Vicky Christina Barcelona [2008]
மொழி: ஆங்கிலம்
வகை: காதல்
இயக்குனர்: வூடி ஆலன்
நடிகர்கள்: ஜேவியர் பார்டெம், ஸ்கார்லெட் ஜோஹான்சென், பெனலோப்பி க்ரூஸ்.
மரியா எலீனா: "நீ எல்லா பெண்களிடமும் என்னைத்தான் தேடுகிறாய்!" ழான் அண்டோனியோ: "முழுமையாகாத காதல் தான் ரொமாண்டிக்காக இருக்க முடியும்" விக்கி: "நீ என் கண்ணில் வந்த கண்ணீரை பார்த்தியா?" (முத்தமிடுகிறாள்) க்றிஸ்டினா: "ஆமாம், நான் மரியாவை காதலிக்கிறேன். பைசெக்ஷுவல்...? ஆனா என்னாத்துக்கு எல்லாத்தையும் 'லேபிள்' பண்ணனும்?"
இப்படி படம் நெடுக காமமும் கலையும் வழிந்தபடியே இருக்கின்றன. மகனிடம் "உன் மனைவி இன்னும் என் கனவுகளில் வருகிறாள்!" என்கிறார் தந்தை. கிட்டார் இசையை கேட்டுவிட்டு அங்கேயே ஒரு புதரில் புணர்கிறார்கள் ழானும், விக்கியும். எல்லா காட்சிகளிலும் விரலிடுக்கில் புகையோ வைன் புட்டியோ வளையவந்துகொண்டே இருக்கிறது. கட்டுடைப்பு கண்றாவியெல்லாம் பரிச்சயமில்லாதவர்கள் இவர்கள். பிறரைப் பற்றிய பிரக்ஞையே இன்றி தத்தம் இஷ்டப்படி வாழ்வது தான் ஐரோப்பிய லைஃப்ஸ்டைல். இசை, மது, கட்டிடங்கள், காதல், கடற்கரைகள் - ஸ்பெய்னின் அப்பட்டமான ஆனால் ரம்மியமான வாழ்க்கை முறையை அவரது பாணியில் சொல்லியிருக்கிறார் வூடி ஆலன். நகைச்சுவைக்கு புகழ்பெற்ற வூடி ஆலன் (சுருக்கமாக சொன்னால், நம்ம பாக்யராஜ் மாதிரியே தான்.. அதே மாதிரி நீள்சதுர கண்ணாடி + பெல்பாட்டம்மை மாட்டிகிட்டு நடிச்சிக்கிட்டும் இருந்தார்) ஐரோப்பிய கலை மற்றும் கலாச்சாரத்தை பின்புலமாகக் கொண்டு இயக்கிய படம் தான் விக்கி க்றிஸ்டினா பார்சலோனா.
கதை என்றெல்லாம் ஒரு இழவும் கிடையாது. இரண்டு மாத விடுமுறையை கழிக்க விக்கியும் க்றிஸ்டினாவும் பார்சலோனாவுக்கு வருகிறார்கள், திரும்புகிறார்கள். அவ்வளவே. வந்த இடத்தில் ழான் ஆண்டோனியோ என்கிற ஓவியக்கலைஞனின் மீது க்றிஸ்டினாவுக்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. ஓவியனுக்கு ஏற்கனவே மணம் முடிந்துவிட்டதென்பதும், மனைவி அவனை கொல்ல முயற்சித்திருப்பதும் அவர்கள் அறிந்ததே. விக்கி, க்றிஸ்டினா, ழான், மரியா, பார்சலோனா- பகடையின் ஐந்து முகங்களாக இருக்க ஆறாம் முகத்தில் இருந்தது யார் என்பது தான் படத்தின் கடைசி ட்விஸ்ட். திரைக்கதையில் மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். இவரது சற்றே பழைய பெர்பிள் ரோஸ் ஆஃப் கெய்ரோ என்ற படத்தைப் போலவே இந்த படத்தின் முடிவும்... ம்ஹூம் சொல்லமாட்டேன். படத்தில் என்னை குறிப்பாகக் கவர்ந்தது ஜேவியர் பார்டமின் நடிப்பு. ஆமாம், அவரே தான் - நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்-னில் வில்லனாக வருவாரே, அவரே தான். தத்ரூபம்.
உலகின் முக்கியமான ஆர்க்கிடெக்ட்களில் ஒருவரான ஆண்டோனியோ காடியின் படைப்புகள் படத்தில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. சிற்பங்கள், ஓவியங்கள், இசைக்கோவைகள் என கலை ஆங்காங்கே தூவப்பட்டிருக்கிறது. முதல் ஃப்ரேம் Vignette-டில் ஏர்ப்போர்ட் சுவரில் இருக்கும் ஓவியம் முதலே படத்தில் கலையின் ஆக்கிரமிப்பு தொடங்குகிறது. குறிப்பாக ஸ்பானிய படங்களின் சாயலிலேயே கேமிரா டோனும், ஸ்பானிய இசைக்கருவிகளும் மனதில் ரொம்ப நேரத்துக்கு ரீங்காரமிட்டுக்கொண்டேருக்கின்றன. ஒளிப்பதிவும் சும்மா சொல்லக்கூடாது, ஆர்ப்பரிக்கும் கடற்கரை, ஐரோப்பிய கிராமம், கலைப்பொருட்கள், லேண்ட்ஸ்கேப்புகள் என்று எல்லாவற்றையும் நல்லாவே பிடித்திருகிறார்கள். வசனங்களில் ஒளிந்திருக்கும் நகைச்சுவை முதல் பாதி முழுக்க இழையோடுவது வூடி ஆலனின் Trademark. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெனலோபி க்ரூஸ் வாங்கியதை உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
படத்தின் Diametrically opposite கேரக்டரைசேஷன் தான் மிகச்சாதாரணமான ஸ்டோரிலைனை Masterstroke-காக மாற்றுகிறது. விக்கி சராசரியான அமெரிக்கப் பெண். பாய்ஃப்ரெண்ட், கடிவாளக் கம்மிட்மெண்ட், மாலை நேர வகுப்புகள் என்று நேரம் கழிப்பவள். க்றிஸ்டினா மெட்ரோ-செக்ஷுவல் யுவதி- கலைகளில் ஈடுபாடு, பாய்ஃப்ரெண்டுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது, நிலையற்ற மனநிலை. ழான் ஒரு ப்ளேபாய் - ஒரு கோணத்தில் வாலி அஜித்தைப்போல தன் மனைவி மரியா என்று தொடங்கி அடிச்சு ஊத்துறார், இவர்கள் இருவரை மயக்கி படுக்கைக்கும் அழைத்துச்சென்று விடுகிறார். மரியா எலீனா எக்சென்ட்ரிக்-கான பெண். இவர்களைத் தவிர ழானின் தந்தை, விக்கியின் அமெரிக்க காதலன், தங்க இடம் தரும் தம்பதி, ஸ்பானிஷ் வகுப்பில் விக்கியின் கையைப் பிடித்து இழுக்கும் அரை வேக்காடு என சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் கூட வூடி ஆலனின் அனுபவச்செறிவும், Craftmanship-பும் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை சிகரெட் புகையும், தேநீருமாய் கழிகிற அழகான நிமிடங்களில் காதலியுடன் பார்க்க பலமாக பரிந்துரை செய்யப்படுகிறது.
_____________________________________________________________________
19 comments:
ஞாயிற்றுக்கிழமை மாலை சிகரெட் புகையும், தேநீருமாய் கழிகிற அழகான நிமிடங்களில் காதலியுடன் பார்க்க பலமாக பரிந்துரை செய்யப்படுகிறது.]]
சிகரட்டும் தேநீரும் பழக்கமில்லை ...
காதலி கிடைத்தால் அவசியம் பார்த்துடுவோம் படத்தை ...
எனக்கும் பழக்கமில்லை. பொதுவா சொன்னேன். தேநீர் மட்டும் தான் இப்போதைக்கு இருக்கு
அடங்கி போறவன் இல்லை அடிச்சிட்டு போறவன்
யார் சார் நீங்க? மிஸ்டர் நோ மாதிரி தெரியுது? எனிவே, வாழ்க... வளர்க.
ரொம்ப ஆழ்ந்து... ரசித்து... பார்த்து... எழுதின மாதிரி தெரியுது
ஞாயிற்றுக்கிழமை மாலை சிகரெட் புகையும், தேநீருமாய் கழிகிற அழகான நிமிடங்களில் பொண்டாட்டியுடன் பார்க்கலாமா?
படம் வாங்கி வைத்து இரண்டுமாதம் ஆகின்றது பார்க்க நேரம் கிடைக்கவில்லை...
பதிவை வாசித்ததும் , அவசியம் பார்க்க
வேண்டும் என்று தோன்றுகிறது.
மிக்க நன்றி.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
அருமையான பதிவு படத்தை பற்றி வெங்கி.. வாழ்த்துக்கள்.
நன்றி ஜாக்கி சேகர்.
மனைவியுடன் பார்த்து நேரும் பக்கவிளைவுகளுக்கு கம்பேனி நிர்வாகம் பொறுப்பல்ல.
நன்றி பிரவின்ஸ்கா... அவசியம் பாருங்கள்.
நன்றி கேபிள் அண்ணே! பதிவுகளை ஃபாலோ செய்வதற்கும் நன்றிகள்!
//ரொம்ப ஆழ்ந்து... ரசித்து... பார்த்து... எழுதின மாதிரி தெரியுது//
அடடா! கவனிக்காம போயிட்டேன் கொங்குதமிழ். ஆமா... படம் ஃபிரெஞ்சு படங்களின் சாயலில் மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. கலைஞர்களின் நுண்ணுணர்வுகளை மிகத்துல்லியமாக படம் பிடித்திருக்கிறார்கள்.
வாழ்வின் உன்னதமான தருணங்களை அபத்த க்ளிஷெக்களாக காண்பிக்கும் அபாரக் கலைஞன் வுடி ஆலனைப் பற்றி தமிழ்ப்பதிவு. அட் ! வுடியின் விஷமச் சிரிப்பு மிகத் துல்லியமாக மறைந்து மகிழ்விக்கும் படமாக இதைக் கருதுகிறேன்.
//பிறரைப் பற்றிய பிரக்ஞையே இன்றி தத்தம் இஷ்டப்படி வாழ்வது தான் ஐரோப்பிய லைஃப்ஸ்டைல்.//
என்றெல்லாம் பொதுமைப்படுத்துதலுக்கு நம்மை ஆட்படுத்தி விடுவது தான் வுடியின் குறும்பு. க்றிஸ்டினா சைக்கிள் ஓட்டும்பொழுது அவள் ஐரோப்பிய வாழ்வின் சுதந்தரத்தை அனுபவிப்பதாக ஒரு வாய்ஸ் ஓவர் வரும்.
வுடி சீரியஸாக சொல்கிறாரா, கிண்டலா என்று சொல்ல முடியாத அளவு துடுக்குத்தனமான பொதுமைப்படுத்துதல் அது. அமெரிக்கர்களின் (அவர்கள் மூலமாக நமக்கும்) காட்டப்படும் ஐரோப்பிய சுதந்தரத்தன பிம்பம் அது. அதன் உண்மை/பொய்க்குள் செல்வதைவிட அந்த க்ளிஷெ-வை நகையாடுவதை கவனிக்கலாம்.
ஹவியார் பார்தெம் தனது தந்தையைப் பற்றி சொல்லும்பொழுது, அவர் கவிதைகள் எழுதுவார் ஆனால் உலகத்தின் மீது கோபம் கொண்டதான் அதை வெளியிடுவதில்லை என்பார்.
இதை அப்படியே எடுத்துக்கொண்டு நெகிழலாம். ஆனால் தன்னைதன்னைத் தானே மிகைமுக்கியத்துவத்துடன் அணுகும் கலைமனத்தைப் பற்றிய பகடி என்பதற்கான சாத்தியங்களை இப்படம் உள்ளடக்கியிருக்கிறது.
கதை மாந்தரைப் பத்தி ஒரு வித அசட்டை அந்த பொதுமைப்படுத்துதல்களில் காணலாம். மரியா எலெனாவின் வருகைக்கு ழான் அண்டோனியோ-க்றிஸ்டினா உறவு நிலைபெற்றதாக நாம் நினைத்துக்கொண்டிருப்போம். நாம் மட்டுமல்ல ழான் அண்டோனியோவும். மரியா எலெனா வந்ததும் உறவுகள், படிநிலைகள் மாறிப்போவதைப் பார்க்கும்பொழுது முடிவுகளின் நிலையின்மை (நிலையாக இருக்க சாத்தியங்கள் இல்லாமை) பற்றி கவனம் கொள்கிறோம்.
முடிவுகளைப் பற்றி சற்று அவமரியாதை கூட பிறக்கிறது. விக்கியின் காதலன் டை கட்டிக் கொள்வதால் கனவுலகில் சஞ்சரிக்க வில்லையா என்ன. கனவுலகங்கள் ரெண்டு மாதம் தாங்கும். அது காட்டும் உலகத்திலிருந்து வாழ்க்கையை பற்றிய புரிதலோ, நம் வாழ்வின் சாத்தியங்களையைப் பற்றியோ முடிவுகள் செய்வது சிறுபிள்ளைத்தனமாகலாம்.
மூட்டைமுடிச்சுகளைக் கட்டிக்கொண்டு தரையிறங்கவேண்டியது தான். மறுபடி சுதந்திரமாகப் பறக்கும் ஆசை வருவரை.
ஆஹா! அற்புதமாக சொல்லிவிட்டீர்கள் பி.ஆர். இப்போதிருக்கும் துறையில் கலைஞர்களிடம் அதிகம் பழகுவதால், அவர்களுடைய சுய-அபிமானங்கள்/மதிப்பீடுகள் பற்றி குறிப்பாக கவனிக்க முடிகிறது. ஏறத்தாழ க்றிஸ்டினாவின் இதே மனோநிலையைத்தான் 'நாடோடிகளில்' சித்தரித்திருந்தார்கள் ('ப்ச்'). வி.சி.பி-யை சாதாரணமான படம் என்று ஒதுக்கிவிடும் விமர்சகர்களின் மீது கோபம் வருகிறது. அமேதியஸுக்கு பிறகு கலைஞர்களை வெகு இயல்பாக சித்தரித்துள்ள படமாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இன்னும் நிறைய எழுத ஆசைப்பட்டாலும், அவை எனது சமீபத்திய நேரடி அனுபவம் மற்றும் படத்தை எதிர்கொண்ட விதத்தின் வெளிப்பாடாகவே வந்து தொலையும் என்பதால் சாய்ஸில் விட்டுவிட்டேன்.
//அமேதியஸுக்கு பிறகு கலைஞர்களை வெகு இயல்பாக சித்தரித்துள்ள படமாக//
Interesting comparison.
இரண்டு படங்களுமே 'இயல்பு' என்ற கருத்தைப் பற்றி சிந்திக்க வைப்பவை. கலைஞர்களின் இயல்பு சாமானியர்களின் இயல்பிலிருந்து மாறுபட்டது என்பதை முந்தீர்மானமாகக் கொண்டு தான் அணுகுகிறோம்.
அமேதியஸில், மோட்ஸார்ட்டுடன் ஒப்பிடும்போது தான் சாமான்யனாகிவிடுவதால் சாலியெரிக்கு ஏற்படும் உணர்வுகளை 'இயல்பானவை'யாக நாம் உணர்கிறோம் என்றாலே, கலைமனத்தின் சுயமுக்கியத்துத்தை நாம் அங்கீகரிக்கிறோம் என்று தான் பொருள்.படத்தின் வெற்றியே அதில் தான் இருக்கிறது. மக்களிடமிருந்து வந்தவன் தான் கலைஞன் என்று கலைஞனை சாமான்யப்படுத்துபவர்களால் அப்படத்தை ரசிக்க முடியாது.
அதே கலைஞனின் தனித்துவத்தை வேறு முனையிலிருந்து VCK வில் வுடி பார்ப்பதாக நினைக்கிறேன். சாமான்யர்களைக் காட்டிலும் உயர்ந்த பீடத்தின் அமர்ந்திருப்பதன் வசீகரம், அது நல்கும் தான்தோன்றித்தன லைசென்ஸ் போன்றவற்றை subtle எள்ளலோடு VCK பார்க்கிறது. அதனால் சித்தரிப்பில் ஒற்றுமை மேல்தளத்தில்ல் இருந்தாலும், பாத்திர வார்ப்புக்கும் கதைசொல்லிக்கும் இடையே VCKவில் உள்ள கவனமான இடைவெளியால்
இப்படம் வித்தியாசப்படுகிறது.
//.சி.பி-யை சாதாரணமான படம் என்று ஒதுக்கிவிடும் விமர்சகர்களின் மீது கோபம் வருகிறது. //
நீங்கள் சொல்வது போல இது உதாசீனத்துக்கு ஆளானதா என்ன. சுமாரான match point சொத்தையான scoop க்கு பின், வுடி பலமாக களமிறங்கிய படமாகவே VCK பார்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன் (பெனலொபிக்கு ஆஸ்கர் !)
//எனது சமீபத்திய நேரடி அனுபவம்//
?
//படத்தை எதிர்கொண்ட விதத்தின் வெளிப்பாடாகவே //
இது தவிர்க்கமுடியாதது என்பதே என் அபிப்ராயம்.
பிறகொடு தருணத்தில் எழுதுங்கள்.
//
//எனது சமீபத்திய நேரடி அனுபவம்//
?
//
சமீபத்திய நேரடி அனுபவம் என்பது ஆர்க்கிடெக்ட்-களை சந்தித்தது. எந்த ஆர்க்கிடெக்ட்டுமே வெறும் ஆர்க்கிடெக்ட் அல்ல. நிச்சயம் ஓவியனாகவோ, இசைக்கலைஞனாகவோ, கவிஞனாகவோ தான் இருக்கிறான். அவனுடைய கலைப்படைப்பின் மற்றொரு பரிமாணமாகவே அவனது கட்டிட வடிவங்கள் தோன்றுகின்றன. அண்மையில் சந்தித்த புகைப்படக்காரர்களும் இந்த 'சந்தித்த'வர்களுள் அடக்கம். பொறியாளர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் எல்லோரையும் விட ஈகோ கலைஞர்களுக்கு எக்கச்சக்கம்.
மரியா எலீனா : "வாட் டிட் தே சே? ஜீனியஸ்... ஜீனியஸ்!"
//நீங்கள் சொல்வது போல இது உதாசீனத்துக்கு ஆளானதா என்ன//
அட்லீஸ்ட் எங்க வட்டாரத்தில். வயசோ, பல்கலைக்கழகமோ... எங்கனயுமே மதிக்க மாட்டேங்குறாங்க.
//கலைமனத்தின் சுயமுக்கியத்துத்தை நாம் அங்கீகரிக்கிறோம் என்று தான் பொருள்.//
ஆம். கிட்டத்தெட்ட அதேதான்.
வெங்கிராஜா.. மிக நல்ல நடையில் லாவகமாய் சொல்லி இருக்கிறீர்கள்.
தொடருங்கள்.
படம் பார்த்தீங்களா நர்சிம் சார்? எப்பூடி?
வெங்கிராஜா,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
படங்கள் பார்க்கவும் படிக்கவும் இன்னும் கூடுதலாய் ஒரு நாளைக்கு 5மணி நேரம் இருந்தால் நன்றாக இருக்கும்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வாழ்த்துக்கள்
A Fantastic review !
Your flow is great ..!
வாங்க வாசு சார். கொஞ்சம் இடைவெளிக்கப்புறம் வந்த உங்களை நான் கொஞ்சம் ஏமாத்திட்டேன் போலயே... விமர்சனம் சரியில்லையோ?
நன்றி நேசமித்ரன். Thanks for your kind words.
Post a Comment