மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

18-May-2011

2001: எ ஸ்பேஸ் ஆடிசி (1968)


மேலே உள்ள படத்திற்கான இணைப்பு.

பெயர்: 2001: எ ஸ்பேஸ் ஆடிசி.
வெளிவந்த வருடம்: 1968.
இயக்குனர்: ஸ்டேன்லி க்யுப்ரிக்.
வகை: அறி-புனைவு.

முன்குறிப்பு: இதுநாள்வரை நான் பார்த்த படங்களில் மிகப்பிடித்த படம் என்று இதையே சொல்வேன். ஒருதலை பட்சமாகவே இருக்கப்போவதாலும், அனத்தப்போவதாலும் இதை விமர்சனம் என்று கொள்ளத்தகா. படத்தை ப்ளூரேவில் மட்டுமே கண்டுகளிக்கவும்: முழு பாதிப்பையும் தரவல்லது.


நான் தற்போது வாழும் கால்கா ஜி தென் தில்லையைப் பொறுத்த வரையிலும் சற்றே பெரிய ஏரியா. புது தில்லி இந்தியாவின் மிகப்பெரும் நகரம். ஜோலார்பேட்டைக்கு வடக்கே பெரிய நிலப்பரப்பென அறியப்படும் நார்த் இண்டீஸ், உங்களுக்கு தெரியாததில்லை விந்திய இமாச்சல யமுனா கங்கா உச்சல ஜலதித பில்லா ரங்கா என்று சாலப்பெரியதே. கேப்டன் தோனி கட்டியாளும் இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடு. உலகம் பாவம், குரு, சனி, ராகு எல்லோரையும் விட சின்ன வாண்டுப்பயல். ப்ளுட்டோவுக்கு இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் போடாத சூரியக்குடும்பம், பாண்டிபஜார் ஸ்டிக்கர் மார்க்கமாக அம்ஜிக்கரை வாடகை வீட்டு விட்டத்தில் ஒட்டும் கோடானு கோடி நட்சத்திரங்கள், பால்வீதி, இன்னபிற எல்லாவற்றையும் ’பிரபஞ்சம்’ என்று அமெரிக்காவிலிருக்கும் ஏதோ ஒருவர் யூட்யூபில் சொல்லக்கேள்வி. சின்ன வயசில், நடுப்பக்கத்தில் தொப்புளைக் காட்டிக்கொண்டிருக்கும் நடிகையின் படத்திற்கு இரண்டு பக்கங்கள் தள்ளி பேரண்டத்தில் நமது பால்வீதியின் கோள்கள் நட்சத்திரங்கள் போலவே பிற பல மேட்டர்கள் இருப்பதாகவும், ஒருவேளை அங்கும் நடுப்பக்க சில்ஃபான்ஸ் சமாச்சாரங்கள் நிகழலாம் என்றும் அண்ணல் சுஜாதா எழுதியிருந்ததாக நினைவு. அடுத்தமுறை தாங்கள் அம்பத்தூரிலும் ஆவடியிலும் சதுர அடி எத்தனை டாலர் என்று கேட்கையில், அண்ணாந்து வானத்தை ஒருமுறை பார்ப்பது நல்லது.


இருக்கட்டும். நல்லது. 2001க்கு வருவோம். அதாகப்பட்டது, சுமார் 40 வருடங்களுக்கு முந்தியே இந்த அம்புலிமாமா விஞ்ஞானிகள் 2001றிற்குள்ளாகவே ஜெய்சங்கர் வித்தைகளை சாதிப்பார்கள் என்று நம்பி எடுக்கப்பட்ட படம். 2 மணி நேர படத்தின் மொத்த வசனமுமே மிஞ்சிப்போனால் எல்.கே.ஜி பாப்பா எழுதும் ஃபோர்-லைன் பக்கங்கள் நாலுக்குள் அடங்கிவிடும். படம் நெடுக க்யுப்ரிக்கின் அக்மார்க் முத்திரையென மிக மெல்லிய ஐரோப்பிய க்ளாசிக் இசை கசியும். தவிர தினுசான, திகிலூட்டக்கூடிய மிகச்சில குறிப்புகளைக் கொண்ட ட்யூன் செய்யாத எஃப்.எம் ரேடியோ பெட்டி சப்தங்கள் மாதிரியாகவும் ஒலிகள் அவ்வப்போது கிலியேற்றும். மோனவெளியின் தனிமையை, பயத்தை, மர்மத்தை மிக ஆழமாக உணர்த்தக்கூடிய ஓசைகளியும் கவனிக்கலாம். சுவரில் எமல்ஷன் பெய்ண்ட் காய்வதை வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வு தரக்கூடிய சில விஷயங்களை மட்டும் ஒருதபா மன்னித்தருள வேண்டும். (பி.கு: இரண்டாம் தடவை பார்க்கையில் அவற்றிற்கும் புது அர்த்தங்கள் பிறக்கலாம். என்னதான்யா சொல்ல வர்றாய்ங்க என்ற நினைப்பு ஏற்பட்டால் கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல) உதாரணத்துக்கு, கலர் கலராக ஏதோசில ஐட்டங்களை உடலங்கங்களையும் காட்டித்தொலைக்காமல் ஒரு பாப்பா தட்டில் எடுத்துசெல்வதையே பத்து நிமிடங்கள் காட்டும் கர்ணகொடூரம்; ஈஸ்ட்மேன் கலருக்கு நிகரான ஏதோ ஒரு சாவுகிராக்கி ஃபிலிமில் படமாக்கப்பட்ட துரதிர்ஷ்டவசமான காலகட்டம்; இன்னும் வெகுசிலவற்றை. இன்னுமொரு முக்கியமான விஷயம் - குழந்தைகள், பிங்க் நிற கரடிபொம்மையை ஃபேஸ்புக் புகைப்படத்தில் கட்டிக்கொண்டிருக்கும் பெண்கள், மென்மையான மனம் படைத்தவர்கள் போன்றோர் இப்படத்தை தவிர்ப்பது உசிதம். மீறினால் சித்தபிரமை, பிரம்மஹத்தி தோஷம், தமிழ்ப் பேய் படங்களின் மோசமான கிராஃபிக்ஸ் பிசாசுகள், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை மேற்கோள் காட்டும் தமிழ் எழுத்தாளர்களின் அறிமுகம் முதலிய உபாதைகள் துன்புறுத்தக்கூடும்.


முதலில் சொன்ன அம்பத்தூர் சதுர அடிக்கு திரும்ப வருவோம். கால்காஜியில் வாழும் நான்… சரி சுருக்கமாக முடித்துக்கொள்வோம். நான் பருப்பொருள் எனில் சின்ன சின்ன அணுக்களால் ஆனவன் தான் நான். நான், நீங்கள், அணில், ஆடு, இலை, ஈ.. ஒளவையார், எஃகு வரைக்கும் எல்லாம் அணு தான். எனக்கும், ஒபாமாவுக்கும் முன்னாடி இந்த உலகத்தை ஆண்ட ஜுராசிக் பார்க் புகழ் டைனோசார்களும் அணுக்களால் ஆனவையே. அணு என்பது இன்னும் சிறிய பொருட்களால் ஆனது. அவற்றின் செயல்பாடும் இந்த பிரபஞ்சத்து பால்வீதியில் சூரியனைச்சுற்றும் கிரகங்களின் செயல்பாடும் ஒத்துப்போகிறது. உவமை சொல்லவேண்டுமெனில், செவாலியர் சிவாஜி சிலை இருக்கும் மெரீனா பீச்சாங்கரை - திமிங்கிலம், பக்கத்து வீட்டு ராம்ச்சந்திரன் வீட்டு தொட்டி – தங்கமீனை பிரதிபலிப்பது மாதிரி. மைக்ரோஜெராக்ஸ். இதுவும் அதே அப்பாடக்கர் யூட்யூப் விஞ்ஞானியின் பேட்டி தான். அதே அம்புலிமாமா கதைதான். மனிதன் என்ற இந்த சிந்திக்கத்தெரிந்த உயிரினம் தன்னைச்சுற்றி இருப்பதை, இருப்பதாக அறியும் அறிவினை ஓரளவு பெற்றாகிவிட்டது. இப்போது அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் எல்லாம் தாண்டி சதுர அடி கணக்கெடுத்து விற்க இடம் தேவைப்படுகிறது. ஆள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மேற்சொன்ன ராகு கேது வரை ரீசார்ஜ் செய்து கூப்பிட்டுப்பார்த்தாச்சாம். மிஸ்டுகால் தான் சேர்கிறதாம். இன்னும் யாரும் பதில் சொன்ன பாடில்லை. விண்ணைத்தாண்டி வேற்றுகிரக ஜெஸ்ஸி வரவேயில்லை.


சும்மா மேலோட்டமாக இதையெல்லாம் சொல்லக்காரணம், துளியும் இந்த தியரியை க்யுப்ரிக் நமக்கு விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அத்தனையையும் தாண்டிப்போய் உணர்த்திவிடுகிறார். மிக இயல்பாக நகரும் காட்சிகள் வாயிலாக. இதுவரைக்கும் படங்களில் பொதுவாக கண்ட விண்வெளிவாசிகள் மரண மொக்கையானவை. ஆயிரம் தேனீர் கோப்பைகள் கொள்ளும் சாசர்களில் வந்திருக்கிறார்கள். அதுவும் சாமக்கோடாங்கி மாதிரி யாரும் காணாத ஏதோ ஒரு இரவில் விசித்திர சிக்னல்களுடன். ஒரு கண் மூஞ்சி, வதவதவென ஏகப்பட்ட மூக்குகள், நாலாபுறமும் காதுகள் என்று கோரக்கன்றாவியாக. ஏன் சும்மா கும்தான்னு ஒரு வேற்றுக்கிரகவாசி இருக்கவே கூடாதா? அந்த ஜந்துக்கும் கை, கால், மூக்கு, நகம், புருவம், கழுத்து முதற்கொண்டு இருந்து தொலைக்கவேண்டுமா? ஒரே உலகில், கண்டத்தில், நாட்டில், ஜில்லாவில் வாழும் நீயும், பிள்ளைப்பூச்சியும், இறாலும், மரங்கொத்தியும், திமிங்கிலமும், ராஜநாகமுமே வெவ்வேறு உடற்கூறுகள் கொண்டிருக்கின்றனவே கொழுந்துகளே! அதுவும் அவை நியூயார்க் சிட்டியை கைப்பற்றி என்ன செய்யப்போகின்றன? டம்மி பீஸ் தெலுங்கு வில்லன் மாதிரி க்ளைமேக்ஸில் அவை ஏன் தோற்றுக்கொண்டே இருக்கின்றன? சரி, தோற்று திரும்பிப்போய் அதன் பேட்டை ஆட்களை அழைத்து வந்து மீண்டும் கலாட்டா செய்யுமா? கஷ்டகாலம்! இங்கே ராத்திரி நேரத்தில் ரகசிய வேளையில் ஸ்டார்வார்ஸ் திரும்பிப்பார் கிடையாது. அமெரிக்க வீரர்களின் உன்னத சாதனைகள் உலகின் அமைதிக்கு வித்திடும் புனைசுருட்டு வசனம் கிடையாது. படம் முடிய அப்படியே கடற்கரை மேலே மேலே மேலே பறக்கும் கேமரா கோணத்தில் டைட்டில் கார்டு ஓடாது. ஏன், மாமூலான சோபா செட், மேஜைகள் கூட கிடையாது, ரோபோக்கள் சாப்பாடு பறிமாறி, குமாஸ்தா வேலை செய்யாது. க்யுப்ரிக் சித்தரிக்கும், சிருஷ்டிக்கும் அந்த ஆடிஸி, அந்த மாபெரும் பயணம் முற்றிலும் ஒரு புதிய பார்வை. மூலம், எண்ணம், ஆக்கம், ரூபம், உள்ளடக்கம், அதிர்ச்சி, பின்விளைவுகள் – அனைத்துமே புதுசு. குறிப்பிடத்தக்க விஷயம், ஆர்தர்.சி.க்ளார்க் நூலாக எழுத எழுத, க்யுப்ரிக் திரைக்கதையாக்க இது ஒரு கூட்டுமுயற்சியென அறிகிறேன்.

(தொடரும்)

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP