மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

30-Sep-2011

தி சோஷியல் நெட்வொர்க் (2010)

சில தினங்களுக்கு முன் பிரபு ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் மாய்ந்து மாய்ந்து எழுதேன் மச்சின்னு பிடுங்கியதில் எழுதியது.


காதல் சீசனின் உச்சகட்டம். பார்த்து, பார்க்காமல், பேசி, பேசாமல், பல் துலக்கி, துலக்காமல் என்றெல்லாம் முரளி தொடங்கி வினீத்-அப்பாஸ் வரை மாய்ந்து மாய்ந்து காதலித்து வந்த பிராயம். ’காதலர் தினம்’ என்ற படம் அனேகம் பேருக்கு நினைவிருக்கும். இண்டெர்நெட் என்ற வஸ்துவை ஆல்பங்களை அக்குளில் வைத்திருக்கும் மாமா மாதிரி சித்தரித்திருப்பார். அண்ணல் கவுண்டமணி வரும் காட்சிகள் தவிர்த்து ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கித் தள்ளியிருப்பார். இதற்கு ரஹ்மானும் உடந்தை. கம்பிகளினூடே தகவல் பரிமாற்றம் செய்யும் வித்தையை கண்டறிந்த க்ரஹம் பெல் மட்டும் இந்த கலைப்பொக்கிஷத்தை காணும் அரிய வாய்ப்பைப் பெற்றிருந்தால், அதே கம்பிகளில் நாண்டே உயிரை விட்டிருப்பார்.பெயர்: தி சோஷியல் நெட்வொர்க்.
வெளிவந்த வருடம்: 2010.
வகை: சரிதம்.
இயக்குநர்: டேவிட் ஃபின்ச்சர்.
நடிகர்கள்: ஜெஸ்ஸி ஐசன்பெர்க், ஆர்மி ஹேம்மர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், ஜஸ்டின் டிம்பர்லேக், மேக்ஸ் மிங்ஹெல்லா.
விருதுகள்: 3 ஆஸ்கர், 3 BAFTA, 3 கோல்டன் க்ளோப் உள்பட 96 விருதுகள்.

எப்படி டேவிட் ஃபின்ச்சரின் ஃபைட் க்ளப் 1990களின் அமெரிக்காவை பிரதிபலித்த ஆகச்சிறந்த படமோ, அப்படி புதிய மில்லினியத்தின் முதல் பத்தாண்டுகால அமெரிக்க சமூகத்தை, கலாச்சாரத்தை, வாழ்வியலை பிரதிபலித்த ஆகச்சிறந்த படம் சோஷியல் நெட்வர்க். ஃபைட் க்ளப்பைப் போலவே இதுவும் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமே. ஆனாலும், காகிதத்தைத் தாண்டி திரைக்கதையால் மட்டுமே செய்யக்கூடிய சில நுட்பமான விஷயங்கள் நிறைய படத்தினில் உண்டு. ஆஸ்கர் விருதை காதலர் தினம் ரஹ்மானிடம் இருந்து பிடுங்கிக் கொண்ட ரெஸ்னர்-ராஸின் இசைக்கோவையை முதலாகச் சொல்லலாம். ராயல் ரெகட்டா காட்சியின் ஒளிப்பதிவு இன்னொரு மிகப் பொருத்தமான உதாரணம். அக்காட்சி இடம்பெறும் தருணமும்.. திவ்யா நரேந்திரா-விங்க்கிள்வாஸ் சகோதரர்கள் நூலிழையில் தவறவிடும் மற்றொரு சமநேர காட்சியமைப்பும் அட்டகாசம். படம் குறைந்தபட்சம் மூவரின் பார்வையில் சொல்லப்படுகிறது. ரஷோமான், சிட்டிசன் கேன், இன்னும் அப்பட்டமாக நமது வானம் மாதிரியான பல கதைகளால் ஆன ஒரு கதை. ஆனால், எந்த இடத்திலுமே அப்படி உதிரியான காட்சியமைப்பு மாதிரி உணரவிடாது இழைந்துவிட்ட அற்புதமான அணுகுமுறை. காஸ்டிங் - ஒவ்வொன்றும் அவ்வளவு பொருத்தமான தேர்வுகள். ஆர்மி ஹேம்மரின் இரட்டையர்கள், அந்த காதலி, நெருங்கிய நண்பன் எடுவர்டோ சேவரினாக வரும் ஆண்ட்ரு கார்ஃபீல்ட், ஏன் அந்த வழக்குரைஞர்கள் வரைக்கும் கனகச்சிதம். ஹார்வர்டை/எல்.ஏ-வை அவ்வளவு நட்போடு காட்டிய ஒளிப்பதிவு.

முதல் காட்சியிலேயே எரிகாவுடனான உறவினை முறிக்கிறார். அவருடன் நெருக்கமாக இருக்கும் நண்பனை உதறுகிறார். தனது நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் ஷான் வெட்டி விடப்படுகிறார். அனேகம் பேர் இவரை விட்டு விலகுகிறார்கள், வழக்கு தொடுக்கிறார்கள். ஃபேஸ்புக் ஒரு நாடாக இருப்பின், அதன் ஜனத்தொகை ஐரோப்பாவின் ஜனத்தொகையை விட அதிகம். அத்தனை நட்புகளை, உறவுகளை இணைக்கும் ஒரு நவீனயுக சாதனத்தின் நிறுவனருக்கு உறவென்று ஒருத்தரும் கிடையாது. இந்த மிக வலிமையான முரண் தான் படத்தின் உயிர்நிலை. உலகின் மிக இளம் பில்லியனேராக கருதப்படும் மார்க் (இது படத்தில் இடம்பெறும் தவறான செய்தி. இவரை விட சில நாட்கள் வயதில் இளையவரான டஸ்டின் மாஸ்கோவிட்ஸ், மார்க் – வார்டோ ஆகியோரின் விடுதித் தோழர் தான் உலகின் மிக இளம் பில்லியனேர் ஆவார்) பணத்தைப் பெரிதாக மதிப்பதில்லை. பெண்களையும் உதாசீனப்படுத்துகிறார். (பார்ட்டியில் பார்த்து, கசமுசா முடிந்த பின்னர், அவளை கைகழுவி விட்டு, புதிய தளத்தைப் பற்றி தன் பழைய காதலியிடம் கேட்கிறார்) கல்லூரி, மதிப்பெண், கல்வி என்றும் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. வகுப்பில் கோட் எழுதுவது, வாத்தியாரின் பாடம் கவனிக்காமல் போனாலும் சரியான பதிலைச் சொல்வது, 6 மாதகால வகுப்புத்தடை விதித்ததற்கு கவலையே இல்லாமல், கல்லூரி நிர்வாகிகளை அவமதிப்பது என்று நிறைய சொல்லலாம். அலுவலகம், வேலை என்று ஆன பின்னரும், சாவகாசமாக நண்பனின் எதிரியை இரவு உடைகளோடு சென்று மூக்கில் குத்துவது, பிஸினஸ் மீட்டிங்கின் போது சேட்டை சப்தங்கள் எழுப்புவது, தனது விசிட்டிங் கார்டில் தகாத வார்த்தைகளை எழுதுவது என்று மிக விஷமத்தனமான பாத்திரப் படைப்பு.

படத்தில் மூன்று காட்சிகளில் மார்க் உரையாடுகிறார். நீளமான One on One உரையாடல்கள். முதல் காட்சியில் எரிக்காவுடன், எடுவர்டோவுடன் தனது விடுதியில், ஷான் பார்க்கருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் டாஸ்மாக்கில். எரிக்காவுடனான உரையாடலில், பெரும் பணம் படைத்தவனாகவோ, தனித்திறமையிருந்தாலோ.. உதாரணத்திற்கு விசைப்படகு அல்லது ஏ கபெல்லா இசைக்குழுப் பாடகனாகவோ இருந்தால் தான் ஹார்வர்டுக்கே உரிய ஃபைனல் களப்களில் இணைய முடியும் என்கிறார். ஆனால், அதற்குரிய முயற்சியில் தன்னை மார்க் ஈடுபடுத்திக் கொள்வதே இல்லை. மேலும், வின்கில்வாஸ் சகோதரர்கள் விசைப்படகு வீரர்களாகவும் (பின்னாளில் ஒலிம்பிக் வீரர்களாக), திவ்யா நரேந்திரா (இந்தியர்!) தன் இணையுடன் ஏ கபெல்லா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும், தனது செல்ல நண்பன் வார்டோ (மேற்கூறிய இருவர் உட்பட) பெரும் செல்வந்தர்களாக திகழ்வதையும் நாம் பார்க்க முடிகிறது. இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக, இரட்டையர்களின் பந்தயத்தைப் பற்றி இங்கிலாந்து மாணவர்கள் மார்க்கின் தளத்தில் தெரிந்துகொண்டதாகவும், அளவளாவுவதாகவும் சகோதரர்கள் அறிகின்றனர். ஏ கபெல்லா நிகழ்ச்சியின் போதே, திவ்யா நரேந்திராவின் தோழிக்கு மின்னஞ்சலில் ஃபேஸ்புக் குறித்த மெய்ல் வந்தடைகிறது. (கூர்ந்து நோக்கினால், அதை அவர் சகோதரர்களிடன் சொல்ல ஓடுகையில், ஃபிரேமை விட்டு ஒரு படகு செல்வதை கவனிக்க இயலும் :P ) ஃபேஸ்புக் தொடங்க, இயங்க அனத்து விதமான நிதி வசதிகளைச் செய்த எடுவர்டோ, ஒரு மில்லியன் ஃபேஸ்புக் பயனர்கள் சேர்ந்த விழாக் கொண்டாட்டத்தில் தனது பங்குகள் அனைத்தும் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்கிறார். அந்த ஒரு உரையாடலின் சங்கிலி விளைவுகள். அத்தனைக்கும் கரகம் வைத்தது மாதிரி, ”என் கிட்ட இருக்குற காசுக்கு, உங்க களப் எல்லாத்தையும் ஒரே மொடக்குல வாங்கி அங்க கோலி விளையாடுவேன் கோலி!” என்கிறார். தாறுமாறு.. தக்காளி சோறு!
சமகால அமெரிக்காவை இத்தனை தத்ரூபமாக எந்த படத்திலும் சமீபத்தில் காட்டவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்கன் ப்யூட்டி, டைட்டானிக் சமயத்தில் வந்திருந்த படம். ஹார்வர்ட் யுவன்களின் நேர்காணல், வீடொன்றை வாடகைக்கு எடுத்து அலைபாயுதே ரீதியில் நீச்சல் அடித்துக்கொண்டு, ப்ளேஸ்டேஷன் விளையாடிக்கொண்டு, பியர் அடித்தபடி வேலை செய்வது, இன்னும் நிறைய சொல்லலாம். அவர்களது வசனங்களில் ஒருசேர தாக்கும் நகைச்சுவையும், வன்மமும் இன்றைய தினத்தின் முரண்பாடான வாழ்க்கைச் சூழலை மிக நுட்பமாக சித்தரிக்கிறது.மேற்கூரிய மூன்று முக்கிய காட்சிகளிலுமே இத்தகைய உரையாடல்கள் பிரதானமாக இருப்பதைக் காணலாம். நாயகன் – வில்லன் எதிர்ப்பாடெல்லாம் பாராமல், விங்க்கிள்வாஸ் இரட்டையர்கள் ஆகட்டும், அந்த வழக்கறிஞரின் ஜூனியர் ஆகட்டும் எல்லோரிடமும் இதே சுபாவம் விரவியிருப்பதை பார்க்க இயலும். மார்க், என்ன தான் சோஷியலாக இல்லாமல் போனாலும், மிகுந்த கவனித்தறியும் இயல்புடையவர். இரு நொடிகள் ஏ.இ.பை பார்ட்டியில் இருக்கையிலேயே பின்புலத்தில் அசந்தர்ப்பமாக ஓடிக்கொண்டிருக்கும் நயாகரா படத்தை கவனிக்கிறார். டஸ்டினோ, வார்டோவோ அதை கவனிக்கத் தவறுகிறார்கள். இது தான் அவரது வெற்றிக்கு வழி. விவேகாநந்தர் மொழிந்த:
Take up one idea. Make that one idea your life - think of it, dream of it, live on idea. Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success.”
இது தான் மார்க். சதாசர்வகாலமும் தனது வாழ்வை அர்ப்பணித்து, யாரும் காணத்தவறும் விஷயங்களை பிரதானமாக்குகிறார். ஒருவேளை மார்க்கிடம் வராமல் ஹார்வர்ட் கனெக்‌ஷன், அல்லது பெயர் மாற்றி, கனெக்ட்-யு என்று விங்க்கிள்வாஸ்-நரேந்திரா ஒரு நெட்வொர்க்கிங் தளத்தை தொடங்கியிருக்கலாம். ஆனால், அது இத்தனை பெரிய வெற்றியை கண்டிருக்குமா என்று சந்தேகமே. ஹை5, மை ஸ்பேஸ், ஆர்க்குட் மாதிரி வழக்கொழிந்து போன தளங்கள் எத்தனை? காட்சி ஒன்றில், பாஸ்னியா! பாஸ்னியாவில் சாலைகள் கிடையாது. அங்கு கூட ஃபேஸ்புக் இருக்கிறதா என்று மார்க்கிடம் கேட்கப்படுகிறது. மார்க் சொல்வது போல, எவர் வேண்டுமானாலும் ஒரு நாற்காலியைச் செய்து விட முடியும். அதற்காக, ஒரு நாற்காலியை வடிவமைப்பவன் அதற்கு முன்னர் நாற்காலியை வடிவமைத்த அத்தனை பேரிடமுமா காப்புரிமை கோரமுடியும்?


“ராய் ரேமண்ட் என்கிற ஒரு ஸ்டான்ஃபோர்ட் எம்.பி.ஏ தன் மனைவிக்கு ஏதோ உள்ளாடை வாங்க வேண்டியிருந்தது. ஆனால், கடையில் போய் நின்று கேட்கவோ வெட்கம். திடீரென ஒரு யோசனை. உள்ளாடைகள் விற்கும் ஒரு நவநாகரீக அங்காடி. 40000 $ கடன் வாங்கி, இன்னுமொரு 40000 $ தனது மச்சான்களிடமிருந்து வாங்கி கடையைத் திறக்கிறார், விக்டோரியாஸ் சீக்ரெட் என்று. அரை மில்லியன் டாலர்கள் கல்லா கட்டுகிறது முதல் வருடத்திலேயே. ஒரு விளம்பர அட்டவணை அச்சடித்து, மூன்று கிளைகள் திறக்கிறார். ஐந்து வருடங்கள் கழித்து லெஸ்லி வெக்ஸ்னரிடம் நிறுவனத்தை நாலு மில்லியன் டாலர்களுக்கு விற்கிறார். நல்ல முடிவு, இல்லையா? இல்லை. இரண்டு வருடங்களுக்கு பின்னால் அதே நிறுவனத்தின் மதிப்பு ஐந்நூறு மில்லியன் டாலர்களாக உயர, ராய் ரேமண்ட் கோல்டன் கேட் பாலத்திலிருந்து குதித்து உயிரை விடுகிறார். யார் பெத்த புள்ளையோ.. பொண்டாட்டிக்கு லங்கோடு வாங்கத்தான் ஆசைப்பட்டான்.”
(ஷான் பார்க்கர், பப்பில் மார்க் ஸுக்கர்பெர்க்கிடம்)ஃபேஸ்புக் என்ற யோசனையை ஸுக்கர்பெர்க் திருடிவிட்டான்.. திருடிவிட்டான் என்று கூப்பாடு போடும் பலர், அதன் வேரான ஃபேஸ்மேஷ் மட்டும் என்ன ஸுக்கர்பெர்க்கின் சொந்த கண்டுபிடிப்பா என்று யோசிப்பதேயில்லை.


______________________________________________________________________________________________________________

18-May-2011

2001: எ ஸ்பேஸ் ஆடிசி (1968)


மேலே உள்ள படத்திற்கான இணைப்பு.

பெயர்: 2001: எ ஸ்பேஸ் ஆடிசி.
வெளிவந்த வருடம்: 1968.
இயக்குனர்: ஸ்டேன்லி க்யுப்ரிக்.
வகை: அறி-புனைவு.

முன்குறிப்பு: இதுநாள்வரை நான் பார்த்த படங்களில் மிகப்பிடித்த படம் என்று இதையே சொல்வேன். ஒருதலை பட்சமாகவே இருக்கப்போவதாலும், அனத்தப்போவதாலும் இதை விமர்சனம் என்று கொள்ளத்தகா. படத்தை ப்ளூரேவில் மட்டுமே கண்டுகளிக்கவும்: முழு பாதிப்பையும் தரவல்லது.


நான் தற்போது வாழும் கால்கா ஜி தென் தில்லையைப் பொறுத்த வரையிலும் சற்றே பெரிய ஏரியா. புது தில்லி இந்தியாவின் மிகப்பெரும் நகரம். ஜோலார்பேட்டைக்கு வடக்கே பெரிய நிலப்பரப்பென அறியப்படும் நார்த் இண்டீஸ், உங்களுக்கு தெரியாததில்லை விந்திய இமாச்சல யமுனா கங்கா உச்சல ஜலதித பில்லா ரங்கா என்று சாலப்பெரியதே. கேப்டன் தோனி கட்டியாளும் இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடு. உலகம் பாவம், குரு, சனி, ராகு எல்லோரையும் விட சின்ன வாண்டுப்பயல். ப்ளுட்டோவுக்கு இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் போடாத சூரியக்குடும்பம், பாண்டிபஜார் ஸ்டிக்கர் மார்க்கமாக அம்ஜிக்கரை வாடகை வீட்டு விட்டத்தில் ஒட்டும் கோடானு கோடி நட்சத்திரங்கள், பால்வீதி, இன்னபிற எல்லாவற்றையும் ’பிரபஞ்சம்’ என்று அமெரிக்காவிலிருக்கும் ஏதோ ஒருவர் யூட்யூபில் சொல்லக்கேள்வி. சின்ன வயசில், நடுப்பக்கத்தில் தொப்புளைக் காட்டிக்கொண்டிருக்கும் நடிகையின் படத்திற்கு இரண்டு பக்கங்கள் தள்ளி பேரண்டத்தில் நமது பால்வீதியின் கோள்கள் நட்சத்திரங்கள் போலவே பிற பல மேட்டர்கள் இருப்பதாகவும், ஒருவேளை அங்கும் நடுப்பக்க சில்ஃபான்ஸ் சமாச்சாரங்கள் நிகழலாம் என்றும் அண்ணல் சுஜாதா எழுதியிருந்ததாக நினைவு. அடுத்தமுறை தாங்கள் அம்பத்தூரிலும் ஆவடியிலும் சதுர அடி எத்தனை டாலர் என்று கேட்கையில், அண்ணாந்து வானத்தை ஒருமுறை பார்ப்பது நல்லது.


இருக்கட்டும். நல்லது. 2001க்கு வருவோம். அதாகப்பட்டது, சுமார் 40 வருடங்களுக்கு முந்தியே இந்த அம்புலிமாமா விஞ்ஞானிகள் 2001றிற்குள்ளாகவே ஜெய்சங்கர் வித்தைகளை சாதிப்பார்கள் என்று நம்பி எடுக்கப்பட்ட படம். 2 மணி நேர படத்தின் மொத்த வசனமுமே மிஞ்சிப்போனால் எல்.கே.ஜி பாப்பா எழுதும் ஃபோர்-லைன் பக்கங்கள் நாலுக்குள் அடங்கிவிடும். படம் நெடுக க்யுப்ரிக்கின் அக்மார்க் முத்திரையென மிக மெல்லிய ஐரோப்பிய க்ளாசிக் இசை கசியும். தவிர தினுசான, திகிலூட்டக்கூடிய மிகச்சில குறிப்புகளைக் கொண்ட ட்யூன் செய்யாத எஃப்.எம் ரேடியோ பெட்டி சப்தங்கள் மாதிரியாகவும் ஒலிகள் அவ்வப்போது கிலியேற்றும். மோனவெளியின் தனிமையை, பயத்தை, மர்மத்தை மிக ஆழமாக உணர்த்தக்கூடிய ஓசைகளியும் கவனிக்கலாம். சுவரில் எமல்ஷன் பெய்ண்ட் காய்வதை வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வு தரக்கூடிய சில விஷயங்களை மட்டும் ஒருதபா மன்னித்தருள வேண்டும். (பி.கு: இரண்டாம் தடவை பார்க்கையில் அவற்றிற்கும் புது அர்த்தங்கள் பிறக்கலாம். என்னதான்யா சொல்ல வர்றாய்ங்க என்ற நினைப்பு ஏற்பட்டால் கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல) உதாரணத்துக்கு, கலர் கலராக ஏதோசில ஐட்டங்களை உடலங்கங்களையும் காட்டித்தொலைக்காமல் ஒரு பாப்பா தட்டில் எடுத்துசெல்வதையே பத்து நிமிடங்கள் காட்டும் கர்ணகொடூரம்; ஈஸ்ட்மேன் கலருக்கு நிகரான ஏதோ ஒரு சாவுகிராக்கி ஃபிலிமில் படமாக்கப்பட்ட துரதிர்ஷ்டவசமான காலகட்டம்; இன்னும் வெகுசிலவற்றை. இன்னுமொரு முக்கியமான விஷயம் - குழந்தைகள், பிங்க் நிற கரடிபொம்மையை ஃபேஸ்புக் புகைப்படத்தில் கட்டிக்கொண்டிருக்கும் பெண்கள், மென்மையான மனம் படைத்தவர்கள் போன்றோர் இப்படத்தை தவிர்ப்பது உசிதம். மீறினால் சித்தபிரமை, பிரம்மஹத்தி தோஷம், தமிழ்ப் பேய் படங்களின் மோசமான கிராஃபிக்ஸ் பிசாசுகள், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை மேற்கோள் காட்டும் தமிழ் எழுத்தாளர்களின் அறிமுகம் முதலிய உபாதைகள் துன்புறுத்தக்கூடும்.


முதலில் சொன்ன அம்பத்தூர் சதுர அடிக்கு திரும்ப வருவோம். கால்காஜியில் வாழும் நான்… சரி சுருக்கமாக முடித்துக்கொள்வோம். நான் பருப்பொருள் எனில் சின்ன சின்ன அணுக்களால் ஆனவன் தான் நான். நான், நீங்கள், அணில், ஆடு, இலை, ஈ.. ஒளவையார், எஃகு வரைக்கும் எல்லாம் அணு தான். எனக்கும், ஒபாமாவுக்கும் முன்னாடி இந்த உலகத்தை ஆண்ட ஜுராசிக் பார்க் புகழ் டைனோசார்களும் அணுக்களால் ஆனவையே. அணு என்பது இன்னும் சிறிய பொருட்களால் ஆனது. அவற்றின் செயல்பாடும் இந்த பிரபஞ்சத்து பால்வீதியில் சூரியனைச்சுற்றும் கிரகங்களின் செயல்பாடும் ஒத்துப்போகிறது. உவமை சொல்லவேண்டுமெனில், செவாலியர் சிவாஜி சிலை இருக்கும் மெரீனா பீச்சாங்கரை - திமிங்கிலம், பக்கத்து வீட்டு ராம்ச்சந்திரன் வீட்டு தொட்டி – தங்கமீனை பிரதிபலிப்பது மாதிரி. மைக்ரோஜெராக்ஸ். இதுவும் அதே அப்பாடக்கர் யூட்யூப் விஞ்ஞானியின் பேட்டி தான். அதே அம்புலிமாமா கதைதான். மனிதன் என்ற இந்த சிந்திக்கத்தெரிந்த உயிரினம் தன்னைச்சுற்றி இருப்பதை, இருப்பதாக அறியும் அறிவினை ஓரளவு பெற்றாகிவிட்டது. இப்போது அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் எல்லாம் தாண்டி சதுர அடி கணக்கெடுத்து விற்க இடம் தேவைப்படுகிறது. ஆள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மேற்சொன்ன ராகு கேது வரை ரீசார்ஜ் செய்து கூப்பிட்டுப்பார்த்தாச்சாம். மிஸ்டுகால் தான் சேர்கிறதாம். இன்னும் யாரும் பதில் சொன்ன பாடில்லை. விண்ணைத்தாண்டி வேற்றுகிரக ஜெஸ்ஸி வரவேயில்லை.


சும்மா மேலோட்டமாக இதையெல்லாம் சொல்லக்காரணம், துளியும் இந்த தியரியை க்யுப்ரிக் நமக்கு விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அத்தனையையும் தாண்டிப்போய் உணர்த்திவிடுகிறார். மிக இயல்பாக நகரும் காட்சிகள் வாயிலாக. இதுவரைக்கும் படங்களில் பொதுவாக கண்ட விண்வெளிவாசிகள் மரண மொக்கையானவை. ஆயிரம் தேனீர் கோப்பைகள் கொள்ளும் சாசர்களில் வந்திருக்கிறார்கள். அதுவும் சாமக்கோடாங்கி மாதிரி யாரும் காணாத ஏதோ ஒரு இரவில் விசித்திர சிக்னல்களுடன். ஒரு கண் மூஞ்சி, வதவதவென ஏகப்பட்ட மூக்குகள், நாலாபுறமும் காதுகள் என்று கோரக்கன்றாவியாக. ஏன் சும்மா கும்தான்னு ஒரு வேற்றுக்கிரகவாசி இருக்கவே கூடாதா? அந்த ஜந்துக்கும் கை, கால், மூக்கு, நகம், புருவம், கழுத்து முதற்கொண்டு இருந்து தொலைக்கவேண்டுமா? ஒரே உலகில், கண்டத்தில், நாட்டில், ஜில்லாவில் வாழும் நீயும், பிள்ளைப்பூச்சியும், இறாலும், மரங்கொத்தியும், திமிங்கிலமும், ராஜநாகமுமே வெவ்வேறு உடற்கூறுகள் கொண்டிருக்கின்றனவே கொழுந்துகளே! அதுவும் அவை நியூயார்க் சிட்டியை கைப்பற்றி என்ன செய்யப்போகின்றன? டம்மி பீஸ் தெலுங்கு வில்லன் மாதிரி க்ளைமேக்ஸில் அவை ஏன் தோற்றுக்கொண்டே இருக்கின்றன? சரி, தோற்று திரும்பிப்போய் அதன் பேட்டை ஆட்களை அழைத்து வந்து மீண்டும் கலாட்டா செய்யுமா? கஷ்டகாலம்! இங்கே ராத்திரி நேரத்தில் ரகசிய வேளையில் ஸ்டார்வார்ஸ் திரும்பிப்பார் கிடையாது. அமெரிக்க வீரர்களின் உன்னத சாதனைகள் உலகின் அமைதிக்கு வித்திடும் புனைசுருட்டு வசனம் கிடையாது. படம் முடிய அப்படியே கடற்கரை மேலே மேலே மேலே பறக்கும் கேமரா கோணத்தில் டைட்டில் கார்டு ஓடாது. ஏன், மாமூலான சோபா செட், மேஜைகள் கூட கிடையாது, ரோபோக்கள் சாப்பாடு பறிமாறி, குமாஸ்தா வேலை செய்யாது. க்யுப்ரிக் சித்தரிக்கும், சிருஷ்டிக்கும் அந்த ஆடிஸி, அந்த மாபெரும் பயணம் முற்றிலும் ஒரு புதிய பார்வை. மூலம், எண்ணம், ஆக்கம், ரூபம், உள்ளடக்கம், அதிர்ச்சி, பின்விளைவுகள் – அனைத்துமே புதுசு. குறிப்பிடத்தக்க விஷயம், ஆர்தர்.சி.க்ளார்க் நூலாக எழுத எழுத, க்யுப்ரிக் திரைக்கதையாக்க இது ஒரு கூட்டுமுயற்சியென அறிகிறேன்.

(தொடரும்)

27-Apr-2011

முன்கதை சுருக்கம்.

இங்கு போதுமான எண்ணிக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கவிதை, திரைப்படம், சிறுகதை, வெப் லாக் (டைரிக்குறிப்பு), விமர்சனம், தத்துவம், பின்-நவீனம், நகைச்சுவை, புகைப்படம், திறனாய்வு, தகவல், ஆன்மீகம், மொக்கை, காணொளி, அரசியல், விழிப்புணர்வு, நட்பு வட்டம், கவின்கலை, தொன்மம், ஆராய்ச்சி, தொழில்நுட்பம், அனுபவம், பொது என்று பற்பல தளங்களில் மிதமிஞ்சி அன்பர்கள் தட்டச்சிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த அமளிதுமளியில் இன்னும் நான் எதற்கு?


"கணிணியில் தமிழைப் பார்க்கும் பிரமிப்பு முதலில் ஓயவேண்டும்."

-சுஜாதா.தமிழ் வலைப்பூக்கள் அத்தனை பிரவலில்லை என்பது தான் என் தீர்க்கமான எண்ணமாக இருந்தது. 2006-ன் இறுதியில் ஒரு வலைப்பக்கம் திறந்து சுத்த அமெச்சூரான தமிழில் அடித்துக்கொண்டிருந்தேன். (சில இடுகைகளுக்கு முந்தைய ஊமைவீணையை என் மாஸ்டர்பீஸ் என்று பீற்றிக்கொண்டு மெசஞ்சரில் இருந்த நண்பர்களுக்கு லிங்க் தந்து படுத்தியிருக்கிறேன்) பாதி பேருக்கு டிஸ்கி ஃபாண்ட் மலையாளம் மாதிரி தெரிந்திருக்கிறது. இறகுலிபி என்று பெயரிட்டு வெங்கிராஜா.ப்ளாக்ஸ்பாட்.காம் என்று சில நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. டீன்-ஏஜ் ஃப்ரஸ்ட்ரேஷனில் பிங்க் நிறத்தில் ஒரு டெம்ப்ளேட் வைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை, சில நாட்களுக்கு பிறகு சுத்தமாக பின்னூட்டங்களே இல்லாமல் போய்விட்டன. இத்தனைக்கும் யூனிகோடிற்கு மாறிய பின்னும் ஆள் வரத்தே இல்லை. வழமை போல எழுதிக்கொண்டிருந்த தமிழ் ஃபோரம்களுக்கே திரும்பிவிட்டேன். அதில் கீதம்.நெட் இப்போது இருக்கிறதா என்று கூட தெரியாது! மையம் இருக்கிறது. தினம் நண்பர்களுடன் அரட்டை விஜய்-அஜித்/ ரஹ்மான்/ராஜா கேங்வார்கள் பட்டையைக்கிளப்புகின்றன. ஆர்க்குட்டிலும் பட்டறையை போட்டிருந்தேன். 2007-ல் பொதுப்பரீட்சை வந்ததால் பள்ளிக்கூட/ட்யூஷன் செண்டர் ஆணிகள் அதிகமாகிவிட்டன. டவுன்லோட் தவிர அவ்வப்போது சில தகாத காரியங்கள் செய்வதோடு இணையப்பணி முடிந்துவிட்டது. அப்புறம் நுழைவுத்தேர்வுகள் பற்றிய தேடலும், கல்வியும். கல்லூரியில் சேர்ந்தப்புறம் மடிக்கணிணியும், இணையத் தொடர்பும் கிடைப்பதற்குள் ஒரு செமஸ்டர் முடிந்தே போயிருந்தது.அடுத்த செமஸ்டரில் கையில் கொஞ்சம் காசு சேர்த்து மொபைல் வாங்கியிருந்ததால் அதை நோண்டுவதிலும், ஹேக் செய்து ஃபர்ம்வேர் எல்லாம் டிங்கரிங் செய்வதுமாய் பொழுதுகள் கழிந்தன. முழுக்க ஃபோரம்களிலேயே அலைந்து கொண்டிருந்தேன் (மாட் மை மோடோ, மோடோ டெவ்., ஜி.எஸ்.எம் அரேனா, மொபைல் 9, இன்னபிற). அப்புறம் கம்ப்யூட்டரின் சாப்ட்வேர், இணையதளம், தரவிறக்கம் குறித்த அறிவு சற்றே விரிவடைந்துகொண்டிருந்த போது தான் ஹாலிவுட் சினிமா மீது பைத்தியமும் பிடித்தது. ஒரு நாளைக்கு ஒரு படம், வாரக்கடைசி ஐந்தாறு என்று ஃபிலிம் ஸ்கூல் மாணவன் போலவே ஆகிவிட்டிருந்தேன். ஆர்க்குட்டிலிருந்து ஃபேஸ்புக்கிற்கு குடிபுகுந்தேன். அட்டண்டென்ஸ் குறைந்து விடுமுறைகள் மறுக்கப்பட்ட போது தான் பித்தம் உறைத்து கவனம் கலையின் மீது சென்றது. ஓவியங்கள், புகைப்படங்கள் என்று அடுத்த வியாதி தொற்றிக்கொண்டது. இடையில் சிலபல அலைபேசிகளும், ஒரு ஐ-பாடும் வேறு கிடைத்துவிட இணையம் மீதான ஈர்ப்பு குறைந்து பிராண்ட் மோகமும், சாப்பாட்டில் வெறியும் வந்துவிட்டது. ஏராளமாக சாப்பிட்டு தொந்தியும் போட்டாச்சு. தமிழகத்துடன் தொலைபேசி தவிர இணைப்பில்லாமல் போயிருந்ததால் படங்களில் கூட அவுட் டேட்டடாக ஆகிவிட்டிருந்தேன். எதிலும் சீரும், கவனமும் இன்றி விட்டேத்தியாக அலைந்துகொண்டிருந்தேன். இதையெல்லாம் மறக்க பழைய நினைவுகளைக் கிளறி ஃபோரம்களில் எழுதிவந்தேன். நல்லவேளை சென்னை வர ஓரிரு வாரங்கள் அனுமதி கிடைத்தது. இல்லாவிட்டால் 'நான் கடவுள்' ரேஞ்சுக்கு ஆகிவிட்டிருப்பேன். மணிப்பால் எதுக்கு ஃபேமஸ்னு தெரியுமில்ல?மூன்றாம் செமஸ்டர் முழுக்க அலைபேசியிலும், இரவல் வாங்கிய கேமராக்களிலும் புகைப்படங்கள். டூருக்கெல்லாம் போகையிலும், மனிதர்களே இல்லாமல் அஃறிணைகளை எடுத்துக்கொண்டிருந்ததில் கூட வந்தவர்கள் எல்லோரும் இரவு ஹோட்டல் ரூம் சேர்ந்தப்புறம் கும்மிவிட்டார்கள். எடுத்த படங்களையெல்லாம் போடவும், இரண்டு ஆண்டுகளாக கிறுக்கிய உருப்படிகளைக் கோக்கவும் திண்ணை தேடிக்கொண்டிருந்தேன். வேர்ட்ப்ரெஸ், ப்ளாகர் தவிர எம்.எஸ்.என் ஸ்பேசஸ் டைப் பேட், லைவ் ஜர்னல், மூவபிள் டைப், யாஹூ, கூகுள் பேஜஸ், ட்ரைபாட், ஸ்க்வேர் ஸ்பேஸ், ஹாக்கர், ப்ளாக்ஸ்மித் ஆகியவற்றிலெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களா? வேர்ட்ப்ரெஸ் என்று முடிவெடுத்து ஆங்கில வலைப்பூ ஒன்றிற்கு பால் காய்ச்சி ரிப்பன் எல்லாம் வெட்டி பதிவுலகிற்கு ஒழுங்கா வந்தாச்சு. காலேஜ் சகா ஒருத்தனும் கிடைச்சான். இரண்டு பேரும் போராடி தொடர்புகள் தேடினோம். அதுவும் அப்பிக்கொண்டது. தேறாமல் போனாலும் இன்னும் குற்றுயிரும் குலையுயிருமாய் இருக்கிறது. (ஆதாரம்: இந்த ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருது வாங்கிய பிறவி நடிகர் ஷாந்தனுவின் விருதுக்குரிய அறிமுகத்திரைப்படம் சக்கரக்கட்டியின் விமர்சனம்) பாவம், அந்த சகா மட்டும் இன்னும் யாருமே இல்லாத கடையில டீ ஆற்றிக்கொண்டிருக்கிறான். பெரும் கடுப்புடன் தமிழுக்கு மாறி இங்கு போக்குகளை கவனித்த பின்னால் கடை திறக்கலாம் என்று முடிவு செய்தேன். அன்று பிடித்தது தான்.டிஸ்கி: எனக்கே என் பழைய பதிவுகளைப் படிக்க இஷ்டமில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று, ஒரு நுண்சரிதை. தவிர, யார் நீங்க.. யார் நீங்க என்று கேட்பவர்களுக்கு சுருக்கமாக லிங்க் தர ஒரு பதிவு உடனடியாகத் தேவைப்படுகிறது.

23-Apr-2011

மறு இதயம்.


நூறு குற்றவாளிகள் தப்பிப்பதை விட, ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது சட்டத்திற்கு சரிவராது என்பது சுத்த பேத்தல்
எஸ்.ஏ.சந்திரசேகர் கற்றுக்கொடுத்தது.விண்ணைத் தாண்டி வருவாயா-வை பதின்பருவத்தினர் முதல் முதிர்கன்னிகள் வரை அவரவர் காலகட்டங்களின் காதல் காவியமாகவே ஏற்றுக்கொண்டுவிட்டது பெருகிவரும் ஜஸ்டின் பீபர் ரசிப்புத்தன்மயைப் போன்றே இளைஞர் சமுதாயத்தின் சீர்கேடேயன்றி வேறொன்றுமில்லை. பத்து வருஷங்களுக்கு முன் கார்த்திக் என்றழைக்கப்பட்ட நாயகனை வைத்து மிஸ்டர் மணிரத்னமும் ஒரு படம் எடுத்தார். என்ன, ஒரே வித்தியாசம் மணிரத்னம் எப்போதாவது சுமாராக ஒரு படம் எடுத்து தொலைப்பார். கௌதம் பீட்டர் மேனன் எப்போதுமே சுமாராகத்தான் படம் எடுத்துத் தொலைப்பார். காலக்கொடுமையே சுமாரான மணிரத்னம் படம் கூட, கடும் உழைப்பிலும், பன்மடங்கு பெரிய பொருட்செலவிலும் உருவான விதாவ-விற்கு எவ்வளவோ பரவாயில்லை. எனக்குத்தெரிந்தவரை வி.தா.வ தான் இப்போதைக்கு கௌதமின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. Contemporary Classsic. மண்ணாங்கட்டி.அலைபாயுதேவில் சிலிர்க்க வைத்த Late 90s இசைப்புயல் பத்து வருடங்களுக்குப் பிறகு அந்நியப் படங்களில் ஆர்வமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ராவணனில் ரஹ்மான் அதே கம்பீரத்தோடு இன்னமும் இசையமைக்கத்தான் செய்கிறார். பி.சி.ஸ்ரீராம்? அட, மனோஜ் பரமஹம்சா எல்லாம் சும்மா பின்றார்பா.. முதல் படம் மாதிரியா தெரியுது அவர் செதுக்கிய ஈரம்? த்ரிஷா ஷாலினியை விட கவர்ச்சியானவர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு அறிமுக நாயகனை விட ‘ஐ யாம் ஸ்டில் எ யங்’ சூப்பர்ஸ்டாரை வைத்துக்கொண்டு, கௌதம் மேனனால் ஆனதெல்லாம் இந்த சூர மொக்கை தானா? இதுக்கு ஏன் சார் இவ்ளோ சீனு? அலைபாயுதே முழுக்க டப்பிங்-எடிட்டிங் சொதப்பல் தெரியும். பச்சை நிறமே பாட்டில் கூட தப்புத்தப்பாக வாயசைப்பார்கள். காதல் சடுகுடுவிற்கு பிறகு வரும் பெரிய சண்டையில் காட்சி முழுக்க வேறு ஏதோ பாஷையில் உதடுகள் உளறுவது கண்கூடு. சுஜாதா என்ற காரணத்தை வேண்டுமானால் ஒரளவுக்கு ஒப்புக்கொள்ளலாம். மில்லினிய ஆண்டு தமிழ் சினிமாவிலும், ”சந்திச்சு பேசணும்”, ”சிதைஞ்சு போயிடுச்சு” என்றெல்லாம் எழுதினாலும் கூட, தாத்தா Paranoia என்று கூடவே எழுதுவதால் ஒண்ணுக்கொண்ணு சரியா போச்சு. ஆக, கௌதம் இன்னொரு Wannabe-மணிரத்னம், அவ்வளவே.முதல் காட்சி. சுறுசுறுப்பான பைக், தெறிக்கும் இசை, டெனிம் ஜீன்ஸ் சட்டை. 90கள். *போல்ட், அண்டர்லைன்ட்*. ஒரு சின்ன விபத்து காரணமாக, திருப்பிவிடப்படும் வண்டி. விபத்து யாருக்கு என்று இப்போது சொல்லித் தெரியவேண்டியதில்லை. கதையின் களம், மெட்ராஸ். மறுபடியும் *போல்ட், அண்டர்லைண்ட்*. கட். வி.தா.வ. கௌதமின் அக்மார்க் டுபாக்கூர் டயலாக்குகள் + இலக்கின்றி அலையும் காட்சிகள். தேவாலயம், அந்த வெள்ளைக் கதவு, த்ரிஷா மாண்டேஜ், ஏ.வி.எம் உருண்டை, ஜெயில் செட், கிரிக்கெட் மட்டை. ஐ.பி.எல் விளம்பர ரகம். காட்சி ஊடகத்தில், சுருக்கமாக சில ஃப்ரேம்களிலேயே கிட்டத்தெட்ட அங்கு கதையே முடிந்துவிட்டது. படம் முடிந்த பிறகு ‘அட!’ சிண்ட்ரோமுக்காக, விமர்சனம் எழுத நாலாவது வரிசையில் இருட்டில் ரெனால்ட்ஸ் பேனாவை பிடித்துக்கொண்டிருக்கும் பத்திரிக்கைக்காரனுக்காக, ஒட்டுகிற போஸ்டரில் இருக்கும் த்ரிஷாவை வெள்ளித்திரையில் கண்டு விசிலடிக்கும் பையனுக்காக, அட யாருக்காகவாவது பார்த்து பண்ணியிருக்கலாமே சேட்டா!கணேஷின் நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி பலரும் பெரிதாக சொல்கிறார்கள். அலைபாயுதேவில் விவேக் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பலருக்கு நினைவில்லை. திக்குவாய்,, வெளியே விட்ட முழுக்கை சட்டையின் பட்டன் போட்ட, திருநீறு வைத்த, தொல்லைக்கார அக்கா போன்ற க்ளிஷே கதாபாத்திரத்தின் மகனாகிப்போன பாவப்பட்ட ஜீவன். இதே மாதிரி கணேஷுக்கு சொல்லுங்க பார்ப்போம்? க்ளைமேக்ஸுக்கு முன்னாடி மருத்துவமனையில் சக்தியைப் பார்த்து, வீட்டாரை கூட்டிவரும் வேலை. அவ்வளவுதான். ராமாயண அணில் மாதிரி. ஆமாம், கணேஷ் வி.தா.வ-வில் என்ன செய்கிறார். ஒரு தினுசாக பேசுகிறார். படகுச்சவாரி அழைத்துச் செல்கிறார், ட்ராலியில் ஏறி இறங்குகிறார்.. எதுக்கு? அதுசரி. யாராவது ஒருத்தர் இப்படி ஒப்புக்கு சப்பாணியாக இருந்தால் பரவாயில்லை. அத்தனை பேருமே லுலுவாயிக்கு வந்துபோனா கணேஷ் மட்டும் என்ன செய்வார் பாவம்! இன்னும் கௌதம் குரல் கொடுத்த அந்த அண்ணன், அந்த கனகன்றாவியான பாக்ஸிங் சண்டையைப் பற்றியெல்லாம் நான் விரிவாக திட்ட விரும்பவில்லை. ‘பிரமிட்’ நடராஜன், ராகசுதா, அந்த வீட்டுக்கார மலையாளி.. இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வரும் அந்த ரெண்டு ரூபாய் டெலிஃபோன் பாப்பா, பக்கத்து சீட்டு ‘பாவம் புருஷன்’ ஆண்ட்டி, மளிகைக் கடைக்காரர்… இது பாத்திரப் படைப்பு. மொட்டை கிட்டி, லொட லொட தங்கை, த்ரிஷாவின் உசரமான ‘பூவிழிவாசலிலே’ அப்பா, தெலுங்கு நாயக-நாயகி.. வீண் விரயம்.பாடல்கள் வரும் இடைவெளி ரொம்பவே கொடுமையானது. புகைபிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது என்று கொட்டை எழுத்துகளில் பெட்டிகளின் மேல் எழுதிவைத்திருந்த போதும் குடும்பப்பெண்களே கூட்டம் கூட்டமாக வந்து தம்மடிக்க நேரிடுவதை தவிர்க்க இயலவில்லை. தியேட்டருக்கு தாமதமாக வரும் மேன்மக்கள் காலை மிதித்து “Sorry” கேட்டு செல்வதிலும், தவறான சீட்டுகளில் உட்காரும் மடசாம்பிராணிகளை மாற்றி அமர்த்தி வைப்பதிலுமே ஹோசனாவைத் தவற விடுவது மேலும் வேதனையான விஷயம். ஷேக்ஸ்பியரைப் பொறுத்த வரை, மூன்று அங்கம் என்பது நாடக இயலின் பிரதான் விதி. பெரும்பாலும், இந்த விதியொற்றியே சுஜாதா பணியாற்றிய படங்கள் பயணம் செய்வதைக் காணமுடியும். கட்டாயம் இல்லாவிட்டாலும், இடைவெளி ஐஸ்கிரீம்-பப்ஸ் வியாபாரிகளின் நலன் கருதி, ஒரு அறிமுகம், ஒரு முடிச்சு, ஒரு முடிவு என்றாவது இருப்பது நலம். சரி, பாம்பே ஜெயஸ்ரீ பாடல், கவுதம் மேனன் வாய்ஸ்-ஓவர் எல்லாம் கூட சேர்த்துக்கலாம். கதையே இல்லாமல், களமும் இல்லாமல், முடிவும் இல்லாமல்.. படுத்துறீங்க சார்!

Reservoir Dogs போன்ற டாப்-ரேட்டட் மேற்கத்திய படங்களின் போஸ்டர்களை சிம்பு சுவரில் மாட்டி வைத்திருக்கிறார். ஃபேஸ்புக் பற்றி த்ரிஷாவும் சிம்புவின் தங்கையும் கதைக்கிறார்கள். கே.எஃப்.சி-யில் சாப்பிட வரும் த்ரிஷாவை சைட்டடித்துக்கொண்டே சிம்பு பிரியாணி கேட்கிறார். Attention to detail. Contemporary depiction. ஷாலினி ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடியில் ஒட்டுகிறார். வக்கீல் எக்கனாமிக் டைம்ஸ் ஒரு ஓரத்திலிருக்கும் கட்டிலில் படுத்திருக்கிறார்.. பக்கத்து அறையில் அவரும்-அவரது மனைவியும் இருக்கும் படம் அடைத்த பீரோவிலிருந்து அவரது மனைவி பணத்தை மாதவனுக்கு தருகிறார். ஷாலினியின் வீட்டைக் காட்டுகையில் சுவரில் ஒவ்வொரு காட்சியில் ஒவ்வொரு பொருள். மஞ்சள் பை, பீங்கான் புத்தர் முறம், பழைய குடை, அழுக்கு சட்டை, ஃப்ரேம் செய்த புகைப்படங்கள், ப்ளாஸ்டிக் பைகளில் காய்கறி. ஷாலினி வீட்டை விட்டுவிட்டு ஆட்டோவில் போகும்போது, ஆட்டோவின் பின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும் கேமிரா, அங்கிருந்து தெருவோரம் வந்து “ஷக்தி அக்கா! எங்கே போறீங்க?” என்று கத்தும் காலனிச் சிறுமிகள். ஸ்ரீராம், ரஹ்மான், மணிரத்னம் – எங்குமே தனித்தனியாக தென்பட்டுவதேயில்லை. செம்ம கெத்து.

எது எப்படி இருந்தாலும், அலைபாயுதே மணி சாரின் ஆகச்சிறந்த படைப்புமல்லை, படைப்புகளில் ஒன்றுமல்ல. நமது காலகட்டத்தின் காதல் காவியமா என்றால், தெரியவில்லை. ஆனால் நிச்சயம் விண்ணைத்தாண்டி வருவாயா நிச்சயம் காதல் காவியம்.. ம்ஹூம் ஒரு ’சுமார்’ தமிழ் படம் கூட கிடையாது.


நூறு நல்ல படங்களை கலாய்ப்பதை விட, ஒரு மொக்கை படத்தை பாராட்டுவது ஒரு பாவச்செயல், ஒரு பெருங்குற்றம், ஒரு மனிதநேயமற்ற செயல்.
கௌதம் மேனன் கற்றுக்கொடுத்துக்கொண்டிருப்பது.

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP