலயா?"
"ச்சீய்! இல்ல!"
"பின்ன... என்ன ஃபிலாசஃபி?"
"போதைக்கு அடிமையாக்கிட்டப்புறம் விடவே முடியாது. அப்படியே ஒரு ஒரு வாரம்.. இல்ல மாசம் இல்லாம போனாலும், திரும்ப தம் அடிக்கும் போது போதை ரெண்டு மடங்காயிரும்!"
"ஓஹோ.. அப்போ டெஸ்ட் பண்ணிருவோம். ஒரு மாசம் நாம பேசிக்கவோ பார்த்துக்கவோ வேண்டாம். ஃபோன், பேஜர் ஒண்ணும் கெடையாது."
"நீ தோத்துருவடா!"
"ஜனவரி 20, இன்ன தேதியிலருந்தே பந்தயம் வச்சுப்போம்."
"சீரியசாவா சொல்ற?"
“I do smoke. I do love. I’m addicted.”
"சரி.. உன் இஷ்டம். என்னைய ஐயப்பன்தாங்கல் டிப்போவுக்கு முன்னாடி ட்ராப் பண்ணிரு. பரீட்சைக்கு முந்தின ராத்திரியெல்லாம் படிக்கிற மாதிரி இன்னைக்கெல்லாம் லவ்விருவோம்."
"நீ கெளம்பு. ஒரு மாசம் கழிச்சு லவ்வலாம். நான் பஸ்-ல வந்தேன் தாயீ.. திரும்பவும் 88-கே பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணனும்"
[20.1.97]

முழுக்கை சட்டையின் மடிப்பில் செருகியிருந்த கடைசி பத்து ரூபாய்த்தாளில் கோபாலகிருஷ்ணா தியேட்டர் அருகில் ஸ்டேஷன் ரைட்டருக்கு டீயும் பன்னும் நெய்வேத்யம் படைத்தார் பெரியவர். அதிர்ஷ்டவசமாக, அல்லது துரதிர்ஷ்டவசமாக அவரது மகள் முன்தினம் புறநகர்ப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கிடையில் இல்லை. குவார்ட்டர்ஸ் வாட்ச்மேன், இஸ்திரிக்காரன், சுற்றத்தார் கேவலம், தெருவில் விளையாடும் பொடிசுகள் கூட இவரை சட்டை செய்யவில்லை. சும்மா போலியான புன்னகை கூட இல்லை. அவரது மனைவி அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு இப்போதுதான் வீடு திரும்பியிருக்கிறார். அக்கம்பக்கத்து சண்டியர்கள் அடுப்படியிலிருந்த சோற்றை எடுத்து தெருநாய்களிடம் வீசிக்கொண்டிருந்தனர். குடன் தொகை தந்த சௌகார்பேட்டை குல்லாக்கள் வாசலில் மூக்கால் அழுதுகொண்டிருந்தனர், சவரக்கத்தி துரு ஏறியிருந்தது, காக்கி சட்டையில் சிலந்தி வலை. முக்குக்கடை அண்ணாச்சி பாமாயில் கணக்கில் தரமாட்டேன் என்கிறார். கைக்கடிகாரமும் துடிப்பதை நிறுத்திவிட்டது. என்ன போச்சு... யூனியன் ஸ்ட்ரைக்கின் போது எதற்கு நேரம் பார்க்க வேண்டும்?
[27.2.97]

கால்களை தட்டிவிட்டு அவருக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தது நேரம். நேற்றிரவே ப்ரேக் வால்வை டைட் செய்திருக்க வேண்டும், பாவம் ஓவர்ட்யூட்டிக்கு பின் மெக்கானிக்கை பிடிக்கமுடியவில்லை. இன்று தாமதமாகிவிட்டது. சீக்கிரம் வண்டியை ஐயப்பன்தாங்கல் டிப்போவிலிருந்து கிளப்பவேண்டும். சிட்டியின் ட்ராஃபிக் சாகரத்தில் சங்கமித்துவிட்டு பின்னால் ட்ரிப்பில் சுதாரித்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் சிவசிவ சொல்லிவிட்டு 37-ஜி ஆக்சிலரேட்டரால் உறுமினார். என் தம்பி ஈ-மெயில் பார்த்துக்கொண்டிருந்தான். நான் டை கட்டியபடி ஷூவிற்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தேன். டிவியில் பெப்சி உமா யாருடனோ விளம்பரச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தார்.

<7:20> "ஆன்லைன்ல இருக்கியா? நீ ஜெய்ச்சுட்டே. லவ்வு சிகரெட் மாதிரி தான்! பதில் சொல்லுற வரைக்கும் ஆன்லைன்லயே இருக்கேன்... லவ் யூ!"
<7.45> "லவ் யூ டூ! சாயந்தரம் ரவுண்டானாவுக்கு பக்கத்துல மெக்ரன்னெட் வந்துரு."

"நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீ தான்
நீயின்றி வாழ்ந்தாலே நீர் கூட தீ தான்!"
"என்னடா.. பாட்டு எல்லாம் பயங்கரமா இருக்கு!"
"ஒரு மாசம்.. மீட்டருக்கு மேல ஏதாச்சும் போட்டு குடுங்க மேடம்!"
"இங்கேயா? உங்க காலனி பக்கம் எங்கயாச்சு போலாண்டா.. "
"நாளைக்கு பார்க்கலாம். அண்ணன் சீக்கிரம் வர சொன்னான். பஸ்-ல வந்தேன் தாயீ.. திரும்பவும் 88-கே பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணணும்", கையசைத்தபடியே நீங்கள் கேட்ட பாடல் விஜய் ஆதிராஜ் மாதிரி பின்னோக்கி நடந்தான்.
[20.2.97]

"பஸ்-ல வந்தேன் தாயீ.. திரும்பவும் 88-கே பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணணும்", கையசைத்தபடியே நீங்கள் கேட்ட பாடல் விஜய் ஆதிராஜ் மாதிரி பின்னோக்கி நடந்தான்.
"தோடா! புடிச்சுக்கோ!"
காற்றின் அலைகளில் பயணித்த அந்த முத்தத்தை டென்னிஸ் வீரனைப்போல எதிர்நோக்கித் திரும்பினான். பரவசம் பரவும் அந்த நொடியில் இருவருக்கும் இடையில் முத்தங்கள் சரமாரியாக பொழிந்தன. புன்னகையில் தோய்ந்து கண்களை வினோதமாக சிமிட்டி கைகளை அவன் விரிக்க காதலில் நனைந்து நனைந்து நமுக்கும் நிலையில் இருந்தது மவுண்ட் பூந்தமல்லி சாலை. அந்த நொடி வரை பஸ்சின் அங்குசம் அவர் காலில் தான் இருந்தது. சிக்னல் பச்சையிலிருந்து பழுத்து செம்மையாகும் நேரத்தில் அனாவசியமாக நிறுத்தி ட்ரிப் தள்ளிப்போய்விடுவதைத் தடுக்க சீராகவே செலுத்தினார் ஓட்டுனர். அரைவேக்காட்டு 'எல்' போர்ட் ஒன்று திடீரென்று ப்ரேக் போட லேன் மாற்றும் போது... பாவம்! இப்படி சாலையைக்கடக்க அவன் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டான். அலறல் சத்ததோடு அந்தப் பெண் கீழே சரிந்தாள். அதிர்ச்சியிலிருந்து எழுந்து எதையோ துரத்துவது போல ஓடி ஒரு பைக்கின் கண்ணாடியைத் தகர்த்தாள். பைக்கிலிருந்து இறங்கிய நான் என்னதான் நடக்கிறது என்று பார்க்க போனேன். நடந்த விபத்து மீனாட்சி கல்லூரி மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையில் பிரச்சனையாகிவிட்டது. சகா ஒருவன் இறந்ததை அடுத்து ஓட்டுனரை மாணவர்கள் குமுறியிருக்கிறார்கள். பஸ் பெருசுகளோ கௌரவம் இழந்ததால் ஸ்ட்ரைக்கில் குதித்தனர். சாலையோரம் கேட்பாரற்று கிடந்தது... என் தம்ம்ம்ம்பீ! தூக்கிக்கொண்டு ஆட்டோவில் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஓடினேன். அவனது வெள்ளை சட்டை மிச்சமின்றி சிவப்பாகி என் தோளில் துவண்டது. காவல்துறை காகிதங்களில் ஒப்பமிட்டுக்கொண்டிருக்கையில் நான் ஒட்டிய காலை செய்திகள் திரையில் ஓடிக்கொண்டிருந்தன. விபத்து வீடியோவை சற்றுமுன் என்று கார்டு போட்டு அசிஸ்டெண்ட் எவனோ சேர்த்திருக்கிறான். மேசையில் ஒரு செய்தித்தாள் கிடந்தது. தலைப்புச்செய்தியில் போலீசார் சொன்ன அந்த பேருந்து ஓட்டுனர். அடுத்த பக்கத்தில் நான் தந்திருந்த தமிபியின் இரங்கல் கட்டம். அடுத்த பக்கத்தில் ஏதோ பெண்ணொருத்தி காணவில்லை என்ற விளம்பரம். அவளை சமீபத்தில் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
[21.3.97]


டிஸ்கி: இது ஒரு தொடரின் முதல் அத்தியாயம்: சென்னையைப்பற்றிய சிறுகதைச் சங்கிலி.
_____________________________________________________________________

17-Aug-2009

வனவிலங்கு புகைப்படங்கள்

புகைப்படங்களை இணையத்தில் வெளியிட நிறைய ஜகா இருக்கிறது. ஃபோட்டோ ப்ளாக் எனப்படும் Genre (ஸான்ரு / பகுப்பு?) இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வழக்கில் இருக்கிறதென்று கூகுளாண்டவர் சொல்கிறார். இன்னமும் அனேக இந்தியர்கள் ஃப்ளிக்கரிலேயே ஏன் விழுகிறார்கள் என்று புரியவில்லை. அது பதிவு மாதிரி அல்ல, வெறும் ஒரு ஆல்பம் தான். பட டிசைனர்கள் டீவியண்ட் ஆர்ட்-டில் கூடுகிறார்கள், அதுவும் ஒரு விதமாய் கலெக்ட் செய்து ஒத்த துறையினரிடம் சஜெஷன் கேட்பதற்கு மட்டுமே. தீவிர ஆர்வலர்களும், புகைப்பட வித்தைக்காரர்களும் பிக்சல் போஸ்டில் இருக்கிறார்கள். என்ன தான் தரம் கூடியதெனினும் இது வேர்ட்பிரஸ்.ஆர்க் போல பர்ஸை பதம் பார்க்கும் வழிவகை (வொய் ப்ளட்? சேம் ப்ளட்). இவை தவிர ப்ளாகர், வேர்ட்பிரஸ் (அந்த மோனோக்ரோம் தீம் சும்மா நச்!), மூவபிள் டைப் (இதில் தமிழ்ப்பதிவர்கள் யாரும் இருக்கிறார்களா? வியத்நாம், கொரியா மக்கள்ஸ் எல்லாம் இங்குண்டு!) என்றுமே கூட ஃபோட்டோக்காரர்கள் இருக்கிறார்கள், நம்ம பிட் குழுவினர் மாதிரி. இதுவும் தவிர நண்பர்களின் கூடாரங்களான ஆர்குட், ஃபேஸ்புக்கிலும் மக்கள் கோடிக்கணக்கான படங்களை வெளியிடுகிறார்கள். என்னுடைய பெர்சனல் சாய்ஸ் அமினஸ்3. ரொம்ப குறைச்சலாகத்தான் பயனர்கள் இருக்கிறார்கள், ஆனாலும் அட்டகாசமான இலவச சேவை. அவசியம் போய்ப்பாருங்கள். டைனி பிக்கிலோ ஃபோட்டோ பக்கெட்டிலோ போடுவதை விட இங்கு போட்டு லிங்க்கலாம் என்பது திண்ணம். போப்பா... ப்ளாகரில் தான் போடுவேன் என்று அடம் பிடிப்பவர்கள் இந்த தீம் முயன்று பாருங்கள், அமினஸ்3, பிக்சல் போஸ்ட் மாதிரி இண்டர்ஃபேஸ் கொண்டுவரப் பார்திருக்கிறார்கள்.

வேண்டுகோள்: தமிழில் கதை, கவிதை எல்லாம் எழுதுபவர்கள் கூடவே எங்கிருந்தாவது சுட்டு படம் போடுகிறீர்கள், அவசியம் புகைப்படக்காரரின் பெயரையோ, லிங்கையோ கொடுங்கள். இன்னும் ஒரு படி மேலே போய், படம் எடுக்கும் பதிவர்கள் சீவீயார், கருவாயன், அனந்த் ஏனையோரின் படங்களைப் போடலாம், பொருத்தமாக (அனுமதியோடவே தான்). நல்லா இருக்கும்ல?

நிக்கான் டி-40ல் எடுத்த ஆரம்பப் படங்கள், கிண்டி பூங்காவிலிருந்து.
Click on photos to enlarge. People who want photos with original resolution shall mail me.


டிஸ்கி: ப்ளாகருக்கு கிறுக்கு பிடித்திருக்கிறதா? எல்லா தளங்களிலும் முதலில் அப்லோடு செய்யும் படம் முதலில் பப்ளிஷ் ஆகும், இல்லையா? இங்கு ஏன் ரிவர்ஸ் ஆகிவிடுகிறது? சரி, இங்கிருக்கும் விலங்குகள் வாயிலிலிருந்து கொல்லை வரை எடுத்து, வைசி-வெர்ஸா பப்ளிஷ் ஆகிவிட்டன. மயில், வெள்ளைக்கழுகு, சிலந்தி, துரு ஏறிய பெஞ்சு, இந்தியக்குரங்கு, ஆந்தை, லெமூர் குரங்கு, பெலிகன், நாரை, கல் பறவை என எல்லாம் ஒரு தினுசான தலைகீழ் நிரலில் இருக்கின்றன.
_____________________________________________________________________

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP