மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

06-Feb-2014

நோலன் பிடித்த முயலுக்கு மூன்று கால்

சமகால ஹாலிவுட் திரைப்பட பரப்பில் வெகுசன சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பெரும்பாலான உலக சினிமா ரசிகாஸ்களின் அபிமானத்துக்குரியவர்கள் இரண்டு பேர். ஒருவர் குவெண்ட்டின் டரண்ட்டினோ. மற்றொருவர் க்றிஸ்டோஃபர் நோலர். குவெண்ட்டின் வெகுசன சினிமாவை மாற்று சினிமா மாதிரி எடுப்பவர். நோலர் மாற்று சினிமாவை வெகுசன சினிமா மாதிரி எடுப்பவர். ஷேக்ஸ்பியர் கருதிய மூன்றங்க திரைக்கதை வடிவத்தினை சோதனை செய்ததில் இரண்டு பேருமே பெருவெற்றியை பெற்றிருக்கிறார்கள். இப்போதைக்கு நோலனின் புனை உலகினை மட்டும் கொஞ்சம் அசைபோடலாம்.


ப்ரெஸ்டீஜைப் பற்றி ஏற்கனவே எழுதியாச்சு. டார்க் நைட் குறித்தும் எழுதியாச்சு. ரைசஸ் குறித்தும் எழுதியாச்சு. தனது அத்தனை படங்களிலுமே ஒரு முனைவான பார்வையாளனின் பங்களிப்பை, படத்தினூடே மிக முக்கியமான பங்காக வைக்கிற நோலன் ப்ரெஸ்டீஜில் மட்டும் திட்டவட்டமான முடிவினை ஏன் மார்ஜின் போட்டு முடித்தார் என்பது எனக்கு பல நாட்களாக சந்தேகமே. ப்ரெஸ்டீஜில் மட்டுமின்றி பெரும்பாலும் இரண்டு மிக நெருங்கிய குணாதிசயங்களுடைய கதைமாந்தர்களின் யுத்தம் தான் நோலரின் கதைக்கருவாக இருக்கிறது. ப்ரெஸ்டீஜில் ஆஞ்சியர்/ போர்டெம் இடையே உரசும் பொறி முதற்கொண்டு போர்டெம்/ ஃபேல்லன் இடையே நிலவும் பூசல் மாதிரி. வேன் குடும்பத்தின் ஒரே வாரிசான ப்ரூஸ் தனது பெற்றோர்களைக் கொன்றவர்களை பழிதீர்க்க/ தந்தையின் லட்சியமான காத்தம் நகரின் பாதுகாவலுக்காக எடுக்கும் அவதாரம் தான் அவரது முகமூடியான பேட்மேன். ரா-வின் அல் குல்-லின் ஒரே வாரிசான டாலியா, அவரது தந்தை இறந்த பின், தன் தந்தையின் லட்சியத்திற்கென தரிக்கும் முகமூடி தான் மிரண்டா டேட். இந்த இரு முகமூடிகளின் ஆடுபுலி ஆட்டம் தான் ரைசஸ். ஸ்கேர்க்ரோவின் கோணிப்பை (மெய்) அல்லது அந்த ரசாயனம் (மெய்நிகர்) முகமூடிகள், ஜோக்கரின் "Warpaint" (மெய்) சூழ்ச்சி (மெய்நிகர்) , ப்பேனின் பிராணவாயு முகமூடி (மெய்) அசுரபலம் (மெய்நிகர்) என முழுக்கவுமே முகமூடிகளின் சடுகுடு தான்.

இன்செப்ஷனின் பம்பரம் கடைசி ஃப்ரேமில் சலனமற்று சுழல்கிறதா என்பது தொடங்கி, அவரது மோதிரம் தான் அவரது டோட்டெம் என்றும் (என்னளவில் அது விவாக மோதிரம் மட்டுமே, அநியாயத்துக்கு அபத்தமான கோட்பாடு இது), பம்பரம் நமக்கான “Turn” என்றும் கூட விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ப்ரெஸ்டீஜின் முதலும் முடிவுமான இக்காட்சியை, டார்க் நைட்டின் மூன்று படலங்களுடன் வெகு சுலபமாகவே நம்மால் ஒப்பீடு செய்துவிட முடிகிறது. ப்ரூஸ் வேன் என்ற ஒரு நாயகனை அறிமுகம் செய்து, அந்த முகத்தை மறைக்கும் முகமூடியான பேட்மேன் வருவது அசாதாரணமல்ல. ப்ரூஸ் வேனை மீண்டும் கொண்டுவருவது தான் நோலரின் ப்ரெஸ்டீஜ். சரி, கடல் மேல் அணுகுண்டுடன் சென்ற பேட்மேனும், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஞ்சியரும் தான் செத்துவிட்டார்களே.. போனால் என்ன, நம்மிடம் தான் ராபினும் ஃபெல்லனும் மிச்சம் இருக்கிறார்களே. போட்ட முடிச்சிலிருந்து விடுவிக்க இயலாமலும், விடுவிக்க வழியிருந்தும் நேற்றைய காதலியை நகர மேயருக்காக தியாகம் செய்துவிட்டதால் இறந்துபோகும் நண்பனின் மனைவிகள். காமிக்ஸில் ஹ்யூகோ ஸ்ட்ரேஞ் என்ற மரை கழண்ட ப்ரொஃபெசர் ஒருவரின் சோதனை முயற்சி தான் சொங்கி ஆசாமி ஒருவனை பேன் என்ற பராக்கிரமசாலியாக்குகிறது. டெஸ்லாவும் அஃதே. ப்ரெஸ்டீஜின் மூன்றடுக்குகளில் காணும் வெவ்வேறு கனவுகள் தான் டார்க் நைட் படங்களா?

இந்த அமளிதுமளி பத்தாதென்று பப்பாதியாக கிழித்த காகிதத்தின் வரிகள் எதிரெதிர் திசைகளில் மோதிக்கொள்வதென இயங்கும் மெமெண்ட்டோ. எங்கு தொடங்கி எங்கு முடிந்ததென தெரியாத கனவு போலவே மொத்த கதையும் நகர்கிறது. கனவுக்குள் கனவு போலவே அந்த இன்சுலின் ஊசி கதை. ஏன் யாரிடம் தன் கதையை தொலைபேசியில் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று மறந்துவிடும் லெனர்டைப் போல, கனவில் கடக்கும் சாலைக்கு எங்கிருந்து வந்தோம் என்று மறந்து மிரளும் ஏரியாட்னே. தனக்கு சதி செய்த டெட்டியை (15 நிமிட இடைவெளியினூடே) தெரிந்தும் தெரியாமலும் நம்பி மீளமுடியாத சுழலுக்குள் சிக்கிக்கொள்ளும் லெனர்ட் மாதிரியே, தனது கனவுலகின் ரகசியங்களைத் திருட விரும்பும் காப்-பின் வலையில் விழுந்து மீளமுடியாத லிம்போவிற்கு தள்ளப்படும் சைட்டோ. இன்னும் துல்லியமாக, ஆர்தர் ஏரியாட்னியிடம் ஒரு முத்தம் வாங்கிவிட்டு மேலும் கீழும் முடிவில்லாமல் நீளும் படிக்கட்டில் கொண்டு செல்லும் மோபியஸ் வளையம் போன்றே ஒட்டுமொத்த மெமெண்ட்டோ திரைக்கதையையும், 15 நிமிட இடைவெளிகளுக்குள் இயங்கிவரும் லெணர்ட்டும். என்னைக் கேட்டால் அதில் குறிப்பாக லெனர்ட் டயல் சுற்றும் அந்த தொலைபேசியே கூட 15 நிமிடங்களுக்கு அப்புறம் ஆதிநிலைக்கு திரும்பும் லெனர்ட் தான் என்பேன். நோலன் ஸ்டேன்லி க்யுப்ரிக்குக்கு இணையாக பல மார்க்கங்களில் தனது படைப்புலகை நுட்பமாக ஊன்றச் செய்கிறார். மெமெண்டோவில் நிகழ்காலம், இறந்தகாலத்தை குறிக்க நிறம் ஒரு முக்கிய வினையூக்கியாக செயல்படுகிறது. இன்செப்ஷனில் நேரம் கனவுகளின் அடுக்கு ஏற ஏற குறைகிறது. அதற்கு ஏதுவாக ஸ்திரமான நேரத்தில் இசைக்கும் அதே பாடல் கனவின் அடுக்கிற்கு ஏற்ப ஸிம்மரின் தகிடுதத்தத்தால் த்வனி குறைந்து அந்த சகிக்க இயலாத டம்மாரமாக ஒலிக்கிறது. மெமெண்டோவின் மிகப் பிரபலமான அந்த போலராய்ட் படத்தினுள் போலராய்ட் படத்தை மிகச் சுலபமாக கனவுக்குள் கனவென ஒப்புமை செய்யலாம்.


பிம்பம், போலி, ஆள் மாராட்டம், மாய எதார்த்தம் முதலிய கூறுகளை தனது குறும்படமான டூடுல்பக்-கிலேயே நோலர் ஜாடையாக பயன்படுத்தியிருக்கிறார். அந்த அடுக்கடுக்கான பிம்பங்களை இன்செப்ஷனின் அடுக்குக் கனவுகளாகவோ, தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் இரட்டைச் சகோதரர்களாகவோ, சுயத்துடன் போராடும் பேட்மேன்/ டூ ஃபேஸாகவோ நாம் உருவகப்படுத்த இயலும். மீன்தொட்டியை தொடைகளுக்கு நடுவே தன் வாழ்வெல்லாம் ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறார் இந்த சீன மந்திரவாதி என்கிற போர்டெம்மிடம், ஆஞ்சியர் வாழ்நாளெல்லாம் எவனால் இப்படி ஒரு ரகசியத்தை மறைத்து வைக்க முடியும் என்கிறான். அப்படி ஒரு முகமூடியத்தானே அணிந்துகொண்டிருப்பதை ஆஞ்சியர் கடைசி வரை கண்டுபிடிக்கவில்லை. மிரண்டா டேட்டுக்காக வாழ்நாளெல்லாம் முகமூடி ஒன்றை அணிந்துகொண்டிருக்கிறான் ப்பேன். இறுதியில் மனைவியிடமும் மகளிடமும் முகமூடிகளின்றி ஒரு சுதந்திர வாழ்வை அடையும் போர்டென்/ ஃபெல்லன் (இருவரில் யாரென்று தெரியவில்லை!), பேட்மேன் முகமூடி இனி தேவையில்லாத ப்ரூஸ் வேன், கனவுகளில் சோழி போடத் தேவையில்லாத காப் என்று வேடங்களை களைப்பதை நோக்கியே நாயகர்கள் பயணிக்கிறார்கள். ஃபாலோயிங் நோலரின் இத்தகு வளையங்களுக்கு அப்பால் ஒரு படைப்பாகத் தான் எனக்கு படுகிறது, ஒரே ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன். நோலரின் அதிதீவிர ரசிகர்கள், ஃபாலோயிங்கையும் ஆறேழு முறை பார்த்தவர்கள் இருப்பின், அவர்களாலும் இந்த படிமங்கள் அந்த படைப்பிலும் விரிவதை சொன்னாலும் சொல்லலாம். தொடங்கிய புள்ளிக்கு திரும்புவோம். ப்ரெஸ்டீஜின் முடிவு தட்டையாக ஃபேல்லன்/ போர்டெம் பழிதீர்த்து வெல்வதுடன் முடிகிறதா? அல்லது, டெஸ்லாவில் உருபெற்ற ஒரு ஆஞ்சியர் எஞ்சியிருக்கிறானா? நாம் உன்னிப்பாகத் தான் பார்க்கிறோமா?

0 comments:

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP