மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

26-Apr-2009

மறுபிறவி

சுவரில் பெருநிழலாய்
மெழுகின் நுனித்தீயை
தின்றுகொண்டிருந்த பூச்சி,
நெருப்பொளி இருட்டடிக்க
நிழல்களின் மரணம்
பிம்பம் புகையின் வண்ணம்.
உரசிய பொறியின் தீபம்
கருமையின் நிசப்தம் கலைத்து
மீண்டும் வட்டமிடும் நிழல்.
_______________________________________________________________________

17-Apr-2009

சுண்டக்கஞ்சி

1.
நினைவுகள் மலர மாட்டேன் என்கின்றன
காய்த்து பழுத்து புளுத்துவிடுகின்றன.
7.4.2008

2.
அரிதாரம் பூசிக்கொண்டு
வாயசைக்காமல்,
ராக அபிநயங்களொடு
சிலாகிக்காமல்
நமக்கு மட்டும் புரியாத
ஏதோ ஒரு மொழியில்
புதுக்கவிதைகளோடு
அக்குபஞ்சர்
செய்துவிட்டுப்போகிறது அந்தக் கொசு.
22.9.2006

3.
என்னதான் பாழ்மண்டபமாக
இருப்பினும் இன்னமும்
சலிப்போடு வாழ்ந்துகொண்டிருக்கிறது-
ஓர் ஆமை!
7.9.2006

_____________________________________________________________

அந்த அரபிக் கடலோரம்!

பாதசாரின்னு பேரு வச்சுபுட்டு எங்கேயுமே போவலையான்னு பயபுள்ளைங்க கேக்க தொடங்கிட்டானுவ! கடைசியா கர்நாடகத்தை கொஞ்சம் சுத்திபார்த்துட்டு வந்தேன். அதுல சில புகைப்படங்கள் இதோ... (பெரிதாய்ப் பார்க்க கிளிக்கிக்கொள்ளவும் :P )

ஆகும்பே ராஜநாகங்களுக்கு பெயர் போன இடம், மேலும் ரம்மியமான மழைக்காடு. இங்கே சன்செட் பாயிண்ட்டில் சூரியன் வானத்தில் கரையும் காட்சி:

ஆகும்பேவில் சுற்றிலும் மிக அழகாக கட்டப்பட்டிருந்த வீடுகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன, குறிப்பாக சுவர்களின் மீது முழுவதுமாக இலைகள் படர்ந்த ஒரு இல்லம். அங்கு ஒரு கடை முகப்பு:காபு கடற்கரையின் - யதேச்சையாக படகை எடுத்துக்கொண்டிருக்கையில் அழகாக வந்து படத்தோடு ஒன்றிவிட்ட அழகான காதல்ஜோடி!
மல்பே எனும் கடற்கரை ஓரம். தூரத்தில் தெரிவது புனித மேரித்தீவு, படகின் மூலம் சென்று வரலாம்:மரவந்த்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. பாண்டி கடற்கரை போல கற்களால் ஆன தடுப்பு கொண்டது. அங்கே லகூன் எனப்படும் பேக்வாட்டர்ஸ் ஒன்றில்:முருடேஸ்வர் ஒரு சிவஸ்தலம். மிக உயரமான கோபுரமும், தங்க முலாம் பூசப்பட்ட கோயிலும் கொண்டது. மேலும் மாபெரும் சிற்பங்கள் (சூரியன், கிருஷ்ண உபதேசம், பரமசிவன், பகீரதன்) அடங்கிய இடம். அக்கடற்கரையின் அலைத்தடம்.


________________________________________________________________

09-Apr-2009

துரோகத்தின் நிறம் சிவப்பு

கேரள கம்யூனிஸ்ட்: "பெங்காலில் கம்யூனிஸம் மலிந்துவிட்டது, அதன் கொடியிலிருக்கும் சுத்தியலே அரிவாளின் கைப்பிடியை நைத்துவிட, அரிவாள் சுத்தியலின் மரப்பிடியை அறுத்துவிடுகிறது."

வங்காள கம்யூனிஸ்ட்: "பிறகு ஒரு கேரள கம்யூனிஸ்ட் அந்த இரும்பில் குச்சி செய்து பல் குத்திக்கொள்கிறான்."

_________________________________________________________________

05-Apr-2009

கிழமைக்கொரு கீதம்

தும்பீ வா என்று மலையாளத்தில் போட்ட பாடலை அண்ணல் இளையராஜா அவர்கள் விஜயகாந்த் நடனமாட தனது குரலில் சங்கத்தில் பாடாத கவிதை என்று இசைத்தார். துபாயில் அவரது நிகழ்ச்சி ஒன்றில் அதே பாடலை வெறும் சங்கதிகளால் பாடியிருக்கிறார்.ஓரளவுக்கு மொட்சார்ட்டையும், பீத்தோவனையும் கேட்டிருக்கிறேன். ரஹ்மானையும், சமகால இந்தி இசையயும் ஏதோ அறிந்திருக்கிறேன். இது எல்லாவற்றுக்கும் சிகரம். சொல்லிலடங்காத விந்தை இந்தக் குரலுக்குள் ஒளிந்திருக்கிறது. ஆளை அடித்து வீழ்த்தும் இசை. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரல். வெறும் உடைத்துப்போட்ட எழுத்துக்களை கோத்து எப்படி இந்த மனிதனால் இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்த முடிகிறது? கண்கட்டு போல வித்தைகளை காட்டியபடி தனது மேதமையின் துளியை சிந்தியபடி சென்றுகொண்டே இருக்கிறார். ஒரு கணம் தீயாகவும், மறுகணம் காற்றாக அதே தீயை அணைக்கவும் செய்யும் சுரங்களை இவரால் மாத்திரமே வார்த்தெடுக்க முடியுமோ!" இவர் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை!", "இவர் மேனாட்டில் இருந்திருந்தால்.. " இத்தியாதி கூற்றுகளை எல்லாம் முதலில் புறந்தள்ள வேண்டும்- அவர் நம் புகழ், நமது சின்னம். வார்த்தைகள் சிக்கமாட்டேன் என்கின்றன. சுருக்கமாக, யாமறிந்த கலைஞர்களுள் இளையராஜாவைப்போல் எங்கும் காணோம்.

01-Apr-2009

சுஜாதா சொன்னது போல பேப்பரில் பேர்!


விகடனில் கவிதை!

இது எதுவும் ஏப்ரல் ஃபூலா என்று புரியவில்லை. யூத் விகடனில் எனது பதிவும் வந்துவிட்டது. கலைமாமணி விருது போல பாவமாகிவிட்ட இந்த அந்தஸ்து எனக்கும் கிடைத்ததில் சிரிப்பதா அழுவதான்னு குழப்பமாக இருக்கிறது. எது எப்படி போனாலும், வாழ்க விகடன். நன்றிகள் பல யூத்விகடன் தளத்திற்கும், எனது வலைப்பூ வாசகர்களுக்கும்.

முகவரி இதோ

சங்கமம் போட்டியாளர்கள்- ஒரு பார்வை

சங்கமத்தில் 'கல்லூரி' எனும் தலைப்பில் போட்டி நடக்கிறது. ஏப்ரல் 5 வரை வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லியிருக்கிறார்கள். ஓட்டு போடுவதற்கு முன் எனது 2 பைசாக்களை ( my two cents :P ) சொல்லிவிடலாமென்று அனுமானித்து இங்கே அத்தனை கதைகளையும் பற்றி சின்ன விமர்சனம். (நல்ல வேளை நான் எதுவும் எழுதிவைக்கவில்லை)

டிஸ்கி: நான் ஒரு சாதாரண ஆரம்ப நிலை வாசகன்/ பதிவன். நான் உங்களை புண்படுத்தவோ, எனது மேதமையை காட்டவோ இதை எழுதவில்லை. மீதமுள்ள 15 பதிவுகளைப் பற்றி பின்வரும் பதிவில் கருத்துகளை உரைக்கிறேன். போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நீங்கள் வாக்களிக்கவில்லையெனில் தயவு செய்து பதிவுகளை படித்துவிட்டு வாக்களியுங்கள்.

1. நாமக்கல் சிபியின் கல்லூரி நாட்கள்:
கதையை படிக்கும் போது காட்சிகள் கண்முன்னே நடக்கின்றன. நடை சற்றே வேகமாக பயணிப்பதால் தொய்வின்றி கதை நகர்கிறது. கருப்பொருளில் அந்த பஞ்ச் மிஸ்ஸிங். வால் அண்ணன் சொன்னது போல இன்னும் நன்றாக செதுக்கி வேறொரு கதை அனுப்பியிருக்கலாம்

2. SURE ஷ்-இன் கல்லூரி வாழ்க்கையில் ஏன் காதல் வந்தது?:
திறமை ஆங்காங்கே வெளிப்படுகிறது. முடிவு எனக்கு பிடித்திருந்தது, விவரிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். போட்டிக்கு அனுப்பபெற்ற கதை என்ற கோணத்தில் பார்க்கையில் பாத்திரப்படைப்பு பல்வீனமாக இருந்ததென்று சொல்லவேண்டும்.

3. இயற்கையின் ஏன் இந்த மாற்றம் என்னுள்ளே ;-)
தலைப்புல இருந்த உள்குத்தை புரிஞ்சுகிட்டிருந்திருக்கணும். கடைசி இரண்டு வரியில் கலக்கிவிட்டார். இரண்டாவது முறை படிக்கையில் புது அர்த்தம் கிடைப்பது தான் கவிதையின் வெற்றி. குறிப்பாக கவிதையில் சொல்லப்பெறும் சம்பவ நிரல் ரசிக்கும்படியாக இருக்கிறது. மிக நன்று.

4. தமிழரசியின் நான் அவன் காதல்:
அற்ப சந்தோஷங்கள், வார்த்தை ஜாலங்கள், குறும்பான வரிகள், வலியின் குமுறல் எல்லாம் இருந்தும் ஏற்கனவே படித்ததைப் போன்ற ஒரு சலிப்பைத் தருகிறது. நீளமும் ரொம்ப அதிகம். அனைத்திற்கும் மேலாக கவிதைக்குரிய ஓசை நயம் தப்பிப்போகிறது. இருப்பினும், வாழ்த்துக்கள்.

5. சந்துருவின் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நண்பனே!:
தனது கல்லூரி வாழ்வினை அசைபோட்டிருக்கிறார். குறிப்பாக தனது வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற வைத்த தோழரைப் பற்றி. சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. வாழ்க்கை சம்பவங்களை விமர்சனம் செய்வதா என்று விளங்கவில்லை, நல்ல பதிவு என்றாலும் போட்டியில் தேர்வு பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

6. நசரேயனின் மாணவர்களுக்கு எச்சரிக்கை:
ஹாஸ்யமாக எழுதியிருக்கிறார். சொல்லும் விதமும், வார்த்தை வருணணையும் நன்று. கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் இன்றி வெறுமனே நகைச்சுவைக்கு எழுதியதாய் எனக்கு பட்டது. நிகழ்ச்சியும் அவ்வளவாய் ஈர்க்கவில்லை, அதனால் சிறுகதை படிக்கும் ஃபீல் மிஸ்ஸிங்.

7. பொறியியல் வகுப்பு முதல் நாள்:
முழுவதுமே சொந்த அனுபவமாய் இருப்பதனால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் சில வரிகள் பளிச்சிட்டன: "இருந்தாலும் நாங்க மெக்கானிக்கல் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு சீன் போட்டு ஓட்டினோம்."

8. லதானந்தின் ஈயும் ஏரோப்ளேனும்:
இதுவும் ஒரு நகைச்சுவையான பதிவு. அவரது துணுக்குத்தோரணம் ஒன்றினைப் பற்றி. கல்லூரியில் படிக்கையில் சென்று வந்த ஒரு போட்டி பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். வெகுஜன ரசனைக்கான பதிவு.

9. ம.பழனியப்பனின் பதினெட்டாம் ஆண்டு கொண்டாட்டம்:
பதிவர்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத வலைப்பூ என்று நினைக்கிறேன். அனுபவத்தை அழகாக கொடுத்திருக்கிறார். மீண்டும் ஒன்றுகூடும் பழைய நண்பர்கள் எப்படி தங்கள் பொற்காலத்தை நினைவுகூர்கிறார்கள் என்று எளிய நடையில் எழுதியிருக்கிறார். ஒரு வரி மிகவும் நுட்பமான, அனாசாயமான குறியீடாக எனக்கு தோன்றியது. பட்டது. "நாங்கள் படிக்கையில் கன்றாக இருந்த ஆலமரம் இப்போது விழுதுகள் விட்டிருந்தது"

10. ஷீ நிசியின் கல்லூரி இறுதி நாள்:
நன்றாக எழுதப்பட்ட கவிதை. ஆனால் இன்னும் முடிக்கப்படாதது போல தொக்கி நிற்கிறது, அது அதே பாணி கவிதைகள் முடிவதைப்போலவே முடிவதால் கூட இருக்கலாம். நடுநடுவில் வரும் இயைபுத்தொடை மிகவும் கவர்கிறது. உதாரணத்திற்கு: "வலிக்கும் வலிகளோடும், துளிர்க்கும் துளிகளோடும்." இன்னும் சற்று மெனக்கெட்டிருந்தால் மகத்தான கவிதையாகியிருக்கும்.

11. வினோத் கௌதமின் தொடர்பு கதைகள் (நம்ம ஊரு பேபல்):
சுவாரஸ்யமான கதை. அணுகுமுறையில் வித்தியாசம் காட்டியிருந்தார். கடைசியில் வரும் திருப்பத்தை பெயரை வைத்தே ஊகிக்கும்படி ஆகிவிட்டது கொஞ்சம் நெருடலே. உரையாடல்களை இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன். நல்ல முயற்சி.

12. தணிகாஷின் உன்னில் விழுந்தேன் என்னை இழந்தேன்!:
வழக்கமான சோக கீதம் தான். தலைப்பு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. தன்போக்கில் ஒரு பெண்ணை வசைபாடியிருக்கிறார். சம்பிரதாயமான காதல் தோல்வி கவிதை ரகம் தான். எனினும் சரக்கில்லாமலெல்லாம் இல்லை. இந்த வரி அதற்கு எடுத்துக்காட்டாய்-உன்னை நினைந்தேன் -என் அன்னை ம‌ற‌ந்தேன் அவ‌ள் உதிர‌த்தை உர‌மாக்கினாள்-நீயென் உள்ள‌த்தை விற‌காக்கினாய்."

(மீதி அடுத்த பதிவில்)

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP