மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

29-Jun-2009

ஆப்பிள்


வார்த்தைகள் அர்த்தமற்று போய்விட்ட வனாந்திரத்தில் நான் அமர்ந்திருக்கும் அமிர்த வேளையில் நேரம் ஒரு பொருட்டே அல்ல. எனது ஜீவனற்ற உடலைத் தின்றுகொண்டிருக்கும் தாபத்தை வீழ்த்தும் உனது மோகக்கணை என் விமோசனக் கனியை குறிபார்க்க வல்லதா? வீறு கொண்டு எழும் காமமெனும் விலங்கு வீரியமானதொரு ஆயுதம் என்ற நம்பிக்கையில் ருத்ரானந்த தாண்டவத்தில் நாம் இணையவோமாக.
உனது ஸ்பரிசம் எனது மேனி முழுவதையும் ஆக்கிரமிக்கிறது. தந்தியடிக்கும் உதடுகளை விழுங்கும் உனது வாய் வழியாக நமது அடிப்படை திரவியங்கள் உடல்களிருந்து வெளியேறி நமது ஆதிக்கூறுகளின் தோல் போர்த்திக்கொண்டு வெப்பம் காய்கின்றது. நம் நடன அரங்கேற்றத்தின் முத்திரைகளுக்கு ஜதி சொல்வதும் நாமே தான். நெற்றியில் தாரையாய்ப் பெருகும் வியர்வையினூடே அக்குளிர் சாகடிக்கப்படும் அதே வேளையில் எனது பாதங்களை ஏந்தும் உனது வளமான தோள்கள் குளிரை உயிர்ப்பிக்கின்றன. ஆகம நெறிகளின் தாள்களைத் தகர்த்தெறிந்து கூடலது மோகமொழி வசனகவிதையென சப்தம் எழுப்புகிறது. மகரந்தம் சிந்திக்கொண்டேயிருக்க உயிரின் மெல்லிய மலரிதழ் விரிந்து விரிந்து மூடுகிறது. இசை வடிவமொன்றின் நேர்த்தியில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிய வில்லைகள் சரிவதன்ன நமது சாரீர சங்கமம் நில்லாமல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. துல்லியமான ஒளிக்கீற்று உன்னையும் என்னையும் குருடாக்கிச்செல்ல முற்படுகையில் வண்ணத்துப்பூச்சியின் தேகம் ஒப்ப கண்களை இறுக்க மூடும் போது எழும் மனச்சித்திரங்கள் நிறங்களில் வெடித்துச் சிதறுகின்றது. ஆடைகளைப் பற்றும் என் கரங்களை வன்மத்தோடு தடுத்து உனது ரோமங்களைக் கோத ஆணைகள் பிறப்பிக்கிறாய். நாக்கினை அவ்வப்போது கடித்துவிடுகிறேன், நகங்களால் என்னுயிரையே கிழிக்க நினைக்கிறேன், இடையில் சட்டென பெருகும் கண்ணீரில் கரைந்து போகின்ற காதலில் வழிகிறது கொஞ்சம் குருதி. மரணத்தின் கதவுகளுக்கு அருகிலிருக்கும் எனக்கு கரைகளில் துள்ளும் மீன்கள் உயிர் துறக்கும் தருணத்தில் அலையிழுத்துக்கொள்ளுவதை போல எனது விமோசனக்கனிக்கு பாதை தெரிகிறது. போதையில் நெளியும் நமது பொம்மை உடல்கள் ஏகாந்தத்தில் லயித்திருக்க தீயின் சுவாலைகள் நுழைவாயிலை அகழியாய் உருமாற்றுகிறது. புதைகுழியிலிருந்து தவழ்ந்து செல்லும் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து அதே பழைய கோப்பையில் மீண்டும் மதுவருந்த முனைகிறாய்.
இனி என்னை ஏழு கடல்களுக்கும் ஏழு மலைகளுக்கும் அப்பாலிருக்கும் அமானுஷ்ய கோட்டைக்கு இட்டுச்செல்லும் நாயகன் ஒருவன் என்னை மீட்டெடுக்கும் வரை நான் மறுபடி காத்திருக்க வேண்டும்.
_________________________________________________________________________________________________

22-Jun-2009

உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிச் சிறுகதை

செந்தூரம்.

முன்னொரு காலத்தில் அந்த நிறத்தில் நான் மூழ்கியிருந்தேன். இரண்டு கண்மணிகள் மொத்தமும் அந்த வர்ணத்தையே பிரதிபலித்து அதன் நிறத்திற்கே மாறிவிட்டிருந்தன. கர்ப்ப வெளியில் நீந்தும் என்னை ரத்தத்தின் சிற்பமாக வடித்திருந்தாள் என் அன்னை. அதை ஊற்றியும் அதை உண்ணக்கொடுத்தும் என்னை அதால் நிரப்பியிருந்தாள். உடல், உள்ளம், எண்ணம், ஆக்கம், செயல், சூழல், மொழி என அனைத்துமே சிவப்பின் சூத்திரமாகவே ஆகிவிட்டிருந்தன. அந்த உலகத்தினின்று புறப்பட்டு வந்த செந்தூரக்குமரன் நான். அகமும் புறமும், ஆதியும் அந்தமும் சிவப்பின் ராஜ்ஜியமே. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

வெகுசில நாட்களுக்கு முன், என் தாய் குருதியின் நிறத்தில் ஒரு சேலையை அணிவதுண்டு. கண்களை மூடும் போதெல்லாம் கடவுள்களின் கடவுளாய் என் அன்னை நினைவிற்கு வருவார், அதே சிவப்புப் புடவையிலேயே. போட்டி ஒன்றில் வென்றதற்காக பள்ளியில் முதன்முதலாய் அகராதி ஒன்றினை எனக்கு தந்தார்கள். அதைக் கட்டிக்கொடுத்த சிவப்பு ரிப்பனை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். வழக்கமாக ரத்ததானம் செய்பவன் நான். அதே வீரியத்துடன் ரத்தத்தை ஊறவும் செய்ய வல்லவன். திசுக்கள் ஒவ்வொன்றிலும் ரத்தம் அதிவேகமாக ஊறுகிறது. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

நாங்கள் அநேகம் பேர்- காக்கிகள். சோற்றுப் பொட்டலம் ஏந்துபவர்கள். எங்களுக்கு அத்தனை ஞானமில்லை, ரொம்ப கம்மி. எங்களுக்கு தெரிந்ததெல்லாம், உழைப்பதும் அதற்கு கூலி பெறுவதுமே. உயிரோடிருப்பதே எங்கள் வாழ்க்கை இலட்சியமாய் இருந்தது. அவர்கள் சிலரே- வெள்ளை காலர்கள். அவர்கள் மெத்தப் படித்தவர்கள், மேதாவிகள். எங்களுக்கு எதெல்லாம் பரிச்சயம் இல்லையோ அவற்றிலெல்லாம் அவர்கள் பண்டிதர்கள். அவர்களுக்கு கொடிகளிலும் கூட்டங்களிலும் நம்பிக்கை இல்லை. எங்கள் கொடி சிவப்பு நிறத்தால் ஆனது. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

சங்கத்தலைவர் உரையாடுகையில் எங்கள் கரங்கள் ஒலிகளை எழுப்பியபடியும், அவர்களின் கை கட்டியபடியும் இருந்தது.
"சவுக்குகள் பலமாக இருக்கலாம். விலங்குகள் கடினமாக இருக்கலாம். ஒரு பூனை துரத்தப்படும் போது தலைதெறிக்க ஓடுகிறது, ஓடி... வெறிநாய்களின் கோரப்பற்களிடமிருந்து தப்ப ஓடுகிறது. ஓடும் பூனை முட்டுச்சந்தினை அடைகையில் நிற்கும். நின்று... ஒரு கணம் தலையைத் திருப்பிப் பார்க்கிறது. உடலெங்கும் பாயும் ரத்தம் தலைக்கேறி கண்களின் நரம்புகளை சிவப்பாக்குகிறது. பயந்த பூனை சினங்கொண்ட சிறுத்தையாக மாறுகிறது. நாய்களின் நாட்டாமையை நசுக்குகிறது. சவுக்குகளை சாய்க்க... விலங்குகளை முறிக்க... நமது ரத்தம் தலைக்கேற வேண்டும். நம் கண்கள் சிவக்க வேண்டும்." அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

ஒரு சட்டை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடம் கழித்து அளவு மாறும்போது, பெரிய சட்டை தேவையா இல்லையா? அதைத்தான் நாங்களும் கேட்டோம். சற்றே அதிக ஊதியம். கேட்டதற்கு எங்கள் காக்கி சட்டைகள் கிழிக்கப்பட்டன. முதலாளிகள் ஆலையை பூட்டிவிட்டு வேடிக்கை பார்த்தனர். ஆலை உயிரற்றுப்போனது. வெறிநாய்களிடமிருந்து ஓடிக்கொண்டிருந்த பட்டினிப்பூனைகள் நின்றன. இலையுதிர் காலத்திற்கு பிந்தைய வசந்தகாலம் வராததால் கோஷம் எழுப்பின. நிலைமையின் உஷ்ணத்தில் தெர்மாமீட்டர்களின் சிவப்பு உயர்ந்தது. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

திரளின் பூனை ஒன்று "மியாவ்!" என்றது. அடிவயிற்றிலிருந்து எழுந்த அடக்குமுறைக்கு எதிரான அந்தக்குரல் பத்தாய், நூறாய், ஆயிரமாய் எதிரொலித்தது. 'நாம்' என்ற குரல் - பண்மையானது ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. வெறும் 'மியாவ்' என்றொலித்த பூனை ஒன்றுகூடி உறுமலாகி இருந்தது. போர் முரசுகளின் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. மண்ணைக்கீறி, கொம்பு சீவப்பட்டு, தளைகளற்ற காளைகள் போராட்ட களத்தில் முனைப்புடன் நின்றன. அந்திமாலை சூரியனால் பற்றி எரிகிறது வானம். அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

சிவப்பு சைரன்கள் அலற ஆரம்பித்தன. காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்காரர்கள் நிலைமையை கட்டுப்படுத்த சாரை சாரையாக இறங்கினார்கள். மூவரும் முறையே லத்தி சார்ஜ், நீர்பாய்ச்சு, பெரும் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்றனர். இத்தனை குழப்பங்களுக்கிடையில் சில புல்லுருவிகள் எங்கள் தலைவரை கத்தியால் குத்திவிட்டிருந்தனர். கூட்டத்தில் முந்துவதற்குள் சூழ்ந்து கொலை செய்துவிட்டு காட்சியிலிருந்து அவர்கள் அகன்றும் விட்டிருந்தனர். தலைவரின் நெஞ்சைப் பதம் பார்த்த கத்தியிலிருந்து இன்னமும் ரத்தம் ஒழுகிக்கொண்டே இருக்கிறது. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

"புரட்சியை கம்பிகளுக்கு பின்னால் சிறை வைக்க முடியாது. லெனின், மார்க்ஸ், மாவோ - இவர்கள் யாரையும் வைக்கமுடியவில்லை!", சிறையில் கவளச்சோறுடன் நான். "சிவப்பு சித்தாந்தம் ஒரு மதமோ, தாத்பரியமோ, கணக்கோ அல்ல. அது தன்னிச்சையாக எழுகிற உணர்வு- சுவாசத்தைப் போல. காளை வெறிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சிவப்பு நிறத்தால் உந்தப்படுவதில்லை காளை... கொடியை அசைக்கும் செய்கையால் உந்தப்பட்டு கிளம்புகிறது! வார்த்தைகள் பின்னி கவிதையாவதைப்போல, ஒலிக்குறிகள் இசை ஆவதைப்போல நாம் கூடிய விரைவில் நீதிமன்றத்தில் தனியொரு சக்தியாவோம். என் தலைவர்களின் ரத்தம் போலிருந்தது சிறைச்சுவர் கற்கள். அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.

இரண்டு நாட்களுக்கு பின் தலைவரின் மரண வழக்கில் தோழர்கள் சிலர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டனர். போதிய சாட்சிகளின்றி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் சிறையில் சிவப்பு செவ்வாய் கிரகத்தின் கீழ் வட்டமாக உட்கார்ந்து மௌனமாகிப் போயிருந்தனர் தோழர்கள். அன்று கட்டிய கைகளின் வெள்ளைக் காலர்கள் இன்று வெவ்வேறு ஸ்தாபனங்களில் பணியமர்த்தப்பட்டுவிடவர்களைப் பற்றி பேச்சு எழுந்தது. புரட்சியின் விதை விருட்சமாகாமலே பட்டுப்போய்விடும் என்ற அவநம்பிக்கை வலுத்தது. சோறின்றி, கடந்த சில தினங்களாக மனைவி, மகன்கள் முகத்தைக் கூட பார்க்காமல் உறக்கம் தொலைத்த விழிகளில் நரம்புகள் சிவப்பாயின. அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான், இன்னும் இன்னும் சிவப்பாய்.


நள்ளிரவில் மர்ம நபர்களால் தொழிலதிபர்கள் கொலை!
செய்த்தித்தாள் சொன்ன மர்ம நபர்கள் தோழர்கள் மத்தியில் நாயகர்களாகிப் போனார்கள். என் தலைவருக்கு அஞ்சலி செலுத்த கண்களை மூடினேன். அன்னை, ரிப்பன், பாயும் ரத்தம், சிவப்புக்கொடி, தெர்மாமீட்டர், சூரியன் எல்லாம் வந்துபோனது.

சென்னை, ஜூலை 15.
திருவல்லிக்கேணி சந்நதி தெருவில் வசிக்கும் தொழிலதிபர்கள் நால்வரின் உடல்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தன. ஆட்டோக்கார் ஒருவர் தான் முதலில் பார்த்ததும் தகவலை...

செய்தியில் குறிப்பிட்ட எழுத்துகள் வெள்ளையில் அடிபட்டிருந்தன. என் வெள்ளைக்காலர் நண்பர்களுக்கும் சிவப்பு நிறத்தில் தானே ஓடுகிறது ரத்தம். அந்தச் சிவப்பால் ஆனவன் தான் நான். இன்னும் இன்னும் சிவப்பாய்.
_____________________________________________________________________

19-Jun-2009

Spring, Summer, Fall, Winter... and Spring [2003]

பெயர்: ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்... அண்ட் ஸ்ப்ரிங் (2003)
இயக்குநர்: கிம் கி டுக்.
மொழி: கொரியன்.இதை ஏண்டா படிக்கணும்னு ஃபீல் பண்ணினா, இந்தாங்க:
ஆசிப் அண்ணாச்சி
தலைவர் லக்கி லுக்

சினிமா தகவல் பெட்டகம் வண்ணத்துப்பூச்சியார்
கலமுமே பூடகம். ஒரு புள்ளியின் மையத்திலேயே சுழன்று கொண்டிருக்கும் ராட்டினத்தைப்போல் வாழ்க்கையும் ஒரே பாதையில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறது. காலம் மாறினாலும் காட்சிகள் மாறாமல் இருக்கின்றன என்ற கருப்பொருளை விரித்துரைக்கிறது படம். அற்புதமான களத்தில், வண்ணங்களால் நகரும் ஓவியம் ஒன்றை நமக்காக புனைந்து தருகிறார்கள் கொரியர்கள். ரம்மியமான கிழக்காசிய (சீன, கொரிய, ஜப்பானிய, தாய்லாந்து) படங்களின் வரிசையில் இந்தத் திரைப்படத்திற்கு என்றும் இடமுண்டு. ப்ரெஸ்டீஜில் எப்படி மேஜிக் திரைக்கதை உத்தி ஆனதோ அவ்வாறே பருவங்களை வைத்து திரைக்கதை பின்னியிருக்கிறார் இயக்குநர். மூன்று தலைமுறைகளின் கதையை ஒரு தலைமுறையைக் கொண்டே புரியச்செய்வதே ஆகப்பெரும் சாதனை, கை என்பதை உணர்த்த நகம் மட்டும் காட்டுவது மாதிரி. மௌனத்தின் இசையும், ஆத்மாவின் வரிகளும் ஆக்கிரமிக்கும் திரையில் பசும்புல்லும், நீர்நிலையும், ஆகாயமும் பேசிக்கொண்டே இருக்கின்றன. மனநிலை பிறழ்ந்து, அசாதாரண நிலையில் அனுபவிக்கக் கூடிய வலியின் வெளிப்பாடாகவே படைப்பு எனக்கு படுகிறது. பளிச் என்றிருந்தாலும் எப்படியோ ஓரத்தில் ஒட்டிக்கொள்ளும் சோகம் கசப்பாகவே இருக்கிறது. ஆமா இல்லை?

கதவுகளைத் தாங்க சுவர் கிடையாது. வேலி இருக்கையிலேயே மாடு மேயப் பார்க்கும்! பரமார்த்த குருவின் சீடர்கள் கிடையாது. ஒரே படுக்கையில் இருக்கும் குருவைத் தாண்டி, இளம் பெண்ணுடன் அதே அறையில் உறங்கும் சீடன் தான் உண்டு. நீண்ட சொற்பொழிவுகளாற்றும் குருநாதர் கிடையாது. கன்னத்தில் அறைந்தால் முதுகில் டின் (கல்) கட்டும் குரு தான் உண்டு. ஆங்காங்கே சேவல், பூனை, ஆமை, மீன், பாம்பு, தவளை, மனிதன் என ஏகப்பட்ட ராம நாராயணன் செட் ப்ராபர்டிகள் வந்து போகின்றன. படத்தில் வரும் மிச்சம் மீதி ஜீவராசிகளும் எக்செண்ட்ரிக்காகவே இருப்பது தனிச்சிறப்பு. படத்தின் இறுதியில் வரும் பெண் யார் என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நம்ம ஊரில் கோவில்களிலும், குப்பைத்தொட்டிகளிலும் துணியால் போர்த்தப்பட்டு விடப்படும் கர்ணர்களின் தாய்மார்களின் வடிவமே அந்தப் பெண். ஏனெனில் பால்யத்தில் ஒரு சிறுவனால் துள்ளித்திரிந்து துறவியின் ஆசிரமத்தில் வாழ்வது இம்மாதிரி கைவிடப்பட்டு வேறு வழியில்லாத சிறுவர்களால் தான் முடியும். சந்நியாசத்திற்கு அத்தனை இளம் பிராயத்தில் ஆய்-அப்பனைத் துறந்து தம்மை கட்டுப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று என்று தோன்றுகிறது.
படம் பற்றிய அளாவிய மதிப்பீடுகள் எனக்கில்லை என்றே சொல்லவேண்டும். வயது பற்றாக்குறையோ என்னவோ, இந்த ஆன்மீக சித்தாந்தங்களில் மூழ்கி முத்தெடுப்பதும், இது போன்ற விஷயங்களை திரைப்படம் மூலம் சொல்வதும் ஏற்புடையதல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்கென ஆவணப்படமாக SSFWaS-கை கருதுவதும் தவறாகவே படுகிறது. பூனை வாலால் எழுதப்படும் ஜென் கோட்பாடுகளைப் புரியாமலே சிலாகிப்பதெல்லாம் எனக்கு ஒத்துவரவில்லை. வெவ்வேறு நிறங்களில் எழுதுவதற்கான காரணமென்ன, வலமிருந்து இடம் எழுதுவதன் உள்நோக்கமென்ன, எழுதி செதுக்கி எழுதுவதன் பயனென்ன, கொரிய எழுத்துகளுக்கு சப்-டைட்டில் போடாமல் பத்து நிமிடத்திற்கு மேல் கடத்துவதேன் என படம் நெடுக பல கேள்விக்குறிகள். ஆனாலும் கலை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - இம்மூன்றும் அற்புதமாக கையாளப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே சொன்னதைப் போல-
* கிறிஸ்துவரான கிம் கி டுக் இத்தனை அழகாக புத்தமத கோட்பாடுகளை எடுத்துரைத்த பராக்கிரமம்,
* ஓவியம், சிற்பம், தற்காப்பு, இசை, புகைப்படம்(அசையாத் தன்மை), கட்டிடம் என பலவித கலை வடிவங்களை ஒருங்கிணைத்தது,

* கட்டிடக்கலையில் கதைக்கும் Symmetry, Axiality, Tangentiality, Unity, Flow, Focus, Proportion இன்னபிற குறிகள் திரைக்கதையில் வியாபிக்கும் அழகு.

* அடர்த்தி: ஒவ்வொரு சின்ன செயலுக்கும் புத்தக புத்தகமாக ரெஃபர் செய்யவேண்டியிருக்கிறது. அதில் ஒரு சின்ன கல்லை எடுத்தாலும் கட்டிடமே குலைந்துவிடும் நேர்த்தி.


இது கலை சார்ந்த படைப்பல்ல. இதனை ஒரு வரியில் சுருக்கிச்சொல்வது கஷ்டமான காரியம். மேலும், இவ்வகை பாட்டம் லைன் விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு உவந்ததும் அல்ல. டாக்டர் விஜய் சொன்னது தான், "வாழ்க்கை ஒரு வட்டம்டா!"

_________________________________________________________________________________________________

17-Jun-2009

பிகாசா வாழ்க!

கார் ஷெட் ஒன்று.தேரடி வீதி, காஞ்சிபுரம்.


கூகுளாண்டவர் புண்ணியத்தில் எடுத்த படங்கள் ரெண்டை படு சுமார் நிலையிலிருந்து ரொம்ப சுமார் நிலைக்கு தர தரவென இழுக்க முடிந்தது. மற்றும், பிட் மாதாந்திர போட்டிக்கு அனுப்பிய படமும்.


முதுமை.

________________________________________________________

16-Jun-2009

அவளும் அவள் சார்ந்தவையும்


டை
யா

வரிகள்.

உன்னை எட்டாவது அதிசயம் என்றெல்லாம் வருணிக்கமாட்டேன், எனக்கு ஏழேழு அதிசயமும் நீதான்!

நீ அடித்துக்கொல்லும் கொசுக்களைவிட நான் துரதிர்ஷ்டசாலி, உன் விரல்நுனிகூட என் மேல் படமாடேன் என்கிறதே!

நிலவின் நிழல் எங்கே விழுகிறது என்று கண்டுகொண்டேன் - உன் காலடியில்!

ஓவியக்கண்காட்சிக்கு உன்னை அழைத்துச்செல்லத் தேவையில்லை, உன் வீட்டில் தான் கண்ணாடி இருக்கிறதே!

நான் அனுமனைப்போல நெஞ்சைக்கிழிக்க மாட்டேன், ஒருவேளை நீ கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டால்?

நெருப்பு வைக்க வைக்க மணம்பரப்பும் ஊதுபத்தியைப்போல காதலால் என்னை நீ துன்புறுத்த துன்புறுத்த தெறிக்கின்றன கவிதைகள்!

தயவுசெய்து ஓட்டப்பந்தயம் பார்க்கப் போய்விடாதே, வீரர்கள் எல்லாரும் இலக்கை விட்டுவிட்டு உன்னை நோக்கி ஓடிவந்துவிடுவார்கள்!

உன் உடலில் எங்கே தித்திப்பு இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கையில், நான் அதைப்பருகிவிட்டதால் என்னைக் கொட்டுகிறது தேனீ!

இரண்டு கனிமங்கள் இணைகயில் மறைந்து போகின்றன இரண்டுமே, உருவாகிறது ஒரு புதிய கனிமம் - நம் கண்களையும் காதலையும் போல!

நான் கவிதைகள் எழுதுவது இவர்களெல்லாம் இரசிப்பதற்காக அல்ல,தப்பித்தவறியாவது அவை உன் விழியில் விழுந்து "அட!" என்று சொல்லமாட்டாயா என்ற நப்பாசையில் தான்!
________________________________________________________________

12-Jun-2009

மின் தடைதேதி மார்ச் 21.
மணி ஆறு.
புன்சிரிப்பு.
நாள்காட்டியில் வண்ணமயமாக ஒரு கோலம். குழந்தைகளோடு.
மூக்குக்கண்ணாடிக்யை மாட்டிக்கொண்டு வார்டன் கைகளை உரசி கண்திறந்து பார்த்தார். சரியாக கைகளை கீழிறக்கிய நொடி ஒருவன் தன்னால் இயன்றளவு அள்ளி வண்ணப்பொடியை முகத்தில் அடித்தான்.
"ஹோலி!"
சரசரவென பிள்ளைகள் வரிசையாக மலரும் சூரியகாந்தி போல எழுந்தனர். வண்ணங்களோடு விளையாடத் தொடங்கினர். கொஞ்சம் காற்றுக்கும் சேர்த்து நிறத்தை ஊட்டிவிட்டார்கள்... காக்காய் கடி கடித்து. பால்காரன் கொண்டுவந்த எரும்பால் ரோஸ் மில்க் ஆனது. செய்தித்தாள் எங்கும் பசுமைப்புரட்சி. ஆங்கிலேயர் காலத்து கட்டிடத்திற்கு கொஞ்சம் அரும்புக்கை ஆகாரம். பண்டிகைக்கு செய்த ஜாங்கிரியும் அல்வாவும் நீலநிறம் பூண்டன. வானத்திலிருந்து வானவில் குளத்திலன்றி... அன்று குளத்தினின்று வானவில் வானத்தில் பிரதிபலித்தது. "பச்சை நிறமே..." பாடலை முணுமுத்துக்கொன்டிருந்த வானொலி நிறங்களால் குளிப்பாட்டப்பட்டது. எல்லோர் உதடுகளிலும் வண்ணமயம், சிரிப்பொலிகளில் நிறம் மங்கா வீரியம். பூக்களும் கிண்ணங்களும், புத்தகங்களும், நாய்க்குட்டிகளும், மரம், மாம்பழம், மற்ற எல்லாமுமே நிறம் நிறமாய் நிரல் சேர்ந்தன. உடைகளில் நிறம் உள்ளங்களில் நிறம்.களைத்துப்போன குழந்தைகள் ஒரேயடியாக மாலை உணவருந்தி அந்தி கவியும் முன்னரே கண் சாய்ந்தார்கள். கனவுகளில் எத்தனை வண்ணமோ!

கண்ணாடியை எடுத்து தன் ஜிப்பாவில் துடைத்துக்கொண்ட வார்டன் தாத்தா பணியாட்களோடு நீர் விட்டு எல்லாவற்றையும் துடைக்கலாயினார். பால்குடம், தட்டுமுட்டு சாமான், படிக்கட்டு, நாய்க்குட்டி, சுவர்கள், ரேடியோ, கடியாரம், எல்லாம். கடைசியாக மொட்டைமாடி வந்த தாத்தாவுக்கு ஒரு சிறுவனின் அழுகுரல் கேட்டது.
தேம்பிக்கொண்டே, "என் துணியெல்லாம் அழுக்காயிடுச்சா தாத்தா?"
"அதனாலென்ன கண்ணு வேற எடுத்துகிட்டா போச்சு"
"அப்ப பரவாயில்லையா?"நான் தூங்கலாமா?"
"ம்.போ.போய் தூங்கு துரை."
"ஆமா தாத்தா என் சட்டையில என்ன அழுக்கு இருக்கு?"
"அது... உன் வெள்ளை சட்டையில நிறைய நிறம் இருக்கு: மஞ்சள், நீலம், சிவப்பு, பச்சை... அவ்வளவுதான்."
"வெள்ளை, செவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் இதெல்லாம் என்ன தாத்தா?எப்படியிருக்கும்?"
"நீ இப்ப போய் தூங்குடா கண்ணா. தாத்தா நாளைக்கு சொல்றேன், சரியா?"
"சரி தாத்தா!"
திடீரென்று மின் தடை. வேலையாட்கள் அனைவரும் தடுமாற, விழ, பொருட்கள் அசைய, நிலைகுலைய, ஒரே சத்தம். மாடிப்படிகளில் இருட்டில் இறங்கும் சிறுவன் மட்டும் நிலையாக, வேர் போல, நிமிர்ந்து நடந்து செல்ல... மெல்ல மின்சாரம் திரும்ப வந்தது.
"இதுதான் தாத்தா கடைசி... இந்த போர்டை துடைச்சிட்டா ஆச்சுதுங்க ஐயா."

நிறங்களையெல்லாம் இழந்த பலகை வாசித்தது... "பார்வையற்ற குழந்தைகள் குருகுலம்".

இது என்.டி.டி.வி-யின் சிறந்த விளம்பரப் படத்திற்கான விருதைப் பெற்ற பொது சேவை விளம்பரம். கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்திய குறும்படமும் ஆகும்.

08-Jun-2009

The Prestige [2006]

பெயர்: தெ ப்ரஸ்டீஜ்
மொழி: ஆங்கிலம்
வகை: மர்மம்/ தொன்மம்.
இயக்குனர்: க்றிஸ்டோஃபர் நோலன்
நடிகர்கள்: க்றிஸ்டியன் பேல், ஹக் ஜேக்மன், மைக்கேல் கெய்ன், ஸ்கார்லெட் ஜோஹேன்சன்.
"ஒவ்வொரு சிறந்த மந்திரஜாலத்திலும் மூன்று பாகங்கள் இருக்கின்றன. முதல் பாகமானது 'ப்ளெட்ஜ்' ஆகும். மந்திரவாதி முதலில் ஏதோ ஒரு சாதாரணமான பொருளைக் காட்டுகிறார்- சீட்டுக்கட்டையோ, பறவையையோ, மனிதனையோ. சமயங்களில், இதை அசலா, நகலா, வடிவமைக்கப்பட்டதா என்று பரிசோதித்தும் பார்க்கச்சொல்கிறார், பெரும்பாலும் அது நிஜமல்ல. பின் அந்த சாதாரண பொருளை காற்றில் கரைக்கிறார்.. காணாமல் போகச் செய்கிறார். இந்த பாகம் 'ட்ரன்' எனப்படும். ஆனால், இப்போது பார்வையாளர்கள் யாரும் கைகளை தட்டுவதில்லை, ஏனென்றால் உண்மையான மாயாஜாலம் பொருளை மறையச்செய்வதில் இல்லை. அதனால் தான் எல்லா தந்திரங்களுக்கும் ஒரு மூன்றாம் பாகம் தேவைப்படுகிறது. காணாமல் போன அந்த பொருளை இப்போது மந்திரவாதி திரும்ப கொண்டு வரவேண்டும். இதுதான் மூன்றில் மிகக் கடினமான பகுதி. அந்த மூன்றாம் பகுதியை நாம் 'ப்ரெஸ்டீஜ்' என்கிறோம்."

இந்த வசனம் வெறும் வார்த்தைகளால் கோக்கப்பட்டிருக்கிறது. பொய்... மாயை. திரையில் இதே வசனம் பொருந்தக்கூடிய மூன்று பின்புலன்களுடைய ஒரே கதை ஓடிக்கொண்டிருக்கிறது. விசேஷமான இந்த திரைக்கதை வடிவத்துடைய நோக்கம் இதுதான்- 'மேஜிக்' கலையைப் போலவே ப்ளெட்ஜ் எனப்படும் முதல் அத்தியாயம், டர்ன் எனப்படும் இரண்டாம் அத்தியாயம், ப்ரஸ்டீஜ் எனப்படும் மூன்றாம் அத்தியாயம். முக்கிய பாத்திரங்களான இரு மந்திரவாதிகள், அவர்களது குடும்பத்தினர், இவர்களின் குரு தந்திரங்களை வடிவமைக்கும் கட்டர் - இவர்களின் அறிமுகமே ப்ளெட்ஜ். ஒரு மரணமும், தொழில்முறைப் போட்டியும் அவர்களை புதிர்களின் குவியல்களினூடே இட்டுச்செல்வது தான் டர்ன். போட்டியில் வென்றது யார், இழந்தது யார், விரிந்த புதிர்களுக்கான விடை என்ன என்பதே ப்ரஸ்டீஜ். இந்த இலேசான கதையை புதிர்களாக மாற்றி, அவற்றை போர்டன் செய்து காட்டும் வளையங்கள் தந்திரத்தைப்போல ஒன்றினுள் ஒன்றாக பிணைத்து நாம் மண்டை காய்வதை ரசிக்கிறார்கள் நோலன் சகோதரர்கள். இதில் காலம் என்பது ஒரு பொருட்டே அல்ல, டைம்லைனின் கோட்பாடுகள் ஏதுமற்ற வெளியில் முன்பின்னாக வளைந்து நெளிந்து ரசிகனின் முழு ஈர்ப்போடும், பங்கேற்போடும் நம்மையும் ஒரு பாத்திரமாக்கி, தியேட்டர்களில் ஜாலங்களை கண்டுகளிக்கும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களில் ஒருவராக நம்மையும் ஆக்கிவிடுவதே படத்தின் தனிச்சிறப்பு.

லண்டன் நகரின் பிரதான பொழுதுபோக்கே அரங்கங்களில் அரங்கேறும் ஓபரா, இசை நாடகம், சர்க்கஸ், மாயாஜாலம் முதலிய மேடை நிகழ்ச்சிகளே. படத்தில் இடம்பெறும் பல கண்கட்டி வித்தைகள் பதினெட்டாம்/ பத்தொன்பதாம் நூற்றாண்டு மாயாஜால நிபுணர்களின் மாஸ்டர்பீஸ். சைனாக்காரரின் மீன்தொட்டி ட்ரிக், கட்டரின் கூண்டில் மாயமாகும் புறா, போர்டன் செய்யும் தோட்டாவை கையில் பிடித்தல், ஜேக்மன் செய்யும் ட்ரேன்ஸ்போர்டட் மேன் என பலதும் சென்ற நூற்றாண்டுகளின் பிரபல சித்து விளையாட்டுகள். ஐரோப்பிய கலாச்சாரத்தின் பிரதியான இந்த படம் அதன் மூத்த அடையாளங்களான கோதிக்/ ரினைசான்ஸ் கட்டிடக்கலை, தனித்துவமான ஒப்பனை- 'விக்'குகள், தலையில் அணியப்பெறும் ஜோடிக்கப்பட்ட தொப்பிகள், நீள அங்கிகள், மையிருள் அடர்ந்த வீதிகள், மக்கள் பெருமளவில் புழங்கும் விஸ்தாரமான அங்காடி தெருக்கள், கௌரவமாக எண்ணிய வீட்டின் முகப்புகள் என சின்னச்சின்ன விஷயங்களிலும் டீட்டெய்ல்களில் அசத்துகிறார்கள். கட்டரின் புறா, போர்டனின் பந்து, நாணயம் என குறியீடுகளும் படத்தில் உண்டு. மேற்கத்திய பாரம்பரிய பிண்ணனி இசை, அவர்களது பிரத்தியேக ஆங்கிலேய வட்டார வழக்கு- அதற்கென மைக்கேல் கெய்ன் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட ப்ரிட்டிஷ் நடிகர்களை தெரிவு செய்த நயம் என அங்குலம் அங்குலமாக செதுக்கப்பட்ட காவியம் ப்ரெஸ்டீஜ்.

"ரகசியத்தைக் கண்டுகொள்ளப் பார்க்கிறீர்கள், நீங்கள் கவனமாகப் பார்க்கிறீர்களா? இல்லை. உண்மையில் நீங்கள் பார்ப்பதே கிடையாது: நீங்கள் முட்டாளாக விரும்புகிறீர்கள்."

கத்தியால் அறுத்தால் உடல் செயலிழக்கும் என்று அறிந்தும் இந்திக்கார ஜாதுகர்கள் மூர் மார்க்கெட்டின் அருகில் கூடாரம் அமைத்து வித்தை காட்டுகையில் வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதையே மூலதனமாக்கி திரைக்கதை எனும் மாயவித்தையால் நம்மை ஆட்கொண்டு நம் கண்களில் மண்ணைத் தூவி ஊரறிந்த ரகசியத்தையே நோலன் உச்ச காட்சியில் போட்டு உடைக்கிறார். படம் முடிந்த பின் "அடச்சே! நான் அப்பவே நெனச்சன் மாப்ள...!" மாதிரி வசனங்கள் காதில் விழுவது சகஜமே. திரைக்கதைக்கு உறுதுணையாக எடிட்டிங்கில் பின்னி எடுத்திருக்கிறார்கள் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. என்ன தான் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட படமாயினும், கதை நேர்க்கோட்டில் வெறுமையாக இருந்திருக்கும்; நோலனின் ஆகச்சிறந்த திரைக்கதை உத்தியே படத்தின் பெரும் பலமாகும். திரைப்பட விமர்சகர்களே குழம்பிப்போன இந்த படம் மூன்று ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உலகெங்கும் பதினான்கு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும், இதைத்தவிர்த்து இன்னும் பற்பல க்ளூக்களை படம் நெடுகிலும் விட்டுச்செல்கிறார் கதாசிரியர்:

* படத்தின் ஆரம்பத்திலேயே தொப்பிக் குவியல் காட்டப்பெறுகிறது. மீண்டும் தொப்பியை மறைய வைக்க முயல்கையில் அதே இடம் காட்டப்படுகிறது.

* பெயர்களை மாற்றுவது ஆஞ்சியருக்கு புதிதல்ல, காட்லோவ் என்ற ஆசாமியை ஆரம்பம் முதல் காட்டாமலேயே கதையை நகர்த்திச்செல்கையில் சந்தேகம் வலுக்கிறது.

* கைகளில் எந்த முடிச்சு போட்டாய் என்பதற்கு ஒவ்வொரு முறையும் தெரியவில்லை என்பதையே பதிலாக சொல்கிறார் போர்டன் / ஃபெல்லன். ஏனெனில், கட்டியது இருவரில் ஒருவர்; வினவப்படுவது மற்றொருவர்.

* என்னுடைய ஒரு பகுதி தான் அவளை மணந்தது, மற்றொரு பகுதி உன்னை இங்கு காதலித்துக்கொண்டிருந்தது என்று போர்டன் சொல்கிறான். அவனே, ஃபெல்லனின் மனைவியிடம் நீ என்னிடம் இவ்வாறு பேசலாகாது என்கிறான்.

ஒரு முடிச்சை அவிழ்க்கும் நீங்கள் இன்னொரு முடிச்சில் சிக்கிக்கொள்கிறீர்கள். அந்த முடிச்சை அவிழ்க்க நீங்கள் பிறிதொரு முடிச்சை அவிழ்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் அவிழ்க்க வேண்டிய அந்த முடிச்சை நீங்கள் ஏற்கனவே அவிழ்த்தாகிவிட்டது.

****1/2
9/10
_________________________________________________________________

07.06.2009 படமும், பதிவர் சந்திப்பும்.

அதிகம் பேசாத குறுகிய வட்டங்களுக்குள் புழங்கும் 'ரிசர்வ்ட்' ரகத்தைச் சேர்ந்தவன் நான் . எனினும் புதிதாக கிடைத்த பதிவர் வட்டத்துக்குள் நுழைந்தது யோகம் தான். மார்ச் 30லிருந்து தான் ஆக்டிவ்-வாக பதிவுலகில் செயல்பட்டு வருகிறேன். வயதும் ஞானமும் இவர்களின் அலைவரிசையின் அருகில் கூட இல்லை. அத்தனை பேரும் திடமான வேலையில் இருப்பவர்கள், என்னைப்போல இரண்டு மடங்கு அனுபவத்தை சம்பாதித்து வைத்திருப்பவர்கள். இரண்டொரு பின்னூட்டம், சிலபல மின்னஞ்சலகள்... இதற்குள்ளேயே தங்களது குழாமில் என்னையும் சேர்த்துக்கொண்டு "டீ சாப்பிட்டாச்சா?" என்று அக்கறையோடு விசாரித்த அண்ணன்மார்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் நேற்று மதிப்புக்குரிய அண்ணன் சிவராமன் அவர்கள் ஆழ்வார்பேட்டையில் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு/ உலக சினிமா அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணாச்சி ஆசிப் மீரான், சூப்பர்ஸ்டார் லக்கிலுக், அன்பு அதிஷா, அருமை நண்பர் முரளிகண்ணன், பாஸ் நர்சிம், சினிமா தகவல் பெட்டகம் வண்ணத்துப்பூச்சியார், புன்முறுவல் பூத்த கேபிள் சங்கர், கவிஞர் யாத்ரா, பிரவின்ஸ்கா, அகநாழிகை 'பொன்' வாசுதேவன் சார், தண்டோரா, அக்னிப்பார்வை, கேமராவும் கையுமாய் இருந்த ஜாக்கி சேகர் எனப் பலரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. என்னை இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு வரவழைத்து மட்டுமில்லாமல் வழியனுப்பியும் வைத்த அண்ணன் சிவராமன் அவர்களுக்கு அத்தனை நன்றிகளும் உரித்தாகுக.

படத்தைப்பற்றி நான் அதிகம் சொல்ல அவசியமே இல்லை. இருந்தாலும்... (அவ்வளவு லேசில் தப்பிக்க முடியாது)
* கிம் கி டுக் ஒரு கிறிஸ்துவர். இத்தனை அழகாக புத்தமத கோட்பாடுகளை அவர் எடுத்துரைத்த பராக்கிரமம் பிரமிக்க வைக்கிறது.
* இந்த உரலைத் தொடர்ந்தால் படத்தின் ஜென்/ பௌத்த சித்தாந்தங்கள் இன்னும் தெளிவாக புரியும்
.
* ஓவியம், சிற்பம், தற்காப்பு, இசை என பல்வித கலை வடிவங்களை ஒருங்கிணைத்த விதம்- பயன்படுத்தப்படும் வண்ணங்களே படத்தின் பெரும் பலம்.
* கட்டிடக்கலையில் கதைக்கும் Symmetry, Axiality, Tangentiality, Unity, Flow, Focus, Proportion இன்னபிற குறிகள் திரைக்கதையில் வியாபிக்கும் அழகு.
* ராம நாராயணன் போன்றவர்கள் எப்படி விலங்குகளைப் பாத்திரமாக்குவது என்று பார்த்து தெளிய வேண்டிய படம்.
________________________________________________________________________

06-Jun-2009

விமர்சனம் என்றால் என்ன?

அண்ணன் தாமிரா அவ்வப்போது சிக்ஸ் சிக்மா, ஃபெயில் சேஃப் முதலிய தொழில் சார்ந்த பதிவுகள் போடுகிறார், கேபிள் சங்கரும், முரளிகண்ணனும் சினிமா நுணுக்கங்களை அணுகுகின்றனர், மைத்துனர் கார்க்கி காதல் பற்றி எழுதுகிறார், மதிப்புக்குரிய நாகார்ஜுனன் தத்துவம், கவிதை போன்ற பராக்கிரமங்களைக் கையாள்கிறார், கோவியார் ஆன்மீகம் பற்றி பேசுகிறார், நர்சிம் கார்ப்/கம்பர் சிலாகிக்கிறார். பதிவர்கள் கதைக்கும் இந்த அடுத்த தளத்திற்கு செல்லுதல் மேனியா என்னையும் (எந்த தளத்துலடா நீ இருந்த?) காந்தசக்தியால் இழுத்துக்கொண்டுவிட்டபடியால் இப்படி துறை சார்ந்த பதிவுகள் சிலவற்றைப் போடலாமென்ற எண்ணக் கல்லை குளத்தில் எறிந்ததற்கு வட்டமடிக்கும் நீர்த்திவலைகள் இனி இந்த லேபிளில்: தொழில் சார்ந்தவை.

எல்லா குழந்தைகளும் செய்வது பற்றிய ப்ரக்ஞையே இன்றி கிடைக்கும் கரித்துண்டால் சுவரில் தூரிகை புனையத் துவங்கும், மனிதன் குகைகளில் வாழ்ந்த காலம் தொட்டே ஒலி வரி வடிவங்கள் இல்லாத யுகங்களில் கிறுக்கல்களாலேயே கருத்து பரிமாற்றம் செய்து கொண்டான். இப்படியாக துளிர்த்த கலையின் பரப்பு விரியத் தொடங்க ஒன்றாக இருந்த திரி இடியாப்ப சிக்கலாகிப் போனதால் விமர்சனத்தின் தேவை வந்தது. வெறுமனே கலைப்படைப்பினை விவரிப்பது விமர்சனம் என்று விட்டுவிட முடியாது. இன்னொரு மழலைக்கு புரியும் கரித்துண்டு கிறுக்கலை நம்மால் அதே வேவ்லெந்த்தில் புரிந்து கொள்ள முடியாது, இன்னொரு குகைமனிதன் புரிந்துகொள்ளும் லிபிகளை நம்மால் அதேபோல அர்த்தம் செய்ய முடியாது. அப்படித்தான் பதிணெண்கீழ்கணக்கு நூல்களும் நமக்கு இன்று புரிவதில்லை. இவற்றுக்கு தெளிவுரை வேண்டியிருக்கிறது, விளக்கவுரை வேண்டியிருக்கிறது. இதிலும் மு.வ எழுதிய விளக்கமும், மு.க எழுதிய விளக்கமும் வெவ்வேறாக தொனிப்பது காண்க. இதுதான் சூட்சுமம். ஆர்க்கிடெக்சுரல் க்ரிட்டிசிஸம் என்று ஒரு பாடப்பகுதி இருந்தது, அதை ஜெனரலைஸ் செய்ததில் இதோ: விமர்சன வகைகள். இது ஒரு துறைக்கான விளக்கங்கள் மட்டுமே, எனில் இது எப்படி பிற துறைகளைச் சாரும் என்றால், கட்டிடம் என்பது ஓவியம், புகைப்படம், சிற்பம், திரைப்படம் வரை விரியும் ஒரு இயலே, அங்ஙனம். சுஜாதா சொல்வதைப் போல மேகங்களைப் பார்க்கும் இருவருக்கு மேகத்திரட்சிகள் வெவ்வேறு வித உணர்வுகளைக் கிளர்வது தான் கலையின் பண்பு. சரி, முதலில் விமர்சனம் என்றால் தான் என்ன? படைப்பின் பயனாக வாசகனாக நீங்கள் அடையும் அனுபவத்தின் குறிப்பு தான் விமர்சனம். ஆனால் கிளர்ந்த உணர்வின் பாங்கையும், ஒரு வித நிர்ணயிப்பையும் செய்வது விமர்சனம். நிதர்சனத்தில், வலையில் இருக்கும் அத்தனை பேரும் விமர்சித்துக்கொண்டிருந்தாலும் விமர்சனத்திற்கென்று சில சாம பேதங்கள், இலக்கணங்கள், ஏன் ரெஃபரன்ஸ் புத்தகங்கள் கூட இருக்கின்றன.
அடிப்படையில், விமர்சனம் மூன்று வகைப்படும்-
- நார்மேட்டிவ்
- இண்டர்ப்ரெட்டிவ்
- டிஸ்க்ரிப்டிவ்.

நார்மேட்டிவ் என்பது ஆசிரியர் எவ்வழியோ, மாணவன் அவ்வழி ரகம். கோடு போட்டால் ரோடு போடும் பேர்வழிகளுக்கு. ஒரு கலைப்படைப்பை அதை நிறுவியவர் எவ்வாறாய் விளங்கச்செய்ய முனைகிறாரோ, அதன் கூற்றுபடி செவ்வன நடந்துகொள்வது. ஏன் எதற்கு போன்ற கேள்விகள் எழாது. இவ்வகையானது ஊடகங்களை விட ஆய்வு, நூலாசிரியர், கல்லூரி பேராசிரியர் அந்தஸ்துகளில் இருப்பவர்களது தொழில்.

இண்டர்ப்ரெட்டிவ் என்றால்.. அதே தான் புரிந்து கொள்ளுதல். இன்னும் சொல்லப்போனால் எதிர்வினை புரிதல். இவ்வகை விமர்சகர்கள் தான் ஜாஸ்தி. "படம் மொக்க மச்சி!" தொடங்கி "..இது எழுத்தாளரின் ஆகச்சிறந்த ஆளுமை.." ரேஞ்சில் செயல்படக்கூடியது. கலைக்குள் மூழ்கி முத்தெடுத்து தனது அனுபவத்தை முன் வைக்கும் முயற்சி. இங்கு முந்தைய பகுப்பிற்கு நேரெதிராக விமர்சகனும் வாசகனும் சமநிலையில் இருக்கிறார்கள் என்பது காண்க.

டிஸ்க்ரிப்டிவ் என்பது வரலாற்றுப் புத்தகம் மாதிரி. வெறுமனே தகவல் தெரிவிக்கும் வேலையை செய்வது. விக்கிப்பீடியாவைப் போல. பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.

மேலோட்டமாக இவ்வளவே. இன்னும் உபபிரிவுகளென முதல் வகையில் நான்கு, மீதியிரண்டிலும் மூன்று மூன்றாக மொத்தம் விமர்சனம் பத்து வகைப்படும். உலக சினிமா விமர்சகர்களாக பார் போற்றும் பெரியவர்கள் ஜோனதன் ரோசன்பாம், ரோஜர் ஈபர்ட் முதலியவர்கள், தேர்ந்த புகைப்பட/ கட்டிடக்கலை நடுவர்கள், விமர்சகர்கள் அனைவரும் இரண்டாம் வகையான இண்டர்ப்ரெட்டிவ் க்ரிட்டிசிசத்தையே செப்பனிட்டும், செவ்விய முறையில் தழைத்தோங்கவும் செய்ய விழைகிறார்கள்.

பி.கு 1: தி ப்ரெஸ்டீஜ் என்ற படம் ஒன்றை நான்காவது முறையாக பார்த்து விமர்சனம் எழுத எண்ணுகையில் பாடம் ஞாபகம் வந்தது... அரியர் பரீட்சை அடுத்த மாதம் இருப்பதன் சுய நினைவுகூரலின் ஒரு பாகம் இது.
பி.கு 2: பட விமர்சனம் வெகு விரைவில் உங்களைத் துன்புறுத்த ட்ராப்டில் தயாராகிக்கொண்டிருக்கிறது.
_______________________________________________________________

04-Jun-2009

32 கேள்விகள்

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
வெங்கடேஷ் தான் இயற்பெயர், மொத மொத ஈ-மெயில் ஐ.டி-காக தேடும் போது ஒரு பேர்லயும் சிக்கல... வேற வழியே இல்லாம இந்த பேர்ல ஐ.டி சிக்குச்சு. அப்படியே இதுவே வசதியா போச்சு.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
சரியாக ஞாபகமில்லை. ஏதோ சண்டையில் அம்மா பேசாமல் இருந்த போது என்று நினைக்கிறேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ஹை ஸ்கூலுக்கு முன்னாடி பிடிச்சிருந்துச்சு. இப்பொல்லாம் எழுதறதே இல்ல... நம்ம படிப்பும் அதுக்கேத்தாப்ல வரையுறது மட்டுந்தேன்...

4.பிடித்த மதிய உணவு என்ன?
தலை வாழை இலையில் வரிசையாக பரிமாறப்படும் விருந்து சாப்பாடு. மணிப்பாலில் கிடைக்கும் சப்பாத்தி இன்னும் நினப்புலயே இருக்குது. ஒரு மாசத்து லீவுல ஆசை தீர சாப்பிட்டுக்கணும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
வயதையும், பாலையும் பொறுத்தது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிப்பதே பிடிக்காது. சாங்கியத்துக்கு தான் குளியலெல்லாம். ஆனாலும், பல நாள் கழிச்சு வேலை எதுவும் இல்லாதப்ப பக்கத்து பீச்சுல போய் விளையாடிட்டு, குளிச்சுட்டு மணிக்கணக்கா வந்து ஷவர்லயோ டப்லயோ குளிக்க பிடிக்கும். இதுலயே நாளெல்லாம் போயிரும். செம கெத்து!

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள், பேச்சு.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த: பெரிதாக ஒன்றுமில்லை. திடீரென்று ஏதாச்சும் 'மேட்டர்' பிடிச்சுப்போய் ஈர்க்கப்பட்டு கொஞ்ச நாள் வெறிபிடிச்ச மாதிரி அதுவே கதியா இருப்பேன். அந்த கவனம்.
பிடிக்காதது: எதிர்பார்த்தது தான். கவனம் நிக்காது. சீக்கிரமே கலைஞ்சுரும்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
-பாஸ்-

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மாவும், தங்கையும்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
சிகப்பு சட்டை, வெளிர் மஞ்சள் நிறக் குழாய்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கிட்டத்தெட்ட ஏழு மாசம் கழிச்சு வந்து பார்க்கையில் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பொருட்களின் சப்தங்கள், விந்தைகள்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்.

14.பிடித்த மணம்?
மாவு மில்லில் மிளகாய்ப் பொடி, பெட்ரோல், வெல்டிங் யார்டில் கருகும் உலோகம், ரொம்ப புதிய/ பழைய புத்தகத்தை திறக்கையில் எழும் வாசம்... இப்படி வியர்ட் ஃப்ராக்ரன்சஸ்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஜோ: வலைப்பக்கங்களுக்கு வருவதற்கு முன்னரே பரிச்சயமானவர். சிறப்பாக காரணங்கள் என்று ஏதுமில்லை.
மண் குதிரை: எப்போதும் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் இவரை கொஞ்சம் உரைநடையில் ரசிக்க வேண்டி.
எம்.பி.உதயசூரியன்: இவரது அடுக்குமொழிக்கும், அடைமொழிகளுக்கும் பரம் ரசிகன் நான்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அழைக்க எண்ணிய ஹாலிவுட் பாலாவின் அனைத்து விமர்சனங்களும், குறிப்பாக ஃபுல் மெட்டல் ஜேக்கட்.
தீப்பெட்டியின் வலைப்பூ பறிபோனதென்று கேள்விப்பட்டேன். இப்போது புதிதாக தொடங்கியிருக்கும் பதிவேட்டில் மழை களவாடிய முத்தம்.

17. பிடித்த விளையாட்டு?
கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் - பார்க்க.
கேரம் - விளையாட.

18.கண்ணாடி அணிபவரா?
ஆம்.

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
என்னுடைய மொழி, நிலம் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவனுக்கு காட்டுகையில், அவனை என்னுடைய அடையாளங்களைக் கண்டுகொள்ளச் செய்கிற, ரசிக்க வைக்கிற படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
ஆண்பாவம்.

21.பிடித்த பருவ காலம் எது?
அவ்வளவு முதிர்ச்சியெல்லாம் இன்னும் வரலைங்க.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
கொஞ்ச நாளா ஒண்ணும் படிக்கலை. பல நாளா படிக்காம இருக்குற நாளை மற்றுமொரு நாளே, சில தி.ஜா புத்தகமெல்லாம் வாசிக்கலாம்னு இருக்கேன்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி. கடைசியா பார்த்த படத்தோட டி.வி.டி கவர்கள்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்: வேறென்ன யுவதிகளின் சிணுங்கல்கள் தான்.
பிடிக்காத சத்தம்: இம்சைக்குரிய காலர் ட்யூன்கள்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கடைசியா சுத்திட்டு வந்த கோவா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ம்ஹூம்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
செய்யாத தவறுக்கு பழி சுமத்தப்பட்டு மன்னிப்பும் கேட்க வேண்டிய ஒரு தருணம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பேறித்தனம், அவ்வப்போது வெளிப்படும் 'பெர்வெர்ட்டட்' எண்ணங்கள்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
கொடைக்கானல்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படியெல்லாம் திட்டமிட்டு, ஆசைப்பட்டு வாழ்பவனல்ல... போகிற போக்கில் வாழ்க்கையின் சக்கரை நிமிடங்களை சுகிக்க விரும்புபவன்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
-பாஸ்-

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அவ்வளவு ஜாஸ்தியெல்லாம் வாழ்ந்து கிழிக்கல.
______________________________________________________________

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP