மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

30-Sep-2011

தி சோஷியல் நெட்வொர்க் (2010)

சில தினங்களுக்கு முன் பிரபு ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் மாய்ந்து மாய்ந்து எழுதேன் மச்சின்னு பிடுங்கியதில் எழுதியது.


காதல் சீசனின் உச்சகட்டம். பார்த்து, பார்க்காமல், பேசி, பேசாமல், பல் துலக்கி, துலக்காமல் என்றெல்லாம் முரளி தொடங்கி வினீத்-அப்பாஸ் வரை மாய்ந்து மாய்ந்து காதலித்து வந்த பிராயம். ’காதலர் தினம்’ என்ற படம் அனேகம் பேருக்கு நினைவிருக்கும். இண்டெர்நெட் என்ற வஸ்துவை ஆல்பங்களை அக்குளில் வைத்திருக்கும் மாமா மாதிரி சித்தரித்திருப்பார். அண்ணல் கவுண்டமணி வரும் காட்சிகள் தவிர்த்து ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கித் தள்ளியிருப்பார். இதற்கு ரஹ்மானும் உடந்தை. கம்பிகளினூடே தகவல் பரிமாற்றம் செய்யும் வித்தையை கண்டறிந்த க்ரஹம் பெல் மட்டும் இந்த கலைப்பொக்கிஷத்தை காணும் அரிய வாய்ப்பைப் பெற்றிருந்தால், அதே கம்பிகளில் நாண்டே உயிரை விட்டிருப்பார்.பெயர்: தி சோஷியல் நெட்வொர்க்.
வெளிவந்த வருடம்: 2010.
வகை: சரிதம்.
இயக்குநர்: டேவிட் ஃபின்ச்சர்.
நடிகர்கள்: ஜெஸ்ஸி ஐசன்பெர்க், ஆர்மி ஹேம்மர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், ஜஸ்டின் டிம்பர்லேக், மேக்ஸ் மிங்ஹெல்லா.
விருதுகள்: 3 ஆஸ்கர், 3 BAFTA, 3 கோல்டன் க்ளோப் உள்பட 96 விருதுகள்.

எப்படி டேவிட் ஃபின்ச்சரின் ஃபைட் க்ளப் 1990களின் அமெரிக்காவை பிரதிபலித்த ஆகச்சிறந்த படமோ, அப்படி புதிய மில்லினியத்தின் முதல் பத்தாண்டுகால அமெரிக்க சமூகத்தை, கலாச்சாரத்தை, வாழ்வியலை பிரதிபலித்த ஆகச்சிறந்த படம் சோஷியல் நெட்வர்க். ஃபைட் க்ளப்பைப் போலவே இதுவும் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமே. ஆனாலும், காகிதத்தைத் தாண்டி திரைக்கதையால் மட்டுமே செய்யக்கூடிய சில நுட்பமான விஷயங்கள் நிறைய படத்தினில் உண்டு. ஆஸ்கர் விருதை காதலர் தினம் ரஹ்மானிடம் இருந்து பிடுங்கிக் கொண்ட ரெஸ்னர்-ராஸின் இசைக்கோவையை முதலாகச் சொல்லலாம். ராயல் ரெகட்டா காட்சியின் ஒளிப்பதிவு இன்னொரு மிகப் பொருத்தமான உதாரணம். அக்காட்சி இடம்பெறும் தருணமும்.. திவ்யா நரேந்திரா-விங்க்கிள்வாஸ் சகோதரர்கள் நூலிழையில் தவறவிடும் மற்றொரு சமநேர காட்சியமைப்பும் அட்டகாசம். படம் குறைந்தபட்சம் மூவரின் பார்வையில் சொல்லப்படுகிறது. ரஷோமான், சிட்டிசன் கேன், இன்னும் அப்பட்டமாக நமது வானம் மாதிரியான பல கதைகளால் ஆன ஒரு கதை. ஆனால், எந்த இடத்திலுமே அப்படி உதிரியான காட்சியமைப்பு மாதிரி உணரவிடாது இழைந்துவிட்ட அற்புதமான அணுகுமுறை. காஸ்டிங் - ஒவ்வொன்றும் அவ்வளவு பொருத்தமான தேர்வுகள். ஆர்மி ஹேம்மரின் இரட்டையர்கள், அந்த காதலி, நெருங்கிய நண்பன் எடுவர்டோ சேவரினாக வரும் ஆண்ட்ரு கார்ஃபீல்ட், ஏன் அந்த வழக்குரைஞர்கள் வரைக்கும் கனகச்சிதம். ஹார்வர்டை/எல்.ஏ-வை அவ்வளவு நட்போடு காட்டிய ஒளிப்பதிவு.

முதல் காட்சியிலேயே எரிகாவுடனான உறவினை முறிக்கிறார். அவருடன் நெருக்கமாக இருக்கும் நண்பனை உதறுகிறார். தனது நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் ஷான் வெட்டி விடப்படுகிறார். அனேகம் பேர் இவரை விட்டு விலகுகிறார்கள், வழக்கு தொடுக்கிறார்கள். ஃபேஸ்புக் ஒரு நாடாக இருப்பின், அதன் ஜனத்தொகை ஐரோப்பாவின் ஜனத்தொகையை விட அதிகம். அத்தனை நட்புகளை, உறவுகளை இணைக்கும் ஒரு நவீனயுக சாதனத்தின் நிறுவனருக்கு உறவென்று ஒருத்தரும் கிடையாது. இந்த மிக வலிமையான முரண் தான் படத்தின் உயிர்நிலை. உலகின் மிக இளம் பில்லியனேராக கருதப்படும் மார்க் (இது படத்தில் இடம்பெறும் தவறான செய்தி. இவரை விட சில நாட்கள் வயதில் இளையவரான டஸ்டின் மாஸ்கோவிட்ஸ், மார்க் – வார்டோ ஆகியோரின் விடுதித் தோழர் தான் உலகின் மிக இளம் பில்லியனேர் ஆவார்) பணத்தைப் பெரிதாக மதிப்பதில்லை. பெண்களையும் உதாசீனப்படுத்துகிறார். (பார்ட்டியில் பார்த்து, கசமுசா முடிந்த பின்னர், அவளை கைகழுவி விட்டு, புதிய தளத்தைப் பற்றி தன் பழைய காதலியிடம் கேட்கிறார்) கல்லூரி, மதிப்பெண், கல்வி என்றும் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. வகுப்பில் கோட் எழுதுவது, வாத்தியாரின் பாடம் கவனிக்காமல் போனாலும் சரியான பதிலைச் சொல்வது, 6 மாதகால வகுப்புத்தடை விதித்ததற்கு கவலையே இல்லாமல், கல்லூரி நிர்வாகிகளை அவமதிப்பது என்று நிறைய சொல்லலாம். அலுவலகம், வேலை என்று ஆன பின்னரும், சாவகாசமாக நண்பனின் எதிரியை இரவு உடைகளோடு சென்று மூக்கில் குத்துவது, பிஸினஸ் மீட்டிங்கின் போது சேட்டை சப்தங்கள் எழுப்புவது, தனது விசிட்டிங் கார்டில் தகாத வார்த்தைகளை எழுதுவது என்று மிக விஷமத்தனமான பாத்திரப் படைப்பு.

படத்தில் மூன்று காட்சிகளில் மார்க் உரையாடுகிறார். நீளமான One on One உரையாடல்கள். முதல் காட்சியில் எரிக்காவுடன், எடுவர்டோவுடன் தனது விடுதியில், ஷான் பார்க்கருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் டாஸ்மாக்கில். எரிக்காவுடனான உரையாடலில், பெரும் பணம் படைத்தவனாகவோ, தனித்திறமையிருந்தாலோ.. உதாரணத்திற்கு விசைப்படகு அல்லது ஏ கபெல்லா இசைக்குழுப் பாடகனாகவோ இருந்தால் தான் ஹார்வர்டுக்கே உரிய ஃபைனல் களப்களில் இணைய முடியும் என்கிறார். ஆனால், அதற்குரிய முயற்சியில் தன்னை மார்க் ஈடுபடுத்திக் கொள்வதே இல்லை. மேலும், வின்கில்வாஸ் சகோதரர்கள் விசைப்படகு வீரர்களாகவும் (பின்னாளில் ஒலிம்பிக் வீரர்களாக), திவ்யா நரேந்திரா (இந்தியர்!) தன் இணையுடன் ஏ கபெல்லா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும், தனது செல்ல நண்பன் வார்டோ (மேற்கூறிய இருவர் உட்பட) பெரும் செல்வந்தர்களாக திகழ்வதையும் நாம் பார்க்க முடிகிறது. இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக, இரட்டையர்களின் பந்தயத்தைப் பற்றி இங்கிலாந்து மாணவர்கள் மார்க்கின் தளத்தில் தெரிந்துகொண்டதாகவும், அளவளாவுவதாகவும் சகோதரர்கள் அறிகின்றனர். ஏ கபெல்லா நிகழ்ச்சியின் போதே, திவ்யா நரேந்திராவின் தோழிக்கு மின்னஞ்சலில் ஃபேஸ்புக் குறித்த மெய்ல் வந்தடைகிறது. (கூர்ந்து நோக்கினால், அதை அவர் சகோதரர்களிடன் சொல்ல ஓடுகையில், ஃபிரேமை விட்டு ஒரு படகு செல்வதை கவனிக்க இயலும் :P ) ஃபேஸ்புக் தொடங்க, இயங்க அனத்து விதமான நிதி வசதிகளைச் செய்த எடுவர்டோ, ஒரு மில்லியன் ஃபேஸ்புக் பயனர்கள் சேர்ந்த விழாக் கொண்டாட்டத்தில் தனது பங்குகள் அனைத்தும் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்கிறார். அந்த ஒரு உரையாடலின் சங்கிலி விளைவுகள். அத்தனைக்கும் கரகம் வைத்தது மாதிரி, ”என் கிட்ட இருக்குற காசுக்கு, உங்க களப் எல்லாத்தையும் ஒரே மொடக்குல வாங்கி அங்க கோலி விளையாடுவேன் கோலி!” என்கிறார். தாறுமாறு.. தக்காளி சோறு!
சமகால அமெரிக்காவை இத்தனை தத்ரூபமாக எந்த படத்திலும் சமீபத்தில் காட்டவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்கன் ப்யூட்டி, டைட்டானிக் சமயத்தில் வந்திருந்த படம். ஹார்வர்ட் யுவன்களின் நேர்காணல், வீடொன்றை வாடகைக்கு எடுத்து அலைபாயுதே ரீதியில் நீச்சல் அடித்துக்கொண்டு, ப்ளேஸ்டேஷன் விளையாடிக்கொண்டு, பியர் அடித்தபடி வேலை செய்வது, இன்னும் நிறைய சொல்லலாம். அவர்களது வசனங்களில் ஒருசேர தாக்கும் நகைச்சுவையும், வன்மமும் இன்றைய தினத்தின் முரண்பாடான வாழ்க்கைச் சூழலை மிக நுட்பமாக சித்தரிக்கிறது.மேற்கூரிய மூன்று முக்கிய காட்சிகளிலுமே இத்தகைய உரையாடல்கள் பிரதானமாக இருப்பதைக் காணலாம். நாயகன் – வில்லன் எதிர்ப்பாடெல்லாம் பாராமல், விங்க்கிள்வாஸ் இரட்டையர்கள் ஆகட்டும், அந்த வழக்கறிஞரின் ஜூனியர் ஆகட்டும் எல்லோரிடமும் இதே சுபாவம் விரவியிருப்பதை பார்க்க இயலும். மார்க், என்ன தான் சோஷியலாக இல்லாமல் போனாலும், மிகுந்த கவனித்தறியும் இயல்புடையவர். இரு நொடிகள் ஏ.இ.பை பார்ட்டியில் இருக்கையிலேயே பின்புலத்தில் அசந்தர்ப்பமாக ஓடிக்கொண்டிருக்கும் நயாகரா படத்தை கவனிக்கிறார். டஸ்டினோ, வார்டோவோ அதை கவனிக்கத் தவறுகிறார்கள். இது தான் அவரது வெற்றிக்கு வழி. விவேகாநந்தர் மொழிந்த:
Take up one idea. Make that one idea your life - think of it, dream of it, live on idea. Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success.”
இது தான் மார்க். சதாசர்வகாலமும் தனது வாழ்வை அர்ப்பணித்து, யாரும் காணத்தவறும் விஷயங்களை பிரதானமாக்குகிறார். ஒருவேளை மார்க்கிடம் வராமல் ஹார்வர்ட் கனெக்‌ஷன், அல்லது பெயர் மாற்றி, கனெக்ட்-யு என்று விங்க்கிள்வாஸ்-நரேந்திரா ஒரு நெட்வொர்க்கிங் தளத்தை தொடங்கியிருக்கலாம். ஆனால், அது இத்தனை பெரிய வெற்றியை கண்டிருக்குமா என்று சந்தேகமே. ஹை5, மை ஸ்பேஸ், ஆர்க்குட் மாதிரி வழக்கொழிந்து போன தளங்கள் எத்தனை? காட்சி ஒன்றில், பாஸ்னியா! பாஸ்னியாவில் சாலைகள் கிடையாது. அங்கு கூட ஃபேஸ்புக் இருக்கிறதா என்று மார்க்கிடம் கேட்கப்படுகிறது. மார்க் சொல்வது போல, எவர் வேண்டுமானாலும் ஒரு நாற்காலியைச் செய்து விட முடியும். அதற்காக, ஒரு நாற்காலியை வடிவமைப்பவன் அதற்கு முன்னர் நாற்காலியை வடிவமைத்த அத்தனை பேரிடமுமா காப்புரிமை கோரமுடியும்?


“ராய் ரேமண்ட் என்கிற ஒரு ஸ்டான்ஃபோர்ட் எம்.பி.ஏ தன் மனைவிக்கு ஏதோ உள்ளாடை வாங்க வேண்டியிருந்தது. ஆனால், கடையில் போய் நின்று கேட்கவோ வெட்கம். திடீரென ஒரு யோசனை. உள்ளாடைகள் விற்கும் ஒரு நவநாகரீக அங்காடி. 40000 $ கடன் வாங்கி, இன்னுமொரு 40000 $ தனது மச்சான்களிடமிருந்து வாங்கி கடையைத் திறக்கிறார், விக்டோரியாஸ் சீக்ரெட் என்று. அரை மில்லியன் டாலர்கள் கல்லா கட்டுகிறது முதல் வருடத்திலேயே. ஒரு விளம்பர அட்டவணை அச்சடித்து, மூன்று கிளைகள் திறக்கிறார். ஐந்து வருடங்கள் கழித்து லெஸ்லி வெக்ஸ்னரிடம் நிறுவனத்தை நாலு மில்லியன் டாலர்களுக்கு விற்கிறார். நல்ல முடிவு, இல்லையா? இல்லை. இரண்டு வருடங்களுக்கு பின்னால் அதே நிறுவனத்தின் மதிப்பு ஐந்நூறு மில்லியன் டாலர்களாக உயர, ராய் ரேமண்ட் கோல்டன் கேட் பாலத்திலிருந்து குதித்து உயிரை விடுகிறார். யார் பெத்த புள்ளையோ.. பொண்டாட்டிக்கு லங்கோடு வாங்கத்தான் ஆசைப்பட்டான்.”
(ஷான் பார்க்கர், பப்பில் மார்க் ஸுக்கர்பெர்க்கிடம்)ஃபேஸ்புக் என்ற யோசனையை ஸுக்கர்பெர்க் திருடிவிட்டான்.. திருடிவிட்டான் என்று கூப்பாடு போடும் பலர், அதன் வேரான ஃபேஸ்மேஷ் மட்டும் என்ன ஸுக்கர்பெர்க்கின் சொந்த கண்டுபிடிப்பா என்று யோசிப்பதேயில்லை.


______________________________________________________________________________________________________________

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP