மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

26-Aug-2009

சென்னைக்கதைகள் - I

போரூர்.


குறிப்பு: மேலே உள்ள படம் போரூர் ஏரியிலிருந்து ஏரியாவை நோக்கி. அடியேன் எடுத்ததே. பயன்பாடு க்ரியேட்டிவ் காமன்ஸ் காப்புரிமைக்கு உட்பட்டது.

டேப்பை பொருத்திவிட்டு திரையை நோக்கினேன். கருப்பு வெளியில் வெள்ளைப் பொத்தல்கள் விழுந்தமாதிரி இருந்தது. பின்னணியில் இசையா சத்தமா என்று தரம் பிரிக்க முடியாத ஒரு ஒலி. சிவப்புப் புள்ளி ஒன்று தொலைக்காட்சியின் ஓரத்தில் கண்சிமிட்டிக்கொண்டே ஆர்.இ.சி என்று அறிவித்தபடி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தது. ஜெ.ஜெ டிவியின் சென்னை மவுண்ட் ரோட் அலுவலக செய்திப்பிரிவில் வேலை செய்துகொண்டிருக்கும் நானும் என் அலவன்சில் கம்பெனி தந்த பேஜரும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தோம். தமிழகக் கழகங்கள் ஸ்பான்சர் செய்யும் செய்திகளை குளியல் சோப்பு விளம்பரங்களுக்கு இடையில் முடிந்து வைக்கும் பிலிம்சுருள் தையல்காரன் நான். நாளை காலை செய்திகளுக்கு வந்திருந்த பிலிம்களை பரிசீலித்து காஜா போடவேண்டியிருக்கிறது, தம்பியிடம் இருந்து ஓயாமல் பேஜரில் குறுந்தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.
8:28 p.m <>
8:33 p.m <>
எடிட்டரின் க்யூபிக்கிளில் வீடியோ வில்லைகள் எல்லாவற்றையும் சமர்ப்பித்துவிட்டு கிக்கரை உதைத்தேன். சிகப்பு விளக்குகள் ஏதும் இல்லாமலேயே போரூர் ரவுண்டானா பயங்கர நெரிசலாக இருந்தது. என்னை நோக்கி வந்த ஒரு உருவம் பைக்கின் ரியர்-வ்யூ கண்ணாடியை தன் இடுப்பால் உடைத்துவிட்டு மறைந்தது. கெட்டவார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருக்கும் என் உதடுகள் இருபதாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.
[20.2.97]

தெருவோர விநாயகர் கோயில். கோடம்பாக்கம் டிபன்ஸ் காலனி ஏரியாவில் யாரும் இவளை பார்த்ததில்லை. நார் நாராக இருந்த கந்தலால் அவள் மூடப்பட்டிருந்தாள். கேசத்தில் சிமெண்டும் சிடுக்கும் மீதி இருந்தன. வரப்பட்டினி, ஆனால் பற்களில் இருந்த கறைகளில் ஈயாடிக்கொண்டிருந்தது. ஏரியாவிற்கு புதியவர்கள் இவளிடம் விலாசம் கேட்கப்பார்த்தார்கள். நாய்கள் அவளை வெறித்தும் குரைத்தும் விரட்டப்பார்த்தன. அம்மாக்களுக்கு ஒரு புதிய பூச்சாண்டி கிடைத்திருந்தாள். வரவர அந்த ஏரியாவில் ஒருத்தியாகிவிட்டாள், மீதி சோற்றை இவளுக்கு கொட்டினர். எப்போதாவது அந்த வீதியில் வந்துபோகும் பச்சை நிற பல்லவனைப்பார்த்தால் மட்டும் வீறுகொண்டு எழுந்து விளங்காத பாஷையில் திட்டி மண்ணைத்தூற்றினாள். பள்ளிக்கூட பொடிமாஸ் எல்லாம் இவளை சுற்றி சுற்றி விளையாடின. அவர்கள் பஸ் பொம்மையை கிட்டே எடுத்துவந்தால் மட்டும் சுக்குநூறாக உடைத்துவிடுவாள்.
[20.3.97]

"லவ்வு சிகரெட் மாதிரி!"
"போதையை குடுக்குறாப்ல கொடுத்திட்டு கடைசியில கொல்லுறதாலயா?"
"ச்சீய்! இல்ல!"
"பின்ன... என்ன ஃபிலாசஃபி?"
"போதைக்கு அடிமையாக்கிட்டப்புறம் விடவே முடியாது. அப்படியே ஒரு ஒரு வாரம்.. இல்ல மாசம் இல்லாம போனாலும், திரும்ப தம் அடிக்கும் போது போதை ரெண்டு மடங்காயிரும்!"
"ஓஹோ.. அப்போ டெஸ்ட் பண்ணிருவோம். ஒரு மாசம் நாம பேசிக்கவோ பார்த்துக்கவோ வேண்டாம். ஃபோன், பேஜர் ஒண்ணும் கெடையாது."
"நீ தோத்துருவடா!"
"ஜனவரி 20, இன்ன தேதியிலருந்தே பந்தயம் வச்சுப்போம்."
"சீரியசாவா சொல்ற?"
“I do smoke. I do love. I’m addicted.”
"சரி.. உன் இஷ்டம். என்னைய ஐயப்பன்தாங்கல் டிப்போவுக்கு முன்னாடி ட்ராப் பண்ணிரு. பரீட்சைக்கு முந்தின ராத்திரியெல்லாம் படிக்கிற மாதிரி இன்னைக்கெல்லாம் லவ்விருவோம்."
"நீ கெளம்பு. ஒரு மாசம் கழிச்சு லவ்வலாம். நான் பஸ்-ல வந்தேன் தாயீ.. திரும்பவும் 88-கே பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணனும்"
[20.1.97]

முழுக்கை சட்டையின் மடிப்பில் செருகியிருந்த கடைசி பத்து ரூபாய்த்தாளில் கோபாலகிருஷ்ணா தியேட்டர் அருகில் ஸ்டேஷன் ரைட்டருக்கு டீயும் பன்னும் நெய்வேத்யம் படைத்தார் பெரியவர். அதிர்ஷ்டவசமாக, அல்லது துரதிர்ஷ்டவசமாக அவரது மகள் முன்தினம் புறநகர்ப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கிடையில் இல்லை. குவார்ட்டர்ஸ் வாட்ச்மேன், இஸ்திரிக்காரன், சுற்றத்தார் கேவலம், தெருவில் விளையாடும் பொடிசுகள் கூட இவரை சட்டை செய்யவில்லை. சும்மா போலியான புன்னகை கூட இல்லை. அவரது மனைவி அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு இப்போதுதான் வீடு திரும்பியிருக்கிறார். அக்கம்பக்கத்து சண்டியர்கள் அடுப்படியிலிருந்த சோற்றை எடுத்து தெருநாய்களிடம் வீசிக்கொண்டிருந்தனர். குடன் தொகை தந்த சௌகார்பேட்டை குல்லாக்கள் வாசலில் மூக்கால் அழுதுகொண்டிருந்தனர், சவரக்கத்தி துரு ஏறியிருந்தது, காக்கி சட்டையில் சிலந்தி வலை. முக்குக்கடை அண்ணாச்சி பாமாயில் கணக்கில் தரமாட்டேன் என்கிறார். கைக்கடிகாரமும் துடிப்பதை நிறுத்திவிட்டது. என்ன போச்சு... யூனியன் ஸ்ட்ரைக்கின் போது எதற்கு நேரம் பார்க்க வேண்டும்?
[27.2.97]

கால்களை தட்டிவிட்டு அவருக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தது நேரம். நேற்றிரவே ப்ரேக் வால்வை டைட் செய்திருக்க வேண்டும், பாவம் ஓவர்ட்யூட்டிக்கு பின் மெக்கானிக்கை பிடிக்கமுடியவில்லை. இன்று தாமதமாகிவிட்டது. சீக்கிரம் வண்டியை ஐயப்பன்தாங்கல் டிப்போவிலிருந்து கிளப்பவேண்டும். சிட்டியின் ட்ராஃபிக் சாகரத்தில் சங்கமித்துவிட்டு பின்னால் ட்ரிப்பில் சுதாரித்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் சிவசிவ சொல்லிவிட்டு 37-ஜி ஆக்சிலரேட்டரால் உறுமினார். என் தம்பி ஈ-மெயில் பார்த்துக்கொண்டிருந்தான். நான் டை கட்டியபடி ஷூவிற்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தேன். டிவியில் பெப்சி உமா யாருடனோ விளம்பரச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தார்.

<7:20> "ஆன்லைன்ல இருக்கியா? நீ ஜெய்ச்சுட்டே. லவ்வு சிகரெட் மாதிரி தான்! பதில் சொல்லுற வரைக்கும் ஆன்லைன்லயே இருக்கேன்... லவ் யூ!"
<7.45> "லவ் யூ டூ! சாயந்தரம் ரவுண்டானாவுக்கு பக்கத்துல மெக்ரன்னெட் வந்துரு."

"நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீ தான்
நீயின்றி வாழ்ந்தாலே நீர் கூட தீ தான்!"
"என்னடா.. பாட்டு எல்லாம் பயங்கரமா இருக்கு!"
"ஒரு மாசம்.. மீட்டருக்கு மேல ஏதாச்சும் போட்டு குடுங்க மேடம்!"
"இங்கேயா? உங்க காலனி பக்கம் எங்கயாச்சு போலாண்டா.. "
"நாளைக்கு பார்க்கலாம். அண்ணன் சீக்கிரம் வர சொன்னான். பஸ்-ல வந்தேன் தாயீ.. திரும்பவும் 88-கே பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணணும்", கையசைத்தபடியே நீங்கள் கேட்ட பாடல் விஜய் ஆதிராஜ் மாதிரி பின்னோக்கி நடந்தான்.
[20.2.97]

"பஸ்-ல வந்தேன் தாயீ.. திரும்பவும் 88-கே பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணணும்", கையசைத்தபடியே நீங்கள் கேட்ட பாடல் விஜய் ஆதிராஜ் மாதிரி பின்னோக்கி நடந்தான்.
"தோடா! புடிச்சுக்கோ!"
காற்றின் அலைகளில் பயணித்த அந்த முத்தத்தை டென்னிஸ் வீரனைப்போல எதிர்நோக்கித் திரும்பினான். பரவசம் பரவும் அந்த நொடியில் இருவருக்கும் இடையில் முத்தங்கள் சரமாரியாக பொழிந்தன. புன்னகையில் தோய்ந்து கண்களை வினோதமாக சிமிட்டி கைகளை அவன் விரிக்க காதலில் நனைந்து நனைந்து நமுக்கும் நிலையில் இருந்தது மவுண்ட் பூந்தமல்லி சாலை. அந்த நொடி வரை பஸ்சின் அங்குசம் அவர் காலில் தான் இருந்தது. சிக்னல் பச்சையிலிருந்து பழுத்து செம்மையாகும் நேரத்தில் அனாவசியமாக நிறுத்தி ட்ரிப் தள்ளிப்போய்விடுவதைத் தடுக்க சீராகவே செலுத்தினார் ஓட்டுனர். அரைவேக்காட்டு 'எல்' போர்ட் ஒன்று திடீரென்று ப்ரேக் போட லேன் மாற்றும் போது... பாவம்! இப்படி சாலையைக்கடக்க அவன் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டான். அலறல் சத்ததோடு அந்தப் பெண் கீழே சரிந்தாள். அதிர்ச்சியிலிருந்து எழுந்து எதையோ துரத்துவது போல ஓடி ஒரு பைக்கின் கண்ணாடியைத் தகர்த்தாள். பைக்கிலிருந்து இறங்கிய நான் என்னதான் நடக்கிறது என்று பார்க்க போனேன். நடந்த விபத்து மீனாட்சி கல்லூரி மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையில் பிரச்சனையாகிவிட்டது. சகா ஒருவன் இறந்ததை அடுத்து ஓட்டுனரை மாணவர்கள் குமுறியிருக்கிறார்கள். பஸ் பெருசுகளோ கௌரவம் இழந்ததால் ஸ்ட்ரைக்கில் குதித்தனர். சாலையோரம் கேட்பாரற்று கிடந்தது... என் தம்ம்ம்ம்பீ! தூக்கிக்கொண்டு ஆட்டோவில் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஓடினேன். அவனது வெள்ளை சட்டை மிச்சமின்றி சிவப்பாகி என் தோளில் துவண்டது. காவல்துறை காகிதங்களில் ஒப்பமிட்டுக்கொண்டிருக்கையில் நான் ஒட்டிய காலை செய்திகள் திரையில் ஓடிக்கொண்டிருந்தன. விபத்து வீடியோவை சற்றுமுன் என்று கார்டு போட்டு அசிஸ்டெண்ட் எவனோ சேர்த்திருக்கிறான். மேசையில் ஒரு செய்தித்தாள் கிடந்தது. தலைப்புச்செய்தியில் போலீசார் சொன்ன அந்த பேருந்து ஓட்டுனர். அடுத்த பக்கத்தில் நான் தந்திருந்த தமிபியின் இரங்கல் கட்டம். அடுத்த பக்கத்தில் ஏதோ பெண்ணொருத்தி காணவில்லை என்ற விளம்பரம். அவளை சமீபத்தில் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
[21.3.97]


டிஸ்கி: இது ஒரு தொடரின் முதல் அத்தியாயம்: சென்னையைப்பற்றிய சிறுகதைச் சங்கிலி.
_____________________________________________________________________

17-Aug-2009

வனவிலங்கு புகைப்படங்கள்

புகைப்படங்களை இணையத்தில் வெளியிட நிறைய ஜகா இருக்கிறது. ஃபோட்டோ ப்ளாக் எனப்படும் Genre (ஸான்ரு / பகுப்பு?) இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வழக்கில் இருக்கிறதென்று கூகுளாண்டவர் சொல்கிறார். இன்னமும் அனேக இந்தியர்கள் ஃப்ளிக்கரிலேயே ஏன் விழுகிறார்கள் என்று புரியவில்லை. அது பதிவு மாதிரி அல்ல, வெறும் ஒரு ஆல்பம் தான். பட டிசைனர்கள் டீவியண்ட் ஆர்ட்-டில் கூடுகிறார்கள், அதுவும் ஒரு விதமாய் கலெக்ட் செய்து ஒத்த துறையினரிடம் சஜெஷன் கேட்பதற்கு மட்டுமே. தீவிர ஆர்வலர்களும், புகைப்பட வித்தைக்காரர்களும் பிக்சல் போஸ்டில் இருக்கிறார்கள். என்ன தான் தரம் கூடியதெனினும் இது வேர்ட்பிரஸ்.ஆர்க் போல பர்ஸை பதம் பார்க்கும் வழிவகை (வொய் ப்ளட்? சேம் ப்ளட்). இவை தவிர ப்ளாகர், வேர்ட்பிரஸ் (அந்த மோனோக்ரோம் தீம் சும்மா நச்!), மூவபிள் டைப் (இதில் தமிழ்ப்பதிவர்கள் யாரும் இருக்கிறார்களா? வியத்நாம், கொரியா மக்கள்ஸ் எல்லாம் இங்குண்டு!) என்றுமே கூட ஃபோட்டோக்காரர்கள் இருக்கிறார்கள், நம்ம பிட் குழுவினர் மாதிரி. இதுவும் தவிர நண்பர்களின் கூடாரங்களான ஆர்குட், ஃபேஸ்புக்கிலும் மக்கள் கோடிக்கணக்கான படங்களை வெளியிடுகிறார்கள். என்னுடைய பெர்சனல் சாய்ஸ் அமினஸ்3. ரொம்ப குறைச்சலாகத்தான் பயனர்கள் இருக்கிறார்கள், ஆனாலும் அட்டகாசமான இலவச சேவை. அவசியம் போய்ப்பாருங்கள். டைனி பிக்கிலோ ஃபோட்டோ பக்கெட்டிலோ போடுவதை விட இங்கு போட்டு லிங்க்கலாம் என்பது திண்ணம். போப்பா... ப்ளாகரில் தான் போடுவேன் என்று அடம் பிடிப்பவர்கள் இந்த தீம் முயன்று பாருங்கள், அமினஸ்3, பிக்சல் போஸ்ட் மாதிரி இண்டர்ஃபேஸ் கொண்டுவரப் பார்திருக்கிறார்கள்.

வேண்டுகோள்: தமிழில் கதை, கவிதை எல்லாம் எழுதுபவர்கள் கூடவே எங்கிருந்தாவது சுட்டு படம் போடுகிறீர்கள், அவசியம் புகைப்படக்காரரின் பெயரையோ, லிங்கையோ கொடுங்கள். இன்னும் ஒரு படி மேலே போய், படம் எடுக்கும் பதிவர்கள் சீவீயார், கருவாயன், அனந்த் ஏனையோரின் படங்களைப் போடலாம், பொருத்தமாக (அனுமதியோடவே தான்). நல்லா இருக்கும்ல?

நிக்கான் டி-40ல் எடுத்த ஆரம்பப் படங்கள், கிண்டி பூங்காவிலிருந்து.
Click on photos to enlarge. People who want photos with original resolution shall mail me.


டிஸ்கி: ப்ளாகருக்கு கிறுக்கு பிடித்திருக்கிறதா? எல்லா தளங்களிலும் முதலில் அப்லோடு செய்யும் படம் முதலில் பப்ளிஷ் ஆகும், இல்லையா? இங்கு ஏன் ரிவர்ஸ் ஆகிவிடுகிறது? சரி, இங்கிருக்கும் விலங்குகள் வாயிலிலிருந்து கொல்லை வரை எடுத்து, வைசி-வெர்ஸா பப்ளிஷ் ஆகிவிட்டன. மயில், வெள்ளைக்கழுகு, சிலந்தி, துரு ஏறிய பெஞ்சு, இந்தியக்குரங்கு, ஆந்தை, லெமூர் குரங்கு, பெலிகன், நாரை, கல் பறவை என எல்லாம் ஒரு தினுசான தலைகீழ் நிரலில் இருக்கின்றன.
_____________________________________________________________________

ட்ரிவியா

Trivia

வெளிவரும் மூச்சுக்காற்றிலிருந்து ஒரு சூறாவளி பிறக்கிறது. ரேடியோவின் ஒலியலைகள் என் டம்மாரத்தைக் கிழித்துவிட்டு மூக்கில் சிவப்பாக சுரக்கிறது. அக்கா மகனின் சின்னசின்ன ஹெலிகாப்டர் பொம்மைகள் நிலாவில் மோதி உடைகின்றன. ஊற்றிக்கொண்டிருக்கும் வோட்கா கோப்பையின் விளிம்புகளைப் பெயர்த்து எரிமலைப் பிரவாகம் போல அறையெங்கும் தெறிக்கிறது. எழுந்து காலை எடுத்து ஒரு எட்டுவைக்க அதலபாதாளத்திற்குள் தள்ளப்படுகிறேன். கண்ணீரும், வியர்வையும் கலந்து உடலெங்கும் அருவியாய் கொட்டுகிறது. எல்லாமே பெரிசு பெரிசாக தெரிகிறது. சாவித்துவாரம் வழியாக வெளியே வந்து உடல் பொத்தென்று தபால் பெட்டிக்குள் விழுகிறது. கைவிரல்கள் கண்களின் கோணம் தாண்டி நீள்கிறது. பயத்தில் ஓடத்துவங்கும் போது உலகம் வேகமாக சுழல்கிறது. நிலைகுலையும் நான் ஏதுமற்ற வெற்றிடத்தில் விழுந்துகொண்டே இருக்கிறேன். மிட்டாய் வாங்கலாம் கைவீசு, ராஜா தேசிங்கு குதிரை, குரு ப்ரும்மா குரு தேவோ குரு ஷாக்ஷாத், மைல்ஸ் டு கோ பிஃபோர் ஐ ஸ்லீப், பரிசுத்த ஆவியே! பரம பிதாவே! She sells sea shells on the seashore, நாட் தட் ஐ லவ் சீசர் லெஸ், ஐ லவ் ரோம் மோர், வானம் எனக்கொரு போதி மரம், வீ டோண்ட் நீட் நோ எட்ஜுகேஷன், வேன் காஹ், அய்ன் ராண்ட், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், ஆர்ட் ஆஃப் லிவிங்... எல்லாம் பெரிசு பெரிசாக கண்மணிகளில் நிழலாடின. சிலபல தாவணிகளும் பஃப் கை வைத்த சுடிதார்களும், ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டுகளும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களில் பல்லைக்காட்டிக்கொண்டிருந்தார்கள். என்னைத்தவிர எல்லாரையும் ஊதிப் பெரிசாக்கிவிட்டார்களா இல்லை என்னை கசக்கி சிறுசாக்கிவிட்டார்களா என்று பிடிபடவில்லை. புத்தக அலமாரிகளில் எழுத்துகள் எல்லாம் என் ***னை விட பெரிசாக இருக்கின்றன. எல்லாம் ஒரு புகைமூட்டத்திற்குள்ளேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஈக்களும் ஈசல்களும் என்னை விழச்செய்கின்றன. கற்றாழையின் பசையில் சிக்கிக்கொண்டு ஏ ஸ்பேடு சீட்டின் மேல் பக்கவாட்டாக ஒட்டிக்கொள்கிறேன். புகைமூட்டத்துடன் இப்போது ஒரே நீர்க்குமிழிகள் வேறு. சகிக்கமுடியாத வாசனையில் கிடத்தப்படுகிறேன். குளிரத்தொடங்குகிறது, தொண்டை எல்லாம் எரிகிறது. எங்காவது ஏதேனும் விளக்கிலிருந்து பூதம் வருமென்ற நம்பிக்கையில் புழுக்கைகளின் குவியல்களில் மேரியோவைப்போல தாவித்தாவி கோரப்பற்கள் கொண்ட நச்சுச்செடிகளில் இருந்து தப்பியோடுகிறேன். அலமாரியின் ஓரத்தில் ஒரு புக்மார்க் தடுக்கி நறுமணமும் துர்நாற்றமும் சரிபாதியாக கலந்திருந்த அந்த ஏதோவுக்குள் நீந்தி அகழியின் கரைசேர்ந்தேன். கடைசி சொட்டோடு இழுத்துச்செல்லப்பட்ட நான் தின்ற அரை பாக்கெட் சிப்ஸ், கோழித்தொடை, ஸ்ப்ரைட்டோடு மேஜை மீது வழிந்துகொண்டிருந்தேன்.
_____________________________________________________________________

03-Aug-2009

கொலாஜ் 04.08.2009

நேற்று நர்சிம் அண்ணன் என்னை பதிவில் ரெஃபர் செய்திருந்தார் (சுஜாதா டயலாக் வேறு). செம குஜாலாகிவிட்டேன். கிருஷ்ணப்பிரபு, சேரல், நேசமித்ரன் எல்லாரும் கூகுள் ஸ்டேட்டஸ் மெசேஜ் பற்றி LOL போட்டார்கள். ரிக்வஸ்ட் அனுப்பியவுடன் நாடோடி இலக்கியன், ஜ்யோவ்ராம், கேபிள் சங்கர் என்று பலர் சாட்டில் அக்செப்ட் செய்துவிட்டனர். அனுப்பும் மடலுக்கு மாதவராஜ், எம்.பி.உதயசூரியன், சீவீயார், லக்கிலுக் எல்லோரும் பதில் போடுகிறார்கள். ட்விட்டரில் பினாத்தல் சுரேஷ், என்.சொக்கன், பா.ராகவன், புருனோ என்று பலர் டி.எம், ரிப்ளை எல்லாம் செய்கிறார்கள். ஃபேஸ்புக்கில் மணிபாரதி, ஓசை செல்லா, ஆசிப் மீரான் எல்லாரும் நட்பு பாராட்டுகிறார்கள். வண்ணத்துப்பூச்சியார், அகநாழிகை எல்லாரும் தொலைபேசியில் அழைக்கிறார்கள். தமிழர்களின் ஆங்கிலப்பதிவு வட்டங்களில் இது நடக்காது. பின்னூட்டத்திற்கு பதில் சொல்லக்கூட கவுரதை பார்ப்பார்கள். பேசாமல் ப்ளாக்கை டெலீட்டிவிடலாமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு விருந்தோம்பலுக்கு நன்றி நண்பர்களே!

நேற்று நண்பர்கள் தின வாழ்த்தோடு கரோக்கே மாதிரி தமிழ்ப்பாடல்களின் கித்தார், பியானோ வார்ப்புகளை கொடுத்திருந்தேன். அதில் குறிப்பாக ஷெபின் என்ற இளைஞர் ஏகப்பட்ட பாடல்களுக்கு அப்படி போட்டிருக்கிறார். கண்கள் இரண்டால் தான் என்னுடைய ஃபேவரிட். கம்பியிலேயே வார்த்தை மாதிரி துல்லியமாக வருகிறது. ரிப்பீட்டுகிறேன், இவர்களையெல்லாம் சப்ஸ்க்ரைப் செய்தால் சந்தோஷப்படுவார்கள்(வேன்). யூடியூப் ரொம்ப சுவாரசியம் நிரம்பியது. வைரல் எனப்படும் மில்லியன் பார்வையாளர் கணக்கைத்தாண்டிய வீடியோக்கள் மாதம் ஒன்றாவது வருகிறது. பேட்டில் அட் க்ரூகர், க்றிஸ்டியன் த லயன், பென்னி லாவா வரிசையில் கேட்பரீஸ் விளம்பரம், சமீபமாக. இது இப்படியிருக்க சோபிக்கண்ணை வைத்து தமிழில் எதற்கு காமெடி, கீமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்?


உரையாடல் போட்டி முடிவுகளை ஆர்வமாக எதிர்நோக்குகிறேன். அதுல பாருங்க, இதை விட பெருசா அடுத்த நிகழ்வை செய்யுறது தான் சவாலே! உலக சினிமா, போட்டிகள், இன்னும் விரிவடையும் அமைப்பிற்கும் ஆதரவுக்கரம் நீட்டும் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். அங்கு போட்ட பின்னூட்டம்:
எந்தப்படத்தை திரையிடுவது என்பது பற்றி ஒரு கலந்துரையாடல் வைக்கலாம், உங்கள் பதிவிலேயே. மேலும் மாதாமாதம் தமிழிலும் ஒரு படம் திரையிடப்பார்க்கலாம்... அக்ரஹாரத்தில் கழுதை, மோகமுள் மாதிரி அரிய, பலரும் பார்த்திராத படங்கள் என்று. சப்-டைட்டிலில் ஏகப்பட்ட டீட்டெய்ல்ஸ் தொலைந்துவிடும் அபாயம் இருப்பதால் பெரும்பாலும் உலக சினிமா (ஆங்கிலம் தவிர்த்து) அவ்வளவு எடுபடுவது கஷ்டமே. இங்கு யாத்ரா சொன்னதை வழிமொழிகிறேன். மேலும், முதல் ஞாயிறு என்பதை விட எந்த ஞாயிறு நிறைய பேருக்கு சௌகரியமாக இருக்கும் என்று ஒரு வாக்கெடுப்பும் வைப்பது நலம். இதுகுறித்து தனியாக ஒரு தளம் நிறுவலாமே சார்? இப்படி விஷ் லிஸ்ட் எல்லாரும் சொன்னால் பிரயோஜனப்படும்.

எஸ்.எல்.ஆர் வாங்கி விட்டாலும், முன்னே அலைபேசியில் இருந்த வேகமும் மொபைலிட்டியும் வரவில்லை. பழக்கமும் இல்லாததால், வ்யூஃபைண்டரில் ஒன்றும், எல்.சி.டி-யில் ஒன்றும் விழுகின்றன. ஐ.எஸ்.ஓ என்பது ஒரு தொழில்நுட்ப ஆச்சரியம். வெளிச்சம் மிகக்குறைவான அல்லது இரவுகளில் புகைப்படம் எடுக்க உதவும் காம்பென்சேஷன். இப்போதைக்கு பி/ஏ/எஸ் மோட்களில் தான் பயின்றுகொண்டிருக்கிறேன். இரவு இரண்டு மணிக்கு எடுத்த இரண்டு படங்கள் இவை. ஐ.எஸ்.ஓ உடன்/இல்லாமல். இது ஒரு டெஸ்ட் ஃபோட்டோ. இதைப்பற்றி ஒரு இழவும் தெரியாமலேயே சோதிக்கையில் அகப்பட்டது. என்ன, ட்ரைபாட் அல்லது நல்ல திட அடித்தளம் இல்லாமல் எடுக்கமுடியவில்லை. எஸ்.எல்.ஆர் குறித்த டிப்ஸ் வரவேற்கப்படுகின்றன. (படங்களை கிளிக்கிப் பெரிதாக பார்க்கவும்)க்விக் கன் முருகன் என்று ஒரு ஹிந்திப்படம் தயாராகிறது. அதிகாரப்பூர்வமான தளம், ட்விட்டர், ஃபேஸ்புக், வலைப்பூ என்று எல்லா வட்டாரங்களிலும் வக்கிரக் குப்பை. தென்னிந்திய சினிமா நாயகர்களை நையாண்டி செய்யும் பெயரில் வழக்கம் போல நம்மைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள். ஆரியர்கள்-திராவிடர்கள் என்ற முன்ஜென்ம பாக்கியதைகள் எல்லாம் களைந்து பார்த்தால், நாம் என்ன அவர்களை விட மட்டமாகிவிட்டோம்? நமக்கிருக்கும் ஆங்கில உச்சரிப்பு, தோல் நிறம், ரசனை, தொழில்நுட்பம் என்று எதில் இளைத்தவர்கள் நாம்? இந்த சேடிசத்தில் சிரிக்க என்ன இருக்கிறது என்று புரியவில்லை. எதற்கு இந்த பொச்சரிப்பு? படத்தில் நாசர் போன்ற ஆளுமைகளும் இருப்பது தான் எரிச்சலைக்கிளப்புகிறது. நு.க.பி.நி என்று லேபிள் போட்டு பதிவுலகம் கொஞ்சம் கிழிக்கக்கடவது. சைட்பாரில் இருப்பது சாட்சியாக சென்ற வாரம் மூன்று படங்கள் பார்த்தேன். அதில் டர்டி ஹேரியின் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் சொல்லும் பீபுள்ஸ் ஃபேவரிட் பட்டாசு வசனம் இது:

I know what you're thinking. "Did he fire six shots or only five?" Well, to tell you the truth, in all this excitement I kind of lost track myself. But being as this is a .44 Magnum, the most powerful handgun in the world, and would blow your head clean off, you've got to ask yourself one question: Do I feel lucky? Well, do ya, punk?
டிஸ்கி 1: அந்த படத்தின் ப்ளாக்கில் QGM-இன் ஃபேவரிட் நடிகர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் என்று போட்டிருப்பதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
டிஸ்கி 2: முதல் பத்தியில் குறிப்பிட்டிருக்கும் பதிவர்களின் பெயருக்கு முன்னால் அண்ணன், சகா, குரு, தல, வாத்தியார், பாசு எல்லாம் சேர்த்தே படிப்பது உங்கள் கடமை.
_____________________________________________________________________

02-Aug-2009

நண்பர்கள் தின வாழ்த்துகள்!

ஜென்சி அம்மாவின் மேன்மை குணங்களை அண்ணன் ரவிஷங்கர் எழுதியிருந்தார். பின்னூட்டத்தில் இழை இழையாக பிரியாத குரல் அது என்று போட்டிருந்தேன். அதற்கு பதிலாக, அது ராஜாவின் ரெக்கார்டிங் தரம் என்று சொன்னார் ரவி. எனக்கு இதில் டெக்னிக்கல் பட்டறிவு சுத்தமாக கிடையாது. திரையிசையைத் தவிர பெரிய ஞானமும் இல்லை. எப்போதாவது சிம்பொனி, ராக் எல்லாம் கேட்பேன். பாப் சுத்தமாக பிடிக்காது. மெட்டல் தான் என்னுடைய ஃபேவரிட். வீடியோவுக்காக சிற்சில பாடல்கள் பிடிக்கும். தொடையைத்தட்டி தட்டி வீட்டுப்பெரியவர்கள் எல்லாரும் கேட்பார்கள். தங்கை பரதம் கூட ஆடுவாள். நமக்கு தான் ஒன்றும் உருப்படியில்லை. வலைப்பூ தொடங்கிய புதுசில் பிடித்த பாடல்களை கிழமைக்கொரு கீதம் என்ற பெயரில் சிலாகித்தேன். பின்னாளில் பிடிக்காமல் போய் டெலீட்டிவிட்டேன். இப்போதெல்லாம் ஒலக சினிமா சவுண்ட் ட்ராக்குகள் பிடிக்கின்றன. உபயம்: என்னியோ மொரிக்கோனி. யூடியூபில் சமீபத்தில் சுட்டவை இவை. நம்மூர் இளைஞர்கள் இமிடேட் செய்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது.. சூப்பர்ப். இவர்கள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடுவது தான் துயரம். அன்பர்கள் சப்ஸ்க்ரைப், பின்னூட்டம் எல்லாம் போட்டால் மகிழ்ச்சியடைவார்கள்(வேன்).அப்புறம் இது, நண்பர்கள் தின ஸ்பெஷல்! உளங்கனிந்த வாழ்த்துகள் நண்பர்களே!கொசுறு: யூட்யூப் காணொளிகளை தரவிறக்கம் செய்ய இரண்டு சுலபமான வழிகள் உள்ளன. ஒன்று, இந்த யூட்யூப் டௌன்லோடர். தரவிறக்கம் மட்டுமின்றி, எம்.பி3, ஐபாட் போன்ற கருவிகளுக்கு ஏற்றார்போல் உருமாற்றமும் செய்யலாம். மற்றொன்று ஐ.டி.எம் எனப்படும் இண்டர்நெட் டௌன்லோட் மேனேஜர். கிட்டத்தெட்ட தரவிறக்க நேரத்தை பாதியாக்குகிறது. அபரிமிதமான வேகம்.
_____________________________________________________________________

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP