மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

25-Dec-2009

அநாமதேயன்

”நீயி மூத்தவனாப் பொறக்காம தம்பிப் பாப்பாவா பிறந்திருந்தா விக்னேஷ்னு பேர் வைச்சிருப்பேன்” - அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. அதனாலோ என்னவோ, ரொம்ப செல்லமாக கொஞ்சும் போது விக்னேஷ் என்றே கொஞ்சுவாள். பண்டிகை நாட்களில் தவறாமல் வீடு வரும் மாமா காதலித்து கட்டிக்கொண்ட விசாகப்பட்டின அத்தை என்னை விக்ட்டரி வெங்கடேஷ் என்பார். அவர்கள் ஊரில் சரத்குமார் மாதிரியாம். நல்ல உயரமாம், நல்ல உடற்கட்டாம். அவள் வழிந்து தொலைப்பதற்கு என்னை தொடையில் நிமிட்டுவார் மாமா. அடிக்கடி க்ரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்கும் பக்கத்துவீட்டு ரமேஷ் அங்கிள் ’எங்க வீட்டு கண்ணாடியை உடச்ச’ வெங்கடேஷ் பிரசாத்... எப்படி இருக்கே ‘ம்பார். அப்பாவிடம் நன்கொடை வாங்க வரும் கோவில் குருக்கள் ஸ்ரீஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமிகள் என்று என்னைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே புள்ளையாண்டான் எப்படியிருக்கான் நல்லாயிருக்கானா என்று அவரே கேள்வி பதில் எல்லாம் சொல்லிக்கொள்வார். ”இளையராஜா தான்யா தெய்வம்! ஜனனி ஜனனி... சே! பாட்டுக்கு இன்னொருத்தன் வரணும்யா!” என்று உச்ச ஸ்தாயியில் பேசும் சித்தப்பாவின் சிகரெட் சிநேகிதர் என்னை வெங்கிடு வெங்கிடு என்பார். யார் அவர் என்று கேட்டால் தொடையைத் தட்டிக்கொண்டு ஏதாவது பாடிக்காட்டுவார். பதினொன்றாவது படிக்கும் பெரியப்பா மகள், ”ஆமா நீ பெரிய சர்.சி.வெங்கட்ராமனாடா? சாப்பாட்டு ராமா!” கெக்கேபெக்கே என்று இளிப்பாள். சோஷியல் ஸ்டடீஸ் க்ளாசில் மாஸ்டருக்கு குச்சி முடி, வால் எல்லாம் வைத்து ஜோடனையாக வரைந்துவிட்டு மங்கி பை வெங்கி என்று போட்டேன். கிண்டல் பண்ணினதுமில்லாம பேர் எல்லாம் வேற வச்சுக்குறியான்னு கைவிரலையெல்லாம் ஸ்கேலாலேயே நொறுக்கிட்டாங்க. இதையெல்லாம் விட நேத்து ரோட்டில ட்ராஃபிக் போலீஸ்கார், ”ஏம்பா கட்டம் போட்ட யூனிஃபார்ம் தம்பி சீக்கிரம் க்ராஸ் பண்ணு!” என்றார். யார் எப்படிக் காதுபடக் கூப்பிட்டாலும் அதற்கு மறுசெய்கை காட்ட பழகிக்கொண்டேன். என்னவோ இப்போதெல்லாம் ராக்கேஷை நாலு வாட்டி சத்தமாக ”ராக்.. ராக்கி கம் ஆன்!” என்று செல்லமாக கூப்பிட்டாலும் வாலைக் கூட அசைக்கமாட்டேன்கிறான்.

பி.கு: இது உரையாடல் கவிதைப் போட்டிக்கான முயற்சி தோல்வியுற்றதின் வினைப்பயன். ட்விட்டர் என்னை ரொம்ப கெடுத்துவிட்டிருக்கிறது.

10-Dec-2009

முகங்கள்

Bokeh!

இரவுகளில் தனியாக நடந்து சென்று சென்னையை அனுபவிப்பது பள்ளிக்காலங்களில் வாரக்கடைசி கடமைகளுள் ஒன்றாக இருந்தது. பெயர் தெரியாத தெருக்களில் நாலைந்து பேர் கத்திக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சைக்கிள்களில் வலம் வந்ததுண்டு. கல்லூரியில் சேர்ந்த பின்னால், இரவு பகல் பேதங்கள் எல்லாம் சுத்தமாக மறைந்தே போய்விட்டன. தூங்காமலிருந்த நாட்கள் என்றே அரை வருடம் கடந்துபோயிருக்கலாம். சென்னை வரும் போதெல்லாம் நண்பர்களுடன் பைக்குகளில் அர்த்தஜாமத்தில் உலாத்துவது ஒரு தனி சுகம்! மீண்டும் துளிர்த்தெழுந்த ஆசையில், ரொம்ப நாள் கழித்து சென்னையை பாதசாரியாக அனுபவிக்க நேர்ந்தது. சென்னை ராமாவரம் பாலம் முதல் தோமையர் மலை வரை வந்து, ஏர்போர்ட் ரோட்டில் ராடிசன் விடுதி வரைக்கும்! மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் சேர்ந்து, திருவல்லிக்கேணியிலும் இரவெல்லாம் சுற்றியலைந்து, நண்பன் ஒருவனின் வீட்டிலேயே உறங்கிவிட நேர்ந்தது. எத்தனை முகங்கள்! இந்த நகரம் முழுக்க முகங்களால் தான் நிரம்பியிருக்கிறது. சென்னையின் வரைபடத்தை இன்றும் என்னால் முகங்களின் கூடாகத் தான் பார்க்க முடிகிறது. அப்படி, என்னை பாதையெங்கும் பாதித்த சில முகங்கள், இதோ.

*Star(v)e*

St.Thomas mount

Flower vendor

Building a better future

Tea and smiles

Insomniac

Midnight oil

Sannidhi street

07-Dec-2009

ப்ரொமோஷன்.

பீஸின் பக்கத்து சீட்டு பாஸ்கர் (கேண்டீனில் மாலை வெஜிடபிள் கட்லெட் ஸ்பான்ஸர்) காய்ந்த ரோஜாவுடன் சாலையை வெறித்துக்கொண்டிருந்தான். மாலினி செருப்பைக் காட்டியிருக்கிறாள். பின்னே, நிச்சயமான பெண்ணிடம் க்ரீட்டிங் கார்டும் ரோஜாவும் தந்தால், மெட்ராஸ் கண்ணகிகள் குறைந்தபட்சம் டி.எல்.எஃப் வளாகம் எரியுமளவிற்காவது பார்ப்பார்கள். வேறு வழியில்லாததால் (அன்று மாலை கட்லெட்டுடன் ஒரு பெப்சி வேறு), ஒரு டீச்சர்ஸ் விஸ்க்கி வரைக்கும் (என் பர்ஸிலிருந்து) சமாதானம் செய்ய நேரிட்டது. ஒழுங்காக அம்மா சொன்ன குலாப் ஜாமுன் மிக்ஸும், சிநேகிதியும் (மறக்காம அந்த 30 வகை உப்புமா கேட்டு வாங்கிட்டு வாப்பா!) வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்திருக்கலாம். இரண்டு நாட்களில் பாஸ்கர் பேக் டு ஃபார்ம் (ப்ராஜக்ட் மேனேஜர் ட்ரில் எடுத்திருக்கிறார்). மேற்படியெல்லாம் சுமூகமாக முடிந்து மாலினியின் கல்யாண ரிசப்ஷனில் (ஊஞ்சலாடும் குழந்தையுடன் கூடிய) கடியாரமெல்லாம் கிஃப்ட் ராப் செய்து தந்தும் முடிந்தது. அந்த மாசமே இன்னும் இரண்டு காய்ந்த ரோஜாக்களும் (ஒருத்தி அறைந்திருக்கிறாள். இன்னொருத்தியால் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் தர்ம அடி) சில கோப்பைகளும் (என் செலவல்ல, அதனால் 60 மில்லி ஃபெக்குகளில் ரம்) காய்ந்தன. கடைசி ரவுண்டுக்கு முன்னால் பாஸ்கர், "மாலினி ரொம்ப மாறிட்டா மாப்ளே! இப்போல்லாம் முறைக்கிறதில்லை.." என்றான். மறுநாள் காலை லிஃப்டிலிருந்து பாஸ்கரும், மாலினியும் வெளியே வந்தார்கள். அவளது சேலை கலைந்திருந்தது.

06-Dec-2009

ஏதாவது செய்யணும் பாஸ் - II

சென்ற பகுதியின் தொடர்ச்சி...

இந்தியக் கல்லூரிகளை சௌகரியம் கருதி மூன்றாகப் பிரிக்கலாம்:

1. மத்திய அரசின் நிதிபெறும் கல்லூரிகள்:
நாட்டில் மாகாண (Zone) வாரியாக ஐ.ஐ.டி (இந்திய தொழில்நுட்பப் பயிலகம் / Indian Institute of Technology), மாநிலம் வாரியாக என்.ஐ.டி (ஆதியில் ஆர்.இ.சி) (தேசிய தொழில்நுட்பப் பயிலகம் / National Institute of technology) இவையிரண்டும் மிகக்குறைந்த கட்டணத்தில் உலகத்தரக்கல்வி பாலிக்கின்றன. சந்தேகமேயின்றி, இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகள். நுழைவுத்தேர்வின் மூலம் சேர்க்கை நடைபெறும்- ஜாயிண்ட் எண்ட்ரென்ஸ் எக்ஸாம் (J.E.E), அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுகள் (A.I.E.E.E) இவற்றை சில தனியார் கல்லூரிகளும் ஏற்றுக்கொள்கின்றன, ஏ.ஐ.ட்ரிபிள் இ தேர்வினை என்.ஐ.டி-கள் தவிர இன்னும் சில பங்குகொள்ளும் கல்லூரிகளும் ஏற்றுக்கொள்கின்றன, உதா- ஐ.டி- பி.எச்.யு எனப்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், தன்பாத் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ், ஏனைய பல்கலைக்கழகங்கள்.

2. மாநில அரசின் நிதிபெறும் கல்லூரிகள்:
அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (J.N.T.U) - ஆந்திரம், விஸ்வேஸ்வரய்யா பல்கலைக்கழகம் (V.T.U) - கர்நாடகம், தில்லி பல்கலைக்கழகம் (D.U) மாதிரி மாநில, ஒருங்கிணைந்த பிரதேசங்கள் எல்லாவற்றிலும் ஒரு பல்கலைக்கழகமும், அதன் கீழ் பலக் கல்லூரிகளும் இயங்குகின்றன. இங்கும் கட்டணம் குறைவுதான். சேர்க்கை பெரும்பாலும் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மட்டுமின்றி நுழைவுத்தேர்வும் கூடுதலாக அவசியமாகிறது. நம்மூர் போல சில இடங்களில் நுழைவுத்தேர்வை ரத்து செய்தாயிற்று. இவை அடுத்த நிலை. ஐ.ஐ.டி, என்.ஐ.டி அளவிற்கு இல்லாவிட்டாலும், மிகச்சிறந்த கல்வி பாலிக்கும் பல்கலைக்கழகங்களே.

3. தனியார் சுயநிதிக் கல்லூரிகள்:
பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கேந்திரம் எனப்படும் பிட்ஸ், தாபர் பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், மணிப்பால் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பப் பயிலகம் போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள். இங்கு கல்விக்கட்டணம் சற்றே உயர்வு. ஆனால், கல்வித்தரம் மாநில மத்திய அரசுக்கல்லூரிகளுக்கு சில மாற்றுகள் குறைவே. இத்தகு தனியார் கல்லூரிகளில் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் எனப்படும் தொழில்நுட்ப வசதிகள், வாழும் சூழல் ஆகியன முதல் தரத்தில் இருந்தாலும், ஆசிரியர்கள் அரசுக்கல்லூரிகளுக்கு நிகராகாது. இங்கு பயிலும் மாணவர்களும் ஏ.ஐ.ட்ரிப்பிள் இ / ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை சில புள்ளிகளில் கோட்டை விட்டவர்களாகவே இருப்பார்கள்.

நாலாவதாக, இருக்கும் மிச்சசொச்ச கல்லூரிகள் மற்றும் (பணபலத்தால் கல்லூரிகளாய் இருந்து இப்போது) பல்கலைக்கழகங்கள். இவை நமக்கு வேண்டாம். மேற்சொன்ன மூன்று பிரிவுகளில் தமிழக மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது நம்மூருக்குள்ளேயே இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளை மட்டுமே. தமிழர்களின் எண்ணிக்கை பிற ஐ.ஐ.டி/என்.ஐ.டிகளில் மிகவும் குறைவு. விகிதாச்சார அடிப்படையில் பார்த்தாலும் சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய பள்ளிக்கல்வி முறையில் பயிலும் மாணவர்களே மெட்ராஸ் ஐ.ஐ.டியின் மாநில ஒதுக்கீட்டு அடிப்படையில் நுழைகிறார்கள். ஒரு உதாரணத்துக்கு, என் கல்லூரியில் என் பிரிவில், மாநில பள்ளிக்கல்வி முறையில் பயின்ற தமிழ் மாணவர்கள் என்னைத்தவிர யாருமே இல்லை. பிற பிரிவுகள் எல்லாவற்றையும் சேர்த்து (70 சொச்சம்) மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பயின்ற தமிழ் மாணவர்கள் இருநூறு பேரில் மாநில பள்ளிக்கல்வி முறையில் பயின்றவர்கள் கை மற்றும் கால்விரல்களுக்குள் அடங்குபவர்கள் தாம்! ஸ்டேட் போர்ட் மாணவர்கள் ஏன் தேசிய அளவில் பெயர்பெற்ற தரம் உயர்ந்த கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க அஞ்சுகின்றனர்?

1. அக்கல்லூரிகளில் சேர மத்திய அரசுப் பள்ளிக்கல்வி முறையில் பயின்றால் மட்டுமே முடியும் அல்லது, பயிற்சி நிலையங்களுக்கு சென்றால் மட்டுமே முடியும் என்ற மாயை. கோட்டா, ஹைதராபாத் முதலிய இடங்களுக்கு சென்று விடுதிகளில் தங்கி நுழைவுத்தேர்வுக்கென படிக்கும் மடையர்கள் உண்டு. அந்த பயிற்சி நிலையங்களில் சேரவே தனித்தேர்வுகள் இருப்பதும், அதற்கு தனி பயிற்சி நிலையங்கள் இருப்பதும் தனிக்கூத்து.

2. அறியாமை. (எந்தெந்த கல்லூரிகளில் எந்தெந்த பிரிவு சிறந்து விளங்குகிறது என்பது வரை தெலுங்கர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். அண்மைய வருடங்களில் பி.எஸ்.ஜி, சாஸ்திரா, வேலூர் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களில் சேரும் ஆந்திர மாணவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர்) நம் ஆட்களுக்கு எந்தெந்த ஐ.ஐ.டி எந்தெந்த ஊர்களில் இருக்கிறது என்பது கூட தெரியாது. கிராமப்புறங்களில், மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் தாண்டி சிந்திப்பதே இல்லை. நகர்ப்புற மாணவர்களும் பொத்தாம்பொதுவாக Peer pressure-ஆல் உந்தப்படுகிறார்கள்.

3. அவ்வளவு பாடுபட்டு அங்கு படிக்கவேண்டுமா என்று ஒதுக்கிவிடுதல். இங்கில்லாத எது அங்கிருக்கிறது என்ற அலட்சியம். பேரம் பேசி எப்படியேனும் பிள்ளைகளை கல்லூரிகளுக்கு தாரை வார்த்துவிடலாம் என்ற தைரியம். அங்கு செலவுகள் அதிகமாகும், பிள்ளைக்கு விடுதி சாப்பாடு ஒத்துக்காது போன்ற நொண்டி சாக்குகள். அப்ளிகேஷன்கள் வாங்குவதில் கஞ்சத்தனம்.

4. கல்வி ஆலோசகர்கள் அத்தனை திடமான வழிகாட்டிகளாக இருப்பதில்லை. அவர்களின் வட்டங்களும் மிகக் குறுகலாகவே இருக்கின்றன. பெரும்பாலும், துறையை கண்டுபிடிப்பதோடு அவர்கள் பணியும் முடிந்துவிடுகிறது. கல்லூரிகள் சாளர முறை தேர்ந்தெடுப்பில் நிமிட நேர முடிவின்படி அமைந்து தொலைக்கிறது.

5. கண்காணிப்பு இன்றி பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்ற பொதுபுத்தி. இது நம்மூரில் கொஞ்சம் ஜாஸ்தி. இல்லாவிட்டால், அடித்து துவைத்து அரசுத்தேர்வில் மதிப்பெண் பெறவைக்கும் இயந்திரபுரிகளுக்கு பிள்ளைகளை நேர்ந்து விடுவதும், லகரங்கள் பல செலவு செய்து வனவிலங்கு காட்சியகம் மாதிரி பிள்ளைகளை துன்புறுத்தும் கல்லூரிகளில் பிள்ளைகளை கொண்டு அடைப்பதும் நடக்குமா?

இதற்கு என்ன தான் தீர்வு? போன பதிவில் சில விளக்கங்கள் இருக்கின்றன. அடுத்த பதிவு என் பார்வையில் இந்திய பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் . இன்னும் விளக்கமான விளக்கங்களோடு.
__________________________________________________________________________________________________________

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP