மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

31-May-2009

மீன், பறவை, குதிரை மற்றும் சில

பூச்சிகளின்
ரம்மியமான உலகத்தில்
மனிதர்கள் அருவருப்பானவைகள்.

திரியில் மரணம்
வாலில் பிரசவம்
மெழுகுவர்த்தி.

தொட்டி மீனுக்கு
பருவமழை
வேண்டாம்.

மலையிலிருந்து
போட்டால் விழாது -
பறவை.

கால் உடைந்தாலும்
ஓடும் குதிரை -
இரங்கராட்டினம்.

______________________________________________________________

27-May-2009

கோவா!கோவா... இந்தியாவின் சுற்றுலா தலைநகரமென ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்திற்கு அண்மையில் நண்பர் குழாமுடன் சென்று வந்தேன். அரபிக் கடலின் 'தல'யைப் பற்றி லெக்சர் அடிக்காமல் ஆங்காங்கே சுட்ட படங்கள் மட்டும்.

மிராமர் பாலம்


அலை தெறிக்கும் பாறைகள்


அஞ்சுனாவின் மணற்துகள்கள்


நண்டூறுது!


வகேட்டர் கடற்கரை


அலையாடும் மேகங்கள்


காளங்குட்டே


பாராசூட்டில் நண்பர்கள்


என்.எச் - 4சப்போரா கடற்கரை - தூரத்தில்


போண்ட்லா விலங்குகள் சரணாலயத்தின் கவுர் (எ) காட்டெருமை


அகுவாதா கோட்டை


ஓல்ட் கோவாவில் ஒரு தேவாலயம்


அஸ்தமனம்
ஷர்வாளேம் அருவி/ ஆறு

_______________________________________________________________

22-May-2009

வெற்றுத்தாள்.

மை காய்ந்த பழைய பேனா
டிராயரின் அடியில் கிடந்தது
நொடியில் தோன்றிய கவிதை ஒன்றை
மறப்பதற்குள்ளாக எழுத முனைந்து
கிறுக்கிப் பார்த்தும் எழுதவில்லை
குலுக்கிய விசையில் தெறித்த துளிகளில்
ஒளிந்துகொண்டிருக்கிறது என் கவிதை.
______________________________________________________________

21-May-2009

ட்விட்டரோசைமணிப்பாலில் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டது, நடக்கையில் சக் சக்கென்று நீர் தப்புகிறது
\o/

விண்டோஸ் செவன் ஆர்.சி இன்ஸ்டால் செய்தேன்
:P

இத்தனை நாள் பார்க்காமல் நேற்றிரவு 2 மணிக்கு 'நான் கடவுள்' பார்த்தேன்
:D

பிரபாகரன் இறந்து போனதாக வரும் செய்(வதந்)திகளை மனதால் இன்னும் மறுத்தபடி இருக்கிறேன்
:'|

நாளை பகல் ஸ்ட்ரக்சர்ஸ் பரீட்சை இருக்கிறது, நானும் ரொம்ப நேரமாக 'பார்த்து'க்கொண்டிருக்கிறேன் ஒண்ணும் பிடிபடவில்லை.
;)| மேலே: புதுசு கண்ணா புதுசு WINDOWS SE7EN பெயிண்டில் கிறுக்கியது,
கீழே: கழற்றிய கண்ணடி ரூம்-மேட்டின் என்-73 கார்ல் சைஸ் லென்ஸில் பதித்த பிம்பம் | _______________________________________________________________

17-May-2009

வளைக்கரம்

16 வயதில் காகிதங்கள் சல்லிசாக கிடைத்த சந்தோஷத்திலும் வகுப்பில் ஓரளவுக்கு 'எலுத்துப்பிளையிண்ரி' தமிழ் எழுதத் தெரிந்த இறுமாப்பிலும் கவிதை என்று நினைத்து எழுதியது. மன்னித்தருள்க.

எத்தனையெத்தனையோ
உடைந்த வளையல்கள் நினைவுக்கு வருகின்றன...
கோலாட்டம் ஆடுகையில்
விழுந்துடைந்த தங்கையுடையது,
துணியலசுகையில்
அவிழ்ந்துடந்த வேலைக்காரியுடையது,
காற்றாடி விடுகையில்
கழன்றுகொண்ட அண்டைவீட்டுத்தோழியுடையது,
சீரியல் கிளிசரினில்
கரைந்துடைந்த பாட்டியுடையது,
எம்பிராயட்ரி போடுகையில்
வழுக்கிவிழுந்த மாமியுடையது,
பிரம்பெடுக்கையில்
நலிந்துபோன ஆசிரியையுடையது,
நான் மட்டும் பார்த்துரசிக்க
கலைடோஸ்கோப்புக்காக
விரும்பி மட்டும் கொடுக்கப்பட்ட
என் தாயினுடையது!

-22.9.06
_______________________________________________________________

11-May-2009

ஆதலினால் சாதல்

என் காதல் யாழினிக்கு,
நலமில்லை தான். நலமில்லாதவர்களைப்பற்றி அறிய ஆவலும் இல்லை தான். நான் இதுவரை நெடிய மடல்கள் யாருக்கும் எழுதியதில்லை, இனி எழுதப் போவதும் இல்லை. நான் உன்னை அழைத்தது எல்லாவற்றையும் பேசுவதற்கு... ஒட்டுமொத்தமாக,ஒரேயடியாக. யாருடனும் பேசிக்கொண்டே இருக்க எனக்கு பிடிக்காதென்றாலும் மௌனத்தின் நச்சரிப்பு அதைவிடக் கொடியது.

நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன், சுற்றியிருக்கிறேன்; ஆனால் காதலித்ததெல்லாம் இல்லை. அவர்கள் அழகாயிருப்பார்கள், ரசிப்பேன். மலர்களே பார்ப்பதற்குத்தானே, நான் எந்த மலரையும் கசக்கவில்லை. சத்தியமாக.
"தேவதைகளை சந்தித்ததில்லை
என்று பொய் சொல்ல விரும்பவில்லை
வந்திருக்கிறார்கள்
வந்து வெறுமனே
வணக்கம் சொல்லிப் போய்விடுவார்கள்"
- மு.மேத்தா.


அன்றொரு நாள் என் நண்பனுக்காக காத்திருக்கையில் தான் ஒரு பூகம்பத்தை நேருக்கு நேராக சந்தித்தேன். கையிலிருந்த சிகரெட் விரல்களை பொசுக்கும் வரை உனது ஸ்பரிசத்திற்காக ஏங்கினேன். எனது முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியின் உள்ளே இருக்கும் கண்களிடம் என்னை பணயமாக வைத்து தோல்வி கண்டேன். ஒரு மாதம் பின்தொடர்ந்து, உன் செருப்பு அளவு வரை கற்றறிந்தேன். அப்புறம் நீ அடிக்கடி கவிதைப் புத்தகம் வாங்க வந்தது தெரிந்து, உனக்கொரு காதல் கவிதை புத்தகம் பரிசளித்தேன். நன்றி பழனிபாரதிக்கு, அவரால் தான் நம் காதல்குழந்தை பிறந்தது.
"நான் தண்டவாளத்தில்
பூத்த பூ
நீ ரயிலில் வருகிறாயா?
நடந்து வருகிறாயா?"
- பழனிபாரதி


நீ நடந்து தான் வந்தாய். ஆனால் நடந்து வந்த நீ எனைக் கொன்ற ரயிலேறி ஏன் போனாய் தோழி? ஊரெல்லாம் சுற்றினோம். காதலை பருகினோம், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ட்ராவில். கல்யாணமும் பண்ணிக்கொண்டோம். காதல் வளர்ந்து விரிந்த வெட்டிக்கதை பேசி பயாஸ்கோப் ஓட்ட விரும்பவில்லை, அவை பாவம், இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கவிருக்கிறது என்பதை உணராத அற்ப நொடிகள்.

"If you think
I love you!
You are wrong.
Its something more than that."

இந்த கவிதையை ஞாபகமிருக்கிறதா? ஆமாம், உனக்கும் எனக்கும் சென்னையின் தீப்பெட்டிக்குழும குடியிருப்பொன்றின் பத்தாவது மாடிப்பார்வையில் தட்டுப்படும் மின்மினி விளக்குகளும் துணையாக இருக்கையில் நான் வாசித்தது தான். பாவம், உனக்கும் எத்தனை நேரம் தான் காதலிக்க பிடிக்கும்? ஊடல் கொண்டாட ஆரம்பித்தாய். நதியே நாஞ்சிலே என்று நான் சொன்னது எல்லாம் காதில் விழவில்லை. உன்னை சமாதானப்படுத்த நான் கொலம்பஸ்ஸாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அமெரிக்கா நல்ல நாடுதான். சருகுகள் சிந்தும் சிங்கார முற்றம் கொண்ட வீடொன்றை உனக்காக வடித்தேன். அழகான பேஸ்மெண்ட்டில் காரை பார்க் செய்துவிட்டு பேசிக்கொண்டிருப்போமே... அடடா எத்தனை அழகான நாட்கள் அவை! மேன்ஹட்டன் ஸ்கைலைனை விட அழகாய் இருந்ததே நம் வாழ்க்கை. இருனூறு மைல் வேகத்தில் நாம் பயணித்ததெல்லாம் ஞாபகமிருக்கிறதா செல்லமே? பகலிலும் நான் நிலவுடன் பேசிவந்தேன். ப்ச்.. எல்லாம் கானல் நீர்.

"அமாவாசையில் தான்
தோன்றுகிறது நிலவைப்பற்றி
கவிதை எழுத"

உன் மச்சங்களைப்போல இத்தகு சின்னசின்ன ஹைக்கூ கவிதைகள் கூட மிளிர்ந்தன பெண்ணே! நியுட்டனின் விதிகள் உடைத்து புவியீர்த்து விழவே இல்லை நம் காதல்.சில்லென்றே இருந்தது. ஆனால் எங்கே இடி விழுந்ததென எனக்கு இப்போதுதான் விளங்கியது சிநேகிதி! நான் மும்முரமாக வேலை பார்க்கும் வேளைதான் நம் காதல் படகு விரிசல் விட்ட தருணம். வெடி கையில் இருக்கிறது,வெடித்து விடும் என்று வீசியெறிந்தேன், ஆனால் வெடி விழுந்ததோ என் காலடியில்.

"நீ மேல் உதடு
நான் கீழ் உதடு
நாம் மௌனமாகவே
பேசிக்கொள்வோம்"
-இரமேஷ் விஸ்வநாதன்.

இப்படித்தான் நாம் இருக்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் உண்மை ஃபிக்ஷனை விட விசித்திரமானது என்பதனை கண்டுகொண்டேன். முதலில் யாரோ தோழி வந்திருப்பதாகச் சொன்னய். அதற்கப்புறம் ஒருமுறை தொலைபேசி மாதத்திற்கு இருபதினாயிரம் வந்ததும் தான் எனக்குள்ளிருந்த மிருகம் விழித்தது தலையணையே! மானே,நீ ஏன் கடித முனைகளையெல்லாம் படுக்கயறை ஓரமாக கத்தரித்திருந்தாயோ! நான் அறியேன்.ரகசிய ஈ-மெயில்களை ஏன் அனுப்பினாயோ! நான் அறியேன்.ஒருநாள் என் அலுவலக மேலாளர் வைகுந்தம் சென்ற காரணமாக எனக்கு விட்டிருந்த அரைநாள் விடுமுறையை லாஸ்-வேகாசில் செலவளிக்க நான் வர, வாழ்க்கை என்னை சூதாடிவிட்டது போ!சருகுகளை கிழித்துக்கொண்டு லம்போர்கினி வந்து பேஸ்மெண்ட் அடைய, அங்கே ஒருவன்.நானும் நீயும் கதைத்துக்கொண்டிருந்த தோரணையில்.எனக்கு ஒன்றுமே யோசிக்கத் தோன்றவில்லை.அதீத ஆசை உன் மேல். பூப்பறிக்க வந்தானோ கள்வன் என்றென்னி மூளை பையிலிருந்த துப்பாக்கி தோட்டாவை அந்த மடையனின் வாயில் ஊட்டியது.ரொம்ப சொங்கி போலிருக்கிறது. ஒரே குண்டு தான், சாய்ந்துவிட்டான். அதற்கப்புறம் உன்னை நெருங்கினேன். நீயாவது ஏதாவது சொல்லியிருக்கலாம். அவன் உன் தோழியின் கணவன், நம் வீட்டுக்கு உன்னை ட்ராப் செய்ய வந்திருக்கிறான், பின்னாடியே அவரது மனைவி வந்துகொண்டிருக்கிறாள் என. உனக்கு அறிவே கிடையாது. தோட்டத்தில் இருக்கவேண்டிய spade-ஐ அங்கு வைத்து தொலைத்திருந்தாய், என் கைக்கு வாட்டமாக. உன் தலையை அப்படிப் பார்க்க எனக்கே ரொம்ப பாவமாக இருந்தது.

"இன்றோடு உன்னைப் பார்த்து
78 நாட்கள் ஆகின்றன
இன்றோடு நீ என்னை
78 முறை கொன்றிருக்கிறாய்"

அட, இரண்டு வருடங்களாயிற்று, இப்படி கவிதையெல்லாம் எழுதி. இப்போது என்ன புண்ணியம், உன்னிடம் இந்த வரிகளை சிறையிலிருந்து நானும் சொல்லமுடியாது, சொர்ர்க்கத்திலிருந்து நியூயார்க் வந்து உன்னாலும் prison-pass வாங்கமுடியாது. ஆமாம்,உன்னிடமிருந்து விடுதலை வாங்குவதற்குள்,இங்கேயும் எனக்கு ஆயுள் தண்டனை தெரியுமா?

இப்படிக்கு கல்லறையில் அஞ்சல்பெட்டியைத்தேடும்,
ஒரு கொலைகாரக் காதலன்.


(19.12.2006 அன்று எழுதியது)

______________________________________________________________

09-May-2009

எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்னை என்ன நினைப்பான்?

ஆங்கிலப் பதிவு ஒன்றினுக்கு இட்ட பின்னூட்டம் தான் கருப்பொருள். பதிவுலகமே அரசியல் பதிவேடாக மாறிவிட்ட இந்தத்தருணத்தில் நமது மனதில் உதயமாகும் எண்ணங்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரிவிக்கும் பொருட்டே இந்தப் பதிவு. பொதுவாகவே படிக்கும் பதிவுகளில் பாதிக்கு மேலே பின்னூட்டம் போடுவது எனது வழக்கம். தோழர் ஒருவர் ஆங்கில வலைப்பூ ஒன்றில் 'வாழ்க்கை மாற வாக்கை மாற்றுங்கள்' என்ற தலைப்பில் எழுதியிருந்தார். உரல் இதோ.
இதன் சரத்துகள் பின்வருமாறு:
* நான் ஆளும் கூட்டணியின் எதிர்ப்பாளன் என்பதை வெளிப்படையாக தெரிவித்துக்கொள்கிறேன்.
* ஊடகங்களின் சித்தரிப்புக்கு மாறாக காங்கிரஸ் ஒரு வேலைக்காவாத கட்சி என்பதையும், அதனை ஆட்சிப்பொறுப்பிலிருந்து வீசியெறிய வேண்டும் என்பதையும் முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன்.
* கோத்ராவை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் தொலைக்காட்சிகள் சீக்கிய படுகொலையை மறந்து விடுவது பொறுப்பின்மை, இன்னும் சொல்லப்போனால் பேடித்தனம். மோதியை ஹிட்லரைப் போல பாவிப்பதும் சிறுபிள்ளைத்தனமே.
* 10000 சீக்கிய சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைத்து 800 இசுலாமிய அன்பர்கள் எரிந்ததை பெரிதாக்கிப் பேசுவது தொழில் தர்மமே அல்ல. குவாட்ரோச்சியை போஃபர்ஸ் வழக்கிலிருந்து விடுவித்ததற்கு தக்க பின்புலங்களும் விளக்கப்படவில்லை. கோத்ராவில் மரணமடைந்த 300 இந்துக்களும் மறக்கடிக்கப்படிருக்கிறார்கள்.
* காந்தஹார் விமானக் கடத்தலையும் மும்பை சம்பவத்தையும் ஒப்பிட்டு எது சரியான அணுகுமுறை என்று மதிப்புக்குரிய பொதுஜனமே தீர்மானிக்கட்டும். பொடா, யு.ஏ.பி.ஏ குழப்படிகளையும் நிகழ்த்திய இறையாண்மைமிக்க காங்கிரஸிடம் இன்னுமொரு முறை தலையைக் கொடுப்பது ஆபத்தானது.
* முடிவில் வாசகர்களும், பொதுமக்களும் இந்த ஊடகங்களின் அரைகுறை அழிச்சாட்டியங்களால் ஈர்க்கப்படாமல் சுயசிந்தனையோடு வாக்களித்து பாரத்ததில் மாற்றம் மலர வழி செய்வார்களாக
- என்று முடித்திருந்தார். இப்பதிவிற்கு எனது பின்னூட்டம் பின்வருமாறு:

எங்கு காணினும் டீக்கடை பெஞ்சுகளாய் பதிவுலகமும், ஒட்டுமொத்த இந்திய வலையுலகமும் ஆர அமர ஆத்திக்கொண்டிருப்பதால் கண்கள் இரண்டால் சுவாதியிடம் தஞ்சம் புகுந்திருக்கும் இந்த வேளையில் என் நண்பன் ஒருவனால் எனது தலையை நானே சுவரில் முட்டிக்கொள்கிறேன். கழிவறையில் தாளிட்டு ஒன்றுக்கு போகும் போது கூட அரசியல் அரட்டை அடிக்கும் அவனது சிலுமிஷம் எப்போது முடியும் என்று வழிமீது விழி வைத்து காத்திருக்கிறேன்.

//ஊடகங்கள் காங்கிரஸின் பணம் வாங்காத பிரச்சார மேடைகளாகிவிட்டன//
மண்ணாங்கட்டி. 'மரியாதை' படத்தை தரவிறக்கம் செய்ய க்யூவில் போட்டிருக்கிறேன். கேப்டன் எங்களை சொர்க்கலோகத்திற்கு இட்டுச் செல்வார்.

//மோதியை இசுலாமியர்களின் ஜென்ம விரோதி என்று ஊடகங்கள் தம்பட்டம் அடிக்கிகின்றன//
என்ன இழவோ! இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டுமென விரும்புகிறீர்கள் என்னை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் இவரது பெயரைத் தான் நான் பரிந்துரைப்பேன். இருப்பினும் நான் துதிக்கும் மந்திரம் என்னவோ 49-ஓ தான்.

//இந்த விஷயத்தில் ஐ.மு கூட்டணியை விட தே.மு கூட்டணி இன்னும் சிறப்பாகக் கையாண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்//
நிச்சயமாக, ஒவ்வொரு விஷயத்திலும். குறிப்பாக தமிழகத்திலும் அதைத் தாண்டியும் பற்றி எரியும் விஷயத்தில்.

//அனிருத் கணபதி கூறியதாவது:
Bloody hypocrites!//
இன்னும் தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தவும். உதாரணங்களுக்கு செல்லவும்: http://youswear.com மேலும் விவரங்களுக்கு விக்கிபீடியாவின் அதிகாரப்பூர்வமான 'மெட்ராஸ் பாஷை' பக்கத்திற்கு செல்லவும்.

//அனிருத் ராமச்சந்திரன் கூறியதாவது:
அட.. ஆமாம்! மேலும், ஐ.மு கூட்டணி ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கேந்திரங்களில் இட ஒதுக்கீட்டடினை உருவாக்கி அசுத்தம் செய்தார்களே என்பதை சொன்னேனா?//
சுத்த பேத்தல். இன்னும் சொல்லப்போனால், இட ஒதுக்கீட்டை நான் மிகத் தீர்க்கமாக வரவேற்கிறேன். 'அசுத்தம் செய்தல்' என்பது 'எவாளது' வாயிலிருந்து வரும் வார்த்தைகள் என்பதைப் பற்றி மௌனம் காப்பதே சாலச் சிறந்தது என்று நம்புகிறேன். மட்டுமின்றி, இது தொண்ணூற்றி ஒன்றாம் அணியிலிருக்கும் சி.பி.ஐ(எம்)-மின் பங்கு குடைச்சல்.

//இது 13ம் தேதிக்கு முன்னால் நான் எழுதும் கடைசி அரசியல் பதிவாக இருக்காது.//
தணிக்கை செய்யப்பட்ட சொற்களால் நிரம்பி வழியும் ஒரு ஆக்ரோஷமான பதிவினை எதிர்பார்க்கிறேன். ஆவன் செய்யவும். யாரேனும் டி.எம்.கே-வின் வயதில் மூத்தவரை ஆசை தீர திட்டுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன். ('எம்' என்பது சரும ரோமங்களைக் களைந்தெறியும் சவத்தபயல்களினைக் கேலி செய்ய பயன்படுத்தும் குறிச்சொல் ஆகும்)

பி.கு 1: அசல் இடுகையிலிருந்தும், பின்னூட்டத்திலிருந்தும் சில பகுதிகள் மாத்திரம் நீக்கப்பட்டுள்ளன.
சாய்ந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பவை மட்டுமே எனது தனிப்பட்ட கருத்துகளாகும். பி.கு 2: இதில் எதையும் நீங்கள் உங்கள் கருத்துகளாக கொள்ள அவசியமில்லை. விமர்சனமோ, தங்களது பார்வையையோ சொல்வது போதுமானது. கருத்துத் திணிப்பு பயங்கரமான விளைவுகளைத் தரவல்லது.

____________________________________________________________

02-May-2009

சங்கமம் 'பேருந்து' போட்டிக்கான இடுகை

மந்திர நிமிடம்.

போட்டியில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்!


தனியாக நான் பண்டாரம் போல வீதியில் ஓடிக்கொண்டிருந்தேன். கோயம்பேடு தனது போர்வையத் தளர்த்திக்கொண்டு கொட்டாவியோடு துயில் கலையத் தொடங்கியது. துணைக்கு சைக்கிள் மணியோசையுடன் சிறகுகள் மறுக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளும் செய்தித்தாள்களும் வாசற்படியோரம் சிந்துகையில் கண்சிமிட்டி கண்சிமிட்டி தெருவிளக்குகள் சூரிய நமஸ்காரம் புரிந்தன. ரேடியோக்களில் இன்னும் எழுபதுகளின் கானங்கள் மாறாமல் டேக்ஸி ஸ்டாண்டுகளிலும், டீக்கடைகளிலும் சிகரெட் புகைக்கு பழகியபடி ஒலித்துக்கொண்டிருந்தன. கந்தர் சஷ்டி கவசங்களும், வேங்கடேச சுப்ரபாதங்களும் விடாமல் வீடுகள், அங்காடிகள் முதல் பேருந்து நிலையங்கள் வரை இசைக்கத்தொடங்க, பனித்துளிகள் பில்டர் காபி வாசனையோடு தி ஹிண்டு அல்லது தினத்தந்தி வாசிப்பில் மாயமாகிக்கொண்டிருந்தன. பெரிய மீசையோடு பருத்த உடல்வாகுடைய அந்த காக்கி கார்டை பஞ்ச் அடித்துவிட்டு மெக்கானிக் ஷெட்டுக்கு புறப்பட்டார். கையெழுத்து போட்டுவிட்டு சாவி போட்டால் ஓடும் அந்த பெரிய பொம்மையை உள்ளே அமர்ந்தபடி இயக்கலாயினார்; பேனா தெறித்த மையாய் பேருந்து கக்கும் புகை. காலையிலேயே சூடான இட்லியை வெங்காய சட்னியோடு சாப்பிடும் சுகமே அலாதி. அநேகமாக இந்நேரம் காலையில் பார்த்த மீசைக்கார பேருந்து ஓட்டுனர் பழகிப்போன பெட்ரோல் வாசனையை தனது மூளை நரம்புகளுக்கு இன்னுமொருமுறை புலப்படுத்திக்கொண்டிருப்பார். பேருந்தை டிப்போவிலிருந்து பாயிண்டுக்கு கொண்டு சென்று ட்ரிப்பைத் தொடக்கவேண்டியதுதான் மீதி- பூந்தமல்லியிலிருந்து பிராட்வே வரை செல்லும் அதிவேக வாகனத்தில் அமர்ந்திருக்கும் நான் மற்றுமொரு மென்பொருள் கூலி.மிதித்த ஆற்றலை காற்றில் புகையாக ஊற்றிக்கொண்டிருக்கும் பேருந்து என்னை ஒரு ஊர்தி வெள்ளத்தினூடே செலுத்திக்கொண்டிருந்தது. ஒரே நொடிக்குள் பதினைந்து பதினாறு ஹார்ன் சத்தங்கள் எழும்ப கண்ணாடியினூடே நிறம் மங்கித்தெரிந்த சிக்னல் விளக்குகளால் நெறிபடுத்தப்பட்டுக்கொண்டிருந்தது பேருந்து. மற்ற வாகனங்கள் செலுத்தும் சைகைகளால் தனது போக்கை தொடர்ந்து திருத்திக்கொண்டேயிருந்தது. பாகனின் கோலை ஒத்தபடி ஸ்டியரிங்கும் ஓட்டுனரின் மகுடியென கியரும் தன்னை ஆட்டுவிக்க ஆட்டுவிக்க நடுத்தெருவில் வித்தை காட்டிக்கொண்டே சீறிப்பாய்ந்தது. தனிமையின் இசை வாழ்வில் பெரிய வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது. சூரியனுக்கு வெள்ளையடித்து நிலாவையும் ஒளிரவைத்தாகிவிட்டாயிற்று. நாள்தோறும் இதே பழைய க்ராமஃபோன் ரிக்கார்டைத் தான் தேயத்தேய ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதே டீக்கடை, அதே கிங்க்ஸ், அதே பைக் பார்க்கிங், அதே கார்ட் ஸ்வைப், அதே ப்ராஜக்ட் லீடர், அதே லோ-வெய்ஸ்ட் ஜீன்ஸ் யுவதிகள், அதே மாலை நேர ட்விட்டர், அதே வார இறுதி ஜேக் டேனியல். ஒரு தினுசான மயக்க நிலையில் நம்மை அறியாமலேயே நூற்றுக்கணக்கான மனச்சித்திரங்களை அசைபோட்டபடி கவனமின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு கனவுலகினிலேயே பயணித்து தலம் வந்தடைகிறோம். வரைந்த காம்பஸ் வட்டங்களை பென்சிலால் திரும்பத் திரும்ப அழுத்தி வட்டமடிப்பது போல நேற்று பதித்த சக்கர சுவடுகளின் மேலேயே இன்றும் தனது பாதம் பதித்துக்கொண்டிருக்கிறது பேருந்து. அதே பூந்தமல்லி, அதே போரூர், அதே வளசரவாக்கம், அதே விருகம்பாக்கம், அதே வடபழனி, அதே கோடம்பாக்கம், அதே அசோக் நகர், அதே நுங்கம்பாக்கம், அதே சேத்துபட்டு, அதே சென்ட்ரல், அதே ப்ராட்வே.
கூட்டத்தின் மையமாக நின்றிருந்தாலும் மனதில் இழையோடும் இந்த தனிமையின் ரீங்காரம் காதுகளில் "நீ துணையற்றவன்!" என்று மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. சீட்டு ஒதுக்கப்படும் மூக்குப்பொடி கிழம், தொலைக்காட்சித் தொடர் விவாதிக்கும் நடுத்தர வயதுப் பெண்மணி, டை மாட்டிய ஆபீசர்கள், பாக்கட்டுகள் பத்திலும் ஒன்றுமேயில்லாத இளைஞர் பட்டாளம், ஜன்னலுக்கு வெளியே கை நீட்டும் பள்ளிச்சிறுமிகள், கூடைகளில் கருவாட்டை மணக்க மணக்க கொண்டு செல்லும் மூதாட்டி, பீடியை காதில் செருகிய குடிமகன் என பற்பல சினேகிதர்களுடைய பேருந்திற்கும் என்னைப்போலவே சொல்லிக்கொள்ளும்படி துணை யாரும் இல்லை தான். இரவல் நகையென மாறி மாறி ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பாவிக்கும் அப்பாவி ஜீவன் தான் இதுவும், பார்வையாளர்களுக்கும் பாதசாரிகளுக்கும் நேர்ந்து விடப்பட்ட எடுப்பார் கைப்பிள்ளை. தனிமை தான் மனிதனின் முதல் கண்டுபிடிப்பாக இருந்திருக்க வேண்டும். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பியோடவே மது, மாது போன்ற வஸ்துக்களின் திரையில் எல்லோரும் ஒளிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இந்த வேலியை உடைக்க முடியாதா? இரவின் அடர்ந்த இருட்டில் வெளிச்சத்திற்கு வரும் தத்தம் தனிமையையே இன்னும் எத்தனை நாள் சிகரெட்டுப் புகையில் அலைகழிப்பது? உச்சி வெயிலில் தெருவோரங்களில் படரும் கட்டிட நிழல்களினூடே தாவிதாவி கதிரவனிடமிருந்து இன்னும் எத்தனை நாள் ஒளிந்துகொண்டேயிருப்பது? பேருந்துக்கென்று இருக்கும் தளைகளைத் தகர்த்து போட்டுவைத்த பாதையை விடுத்து அதன் சக்கரங்களை சுயமாக ஏவும் நேரம் வந்தும் விட்டது.தனிமையில் நடந்து கொண்டிருக்கும் நபர் திடீரென்று தன் அலைபேசியை நடுத்தெருவில் போட்டு உடைத்தால் ஒரு நொடியில் தெருவின் ஒட்டுமொத்த கவனமும் அவர் பக்கம் திரும்பும். அந்த ஒரு நொடியில் திரைப்பட நடிகரின் புகழை, வரலாற்றுச் சக்கரவர்த்திகளின் புகழை, ஒரே கணத்தில் வென்று சாஸ்வதப்பதவி எய்திவிடலாம். அண்டசராசரத்தின் சிம்மாசனத்தில் அமரும் அந்த மந்திர நிமிடத்தில் முக்திநிலையை அடைந்து தனிமையை மறக்க ஒரே வழி இதுதான். ஓட்டுனர் நடத்துனர் எல்லோரும் இரவு உணவிற்கு போயிருக்கிறார்கள்; ஓரமாக போர்க்களத்தில் இருக்கும் குதிரையைப் போல கம்பீரமாக வீற்றிருந்தது பேருந்து. இன்னமும் சென்னை மக்கள் எறும்புகளைப்போல உயிர்ப்போடு இயங்கிக்கொண்டிருந்தனர். கடைசி நிறுத்தத்தில் இறங்கி, தெருவோரம் இருந்த ஓல்டு மங்க் பாட்டிலை பொறுக்கிக்கொண்டேன். அரை லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வியர்வை படிந்த கைக்குட்டையை அதனுள் தோய்த்தேன். இடையூறுகளைத் தகர்த்து வெல்லும் வீடியோ கேம் வீரனைப் போல அருகிலிருந்த கட்டிடத்தின் மொட்டைமாடியின் ஓரத்திற்கு வந்து எதிரே இருந்த ட்ரான்ஸ்பார்மரின் மேல் அதை வீசி எறிந்தேன். பாட்டிலின் பெட்ரோல் பற்றிக்கொண்டு மேலே பட்ட அதிர்ச்சியில் ட்ரான்ஸ்ஃபார்மரையும் கொளுத்திவிட்டு வெடித்துச்சிதறியது. வெடித்ததில் சிதறிய இரும்புத்துண்டு ஒன்று வந்து என் நெற்றியைக் கிழித்துச்சென்றது. வழிந்த ரத்தத்தை துடைக்காமல் அப்படியே ஓடவிட்டுக்கொண்டு மேலிருந்து சிந்தும் தூறலில் நனைந்தபடியே சிகரெட்டை வாயில் செருகிக்கொண்டேன். இடியின் பிண்ணனி இசையில் கோரச்சிரிப்பொன்றை உதிர்த்தபடி தனிமையை வென்ற பெருமித்ததுடன் நடைபோட்டேன். மறுபக்கம் சும்மா நின்றுகொண்டிருந்த பேருந்து யாருமேயில்லாமல் தானாகவே இயங்கத் தொடங்கிற்று. ஒரே மூச்சில் முழுவேகம் பிடித்து தரையில் படுத்திருந்த வெறிநாயின் கழுத்தில் ஏறியது. சுற்றி நடந்து கொண்டிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தபடி பார்த்துக்கொண்டேயிருக்க மீண்டும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கேற்றி வ்ரூம் என்று கிளப்பிய ஓசையில் திகிலடைந்த கூட்டம் தெறித்து ஓடியது. இந்த மந்திர நிமிடத்தின் அதிர்வலைகளிலேயே காலமெல்லாம் தனிமையின் கசப்பை மறந்துவிட முடியும் என்று நம்பிக்கை கொண்டேன். மறுநாள் காலை பேருந்து ஷெட்டில் நின்றுகொண்டிருக்கிறது, தனியாக நான் பண்டாரம் போல வீதியில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.


போட்டியில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்!


______________________________________________________________

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP